ஐந்து வஞ்சகர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 2,126 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்பமும் துன்பமும் பிறரால் வருகின்றன என்று எண்ணிப் பிறரிடம் உறவும் நட்பும் பாராட்டி வாழ்கிறோம்; வெறுப்பு விருப்புகளைக் கொள்கிறோம். உண்மையில் நமக்குப் பகையாக ஐந்து பேர்கள் நம்முடன் இருக்கிறார்கள். அவர் களுடைய வசத்திலே அடிமைப்பட்டு நாம் வாழ்கின்றோம். நம்மை ஐந்து பேரும் ஐந்து விதமாகப் பற்றி அலைத்துத் துன் புறுத்துகிறார்கள். ஐந்து பேரும் ஐந்து வேறு தொழில்களை உடையவர்கள். ஒரு பேர்வழி பொருள்களின் நிறம் வடிவம் என்பவற்றை அறிவதில் வல்லவன். காட்சி முழுவதும் அவன் கையில் அடங்கியிருக்கிறது. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று நாம் நினைத்தால் எதையாவது ஒன்றைக் காட்டி அந்தக் காட்சியிலே நம்மை மயங்கப் பண்ணி நம் முடைய காரியம் நடவாமல் தடை செய்து விடுகிறான். பல வகை ஒலிகளையும் இசையையும் பேச்சையும் தெரிந்து உணர்த்தும் மற்றொருவன் இருக்கிறான். அவனோ ஏதாவது இனிய ஒலியோ பேச்சோ இருக்கும் இடத்துக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறான். சந்தனம். மலர், ஊதுவத்தி முதலிய மணம் நிறைந்த பொருள்களைக் காட்டி அவற்றில் மயங்கி விழும்படி பண்ணுகிறான் மற்றொருவன், ஆறு வகை யான சுவையுடைய பண்டங்களைத் தனக்குப் படையாகக் கொண்டு வெற்றி கொள்கிறான் பின்னும் ஒருவன். மெத் தென்ற பஞ்சணை, இனிய தென்றல், மெல்லியல்புடைய மங்கை என்றெல்லாம் ஆசை காட்டி அழைக்கிறான் ஒருவன்.

இப்படியாக ஐந்து பேரும் நம்மிடம் மூண்டு வருகின்ற ஐந்து வேறு தொழில்களை உடையவர்கள். அவர்களைப் பார்த்தால் சாதுக்களைப் போல, ஊமைகளைப்போல, இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நடைபெறும் வஞ்சகச் செயல்களை என்னவென்று சொல்வது!

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் இந்த வஞ்சகர்களை மகிழ்விக்கும் காரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறான்.உடன் வாழ்ந்து கெடுக்கும் அகப்பகைவர் இந்த ஐவரும்.

உலகம் முழுவதும் இவர்கள் ஓடுகிறார்கள்; நம்மை ஓடச் செய்கிறார்கள். ஆயிரம் மைல் கடந்து சென்று அங்கே உள்ள காற்றை நுகரச் செய்கிறான் ஒருவன், பல நூறு மைல் கடந்து அங்குள்ள உணவை உண்ணச் செய்கிறான் ஒருவன். மற்றவர் களும் இப்படித்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுடைய செயலையும் அலசிப் பார்த்தால் இந்த ஐந்து பேர்களின் தூண்டுதலால் செய்யும் செயலாகவே முடியும். இது எப்போதோ நடைபெறுகிற செயல் அன்று. ஒவ்வொரு நாளும் இதுதான் நடக்கிறது. இந்த ஐந்து பேர்களுடைய அதிகாரமே உலகம் முழுவதும் நடைபெறுகிறது. எந்த ஊரானாலும் எந்தக் காலமானாலும் இந்த வஞ்ச முகரிகள் ஐவருடைய பிடிப்பிலே அடங்கா த மனிதரே இல்லை; உயிரே இல்லை, இவர்களால் அலைப்பண்ட தனால் உயிர்கள் மீட்டும் மீட்டும் உலகில் பிறந்து மறுபடியும் இந்த வஞ்சகர்களுடைய ஆணைக்கு அடங்கி வாழும்படி ஆகிவிடுகிறது.

“உம்முடைய அதிகாரம் நம்மிடம் செல்லாது” என்று சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. முதலில், அவர்களின் ஆணையினால் நாம் மயங்கி நிற்கிறோம். அவர்களுடைய அதிகாரம் மயக்க நெறியிலே நம்மைச் செலுத்துகிறது என்று தெரிந்துகொள்பவரே இல்லையே!

சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இந்த ஐந்து பேருடைய ஆணைக்கும் அஞ்சாதவர்கள். அவர்களில் ஒருவர் திருநாவுக் கரசர். அவர் இந்த ஐவரையும் நோக்கி, ‘வஞ்சமுகரிகளே. உம்முடைய அதிகாரம் என்னிடத்தில் பலிக்காது” என்று அறைகூவுகிறார்.

“எப்போதும் உயிர்களிடத்தில் சூழ்ந்து செய்யும் தொழில்களையுடைய ஐந்து இந்திரியங்களாகிய வஞ்சகத்தை யுடைய ஊமைகளே! உம்முடைய வஞ்சகச் செயலை நான் நன்கு அறிந்துகொண்டேன். உயிரைச் சூழ்ந்துகொண்டு நீங்கள் செய்யும் தீங்குகளுக்கு நான் அஞ்சேன். இவ்வுலகு முழுதும் ஓடி நாள்தோறும் மயக்கத்தைத் தரும் அதிகாரத்தை நடத்துகின்றீர்; இனி அந்த அதிகாரம் நடக்காது” என்று அவர் பேசுகிறார்.

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகான், முழுதும்இவ் வுலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை
நடாத்துகின்றீர்க்கு அமையாதே.

[உயிர்களிடத்தில் சென்று பொருந்துதலையுடைய தொழில்களையுடைய ஐந்து இந்திரியங்களாகிய வஞ்சக ஊமைகளே! இவ்வுலக முழுவதிலும் ஓடிச் சென்று எல்லா உயிர்களிடத்தும் ஒவ் வொரு நாளிலும் நும்முடைய மயக்கத் தைத் தரும் அதிகாரத்தை நடத்துகின்ற உங்களுக்கு அந்த ஆணை என்னிடத்தில் நடத்தப் பொருந்தாது.

மூள்வு ஆய – மூளுதல் அமைந்த. முகரி-ஊமை. உலகை – உலகில்; உருபு மயக்கம். நாள் வாயும்- ஒவ்வொரு நாளிலும், மம்மர் – மயக்கம், ஆணை – அதிகாரம். அமையாது-பொருந் தாது. உங்கள் அதிகாரம் இனி நடக்காது என்றபடி.]

தம்முடைய அதிகாரத்தை மீறுவாரும் மறுப்பாரும் இன்றி ஆட்சி செலுத்திய அந்த ஐந்து பேருக்கும் ஆச்சரியம் உண்டாகிவிட்டது. ‘இதென்ன வேடிக்கை! உலகம் முழு வதும் நம்முடைய ஆணை நடக்கிறதென்று இவன் தெரிந்து கெண்டிருக்கிறான். நம்முடைய வலிமையை அறிந்தும் இவன் மிரட்டுகிறானே; இவன் யாராயிருக்கலாம்?’ என்ற சிந்தனை பிறந்தது. “நீர் யார் ஐயா?” என்ற கேள்வி உடனே அவர்களிடமிருந்து எழுந்தது.

“என்னையா கேட்கிறீர்கள்? உலகமெல்லாம் உம்முடைய ஆணையை நீங்கள் நடத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டதோடு அதற்கு மேலும் தெரிந்துகொண்டவன் யான். எல்லா உலகங்கனையும் தாங்கிப் பாதுகாக்கும் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அந்தப் பெருமானை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அப்பர்.

“வானோர்கள் எல்லாம் எங்கள் ஆணைக்கு அடங்கி வாழும்போது நீர் யார் ஐயா சிறு மனிதர், இப்படிப் பேசுகிறீரே?”

“ஆம், வானவர்கள் உங்கள் மயக்கத்தில் வீழ்ந்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களுக்கும் ஆதார மாக நிற்கிறவன்ஒருவன் இருக்கிறான். வானோர்கள் வாழும் தேவலோகமே அந்தப் பெருமானால் நிற்கிறது. அவன்தான் நெடுந்தூணைப் போல அமரருலகத்தைத் தாங்குகிறான். இந்திரன் அல்ல; முப்பத்து மூன்று தேவர்களும் அல்ல.”

வானோர்
நீன்வான் முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணை.

[வானோர்களுக்குரிய உயர்ந்த தேவலோகமாகிய வீட்டின் முகட்டைத் தாங்கி ஆதாரமாக நின்ற உயர்ந்த தூண் போன்றவனை.

வானம் – அமரருலம். முகடு-உச்சி- முகடு அதனை : அது, பகுதிப் பொருள் விகுதி; அதற்குத் தனியே ஒரு பொருள் இல்லை.]

“இது மாத்திரமா? கீழுலகங்களுக்கெல்லாம் உள்ளே கருவாகி மூலமாகி வேராகி இருந்து பாதுகாக்கும் பெரு மானும் அவன் தான்.”

பாதாளக் கருவை.

[பாதாள உலகத்துக்கு மூலமாக நின்ற பொருளை பாதாளம் என்றது கீழுலகம் அனைத்தையும் குறித்தது. கரு- மூலமான பொருள்.]

“வானவர்களைத் தாங்கும் தூணாக இருக்கட்டும்; பாதாளத்தின் கருவாக இருக்கட்டும். இந்தப் பூவுலகில் வாழும் உமக்கும் அவனுக்கும் என்ன ஐயா தொடர்பு? வானோர்களையும் நீர் கண்டதில்லை; பாதாளத்தையும் கண்ட தில்லை. உம்முடைய கண் காண இந்த உலகத்தில் வாழ்பவர் எல்லாம் எங்கள் வசப்பட்டு நிற்பதை நீர் தினந்தோறும் பார்க்கிறீர். இங்கே எங்கள் அதிகாரத்தை நடத்த யார் தடையாக இருக்க முடியும்?” என்ற கேள்வி பிறந்தது.

“வானோருக்குத் தூணாகவும் பாதாளத்தாருக்குக் கருவாகவும் இருப்பதை நான் நேரே அறிந்ததில்லை. பிறர் சொல்லத்தான் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த உலகத்தைப் பொறுத்தவரையில் எனக்குக் கண் கூடாக ஒன்று தெரியும். இவ்வுலகமெல்லாம் அந்தப் பெருமானுடைய ஆட்சிக்கு அடங்கி நிற்பது என்பதை அறிந்து கொண்டேன். திருவாரூ ரிலே இருந்து தன் அருளாணையாலே எல்லாவற்றையும் ஆளும் உண்மையான பிரபுவைத் தெரிந்து கொண்ட பிறகு நான் சும்மா இருப்பேனா? மிக மிக வேகமாக அவனை அடையப் புறப்பட்டுவிட்டேன். விரைவில் அவனை

அடைந்தே விடுவேன். அவன்தான் எனக்குப் பற்றுக் கோடு என்று உணர்ந்து கொண்ட என்னிடம் உங்கள்தொழில் ஒன்றும் பலிக்காது. உம்முடைய ஆணைக்கு அடிமை யாகி அலையமாட்டேன். நீங்கள் வையாளி விட்டு ஓடி என்னை அலைக்க முடியாது. இனி இந்தப் பக்கமே வராதீர்கள்” என்று உறுதியுடன் மபசுகிறார் அப்பர் சுவாமிகள்.

ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென்று அடைவேன்; நும்மால்
ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மின்னே.

[திருவாரூரில் இருந்து ஆட்சிபுரியும் தியாகராஜப் பெரு மானை விரையச் சென்று (யான்) அடைவேன். ஆதலின் உம்மால் அலைக்கப்பட மாட்டேன்; நீங்கள் வீணே இங்கே ஓடி என்னை அலைத்தலை ஒழியுங்கள்.

கடுக – விரைய. ஆட்டுண்ணு தல் – அலைப்புண்ணுதல். ஓட்டந்து ஓடி. ஈங்கு என்றது தன்மையிடத்தைக் குறித்து நின்றது. அலையேன்மின் – அலைக்காதிருங்கள்.]

இறைவனுடைய துணையைப் பெறும் வரையில் இந்திரிய வசப்பட்டு மயங்கித் திரிவதே உயிர்களின் கதியாக இருக்கும். இறைவனுடைய அருள் துணையைப் பெற்றுவிட்டால் அப் பால் அவ்விந்திரியங்களின் வசமாக நாம் இருப்பது போய் அவை நம் வசமாகிவிடும் அந்த நிலையைத்தான் பொறிய வித்த புனித நிலை என்றும் ஜிதேந்திரியத்துவம் என்றும் பெரியோர் கூறுவர். ‘பொறிவாயில் ஐந்தவிதிகு’ புங்க வராகிய திருநாவுக்கரசர் எத்தனை சுறுதிப்பாட்டோடும் இறைவன்பால் நம்பிக்கையோரும் பேசுகிறார்!

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாள்! முழுதும்இவ் வுலகை ஓடி
நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை
நடாத்துகின் றீர்க்கு அமையாதே; யானேல், வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென்று அடைவேன்; நும்மால்
ஆட்டுணேன்; ஓட்டந்தீங்கு அலையேன் மின்னே.

[யானேல், தூணை. கருவை, ஆள்வானை அடைவேன்; ஆட்டுணேன்; அலையேன்மின் என்று கூட்டுக. யானேல்: ஏல், அசை நிலை.]

இப்பாசுரம் ஆறாம் திருமுறையில் 27-ஆம் திருப்பதிகத் தில் உள்ள ஒன்பதாம் பாட்டு.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *