அமாவாசை பிறந்த கதை!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,735 
 
 

கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட அவள், பித்ரு தேவதைகளை எப்படியும் தரிசிக்க விரும்பினாள். அதற்காக அவள் அச்சோதம் நதிக்கரையில் 8,000 வருடங்கள் தவம் செய்தாள்.

அதனால் மனம் இரங்கிய பித்ரு தேவதைகள், ஒரே நேரத்தில் அவளுக்குக் காட்சி அளித்தனர். ‘என்ன களை… என்ன அழகு… என்ன கம்பீரம்!’ என்று அவர்களைப் பார்த்து வியந்தாள் அச்சோதை. அவர்களில் மாவசு என்ற பித்ரு தேவதை யின் கம்பீரமான வடிவம், அவளை மிகவும் கவர்ந்தது. உடனே அவள் மனம் பேதலிக்கத் தொடங்கியது. ‘இவரே (மாவசு) எனக்குக் கணவராக வாய்த்தால் வாழ்க்கை எவ்வளவு இன்ப மயமாக விளங்கும்!’ என்று நினைத்தாள்.

அதை உணர்ந்த மாவசு, ‘தெய்வ மங்கை ஒருத்தி, இப்படி நடந்து கொள்கிறாளே!’ என்று நினைத்தவன், ‘‘மனிதப் பிறவி போல் நடந்து கொண்ட உனக்கு இனி சொர்க்கத்தில் இடம் இல்லை!’’ என்று கூறி அவளைப் பிடித்து பூமியில் தள்ளினான்.

அதனால் அலறித் துடித்த அச்சோதை, ‘‘இந்த சிறு தவறுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? எனது இத்தனை வருட தவத்துக்கு பலனே கிடையாதா?’’ என்று கேட்டாள். அதனால், சொர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அவள் அந்தரத்தில் அப்படியே அசையாமல் நின்றாள். அங்கிருந்தபடி அவள் மீண்டும் கடுந்தவம் புரிந்தாள்.

தவத்தை மெச்சிய மாவசு அவளுக்கு தரிசனம் தந்தான். ‘‘மகளே! உன் தவறை மன்னித்தோம். உனக்குச் சோதனை ஏற்பட்ட நாள் இனி அமாவாசை என்று உலகத்தாரால் அறியப்படட்டும்!’’ என்று கூறி மறைந்தான்.

அச்சோதை மீண்டும் தவத்தைத் தொடர்ந்தாள். அதன் பலனாக பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பித்ரு தேவதைகள் அனைவரும் அவளுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தனர். அவர்களிடம் தனது தவறை மன்னித்து, ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டாள் அச்சோதை.

பித்ரு தேவதைகள் அப்படியே செய்ததுடன், ‘‘அச்சோதை! பாவத்துடன் உன்னை நெருங்கும் தேவர்களின் பாவத்தை ஏற்று, அவர்களைப் புனிதப்படுத்துவாயாக! துவாபர யுகத்தில் நீ மீன் வயிற்றில் பிறப்பாய். அப்போது உன் பெயர் மச்சகந்தியாக இருக்கும். பராசரன் என்ற முனிவரை மணந்து, வியாசர் என்ற மாமுனிவரின் தாய் ஆவாய். பின்பு சந்தனு மகராஜாவின் தேவியாகி இரண்டு புத்திரர்கள் பெறுவாய்! அதன் பிறகு அச்சோதை என்ற புண்ணிய நதியாக மாறுவாய்! உனக்கு இக்கட்டு நேர்ந்த அமாவாசை தினத்தில் எவரெவர் தம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்கிறார்களோ, அவர்களை நாம் ஆசீர்வதிக்கிறோம். அந்த முன்னோரும் தங்கள் சந்ததியை வாழ வைப்பார்கள்!’’ என்று வாழ்த்தி மறைந்தனர்.

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4 (நவம்பர் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *