வாழ்க்கையின் மறக்க முடியாத சவாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,471 
 
 

10/3/2057 மற்ற சனிக்கிழமைகளைப் போலத்தான் ஆரம்பித்தது. காலையில் இரண்டு மணி நேரம் மெட்டாவெர்ஸில் டென்னிஸ் விளையாடி விட்டு, ரோபோசெப் செய்து கொடுத்த முயல் பிரியாணியை (உப்பு அதிகம்) சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் கண்ணை மூடலாம் என்று நான் தயார் ஆன போது போன் சிறிதாக நடுங்கியது. ஆட்டோ அட்வென்ச்சர் தீம் பார்க்கிலிருந்து ஒரு மெசேஜ். மனம் ஒரு துள்ளு துள்ள, போனை எடுத்துக் பார்த்தேன்.

சுருக்கமான மெசேஜ். “கடைசி நிமிட ரத்து காரணமாக, ‘வாழ்க்கையின் மறக்க முடியாத சவாரி’ அட்ராக்க்ஷனின் 3:00 மணி ஸ்லாட் காலியாக உள்ளது. உங்களுக்கு வர இஷ்டமா?”

இந்த வாய்ப்புக்காக நான் எவ்வளவு காலமாக காத்திருக்கிறேன்? இன்று நான் அதை தவறவிடப் போவதில்லை… உடனடியாக வருகிறேன் என்று பதில் அனுப்பினேன்.

மணி பார்த்தேன். 1:50 ஆகி விட்டது. தீம் பார்க் இருப்பது ஒரு மணி தூரத்தில். சீக்கிரம் கிளம்ப வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு ரோபோ டாக்சி என் வீட்டிற்குப் பக்கத்தில் வாடிக்கையாளர்களை தேடிக் கொண்டு இருந்தது. உடனடியாக பிக்அப் செய்யும்படி கேட்டேன்.

மூன்று நிமிடத்தில் ரோபோ டாக்சி என்னை அழைத்துச் செல்ல வந்தது. நான் உள்ளே நுழைந்து கதவை மூடியதும், ஒரு மெல்லிய

ரோபோடிக் குரல் கேட்டது, “ஹலோ, என் பெயர் ஆட்டோ அலெக்சா. நான் இன்று உங்கள் ஓட்டுநர். நாம் புறப்படுவதற்கு முன் உங்களுக்கு ஏதேனும் தேவையா?”

ஆட்டோ அலெக்சாவின் குரல் வரும் திசையை நோக்கி, “ஆம்… நான் 50 நிமிடங்களுக்குள் தீம் பார்க்கை அடைய வேண்டும்… கொஞ்சம் வேகமாக ஓட்ட முடியுமா?” என்றேன்.

“என்னால் வேக வரம்பிற்கு மேல் ஓட்ட முடியாது, ஆனால் உங்களை விரைவாக அங்கு அழைத்துச் செல்ல என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.”

சரி என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். அது ஒரு சிறிய வீட்டின் முன் அறை போல இருந்தது. நான்கு இருக்கைகள் நடுவில் ஒரு சிறிய காபி டேபிள். அதன் மேல் சில பத்திரிகைகளும் இன்றைய செய்தித்தாள்களும் இருந்தன. அதற்கு அடுத்ததாக ஒரு மினி ஃப்ரிட்ஜ்.

நான் கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சித்தேன். ஆனால் நான் பங்கு கொள்ளப் போகும் சாகச சவாரியின் எதிர்பார்ப்பு என்னை தூங்க விடாமல் படுத்தியது.

ரோபோ டாக்ஸி என்னை தீம் பார்க்கில் இறக்கிவிட்டபோது மணி 2:55. நான் அவசர அவசரமாக உள்ளே சென்று செக்-இன் செய்தேன். எனக்கு முன் அனுபவம் உள்ளதா என்பதுதான் அங்கிருந்த பணிப் பெண் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி. நான் ஆம் என்றேன். அவள் என்னை கட்டிடத்தின் பின் பக்கத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு சிறிய கதவைத் திறந்தாள். கதவுக்கு அப்பால் ஒரு பெரிய திறந்த வெளி மைதானம்.

அங்கே எனக்காக ஒரு சிறிய பச்சை நிற கார் காத்திருந்தது. அவள் கார் சாவியை என்னிடம் கொடுத்து, “உங்கள் சவாரியை அனுபவியுங்கள்.” என்றாள்.

அங்கிருந்த தூய காற்றை ஆழமாக சுவாசித்துவிட்டு காரின் உள்ளே நுழைந்தேன். மிட்டாய் கடையில் நுழைந்த ஒரு குழந்தையைப் போல ஆவலுடன் சுற்றிலும் பார்த்தேன்.

அது ஒரு 2019 மாருதி ஆல்டோ மாடல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *