இடர் கெடும் வழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 1,525 
 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வயிற்று வலி வந்து துடிக்கிறவர்களைக் கண்டிருக்கிறீர்களா? தெருவெல்லாம் கேட்கும்படி அலறி அழும் வண்ணம் அந்த வலி அவர்களைத் துன்புறுத்தும். வெறும் தலைவலி வந்தால்கூட, “அம்மா, அம்பா!” என்று எத்தனை தடவை சொல்லி விடுகிறோம்! நோய் வந்தவர்கள் முனகு வார்கள்; அந்த நோயின் கடுமை அதிகம் ஆக ஆக முனக லோடு நிற்கமாட்டார்கள்; வாய்விட்டு அரற்றுவார்கள்; புலம்புவார்கள்; அலறுவார்கள். இது மனிதர்களுக்கு இயல்பு.

குழந்தை தன் தாயைக் காணாவிட்டால் அழும். நேரம் அதிகம் ஆக ஆக யார் என்ன சமாதானம் சொன்னாலும் கேளாமல் கதறி அரற்றும்.

நாம் இந்த இரு வகை நிலையிலும் இருக்கிறோம். நோய் களுக்குள் பெரிய நோயாகிய பிறவிப்பிணியினால் நலிவு பெறு கிறோம். என்றைக்கும் எவ்விடத்தும் நமக்குத் தாயாக இருந்து அருள் புரியும் இறைவனைக் காணமுடியாமல் இருக் கிறோம். ஆனால் நாம் அரற்றுவதில்லை; அழுவதில்லை; முனகு வதுகூடக் கிடையாது.

நமக்கு நம்முடைய நோயினால் உண்டாகும் துன்பம் இன்னும் உறைக்கவில்லை. அதனால், “பிறவி வேதனையைத் தாங்கமுடியவில்லையே!” என்று அழத் தெரியவில்லை. கை கால் குறையோ, உடம்பில் நோயோ உடைய பிச்சைக் காரன் அந்த நோயையே தனக்கு ஜீவனத்துரிய கருவியாகக் கொண்டு, அதைக் காட்டிப் பிச்சை வாங்குகிறான். அதைப் போலலே இந்தப் பிறவி நோயினிடையே நாம் வாழ்ந்து வருகிறோம்; அழாமல் புலம்பாமல் வாழ்கிறோம். இந்த வேதனையை யார் தீர்ப்பார்கள்?

இறைவன் நம்முடைய தாய் என்ற உணர்ச்சியே இல்லை அதனால் அவனைப் பிரிந்று வாழ்வதனால் என்ன என்ன இன்பங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன என்ற எண்ணமும் உண்டாவதில்லை.

இந்த இரு வகையிலும் நமக்குத் துன்பங்கள் பெருகு கின்றன. பிறந்து பிறந்து செத்துச் செத்து இடர்களிலே மூழ்கி வருந்துகிறோம். அந்த இடர் தீரவேண்டுமானால் நாம் பெற்றுள்ள தீரா நோயின் வேதனை உறைக்க வேண்டும். உறைத்து அலறவேண்டும். நாம் தாயைக் கைவிட்ட குழந்தைகளாக இருக்கிறோம் என்ற துயரம் உறைக்க வேண்டும். அதனால், “அம்மா, அம்மா!” என்று அரற்ற வேண்டும். அப்போதுதான் நோய் தீரும் வழி புலப்படும். நம்முடைய தாய் நம்மை அணைக்க ஓடி வருவாள்.

இந்த உண்மையைத் தம்முடைய நெஞ்சுக்குக் கூறுபவரைப் போலத் திருநாவுக்கரசு நாயனார் நமக்கு அறிவுறுத்துகிறார்.

நெஞ்சைப் பார்த்து, “நெஞ்சமே உனக்கு உண்டாகியி ருக்கும் இடர்களெல்லாம் கெடவேண்டுமானால் இங்கே வா; ஒன்று சொல்கிறேன் கேள்; நீ அலறவேண்டும்; நமக்கெல் லாம் தாயாகிய இறைவனை நினைந்து அலற வேண்டும்” என்று அவர் சொல்கிறார்.

இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே. நீ வா,
அலறா நில்லே

என்று சொல்கிறார்.

எப்பெருமானை நினைந்து அலறக்கூட நமக்குத்தெரியாது. நம்முடைய வேதனைகளைச் சொல்லத் தெரியும்: அவற்றை யும் முழுமையாகச் சொல்லத் தெரியாது. யாரிடம் முறை யிட்டுக்கொள்ள எண்ணுகிறோமோ, அந்த இறை இறைவனை எப்படி அழைத்து அலறுவது? இது நமக்குத் தெரியாது. இதை அப்பர் சுவாமிகள் சொல்லித் தருகிறார்.

“நெஞ்சே, நீ வா” என்று தொடங்கினவர், இறை வனைப்பற்றிச் சொல்கிறார். “அதோ பார் இறைவனை. அவனுடைய திருமுடி.யிலே உள்ள சடை தெரிகிறதா? செஞ் சடையாகிய அது ஒளி விடுகிறது. அதில் நிலவும் இருப்பதால் ஒளி சேர்ந்த சடையாக இருக்கிறது. ஒளியென்ற மாத்திரத் தில் சூரியனைத்தானே நீ நினைக்கிறாய்? சூரியனிடம் ஒளி யிருப்பது போலவே வெப்பமும் இருக்கிறது. அப்படி இந்தச் சடை சிவப்பாகத் தழல்போல ஒளிவிடுவதால் இதிலும் வெப்பம் இருக்குமென்று அஞ்சாதே, இது தன்னிடத்தில் தண்மையை யுடைய கங்கையைத் தரித்த சடை. இறைவனு டைய புனிதத் தன்மையினால் புனிதமான கங்கை அது. உலகத்தில் மலப்பிணிப்பினால் மாசு ஏறிய உனக்கு இந்தப் புனிதன் அருள் கிடைத்தால் அந்த மாசெல்லாம் போய் விடும். ஆகையால் இந்தப் பெருமான் பெயரைச் சொல்லி அழைத்து அலறுவாயாக! நிறைந்த ஒளி சேர்ந்ததும் கங்கையை உடையதுமாகிய சடையையுடைய பெருமானே என்று கூவிப் போற்றுவாயாக!” என்கிறார்.

ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய் என்றும்.

[நெருங்கிய ஒளி சேர்ந்த கங்கையை அணித்த சடையை யுடையவனே என்றும். அலறா நில்லே என்று முடிக்கப் போகிறார். ஈண்டு தல்-தொகுதல்; கூடுதல்.]

“இருள் நிரம்பிய உலகில் உன் பார்வையில் ஒளி இல்லை. சூரியன் ஒளி தர நீ பார்க்கும் பார்வை புறப்பார்வை. காணும் காட்சியளவிலே ஒரு பொருளைத் தெரிந்து கொண்ட தாக எண்ணி ஏமாறுகிறாய். புறத்தே ஒளி இருந்தும் அகத்தே இருள் படர்ந்தமையால் பொருள்களை உள்ளவாறு அறியாத மயக்கம் உன்பால் இருக்கிறது. அந்த இடர் கெடு மாறு நீ எண்ணினால் அகத்தே உள்ள இருளைப் போக்கும் சுடரை நாடவேண்டும். இறைவன் சுடருகின்ற ஒளிப் பிழம்பாக, அகத்தே விளங்கும் சோதியாக நிற்பவன். அவனைக் கூவினால் அகவிருள் கெடும்: உண்முகப் பார்வை யினால் பொருள்களின் உண்மையை உணரலாம்.”

சுடர் ஒளியாய் உள்விளங்கு சோதீ என்றும்.

[சுடர்கின்ற ஒளியாகி உள்ளத்தினுள்ளே விளங்கும் சோதியே என்று கூறியும்.]

“பொய்யான பொருள்களை யெல்லாம் மெய்யான பொருள்களாக எண்ணி மயங்குகிறாய் நீ. இந்த இடர் கெட வேண்டுமானால் எந்தப் பெருமானைக் கண்ட மாத்திரத்திலே நிலையாமை புலப்படுமோ, அவனிடத்தில் முறைபிட்டுக் கொள்ளவேண்டும். சிவபிரான் தன்னுடைய திருமேனியில் தூய வெண்ணீற்றை அணிந்திருக்கிறான். அந்த நீறு உலகம் நிலையாதது என்பதைக் காட்டுகின்றது. நீறணிந்த திருத்தோளா என்று அவனை அழைத்து அரற்ற வேண்டும்.”

தூநீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்.

[தூய திருநீறு சேர்ந்து விளங்குகின்ற திருத்தோள்களை உடையவனே என்று சொல்லியும்.]

“நம்முடைய இடர் கெடும்படி புகல் புகவேண்டுமானால் எந்த இடருக்கும் அஞ்சாத ஒருவனிடம் புகவேண்டும். நாம் ஒரு துன்பம் வரும்போது ஒருவனை அடைகிறோம். அவன் பின்னும் பெரிய துன்பம் வரும் போது வேறு ஒருவனை அடைபவனாக இருந்தால், நமக்குப் பயன் இல்லை அமரரிடம் புகல் புகுவோம் என்றால் அவர்களும் அஞ்சி நடுங்கும்படி இடர் வந்த காலத்தில் அவர்கள் ஒருவனிடம் புகல் புகுந் தார்கள். அமுதத்தின பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு எழுந்தது. அதற்கு அஞ்சி அரற்றினார்கள். சிவபெருமான் அநதக கடல் விடத்தை எடுத்து நுகர்ந்தான. அதனுடைய காற்றுப் பட்டாலே பலர் இறந்து விடுவார்கள். அத்தகைய நஞ்சை, இறைவன் அமரர் களைக் காக்கவேண்டும் என்ற கருணையால் எடுத்து நுகர்ந் தான். அதைத் தன் திருக்கழுத்திலே தங்கும்படி வைத்தான். அவனுடைய கண்டத்தில் இனனும் அந்த நஞ்சு இருக்கிறது; அதனால் இறைவன் இருண்டகண்டனாக, நீலமிடற்றுப் பெரு மனாகக் காட்சியளிக்கிறான். ஆற்றலால் பெரியவர்களுக்கு வந்த இடரையே நீ +கும் பெருமான் அவன்; அவனைச் சரணடைந்தால் நின் இடர் போகும் என்று எடுத்துச் சொல்லவா வேண்டும்?”

கடல் விடமது உண்டு இருண்ட கண்டா என்றும்.

[பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கருநிறம் பெற்ற திருக்கழுத்தை உடையவனே என்று கூறியும்.

கடல்-பாற்கடல். விடமது; அது, பகுதிப்பொருள் விகுதி. கண்டம் கழுத்து.]

“அவன் தன் கை பில் மான்கன்றை ஏநதியிருக்கிறான். மான் எப்போதும் துள்ளிக் குதிப்பது; எதைக் கணடாலும் மருளவது. அதைக் கையில் தாங்கி அதன் ஓட்டத்தையும் மருட்சியையும் மாற்றித் தன் திருககரத்திலே நிலையாக இருக்கும்படி செய்திருக்கிறான். நெஞ்சமே, நீயும் எப்போதும் ஓரிடத்தில் நில்லாமல் உழன்று சுழன்று அதனால் இடர்ப்படுகிறாய். யார் யாரையோ கண்டு மருளுகிறாய். இந்த அலைச்சலையும் மருட்சியையும் அவன் போக்கிவிடுவான். அவனை நினைந்து நீ முறையிடு.”

கலைமான் மறி ஏந்து கையா என்றும்.

[ஆண் மான்கன்றை ஏந்தியிருக்கும் திருக்கரத்தை உடையவனே என்று சொல்லியும்.]

“தன்னை யார் யார் அழைக்கிறார்களோ அவர்களிடந் தில் போய் அருள் புரிய ஆயத்தமாக இருக்கிறான் அவன். தர்மத்தையே இடபமாக்கி அதன்மேல் ஏறி வருபவன் அவன். நினைத்த இடங்களுக்குப் போகத்தானே வாகனம் வேண்டும்? இறைவன் அன்பர்கள் அலறி அழைக்கின்ற இடங் களுக்குப் போகும் பொருட்டே இடபத்தை வாகனமாகக் கொண்டிருக்கிறான்.

“எத்தனையோ விதமான இன்ப நுகர்ச்சிகளை இவ்வு லகிலே நீ பெற்றிருப்பாய். ஆனால் அந்த இன்பங்கள் யாவும் இறுதியில் மரணத்திலே கொண்டு போய் விடுகின்ற சிற்றின் பங்களே; குளிர்ந்து கொல்லும் நஞ்சைப் போன்றவை. இறைவனே அமுதம் போன்றவன்; தெவிட்டாமல் இனிக்கும் அமுதம் அவன்; மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும் அமுதம். அவனைப்போல வேறு யாரும் இல்லை. அவன்தான் எல்லோருக்கும் ஆதி. ஆதலின் அவனை நினைந்து புலம்பு.”

அடல் விடையாய், ஆரமுதே, ஆதீ என்றும்.

[ஆற்றலையுடைய இடபவாகனத்தை உடையவனே, தெவிட்டாத அரிய அமுதம் போன்றவனே, எப்பொருளுக் கும் மூலகாரணமான முதற்பொருளே என்று கூறியும்.]

“இப்படி இருக்கும் பெருமான் தன்னை உலகில் உள்ள வர் மறவாமல் இருக்கும்படி அவ்வப்போது சில இடங்களில் அருள் விளையாட்டை நடத்தினான். அவற்றை மக்கள் நினைத்து வழிபடும் பொருட்டுத் திருக் கோயில்களை அன்பர் கள் நிறுவ, அவற்றில் திவ்ய மங்களமூர்த்தியாய் எழுந்தருளி யிருக்கிறான். திருவாரூரில் தியாகேசனாகக் கோயில் கொண் டிருக்கிறான். ஆரூரா என்று சொல்லி நீ அலறிக் கொண்டிரு. உன் இடர்கள் கெடும்.”

ஆரூரா என்றென்றே அலறா நில்லே.

[திருவாரூரில் எழுந்தருளியிருப்பவனே என்று சொல்லிக் சொல்லி அலறி நிற்பாயாக. அலறா நில் என்றது இடை விடாது புலம்புவாயாக என்ற பொருளையுடையது. என்று என்றே. அலறா – அலறி.]

‘கங்காதரா, சடாதரா, சோதி, நீறு பூசிய நின்மலா, நீலகண்டா, மிருக பாணி, இடப வாகனா, அமுதமே, ஆதியே, ஆரூரா என்று இடைவிடாமல் புலம்பினால் இடர் கெடும்’ என்று உபதேசிக்கிறார் வாசீகர்.

இடர்கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா;
ஈண்டொளிசேர் கங்கைச் சடையாய் என்றும்
சுடர்ஒளியாய் உள்விளங்கு சேரதீ என்றும்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா என்று
கடல்விடமது உண்டுஇருண்ட கண்டா என்றும்
கலைமான் மறிஏந்து கையா என்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
[நெஞ்சே. எண்ணுதியேல் வா; என்றும் என்றும், என்றென்றே என்றும், அலறா நில் என்க, என்றென்றும் என்பது என்றென்று என நின்றது; விகாரம்.]

இது முப்பத்தோராம் பதிகத்தில் உள்ள முதற் பாட்டு.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *