கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 21,795 
 
 

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் என் முன்னோர்கள் இங்கே வந்திருக்காங்க. அப்போ இந்த இடத்துக்குப் பெயர் அமெரிக்கா. இந்தியா எனும் ஒரு நாட்டிலிருந்து வெறும் ஏரோப்ளேன் என்கிற பழம் ஊர்தி ஒன்றில் 24 மணி நேரங்கள் பயணித்து இந்த இடத்துக்கு வந்து செட்டில் ஆயிருக்காங்க. நம்பவே முடியல. நியூ யார்க் எனறழைக்கப்பட்ட பகுதி இப்போ ஏரியா 911 ஆயிடுச்சு. இந்தியாவில் என் பெற்றோர்கள் வாழ்ந்த தென்பகுதி அப்போ கன்னியாகுமரி. இப்போ கடலில் மூழ்கியது போக மீதமிருக்கும் ஏரியா 27889. ஏரியா 911க்கும் 27889க்குமான பயண நேரம் இப்போ இரண்டு மணிநேரங்கள்தான்.

இந்த வரலாறுப் பின்னணி என் கதைக்கு முக்கியமில்ல. இருந்தாலும் இந்தக் கதையை வேறெப்படியு துவங்குவதுண்ணு தெரியல . ஏரியா 27889ல் என் முன்னோர்களின் வீட்டில் இடிபாடுகளுக்கிடையே ஒரு அபூர்வ வஸ்து கிடைத்தது. A thing. அந்தக் காலத்தில் மரங்களை வெட்டிக் கூழாக்கி மெல்லிய வெள்ளை வடிவில் செய்து கோப்பாக்கி அதிலேதான் எழுதியிருக்காங்க. கொஞ்சம் Primitive வழிதான். என் தாத்தன் ஒருதர் ஏதோ ஆராய்ச்சியின்போதோ, பொழுது போகாமலோ ஏதோ கிறுக்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறான். தமிழ் மொழியில். ஒரு பழைய மொழி. பழைய ‘இண்டர்நெட்டில்’ தேடினால் பக்கம் பக்கமாய் ஏதேதோ சமாச்சாரங்கள் தமிழில் வரும். கம்ப்யூட்டர் முன்பு தவமே கிடந்திருக்கிறார்கள் மக்கள். அந்தப் பக்கங்களையெல்லாம் எழுதியது சில ஆயிரம்பேரே என்றால்? அதுவும் கையெழுத்து, தட்டச்சு முறைகளைப் பயன்படுத்தி. இத்தனைக்கும் அப்போ கம்ப்யூட்டர் இன்னும் வாழ்க்கையில் ஒன்றிப்போகாத கிட்டத்தட்ட ஒரு அபூர்வப் பொருளாகவே இருந்திருக்கிறது.

என் தாத்தனின் நோட்டு புத்தகத்தின் மின்நகல் எனக்கு அனுப்பப்பட்டது. நோட்டு புத்தகம் அருங்காட்சியகத்துக்குப் போனது. முதலில் எனக்கு அதை வாசிப்பதில் விருப்பமே இல்லை. என் ஆய்வுகளுக்கு நடுவில் கிடைத்த ஆறுமாத ஓய்வில் அதை வாசிக்கத் துவங்கினேன். மலையாள மாந்த்ரீகம் என ஏதோ ஒரு நம்ப முடியாத கட்டுக்கதைபற்றிய பல குறிப்புக்களும் அதில் இருந்தது. டோட்டல் நான்சென்ஸ். ‘செய்வினை’ என ஒன்று. எப்படி ஒரு மனிதன் இன்னொருவனுக்குத் தெரியாமலேயே, எந்தத் தடயமுமின்றி, நேரடித் தொடர்புமில்லாமல் அவனை அழிக்க முடியும்? அதுவும் வெறும் தகட்டில் ஏதோ எழுதி வச்சிகிட்டு? வைல்ட் இமாஜினேஷன்ஸ். புத்தகத்தில் பாதி இதுபோல சமாச்சாரங்கள். கூடு விட்டு கூடு பாயுறது. இப்ப அடுத்தவரின் முழு சம்மதத்தோட சைண்டிஃபிக்கா இதைச் செய்யுறோம். ஆனா அடுத்தவரோட அனுமதியில்லாம கூடு விட்டுக் கூடு… அதுவும் நுண்ணறிவியலின் துவக்க நாட்களில். அனதர் வைல்ட் இமாஜினேஷன். பட் நல்ல இமாஜினேஷன். இப்படி பல பல அபத்தமான கான்சப்டுகள். அந்த புத்தகத்தில இருக்கிற சில ‘கற்பனைகள்’ இன்றைக்கு சாத்தியமாயிருக்குது. ஆனா அந்தக் காலத்துல அவை சாத்தியமேயில்லை. ரெம்ப அடிப்படையான உட்பொருட்களைக் கொண்டு. பெரிய ஆராய்ச்சி எதுவுமில்லாமல். குறைந்த பட்ச அறிவியல் நுட்பத்தோட அதில் சொல்லப்பட்டிருக்கிற அசாத்திய விஷயங்களை செய்திருக்கவே முடியாது.

இப்படித்தான் பலத்த சந்தேகங்களுக்கிடையேயும், மறுதலிப்போடேயும் அதிலிருந்த ‘வசியம்’ என்கிற குறிப்பில் இருந்த செய்முறைய ஆராய்ந்து பார்க்கலாம் என என்னுடைய ஆரய்ச்சியை ஆரம்பித்தேன். இது வேலை செய்யாது என்பதில் அபார நம்பிக்கை இருந்தது. ஆனாலும் தேர்ந்த ஆய்வாளன் எப்படி தன் சந்தேகங்களும் அவ நம்பிக்கையும் தன் ஆய்வை சிதைக்காமப் பாத்துக்குவானோ அதேபோல ஆய்வை நூறு சதவீதம் முழுமையாகவும் ஈடுபாட்டோடேயும் செய்தேன்.

