தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,966 
 
 

ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர் மனதில், ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் படியத் தொடங்கியது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்தக் கர்வத்தைப் போக்கத் திருவுளம் பூண்டார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

தங்கக் கிண்ணத்தைதருமரின் இருப்பிடத்துக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணன், தருமருடன் உரையாடியவாறே வெளியே நடந்தார். இருவரும் பாதாள லோகத்தை அடைந்தனர். பாதாள லோகத்தை பிரகலாதனின் பேரனான மகாபலிச் சக்ரவர்த்தி ஆண்டு வந்தான். இவனும் தான& தர்மங்களில் அதிக நாட்டம் உள்ளவன்.

பாதாள லோகத்தின் முக்கியமான தெருக்கள் வழியாக கிருஷ்ணரும் தருமரும் நடந்து கொண்டிருந்தனர். நகரின் செல்வச் செழிப்பையும், வனப்பையும் கண்டு பிரமித்த தருமருக்கு ஒரு கட்டத்தில் தாகம் ஏற்பட்டது. அப்போது அருகில் வீடு ஒன்று தென்பட்டதால், தருமர் அந்த வீட்டுப் பெண்மணியிடம் தண்ணீர் கேட்டார்.

மறு கணம் அவள் தங்கக் கிண்ணம் ஒன்றில் குடிநீர் எடுத்து வந்து பவ்யமாகக் கொடுத்தாள். நீர் அருந்திய தருமர், பெண்மணியிடம் தங்கக் கிண்ணத்தை நீட்டி, ‘‘மிக்க நன்றி அம்மணி! இந்தக் கிண்ணத்தை பத்திரமாக எடுத்து வையுங்கள்!’’ என்றார்.

‘‘ஐயா… தாங்கள் எங்கள் ராஜ்யத்துக்கு இப்போதுதான் வருகிறீர்கள் போலிருக்கிறது. எங்கள் ராஜ்யத்தில் ஒரு தடவை உபயோகித்த பொருள் _ அது தங்கமாகவே இருந்தாலும் வீசி எறிந்து விடுவோம். எனவே, தாங்களே அந்தத் தங்கக் கிண்ணத்தை வீசி எறிந்து விட்டுச் செல்லுங்கள்!’’ என்றாள் நிதானமாக.

மகாபலிச் சக்ரவர்த்தி ஆளும் நாட்டின் செல்வச் செழிப்பையும், வாழ்க்கைத் தரத்தையும் எண்ணி மிகவும் வியப்பு அடைந்தார் தருமர். மீண்டும் பேசியவாறே ஸ்ரீகிருஷ்ணனும் தருமரும் மகாபலியின் அரண்மனையை அடைந்தனர். பொன்னால் ஆன மணிகள் பதிக்கப்பட்ட அரியணையில் மகாபலி வீற்றிருந்தான். அரண்மனைக்குள் நுழைந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் தருமரையும் முகம் மலர வரவேற்றான் மகாபலி.

‘‘மகாபலி… என்னுடன் நிற்கும் இவர் தருமபுத்திரர். குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு பேருக்காவது தவறாமல் அன்னதானம் செய்வது இவர் வழக்கம்!’’ என்று ஸ்ரீகிருஷ்ணன், தருமரை அறிமுகப்படுத்தினார்.

அவ்வளவுதான்! மகாபலியின் முகம் இறுகியது. ‘‘போதும்! இவரைப் பற்றி மேற்கொண்டு எந்த ஒரு செய்தியையும் என்னிடம் கூற வேண்டாம்! நிறுத்துங்கள்’’ என்று கோபமான குரலில் சொல்லி, தன் இரு கைகளாலும் செவிகளைப் பொத்திக் கொண்டான் மகாபலி.

‘‘மகாபலி, ஏன் இப்படிக் கூறுகிறாய்?’’ என்று பதற்றம் இல்லாமல் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவர் அறியாததா என்ன?!

‘‘மதுசூதனா! எனது நாட்டில் கொள்வார் இல்லாமையால் கொடுப்பாரில்லை என்பது தாங்கள் அறியாததா? இங்கு தானம் பெற்று வாழும் நிலையில் எவரும் இல்லை. இவர் நாள்தோறும் ஐந்நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறார் என்றால், இவரது ராஜ்யத்தில் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள் என்றல்லவா அர்த்தம்! இதிலிருந்தே இவர் அரசாட்சி செய்யும் லட்சணம் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒருவரைப் பார்க்கவோ, இவரைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ளவோ நான் விரும்பவில்லை!. இந்தக் கணமே இவரை இங்கிருந்து புறப்படச் சொல்லுங்கள்.’’

மகாபலியின் பேச்சு பொட்டிலறைந்தாற் போலிருந்தது தருமருக்கு.

அவர் மனதில் கர்வம் விஸ்வரூபம் எடுக்குமுன் அதை நீக்கிய திருப்தியுடன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அங்கிருந்து கிளம்பினார். மனத் தெளிவுடன் அவரைப் பின்தொடர்ந்தார் தருமர்.

– மே 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *