கடவுளை ஆணாகவும், சக்தியைப் பெண்ணாக வும் பொதுவாக வழி பாட்டில் உருவகம் செய்வோம்.
மச்சாவதாரம், கூர்மாவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் பெரும்பாலும் மானுட வடிவில் அமைந்துள்ளன. சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் மனித வடிவில் விளங்குகின்றனர். இறை அவதாரங்களில் திருப்பாதங்களும், திருக்கரங்களும் அமைந்திருக்கும். அவை, மனிதனைவிட மேன்மையானவை. அதுவே கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாடு.
இந்த வேறுபாட்டை பக்தி இலக்கியங்கள் நுட்பமாக விளக்குகின்றன. மானுட வடிவில் அவதரித்த மகாவிஷ்ணுவான ராமபிரானின் நடை, உடை, பாவனைகள் மனிதர் போலவே அமைந்துள்ளன. ராமனைக் கண்ட விசுவாமித்திர முனிவர், அவரைத் தமது வேள்வி காக்க அழைத்துச் சென்றார். முதலில் தாடகையை வதைக்கச் சொன்னார் விசுவாமித்திரர். அந்தப் பெருந்தகையோ, ‘பெண்ணல்லவா… இவளைக் கொல்லலாமா!’ என்று நினைத்தான். ‘‘இவள் பெண் அல்ல; அரக்கி! உடனே கொல்!’’ என்று முனிவர் கட்டளையிட, தாடகையை நோக்கி ராமன் எய்த அம்பினால் அவள் மாண்டாள்.
வலிமையான அரக்கியை அழித்ததால் ராமனின் அமானுஷ்ய சக்தியைப் புரிந்து கொண்டார் விசுவாமித்திரர். அதன் பின் ராமனும் லட்சுமணனும் மிதிலையை நோக்கி அவருடன் நடக்கின்றனர். நகருக்கு வெளியே ராமபிரானின் பாதம் ஒரு பெரிய கல் மேல் படுகிறது. உடனே அது பெண்ணாயிற்று! அதைக் கண்ட ராமன், அவள் யார் என்று கேட்க, ‘‘அவளே அகலிகை!’’ என்றார் விசுவாமித்திரர். கௌதம முனிவரின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் திருப்பாதம் பட்டதால் மீண்டும் பெண்ணுருவம் பெற்றாள்.அப்போது தான் ‘ராமன் பரம் பொருளே!’ என்று புரிந்து கொள்கிறார் விசுவாமித்திரர்.
‘இனி இந்த உலகத் துயரம் நீங்கும். ராமாவதார நோக்கம் நிறைவேறி, உலகம் உய்யும். ராமனது நடவடிக்கையால் அவனே பரம்பொருள் என்பதைப் புரிந்து கொண்டேன்!’ என்கிறார் விசுவாமித்திரர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
இது கம்பனது பாட்டு. தாடகை வதமும் அகலிகை சாப நீக்கமுமே அந்த மாறுபட்ட நடவடிக்கைகள். ‘இங்குதான் கடவுள், மனிதரிடமிருந்து வேறுபடுகிறான்’ என்று முனிவருக்குப் புரிகிறது. மனிதன் கையால் வணங்குவான்; வழங்குவான்; கட்டியணைப்பான். அதே நேரம் வேண்டாம் என்றால், காலால் உதைப்பான்; தேய்த்து அழிப்பான்.
கடவுள் அழிக்க நினைத்தால் தம் கரங்களால் அம்பு எய்தோ, வாள் வீசியோ, கதாயுதத்தால் அடித்தோ, சக்ராயுதம் செலுத்தியோ அழிப்பார். அவர் அருள நினைத்தால் திருப்பாதங்களால் அருளுவார்; அதனாலேயே அணைப்பார்! ராமன் கையால் தாட கையை அழித்து, காலால் அகலிகைக்கு அருளினார். அந்த மாறுபட்ட செயலே அவர் பரம்பொருள் என்பதை உணர்த்தியது! இதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் உண்டு!
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை& என்பது திருமுருகாற்றுப்படை வரிகள்.
‘முருகன் தம் அடியார்களை திருப்பாதங் களால் தாங்கிக் கொள்வான்’ என்றும், எதிர்ப்பவர்களை இடி போன்ற நீண்ட கரங்களால் அழித்துத் தேய்ப்பான்!’ என்றும் நக்கீரர் கூறுகிறார்.
கையால் அணைத்து, காலால் உதைப்பவன் மனிதன்; காலால் அணைத்து கையால் அழிப்பவர் கடவுள்!
– புலவர் இரா. இராமமூர்த்தி, சென்னை-16 (ஜூலை 2007)