பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத் தன் தலை வனாக ஏற்ற கர்ணன், அவனாலேயே அங்க தேசத் துக்கு மன்னனாக முடி சூட்டப்பட்டான்.
அதே வேளையில், கர்ணன் மீது அவச்சொல் ஒன்றும் இருந்தது. அதாவது, ‘துரியோதனனது பொருளை எடுத்து வாரி வழங்கிய கர்ணன், தனது சொத்தாக இருந்திருந்தால், அதை இதுபோல் கொடுத்திருப்பானா?’ என்று கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், கர்ணன் ஒப்பற்ற தர்மவான் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட விரும்பினான் இந்திரன். இவன், வேறு யாருமல்ல… கர்ணனின் பரம எதிரியான அர்ஜுனனின் தந்தை. தர்மம் இருக்கும் இடத்தில் பகையுணர்வு தோன்றாது அல்லவா? இந்திரனும் அப்படியே! ‘எவரும் கர்ணனை இழிவு படுத்தக் கூடாது’ என எண்ணினான் அவன். சரியான தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
அவனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. கர்ணனின் பெருமையை உலகுக்குப் பறை சாற்ற நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆம், அர்ஜுன னின் உயிரைக் காப்பாற்ற, கர்ணனிடம் தானம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்திரனுக்கு!
கர்ணனின் உடலோடு ஒட்டியுள்ள கவச- குண் டலங்களை அகற்றினால், அர்ஜுனன் காப்பாற்றப் படுவான். எனவே, கவச- குண்டலங்களை கர்ணனி டம் யாசித்துப் பெறுவதன் மூலம் கர்ணனின் பெருமை உயரும்; தன் மைந்தனும் காப்பாற்றப் படுவான் என்று திட்டமிட்டான் இந்திரன்.
அதன்படி, ஓர் அந்தணராக உருவமேற்று கர்ணனின் அரண்மனையை அடைந் தான். தானம் பெற வரிசையில் நின்றான். கர்ணன் தானம் செய்யும் முறையைக் கவனித்தான்.
பொதுவாக, தானம் பெறுபவரின் கரங்கள் கீழேயும் கொடுப்பவனின் கரங்கள் மேலேயும் இருக்கும். ஆனால், வாரி வழங்கிய கர்ணனின் கரங்கள் கீழேயும் தானம் பெறுபவரது கைகள் மேலேயும் இருந்தன. அதாவது, நவரத்தினங்கள் நிறைந்த செம்புப் பாத்திரத்தை கரங்களில் ஏந்தியவாறு கர்ணன் தானம் தர, தானம் பெறுவோர் பாத்திரத்தின் கழுத்துப் பகுதியைப் பிடித்தவாறு பெற்றுக் கொண்டனர். இதைக் கண்ட இந்திரன் வியந்து போனான்.
இந்திரனின் முறை வந்தது. அப்போது அவன், ‘அழிவே இல்லாத, உனது புகழை நிலைநாட்டும் பொருளே
வேண்டும். அதுவும் உனக்குச் சொந்த மானதாக இருக்க வேண்டும்!” என்று கர்ணனிடம் கேட்டான். கர்ணனும் சம்மதித்தான். என்றாலும், ‘சொந்தமான ஒன்றைதானே தானம் செய்ய முடியும்? நானும் அப்படித்தானே செய்கிறேன்!’ என்று குழம்பினான் கர்ணன்.
இதை உணர்ந்த அந்தணராகிய இந்திரன் கூறினான்: ‘கர்ணா… நீ தானம் கொடுப்பவை அனைத்தும் துரியோதனனுக்குச் சொந்தமானவை. ஆகவே, பிறக்கும்போதே உன்னுடன் தோன்றிய கவச- குண்டலங் களைக் கொடு. அவை மட்டுமே உனக்குச் சொந்த மானவை!”
இதைக் கேட்டுக் குழப்பம் நீங்கிய கர்ணன் புன்னகைத்தான். மறுகணம், தன் கவச-குண்டலங்களைப் பிரித்தெடுத்து, ஒரு தட்டில் வைத்து நீட்டினான். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட இந்திரன் தனது சுய உருவை, காட்டி அருளி னான். கர்ணன் வணங்கித் தொழுதான். அவனுக்கு ஆசி கூறிய இந்திரன், ‘உனது தானத்தால் எனது விருப்பம் நிறைவேறியது. அதே நேரம்… நீ தானம் செய்த முறை வியப்பளிக்கிறது. அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்!” என்றான்.
இதையடுத்து கர்ணன், ‘உலக மரபுகளை மீற வேண்டும் என்றோ, எவரும் செய்யாததைச் செய்து, புகழ் பெறுவதற்காகவோ இப்படிச் செய்ய வில்லை. தானம் பெறுபவரின் கைகள், புண்ணி யத்தை அள்ளித் தருபவை. ஆகவே, அந்தக் கரங்கள் கீழே தாழ்ந்திருக்கக் கூடாது. பெரும் புண்ணியத்தை அவர்களிடம் இருந்து பெறும் என் கரங்களே தாழ்ந்திருக்க வேண்டும். எனவே, தானம் தரும்போது என் கைகளைத் தாழ்த்திக் கொள்கிறேன். எனக்குப் புண்ணிய பிச்சை இடுபவர்கள்… அதாவது தானம் பெறுபவர்கள் எனது கரங்களில் இருந்து தானத்தைப் பெற்று, புண்ணியத்தை அள்ளி எனக்குத் தருகிறார்கள்!” என்றான். இதைக் கேட்ட இந்திரன், கர்ணனை வாழ்த்தி விடைபெற்றான்.
-ராணி மணாளன், கிருஷ்ணகிரி (நவம்பர் 2008)
இந்திரன் நேரடியாவே இதை கேட்டிருக்கலாமே , எதுக்காக அவர் அந்தணர் வேஷம் போடணும்.
கர்ணனின் கொடைகள் கதைகளை தொடர்ந்து தாங்கள் தர வேண்டும்