குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் வருவான் எனக் கூறி நதியினுள் போய் மறைந்து போனாள் கங்கை.வாக்கை மீறிய சந்தனுவின் ஒரு கேள்வியால் உயிர் பிழைத்த கங்கா புத்திரனான பீஷ்மர் வாலிப வயதை எட்டியிருந்தார்.அவர் உலாவும் நதிக்கரையோரம் ஒரு விடிகாலைப் பொழுதில் சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்து கண்களைத் திறந்து நதியைப் பார்த்தார்.
இந்த நதியைப் பார்த்தால் நேற்று கண்ட நதியே இன்றும் இருப்பதாகத் தோன்றுகிறது;ஆனால் நேற்று இருந்த நீர்த்திவலைகளில் ஒன்று கூட இப்பொழுது இல்லை.ஒரு சுடர் எரிவதைப் பார்க்கும் போது, ஒரே சுடர் அணையும் வரை எரிவதைப் போல் இருக்கிறது;ஆனால் ஒரு கணத்தில் எரிந்த சுடர் அடுத்த கணத்தில் இல்லை.இந்த உலகில் காலத்தின் சுழற்சியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயிருக்கிறது.நாம் காண்பவை உண்மையைப் போன்று தோற்றமளிக்கிறது ஆனால் அது உண்மையில்லை.மாற்றம் எனும் பெருவெள்ளம் அனைத்தையும் அடித்துக் கொண்டு சென்று கொண்டேயிருக்கிறது.இதில் சாம்ராஜ்யங்கள்,பேரரசர்கள்,யுவதிகள்,மகான்கள் என்று எவருமே தப்புவதில்லை.உடல் செயலற்று அமைதியாக இருந்தாலும் மனம் எண்ணத்தின் மூலம் கர்மம் புரிகிறது.இந்த கர்ம சுழற்சியிலிருந்து தப்ப இயலாது என்பதை பீஷ்மர் உணர்ந்து கொண்டார்.
நதிக்கரையோரத்தில் அவர் ஒரு காட்சியினைக் கண்டார்.பூவில் தேனைக் குடித்து ரீங்காரமிட்ட வண்டை தவளை பிடித்தது;தவளையை பாம்பு ஒன்று கவ்விக் கொண்டிருந்தது.அமுதம் போன்ற சுவையுடைய தேன் வண்டின் நாவில்,அவ்வண்டோ தவளையின் வாயில்,தவளைக்கு வண்டு இரையாகக் கிடைத்துவிட்டது;ஆனால் அத்தவளையோ பாம்பின் பிடியில்.இது தான் வாழ்வா என்று அக்காட்சி அவரை யோசிக்கவைத்தது.கூத்து நடக்கும் இடத்தில் பார்வையாளராக நாம் இருக்கையில் அமர்ந்து இருக்கிறோம்;கூத்து முடிந்தவுடன் அக்கூட்டத்தோடு நாமும் சேர்ந்து வெளியேறிவிடுகிறோம்.ஆனால் அக்கூத்து அன்றோடு முடிந்துவிடுவதில்லை;நாம் போன பின்பு பல்வேறு மனிதர்கள் உலக அரங்கில் நுழைந்துவிடுகிறார்கள்.யுக யுகமாய் அரங்கத்தில் நுழைபவர்களும்,அரங்கத்தை விட்டு வெளியேறுபவர்களுமாய் அக்கூத்து தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.இதோ இந்தச் சூரியன் பல நிகழ்வுகளுக்கு சாட்சியாய் இருந்திருக்கிறது.
பீஷ்மர் புரிந்துகொண்டார்.கர்மம் என்று சொல்லப்படும் செயல்,அனைத்து வினைகளுக்கும் காரணமாகிறது.எண்ணங்களும்,செயல்களும் சூட்சும வடிவில் சூல் கொண்டு அவற்றுக்கான பலன்களைப் பிரசவிக்கிறது.எந்தப் பெண்ணைத் தீண்டினாலும் சம்போகம் முடிந்த சில நிமிடங்களிலேயே அவளுடனான உறவுச்சங்கிலி முறிந்து விடுவதில்லை.அவள் அந்த ஆடவனின் சிசுவை வயிற்றில் சுமந்து கொள்கிறாள்.அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து வாலிப வயது வரும் வரை அவனைக் காத்து,கல்வி கேள்வி,வாள் பயிற்சி,குதிரையேற்றம் ஆகியவற்றில் திறம்பட வரும்படி பயிற்சியளிப்பது அந்த ஆடவனின் கடமையாகிறது.அதோடு மட்டுமில்லாமல் அவனுக்கு ராஜ்யபரிபாலனம் கிடைக்கத் தடையாயிருக்கும் சில குடும்பங்கள் மற்றும் அரசாங்க முக்கிய பிரமுகர்களைத் தந்திரமாக வீழ்த்த வேண்டியிருக்கும்.இவ்வாறு பெண் உறவால் விளைந்த சங்கிலி அறுபடாமல் நீண்டு கொண்டேயிருக்கும்;அடுத்த பிறவிக்கு வழிவகுப்பதில் போய் அது முடியும்.முற்பிறவியில் ஆசைகளை அறவே ஒழித்தும்,மரணத்தறுவாயில் ஏற்பட்ட பெண்ணாசையால் இப்பிறவி எடுத்தோம் என்பதை பீஷ்மர் நினைவுக்குக் கொண்டு வந்தார்.இந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணையும் மோகத்தால் தீண்டாது உயிர்விட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார்.
உடல் வளர்ச்சி ஆரம்பமாகும் போது மனமும் வளர்ச்சியுறத் தொடங்குகிறது.வாலிப வயதில் நான் ஆண்மகன் என்ற உணர்வு உலகைப் பெண்மையாய் பார்க்கப் பழகுகிறது.யாருமற்ற கடற்கரை மணலில் வானுக்கும் மண்ணுக்குமாய் எழும்பும் அலைகளைப் பார்ததபடி நடந்து கொண்டிருக்கும் போது, கடலலை நுரையில் பொங்கி அமிழும் நீர்க்குமிழி போன்றது வாழ்வு என்று ஜீவாத்மாவுக்கே உண்டான பரமாத்ம ஈர்ப்பு அவரைக் ஆட்கொள்ளும்;சில நிமிடங்களில் எதிரில் ஒரு ஸ்திரி நடந்து வரும்போது, ஆன்ம உணர்வு காற்றில் கரைந்து நான் ஆண்மகன் என்ற அகந்தை விழித்துக் கொள்வதை அறிந்தார்.இவ்வுலகினில் மனமே ஐம்புலன்களாகிய நூல்களைக் கொண்டு பொம்மலாட்ட பொம்மையைப் போல் உடல் இயக்குவதைக் கண்டார்.முற்பிறவியில் காம உணர்வு தூண்டப்பட்டவுடன் தான் எதிர்க்க முடியாமல் கட்டுண்டுவிட்டதை எண்ணி அநேகமுறை வருந்தியிருந்தார்.அலைகளைப் போல் எழுவதும் பின்பு தணிவதுமாய் வாழ்வு முழுவதும் அந்த ஆசைகள் இன்ப வேட்கைக்கு உடலை இரையாக்குவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.மனமே உலகினை அனுபவிக்கத்தான் உனக்கு இப்புவியில் எத்தனை, எத்தனை உடல்கள் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், கதிரவன் மேற்கில் மறையத் தொடங்கினான் எங்கும் இருள் ஊடுருவத் தொடங்கியது.
கங்கை நதியை வணங்கினார்.வைராக்கியத்தோடு உட்கார்ந்து கண்களை மூடி தியானித்தார். இப்பொழுது அவரது மனம் அஸ்தினாபுர நகரத்துக்கு வெளியே ஒரு ஏழை அந்தணன் வீட்டில் மகனாகப் பிறந்தது.அந்த அந்தணன் தன் மகனுக்கு பெயர் சூட்டி,வேத மந்திரங்களை உச்சரிக்கக் கற்றுக் கொடுத்து,தினமும் சூரிய நமஸ்காரம் செய்த பின் அந்த நாளினைத் தொடங்க பயிற்சி அளித்திருந்தார் அவனுடைய பதினாறாம் வயதில் திருமணம் முடிந்தது;இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தைகளைப் பெற்றான்.இறை நாமங்களை ஜெபித்து,ஜெபித்து உள்ளுக்குள் சதா ஹரி ஓம் ஹரி ஓம் என்று ஒலித்துக் கொண்டேயிருந்தது.பால்யம்,இளமை இவ்விரு பருவங்களையும் மாயை சர்ப்பம் போல் விழுங்கியது.இன்றோடு அந்த அந்தணன் மகனுக்கு அறுபது வயது பூர்த்தியடைந்தது.தன் பிள்ளைகளுக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்டு மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு துறவு பூண்டு கானகம் நோக்கி சென்றான்.
பீஷ்மர் தன் தியானத்தைத் கலைந்தார்.காலம் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தைக் கடந்து கொண்டிருந்தது.ஓர் இரவில் அவரது மனம் ஒரு பிறவிக்கடலைக் கடந்து வந்துவிட்டது.பெண் சுகம்,வம்ச விருத்திக்கான குழந்தைகள் எல்லாவற்றையும் பார்த்து தன் ஆசைகளைத் தணித்துக் கொண்டுவிட்டது.இப்போது அவரது மனம் அறுபதாம் பிராயத்தை அடைந்திருந்தது, பீஷ்மரின் உடலின் வயதோ பத்தொன்பது.
அஸ்தினாபுரத்து அரசன் சந்தனு ராஜன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற கங்கையைப் போன்று தோற்றமளித்த பரிமளகந்தி எனும் செம்படப் பெண்ணின் மீது மோகம் கொண்டு விட்டார்.தந்தையின் முகவாட்டத்துக்கும்,நிம்மதியின்மைக்கும் காரணத்தை அறிந்த பீஷ்மர்,தகப்பனின் வேட்கையைத் தீர்க்க மீனவப் பெண்ணின் வீட்டிற்கு பெண் கேட்டுச் சென்றான் கங்கை மைந்தன்.அவளுக்கும் சந்தனுராஜக்கும் பிறக்கும் வாரிசுகளே தேசமேற்க வேண்டும் நீ யுவராஜனாகக் கூடாது என்று அவளுடைய தகப்பன் கேட்ட சத்தித்தைக் கொடுத்துவிட்டு அப்பெண்ணை அரண்மணைக்கு அழைத்து வந்தான்.பரிமளகந்தி சந்தனு அரசனை மணந்து பட்டத்தரசி சத்யவதியானாள்.அவர்களுக்கு சித்தராங்கதன்,விசித்திரவீரியன் என்ற இரு புதல்வர்கள் பிறக்கின்றனர்.
அம்பா?
காசி மன்னன் அரண்மணையில் அரசகுமாரரர்கள் அமர்ந்திருக்கும் சுயம்வர மண்டபத்தில் காத்துக் கொண்டிருந்த மூன்று பெண்களை, தனது வில் முனையில் மற்றவர்களை அஞ்சி ஓடச்செய்து தன்னுடைய சகோதரர்களுக்கான மணப்பெண்களாகத் தூக்கிக் கொண்டு ரதத்தில் புறப்பட்டார் பீஷ்மர்.அஸ்தினாபுரத்தை அவர்கள் அடைநதபோது நகரமே விழாக்கோலம் பூண்டது.மூவரில் அம்பா மறுததுவிட்டாள்.தான் சால்வன் மீது கொண்ட நேசம் பொருட்டு அவள் அரசகுமாரரர்கள் இருவரையும் கணவனாக ஏற்க மறுத்துவிட்டாள்.கங்கையின் புத்திரன் அவளை சால்வனிடமே திருப்பி அனுப்பினான்.அம்பா கற்பனைக் கனவுகளோடு சால்வனின் தேசத்திற்குப் புறப்பட்டாள்.
அவளைக் கண்ட சால்வன் திகைத்து நின்றான் “அம்பா நீ வில்முனையில் வெல்லப்பட்டு விட்டாய்;வென்றவனுக்கே சொந்தமாவாய் உன்னை வென்று மணந்திருந்தால், என் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாய் ஜொலித்திருப்பாய்;இன்று வென்றவனால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டமையால்,நீ இங்கே வசித்து இந்த அரண்மணையின் அவமானச் சின்னமாகிவிடாதே.உன் இருப்பு என்னைக் கூனிக் குறுகச் செய்கிறது.இதனை கனவென மறக்கவே விரும்புகிறேன்.நீ திரும்பிச் சென்றுவிடு! ” என்றான்.
சுவரில் வீசப்பட்ட பந்து போல மீண்டும் அஸ்தினாபுரத்துக்கே திரும்பினாள்.தான் பற்றியிருந்த சால்வன் என்ற கிளை முறிந்தாலும், அவள் பீஷ்மர் என்ற மற்றுமொரு கிளையை நம்பி அரண்மணைக்குள் நுழைந்தாள்.
அம்பாவின் விருப்பத்தை அறிந்த பீஷ்மர் “என்னுடைய நிழல் கூட பெண் உடலைத் தீண்டாது” எனப் பதிலுரைத்தார்.இறைவன் ஒரு கதவை மூடினாலும் மற்றொரு கதவைத் திறப்பான் என எதிர்பார்த்த அம்பா,பீஷ்மரால் நிராகரிக்கப்பட்டதை எண்ணிக் குமுறினாள்.இனி எங்கே?என்ற கேள்வி அவள் மனதில் அகோரமாய் ஒலித்தது.மனதிப் துயர மூட்டையைச் சுமந்து கொண்டு அந்த இரவின் இருளில் வாழ்வில் ஒளிதேடி கானகம் நோக்கிச் சென்றாள்.
நாட்கள் இலக்கின்றி எய்த அம்பு போல நகர்ந்து கொண்டிருந்தது.தன்னைக் காண வரும் பரசுராமரைக் கண்டு அதிர்ச்சியுற்றார் பீஷ்மர்.அவரைத் தொடர்ந்து அம்பா வந்து கொண்டிருந்தது அவரது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.சில மேற்கோள்களை எடுததுக்காட்டி நீ அம்பாவை ஏற்றுக் கொளள வேண்டும் என்றார் பரசுராமர். “எனது முடிவு உங்களுக்குத் தவறாகத் தோன்றலாம்,ஆனால் எனது முடிவு ஒருபோதும் தர்மத்திற்கு எதிரானது அல்ல,இதை நீங்கள் உணர வேண்டும்” என தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் நின்றார் பீஷ்மர்.
தனது கடைசி அஸ்திரமும் பயன்படாது போகவே,அம்பா வெறியுடன் பரசுராமரின் வில்லைப் பிடுங்கி பீஷ்மரைக் கொல்ல முயன்றாள்;ஒரு ஸ்த்ரி கையில் வில்லை ஏந்தக் கூடாது என்றுரைத்து அவள் கையிலிருந்த வில்லைத் தன் கோடாரியால் முறித்தார் பரசுராமர்.அம்பா தன் எண்ணம் நிறைவேறாமல் போன துயரத்தில்,தன் மரணம் தான் தனக்குச் சாந்தி தரும் என்றெண்ணி அக்னியில் விழுந்து உயிர் நீத்தாள்.தன்னுடையை அகோர மரணத்திற்கு கங்கைப் புத்திரனே காரணம் என்ற ரெளத்திர நினைவு மட்டும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை.
குருவம்சத்தில் பார்வையற்றவனாக திருதராஷ்டிரனும்,இளையவனாக பாண்டுவும் பிறந்தார்கள்.பாண்டுவிற்கு குந்தியின் மூலம் யுதிஷ்டிரன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன்,சகாதேவன் என்ற ஐவரும் பிறந்தார்கள்.அரசன் திருராஷ்டிரனுக்கு காந்தாரி மூலமாக துரியோதனன் முதலான நூறு சகோதரர்கள் பிறந்தார்கள்.
துருபத அரசனுக்கும் கெளசவிக்கும் சிகண்டி பிறந்தான்.அம்பா என்ற அலைக்கழிக்கப்பட்ட கன்னியே சிகண்டியாக ஆண் உடல் தரித்திருந்தாள்.சிகண்டிக்கு அம்பாவின் நினைவலைகள் அதிகமாக இருக்கும் சமயத்தில் அவன் பிறர் கண்களுக்கு ஸ்த்ரியாகவே தென்படுவான்.திருமணத்திற்குப் பிறகும் அம்பாவின் நினைவுகளால் துரத்தப்பட்டான்.மனைவியின் அவமதிப்பிற்குப் பின் அம்பாவின் நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு வலிமையுள்ள ஆடவனின் மனம் கொள்ள விரும்பினான்.
வனத்தில் இருமனம் கொண்ட ஒரு மனிதமாய் அலைந்து திரிந்தான்.அவனுடைய கடுமையானச் சொற்கள் வனத்திலுள்ள மரங்களை திகிலடையச் செய்தன.கேள்விகள் அவன் நாவிலிருந்து வெளியேறிய உடல் வெப்பத்தில் மயங்கிச் சரிந்தான்.
அந்த வனத்தில் உலவிய ஒரு முனிவர் அவளனக் கண்டார்.அவன் சிகண்டி ரூபம் கொண்ட அம்பா என்பதை உணர்ந்து கொண்டார்.ஆண் உடலாலும் பெண் மனதாலும் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதை உணர்ந்து அவனுடைய வாயில் மூலிகைச் சாற்றைப் பிழிந்து,செவியில் மந்த்ரம் உச்சரித்துவிட்டு தன்னுடைய குடில் நோக்கி சென்றார்.பல மணிநேர உறக்கத்திற்குப் பின்பு விழித்த சிகண்டி உடலாலும்,மனதாலும் தான் ஆண் என்பதை உணர்ந்தான்.அம்பாவின் நினைவுகள் அவனைவிட்டு அகன்று ஒடுங்கியிருந்தது.
தேசாந்தரியாக வனத்தில் திரிந்த பாண்டு இறந்தான்.பாண்டவர்கள் ஐவருடன் குந்தி அஸ்தினாபுரம் வந்தடைந்தாள்.காந்தாரியின் சகோதரனான சகுனியே கெளரவர்களை அரவணைத்து வளர்த்து வந்தான்.
அஸ்தினாபுரம் என்ற நகரம் பல இரவு பகல்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.பாண்டவர்களும்,கெளரவர்களும் வாலிப வயதினை அடைந்தார்கள்.பாஞ்சால தேச அரசிளங்குமரி திரெளபதை ஐந்து சகோதரர்களுக்குத் துணைவியானாள்.பாண்டுவின் புதல்வர்கள் இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்தை ஸ்தாபித்தார்கள்.அந்த நகரத்தில் மயன் சிருஷ்டித்த மணிமண்டபத்தில் யாகங்கள் நடத்தப்பட்டு பிரவேசிக்க நாள் குறிக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கெளரவர்களை பாண்டவர்கள் விருந்தி்ற்கு அழைத்திருந்தார்கள்.மண்டபத்தின் முற்றத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மிக மெதுவாக காலை முற்றத்தின் மீது வைத்தான் துரியோதனன்;பின்பு அந்த ஜலம் பொய்த் தோற்றம் மாயை என உணர்ந்து வெட்கமடைந்தான்.இதனை எங்கிருந்தோ கண்ட பீமன்,அர்ஜுனன் மற்றும் திரெளபதியின் கேலிச் சிரிப்பொலி துரியோதனனை பேராத்திரம் கொள்ளச் செய்தது.விருந்திற்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது.இதற்கு பழிதீர்க்க வேண்டும் என்ற வஞ்சினத்துடன் அரண்மணைக்குத் திரும்பினான் துரியோதனன்.
துரியோதனன் தன் மனமென்னும் குடுவையில் உள்ள அமிலத்தோடு பாண்டவர்களின் கேலியால் விளைந்த ரெளத்திர அமிலத்தை கலந்தான்.குடுவை எந்நேரமும் வெடித்துச் சிதறி மற்றவர்களைக் காயப்படுத்த உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது.அதற்கான நேரமும் வந்தது.
கெளரவசபை நிர்மாணிக்கப்பட்டு விருந்திற்கு மன்னன் திருதராஷ்டிரனால் பாண்டவர்கள் ஐவரும் அஸ்தினாபுரம் அழைக்கப்பட்டு இருந்தனர்.துரியோதனனுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க சகுனி வஞ்சகமாக யுதிஷ்டிரனை சூதாட அழைத்தான்.யுதிஷ்டிரனும் சம்மதித்து சூதாடத் தொடங்கினான்.பகடை உருண்டது அணிகலன்கள்,எருதுகள்,நகரம்,சகோதரர்கள் என்று நீண்டு சென்று சென்று கொண்டே இருந்த யுதிஷ்டிரனின் பணயப் பொருள்,முடிவில் பாஞ்சாலியை வைத்து சூதாடுவதில் வந்து நின்றது.சகுனியின் பகடையாட்டத்தில் திரெளபதியையும் இழந்து தலை கவிழ்ந்து நின்றான்.
துரியோதனனின் உறக்கமற்ற இரவுகளில் திரெளபதியின் கேலிச் சிரிப்பொலி நீண்ட நாட்களாய் அவன் செவியில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வரச் சொன்ன துரியோதனன்,தன் வஞ்சத்தைத் தணித்துக் கொள்ள அவள் ஆடையை துகிலுறியச் சொன்னான் துச்சாதனனிடத்தில்.
திரெளபதியின் சேலையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன்.பாஞ்சால தேசத்து இளவரசியும்,வில்லுக்கு விஜயனாம் அர்ஜுனன் வென்று வந்த யுவதியுமான அவளை,தன்னை நோக்கும ஆடவரை சிறுமை கொள்ளச் செய்யும் அழகியான திரெளபதியை அவளின் மேனி அழகின் செருக்கை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு மேலோங்கியது.அதுமட்டுமின்றி அவனுக்குள் மிருக உணர்வு கிளர்ந்தெழுந்தது,எதிரில் இருப்பது புள்ளிமானாகப்பட்டது.வேட்டையாடுவதில் ஒன்றும் வரம்புகள் விதிக்கப்படவில்லையே விலங்குகளுக்கு.அவனது ஐம்புலன்களாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி இதில் கண்ணைத் தவிர மற்ற புலன்கள் செயலற்றுவிட்டன;ஏனெனில் துச்சாதனனின் உணர்வுகள் அனைத்தும் கண்களில் குவிக்கப்பட்டு,திரெளபதியின் அலங்கோலத்தைக் காண அவன் கொண்ட வேட்கையால் இமைக்காமல் நின்றது அவனது இரு கண்கள்.அதனால் அவளது ஆடையைப் பற்றி இழுத்த சில நொடிகளில் அந்தகணைப் போன்ற நிலை ஏற்பட்டது துச்சாதனனுக்கு.சேலையின் பிடியைத் தவறவிட்டு காற்றில் கையைத் துழாவித் துழாவி சோர்ந்து சேலைத் தலைப்பு கரங்களில் தென்படாமல் செயலற்று கீழே வீழ்ந்தான்.
அந்த கெளரவ சபையில் கலைந்த கூந்தலை,துரியோதனன் மற்றும் துச்சாதனனின் குருதியில் நனைத்தே முடிவேன் என சபதம் செய்தாள் பாஞ்சாலி.
இறுதியில் நாட்டை இழந்து வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார்கள் பாண்டவர்கள்.யுதிஷ்டிரரின் மனது சமநிலைக்குத் திரும்பும்போதெல்லாம்,தங்களுக்கு நிகழ்ந்த அவமானத்தை,வலியை,ஆறாத காயத்தை திரெளபதியின் முடிக்கப்படாத கூந்தல் உணர்த்திக்கொண்டேயிருக்கும் அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும். பழிதீர்க்கும் நெருப்புச்சுடரை திரெளபதி தினசரி தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தாள்.அவளின் இந்த உக்கிரம் ஒரு மகா யுத்தத்துக்கு குருவம்சத்தை அழைத்துச் செல்லும் எனக் காலம் அறிந்தேயிருந்தது.
பாண்டவர்களின் பதிமூன்று ஆண்டுகால வனவாசமும்,ஒரு ஆண்டுகால அஞ்ஞாதவாசமும் முடிந்தது.பாண்டவர்கள் துவாரகை மன்னன் வசுதேவ கிருஷ்ணனை தூது அனுப்பி தங்களுக்கு உரியதைத் தந்துவிடுமாறு கெளரவர்களிடம் வேண்டினர்.அத்தூது முயற்சி தோல்வியில் முடியவே யுத்தம் தொடங்கிற்று.
கெளரவ சைன்யம் பீஷ்மரின் தலைமையிலும்,பாண்டவ சைன்யம் திருஷ்டத்யும்மன் தலைமையிலும் குருட்ஷேத்திர யுத்தக் களத்தில் மோதிக் கொண்டனர்.
யுத்த நாட்களில் இரு சேனைகளிலும் பல ஆயிரம் வீரர்களும்,சேனாதிபதிகளும் மாண்டு கொண்டிருந்தனர்.யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது.துரியோதனன் தன் மகனாகிய லட்சுமணனை இழந்தான்.அர்ஜுனன் தன் மகன் அபிமன்யூவை இழந்தான்.
தனக்கு நீர்த்தார் கடன் செய்ய வேண்டிய தன் மகன் அபிமன்யூ பத்ம வியூகத்தில் சிக்கி மாண்டு போனதை நினைத்து சிதையில் எரிந்து கொண்டிருந்த அவன் உடலின் அருகே நின்று அழுதுபுலம்பிக் கொண்டிருந்த அர்ஜுனனின் அருகே வந்த கிருஷ்ணன் “பார்த்தியா இவ்வுலகே ஒரு பத்ம வியூகம் தான்;இதில் எவ்வளவு கோடி ஜீவன்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் பார்த்தாயா?இந்த பத்ம வியூகத்தை உடைத்து யாரால் இங்கு வெளிவர முடியும்;அப்படி நடந்தால் இவ்வுலகம் தன் ஆயுளை பிரளயத்தில் முடித்துக் கொள்ளாதா? “என்று உபதேசித்து அவனைத் தேற்றினான்.
பத்தாம் நாள் யுத்த களத்தில் தன் எதிரே வில்லுடன் நிற்கும் சிகண்டியின் தோற்றம் பீஷ்மரின் கண்களுக்கு பெண் அம்பாவைப் போல் தெரிந்து துணுக்குற்றார்;வெகுவாக அயற்சியடைந்தன அவரது வில்யேந்திய கரங்கள்.அதற்குள் சிகண்டியின் பாணங்கள் பீஷ்மரைத் துளைத்தன.பீஷ்மர் தன் கையில் பற்றியிருந்த வில்லை அர்ஜுனன் முறித்தான்.
“நிராகரிக்கப்பட்டவளின் வலி இந்த அம்பு உடலில் பாய்ந்ததால் உண்டான வலியை விடக் கொடியது என உணருங்கள்” என அம்பாவின் குரல் அசரீரியாக பீஷ்மருக்கு கேட்டது.அம்பா என்ற ஸ்த்ரி பழி தீர்த்துக் கொண்டடாள் கங்கை புத்திரனை பெண்ணை உடலால் வஞ்சிப்பதை விட மிகக் கொடியது மனதால் வஞ்சிப்பது எனப் புரிந்து கொண்டார் பீஷ்மர்.அம்பாவின் இத்தண்டனையை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டார்.இருவருக்கும் இடையேயான இறுதிக்கணக்கு இவ்வுலகத்தில் தீர்க்கப்பட்டுவிட்டது.
அம்புப்படுக்கையான சரதல்பத்தில் கிடத்தப்பட்டார்.கங்கை நதி அவரது தாயானாலும் அவரின் மரணத் தாகத்தை தீர்க்க அவள் வரவில்லை.போரின் முடிவில் கெளரவர்களின் தோல்வியை கண்டுணர்ந்தார்.சூரியன் தென் திசையில் சஞ்சரிக்கும் தட்சிணாயனத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர், உத்தராயணம் எனப்படும் சூரியன் வடதிசையில் சஞ்சரிக்கும் காலம் வரும் வரை காத்திருந்து தன் திருவுடலை நீத்து வானுலகம் சென்றார்.