ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம்.
பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண
அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்…
என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்களும் வாழைப் பந்தல்களும் எழிலோடு காட்சியளித்தன. கருட வாகனத்தில் அரங்க ராஜாவின் பிரம்மோற்சவக் காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.
தமிழ் வேதம் ஓதும் திவ்ய பிரபந்தப் பாடகர்கள். துதிக்கையை முன்னும் பின்னும் அசைத்தவாறு பெரிய திருநாமம் அணிந்த யானை, பருத்த திமில் களுடன் முதுகில் டமாரம் தொங்க விடப்பட்ட எருதுகள், சேணம் பூட்டப்பட்ட குதிரைகள், ஸ்ரீமந் நாராயணனின் ஜய கோஷத்தை ஒலித்தவாறிருக்கும் அடியார் கூட்டம்…
தேவதாசிகள் கீதமிசைக்க, பல்லக்குத் தூக்கிகள் கருட வாகனத்தைச் சுமந்து வர, அதில் தம் தேவிகளுடன் கம்பீரமாக அமர்ந்தவாறு ‘சேவை’ சாதிக்கும் அரங்கநாதனை பக்தகோடிகள் யாவரும் பக்திப் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மகர குண்டலங்கள், கிரீடம், அலங்கார மாலை கள் மற்றும் புன்முறுவலுடன் தரிசனம் தரும் ரங்க நாதனைப் பன்முறை வலம் வந்து வீழ்ந்து வணங்கித் திரும்பினார் ராமானுஜர். அவரின் கண்களில் வித்தியாசமான ஓர் இளைஞன் தென்பட்டான்.
அந்த இளைஞனின் இடக் கையில் ஒரு பெரிய குடை. வலக் கையில் ஒரு விசிறி. அவனுக்கு அருகே, பேரழகுடன் காட்சியளிக்கும் ஓர் இளநங்கை. தகிக்கும் வெயிலில் தன் இடக் கையால் குடையை அவள் தலைக்குமேல் தாங்கிப் பிடித்து, வலக் கை விசிறியால் இதமாக அவளுக்கு விசிறிக் கொண்டிருந்தான்.
அவளின் அழகைத் தன் கண்களால் பருகியவாறிருந்த அந்த இளைஞனை அங்கிருந்தோர் கேலியும் கிண்டலுமாக விமர்சித்தனர். இதை கவனித்த ராமானுஜர், தன் சீடரிடம் அந்த இளை ஞனை அழைத்து வருமாறு கூறினார்.
அவன் வந்ததும், ‘‘குழந்தாய், இந்தக் கூட்டத்தில் பிறர் பரிகசிக்கும்படி நடந்து கொள்ளும் நீ, அந்தப் பெண்ணிடம் அப்படி என்ன கண்டாய்?’’ என்று கேட்டார்.
‘‘இவளின் கண்களைப் போன்ற அழகு எங்குமே இல்லை. அந்த வசீகரத்தில் என் மனதைப் பறிகொடுத்து, பார்வையைத் திருப்பச் சக்தியற்றவனாக உள்ளேன். அந்த அளவு எனக்கு அவள் மீது ஈர்ப்பு.’’
‘‘ஓ… மிக்க நன்று குழந்தாய். உன் பெயர் என்ன?’’
‘‘உறங்காவில்லி. உறையூரைச் சார்ந்த நான் ஒரு மல்யுத்த வீரன். என்னுடன் இருக்கும் இந்த அன்புக் காதலியின் பெயர் பொன்னாச்சி.’’
‘‘உறங்காவில்லி… உன் காதலியின் கண்களை விட மிகவும் அழகான கண்களை நான் உனக்குக் காட்டினால், நீ அந்த நங்கையை விட்டு, நான் காட்டும் இடத்தில் அன்பு வைக்க நீ தயாரா?’’ என்று கேட்டார் ராமானுஜர்.
‘‘கண்டிப்பாக! அவை இவளின் விழிகளைக் காட்டிலும் மிக்க அழகு வாய்ந்ததாக இருந்தால், அவற்றுக்கு என்னை அர்ப்பணிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.’’
‘‘நன்று உறங்காவில்லி. இன்று மாலை வந்து என்னைப் பார்!’’ என்று சொல்லி ராமானுஜர் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
உறங்காவில்லியும் அங்கிருந்து நகர்ந்து, தலை குனிந்து அமர்ந்திருக்கும் தன் காதலி பொன்னாச்சியை நெருங்கி முன்பு போலவே குடை பிடிக்கும் பணியைத் தொடர்ந்தான்.
மாலை வேளை…
‘‘வா உறங்காவில்லி! அரங்கனின் தீபாராதனை காண ஆலயத்துக்குப் புறப்படுகிறேன். நீயும் வா. சேர்ந்தே செல்லலாம்!’’
கர்ப்பக்கிரகத்தில் மகர குண் டலம் மற்றும் ஜொலிக்கும் ஆபரணங்களுடன் துளசிமணி மாலைகள் துலங்கப் பட்டுப் பீதாம்பரத்துடன் சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளின் முன்பு நின்றார்கள். பக்திப் பெருக்கில் நின்றிருந்த ராமானுஜரின் அருகே இருந்த உறங்கா வில்லியின் மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு. அரங்கனின் கண்களை உற்றுப் பார்த்த அவனால் என்ன முயன்றும் தன் கண்களை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அவன் கண்களில் இருந்து பிரவாகமாக நீர். அவன் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொன்னாச்சியின் கண்கள் மறைந்தன.
அவன் மனம் முழுவதும் பரந்தாமனின் எழில் ததும்பும் வதனமும், வசீகரிக்கும் கண்களுமே நிறைந்திருந்தது.
‘‘உறங்காவில்லி!’’
_ ராமானுஜரின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்த அவன் அடுத்த கணம் அவரின் பாதங்களில் சிறகொடிந்த பறவை போல் வீழ்ந்தான். பின் கண்ணீர் மல்க,
‘‘கருணைக் கடலே! என் தெய்வமே… இனி இந்த அடியேன் எப்போதும் தங்களின் அடிமை. தங்களின் திருவருளால் இன்று இந்த இழிந்த விலங்குக்கு, தெய்வத்தை தரிசிக்கும் மிகப் பெரிய பாக்கியம் கிட்டியது. என் அகக் கண்களைத் திறந்து விட்ட உமக்குக் கோடானுகோடி நன்றிகள்!’’
ராமானுஜர், அவனைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டார்.
அதன்பின் தாசி குலத்தில் பிறந்த வளானாலும் உறங்காவில்லியைத் தன் கணவனாக மதித்து வாழ்ந்து வந்த பொன்னாச்சி தானும் இந்திரிய சுகபோகங்களைத் துறந்து ராமானுஜரை சரணடைந்தாள்.
அவர்கள் இருவருக்கும் இருந்த மோகப் பிணைப்பு நீங்கி, தெய்வீகப் பிணைப்பு உண்டாகி, இருவரும் தெய்வீகத் தம்பதியாயினர். பின்னர் அவர்கள் ஸ்ரீரங்கத்தில், குருவாகிய ராமானுஜரின் அருகிலேயே வசிக்கத் துவங்கி, அரங்கனின் அருள் பெற்றனர்.
– பெப்ரவரி 2007