அதென்ன விஷேஷ தர்மம்?

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,401 
 

அந்த கிராமத்தில், பாகவதர் ஒருவர் கதாகாலட்சேபம் செய்ய வந்திருந்தார். ஒவ்வொரு நாளும் புராணக் கதைகள் பலவற்றைக் கூறி, அவற்றின் மூலம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை விளக்குவார். அன்று தர்மத்தைப் பற்றி பேச வேண்டும்.

”தர்மத்தில் சாதாரண தர்மம், விசேஷ தர்மம் என்று இரண்டு வகை உண்டு!” என்று அவர் ஆரம்பித்ததும், பக்க வாத்தியக்காரர் ஒருவர் இடைமறித்தார்: ”தர்மம் சரி… அது என்ன விசேஷ தர்மம்?”

அதென்ன விஷேஷ”சற்றுப் பொறும். விளக்கமா சொல்றேன்!” என்ற பாகவதர் தொடர்ந்தார்:

”ஒருவன், தன் தாய்-தந்தை மற்றும் குரு ஆகியோரது வார்த்தைகளை மீறக் கூடாது. இதை கடைப்பிடித்தவர் ராமன் என்றாலும் இது சாதாரண தர்மமே! காட்டுக்கு செல்லும்படி தந்தை தசரதர் உத்தரவிட்டதாக ராமனிடம் கூறுகிறாள் கைகேயி. அதன்படியே காட்டுக்குச் சென்றார் ராமன். இதற்கு முன் ஒரு முறை, குரு விஸ்வாமித்திரரது கட்டளைப்படி தாடகை என்ற அரக்கியைக் கொன்றொழித்தார். ஆக, மாதா- பிதா மற்றும் குரு ஆகியோரது வார்த்தைகளை மீறாத தர்மத்தைச் செய்தவர் ராமன். ஆனால், விசேஷ தர்மம் இப்படிப்பட்டதல்ல!” என்ற பாகவதரின் பேச்சை மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம்.

அவர், தொடர்ந்தார்: ”தன் மகன் பரதனே நாடாள வேண்டும் என்பது கைகேயியின் ஆசை. இதற்காகவே கோசல சாம்ராஜ்யத்தை தசரதரிடம் வரமாகப் பெற்றாள். கேகய நாட்டில் இருந்து திரும்பிய பரதனிடமும் தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். ஆனால் நடந்தது வேறு! கைகேயி சொன்னதும் வனவாசம் மேற்கொண்ட ராமனைப் போல செயல்படவில்லை பரதன்.

தந்தை தசரதரின் மறைவுக்கு தன் தாயே காரணம் என்ற கோபம் ஒரு புறம்; உயிருக்குயிரான அண்ணன் ராமனின் பிரிவு ஒரு புறம்… அவன் சிந்தித்தான். ‘தந்தைக்குப் பிறகு, அவரின் மூத்த மைந்தன் ராமனே நாடாள வேண்டும். அதுவே, ரகு குலத்தின் மரபும் சாஸ்திர தர்மமும் ஆகும். அந்த தர்மத்தைக் காக்க வேண்டும்!’ என்று எண்ணியவன், தாயின் ஆணையையும் மீறினான். தான் அரியாசனம் ஏறுவதை மறுத்து, பாதுகா பட்டாபிஷேகம் வரை சென்றான். இதுவே விசேஷ தர்மம்!” என்ற பாகவதர் அடுத்தடுத்த உதாரணங்களைக் கூற ஆரம்பித்தார்.

”கர்ணன் வாழ்விலும் ஒரு சம்பவம். ‘கர்ணா… இந்திரனே மாற்றுருவில் வந்திருக்கிறான். கவச-குண்டலங்களை உன்னிடம் இருந்து பறித்து, உன்னை பலவீனமாக்கவே இந்த சதித் திட்டம். ஏமாந்து விடாதே!’ என்று, தான் வழிபடும் தெய்வமும் தன் தந்தையுமாகிய சூரிய பகவான் கூறியும் கர்ணன் கேட்கவில்லை. ‘யாசிப்பவனுக்கு, அவன் யாசித்ததை உடனே தந்துவிட வேண்டும்; அதுவே தர்மம்!’ என்று எண்ணிய கர்ணன், சூரிய பகவானின் பேச்சையே மீறினான். இதுவும் விசேஷ தர்மமே!

இதைப் போன்றதே மகாபலியின் கதையும். ‘மகாபலி… வந்திருக்கும் வாமனனை நம்பாதே! இவன், உன் முன்னோர்களில் ஒருவரான ஹிரண்யகசிபுவை நரசிம்மராக அவதரித்துக் கொன்றவன். இப்போது, உன்னை அழிக்க, மூன்றடி மண் தானம் கேட்கிறான்… தராதே!’ என்று தன் குருநாதர் சுக்ராச்சார்யர் எச்சரித்தும் மகாபலி கேட்காமல், வாமனருக்கு தானம் தந்து பாதாளத்தில் அழுந்திப் போனான்! தான், உயிராக மதிக்கும் தர்மத்தைக் காக்க, குருநாதரின் பேச்சை மகாபலி மீற வேண்டியதாயிற்று!

இப்படி, அனுஷ்டிக்க வேண்டிய தர்மத்தின் பொருட்டு, மாதா- பிதா- குரு- தெய்வம் ஆகியோரது வாக்குக்கு மாறு பட்டு, கடமையை நிறைவேற்றுவதே விசேஷ தர்மம்; இதில் தவறு ஏதும் இல்லை!” என்று முடித்தார் பாகவதர்.

ஆம், தர்மத்தின் பொருட்டு எதையும் மீறலாம்!

– ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி (ஜனவரி 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *