குருவாயூரப்பா… அருள் புரிவாயப்பா!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 7,997 
 

அடியவருக்கும் அடியவன் ஆனவன் ஆண்டவன். நாராயண பட்டத்ரி, பில்வமங்களர் மற்றும் குரூரம்மை ஆகியோரின் வாழ்வில் ஸ்ரீகுருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் இதை மெய்ப்பிக்கும்!

வாத நோயால் அவதியுற்ற நாராயண பட்டத்ரி, தன்னிடம் நேரில் பேசிய ஸ்ரீகுருவாயூரப்பனின் அனுக்கிரகத்துடன் எழுதிய ஒப்பற்ற நூலே நாராயணீயம்!

பில்வ மங்களரும் குரூரம்மையும்… தினமும் தங்களது வீட்டுக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணரே வந்து விருந்துண்டு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்!

பில்வமங்களர்… ஏகாதசி, தசமி மற்றும் சிரவணம் (திருவோணம் நட்சத்திரம்) ஆகிய நாட்களில், துளசி தீர்த்தத்தை மட்டும் அருந்தி விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இந்த நாட்களில், சர்க்கரைப் பொங்கலும் பால் பாயசமும் செய்து தரச் சொல்லி… விரும்பிச் சாப்பிடு வாராம் கிருஷ்ண பரமாத்மா!

ஒரு முறை, பில்வமங்களரின் வீட்டுக்கு அவரின் நண்பர் ஒருவர் வந்தார். வயிற்று வலியால் தான் அவதிப்படுவதாகக் கூறிய நண்பர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரார்த்தித்து தனது நோயைக் குணமாக்கும்படி பில்வ மங்களரிடம் கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு பகவானை தரிசித்த பில்வமங்களர், ”என் நண்பர் வயிற்றுவலியால் துன்பப்படுகிறாராம். உங்களிடம் முறையிடச் சொன்னார்!” என்றார். உடனே ஸ்ரீகிருஷ்ணர், ”இது பூர்வஜென்ம வினை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது!” என்றார்.

இந்த பதிலைத் தன் நண்பரிடம் தெரிவித்தார் பில்வ மங்களர். மனம் வருந்திய அந்த நண்பர், குரூரம்மையைச் சென்று சந்தித்தார். தனது வயிற்றுவலி தீர பகவானிடம் பிரார்த்திக்கும்படி அவரிடமும் வேண்டினார்.

இதையடுத்து, வழக்கம்போல் தன் வீட்டுக்கு வந்த ஸ்ரீகிருஷ்ணரிடம் அன்புடன் உணவு பரிமாறினார் குரூரம்மை. பிறகு, நண்பரின் வயிற்றுவலி பற்றிச் சொல்லி, ”உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும்” என்று பணிவுடன் பிரார்த்திக்கவும் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்ற பகவான், அந்த நண்பரது வயிற்றுவலி நீங்க அருள் பாலித்தார்.

மகிழ்ச்சியில் திளைத்தார் நண்பர். பில்வமங்களரிடம் சென்றவர், குரூரம்மையின் பிரார்த்தனையால் தனது நோய் குணமாகிய விஷயத்தைத் தெரிவித்தார்.

பில்வமங்களருக்கு கோபம். ‘தான் வேண்டிய போது பகவான் செவிசாய்க்கவில்லையே!’ என்ற வருத்தம் அவருக்கு. இதுகுறித்து பகவானிடமே கேட்டு விட்டார்.

உடனே, ”பில்வமங்களரே… நண்பரின் வயிற்று வலி குறித்து நீர் கூறியது வெறும் தகவல் நிமித்தமாகவே இருந்தது. எனவே, அதற்கான காரணத்தை மட்டும் உம்மிடம் சொன்னேன். ஆனால் குரூரம்மையின் வேண்டுதலோ, தாயன்புடன் கூடிய பிரார்த்தனையாக இருந்தது. ஆத்மார்த்தமான தூய பக்தியுடனும் அன்புடனும் வேண்டும் பக்தர்களது பிரார்த்தனையை, நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்!” என்று விளக்கினார் பகவான்.

உண்மை உணர்ந்த பில்வமங்களர் கண்ணீர்மல்க பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நமஸ்கரித்தார்.

-கே. ராஜலக்ஷ்மி, சென்னை-61 (ஜனவரி 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *