கிரிவலமும் பிரகலாதனும்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,408 
 

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது:

கிரிவலமும் 1மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம் பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. அப்போது, அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்த நாரதர், ‘திருவண்ணாமலை திருத்தலம் சென்று, காயத்ரி மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!’ என்று கூறி காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜபித்தபடி அவள் கிரிவலம் வருகையில் திடீரென்று ‘அமுத புஷ்ப மழை’ பொழியத் தொடங்கியது.

கிரிவலமும் 2பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமை யுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப் பொழிவு இறைத் தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப் பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். மட்டுமின்றி, அங்கு ‘அமுத புஷ்ப மூலிகை’ என்கிற அரிய வகைத் தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப்பையையும் அடைந்தது. அதை கருவிலிருக்கும் பிரகலாதன் கண்டான். அதனால் அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகினாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி, கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரகத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என் நாராயணன்!’ என்று பின்னாளில் பிரகலாதன் கூறியபோது இரணியன் தனது கதாயுதத்தால் தூணை அடித்தான். அப்போது தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிப்பட்டார். அவரது உக்கிரம் தாங்காமல் இரணியன் மயங்கி வீழ்ந்தான். அவனைத் தன் மடி மீது கிடத்தி, வயிற்றைக் கிழித்து குடலை வெளியே எடுத்தார் நரசிம்மர். நரசிம்மரின் அந்த உக்கிரம், பிரகலாதனை தாக்காதது, அமுத புஷ்ப மூலிகையின் சக்தியால்தான்!

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜபித்தால், நமது வீட்டில் செல்வ மழை பொழியும். மழை பொழியா விட்டாலும் மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரி ஜபிக்க வேண்டும் என்பது விதி.

– தி.இரா. பரிமளரங்கன், திருச்சி-21 (நவம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)