‘வசியம்’ மிக எளிய கான்சப்ட். ஹிப்னாட்டிசம் என்று ஒரு ‘அறிவியல் முறை’ அப்போது இருந்தது. மூளை இந்தத் தலைமுறையளவுக்கு வளர்ந்திராத, பயன்படுத்தப்படாத காலம் அது. ஒரு மனிதரை தன்வயப்படுத்தி அவரைத் தன் கட்டளைகளுக்குப் பணியவைப்பது. இப்போதுள்ள ஹூமனாய்டுகள் – மனிதரைப்போலவே செயல்படும் ரோபோக்கள்- சிலவற்றில் இந்த வசதி உள்ளது. ஹூமனாய்டுகள் எதனாச்சும் தவறு செஞ்சுட்டா அவற்றை முழுதும் நம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஹிப்னாட்டிசம் பொதுவாக தாழ்ந்த, குழம்பிய மனநிலையில் இருக்கிறவங்கள் மீது எளிதாய் செயல்படும். அப்படி இல்லாதவங்களுக்கு மருந்துக்களைத் தந்து மனதை கட்டுப்பாடில்லாம செய்து அவர்களை தன்வயப்படுத்துறதுண்டு. சிம்பிள்.

ஹிப்னாட்டிசம் குறித்து என் தாத்தனின் நோட்டில் இருந்து சுவையான குறிப்பொன்றை சொல்லிவிடுகிறேன். அவர் காலத்தில் பெண்கள் நெற்றியில் ‘பொட்டு’ என ஒன்றை அணிவது வழக்கமாம். அது அடுத்தவர் தன்னை ஹிப்நாட்டிசம் செய்யாமலிருக்க வேண்டியாம். பெண்களை தைரியம் குறைந்தவர்களாயும், சித்த பலம் இல்லாதவர்களாயும் நினைத்த, நடத்திய காலங்கள் அவை. அவர் குறிப்பொன்றிலேயே இந்த வழக்கம் பல படித்த பெண்களால் நிராகரிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டிருக்கிறார். வ்ரிஸ்ட் பீடியாவிடம் கேட்டபோது நெற்றிப் பொட்டுக்கும் ஹிப்நாட்டிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொட்டு வெறும் அழகு சாதனம் என்றது. வ்ரிஸ்ட் பீடியா என் கையில் போட்டிருக்கேனே வாட்ச் அதுக்குள்ளே இருக்கிற கலைக்களஞ்சியம். உங்கள் பார்வைக்கு அது வாட்ச்தான் ஆனால் என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டர் அது.

‘வசியம்’ ஹிப்னாட்டிசம் பொன்றதுதான். வசியம் நீடித்திருக்கக்கூடியது. வசியம் செய்வது வெறும் மனதளவில் நடக்கிறதில்ல. வெறும் கட்டளைகளைச் சொல்லி படிய வைக்கிறது இல்ல. அது உடம்புக்குள்ள போய் ஒரு நிரந்தர மாற்றத்த ஏற்படுத்திடுது. நிச்சயமா இது ஹம்பக் என நினைச்சேன். ஹிப்நாட்டிசம் செய்யப்பட்டவங்க ஹிப்நாட்டிசம் செய்றவர் என்ன சொன்னாலும் செய்வாங்க. ஆனா வசியம் அப்படி இல்ல. வசியம் ஒரு மோகத் தூண்டலை உருவாக்கிடுது. வசியம் செய்தவரோட ஒரு தீராக் காதல் உருவாகிடுது. வெறும் காதலைத்தான் உருவாக்க முடியுது. வசியத்தை செய்ய மருந்து போல ஒரு கலவையை உருவாக்கியிருக்காங்க. அதுக்கான ரெசிப்பியும் குறிப்புல இருக்குது.

இங்கே என் கதையின் நாயகி குறித்த அறிமுகம் தேவை. அந்த நோட்டில் இருந்தக் குறிப்புக்களில் எல்லாவற்றையும் விட ‘வசியம்’ என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் ஈவன். அவள் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவள் மூலமா ஒரு சந்ததியை உருவாக்கிவிடத் துடித்தேன். ஆனால் அவளோ நியூமன். நான் ஹூமன். என்மேல் அவளுக்கு ஈர்ப்பு வருவது அத்தனை சுலபமல்ல. இதுவரை நியூமன்கள் யாரும் ஹூமனைக் காதலித்ததில்லை. அதென்ன நியூமன் என்கிறீர்களா? சொல்றேன்.

மனிதனுடைய குணாதிசயங்கள் பலதும் அவனுடைய டியாக்சிரைபோநியூக்ளியக் அமிலத்துலேர்ந்து உருவாகுது. உடலுறுப்புக்களின் அளவு, முக வடிவம், தோலின் நிறம் எனத் துவங்கி மனதளவில் அவன் எப்படிப்பட்ட சிந்தனாவாதி, நல்ல சிந்தனையுடையவனா தீவிர சிந்தனைகள் உடையவனா என்பதுவரைக்குமான தகவல்களை டியாக்சிரைபோநியூக்ளியக் ஆசிட்லேந்து தெரிஞ்சுக்கலாம். டி.என்.ஏ என சுருக்கிச் சொல்வதுமுண்டு. இது அடிப்படை ஜெனெட்டிக்ஸ்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனித வரலாற்றில் தலைசிறந்தவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் ஜீன்களைத் தேடிப் பிடிச்சாங்க. அற்புதமான டி.என்.ஏ தொகுப்பு. பரிட்சாத்த முயற்சியா அந்த டி.என்.ஏக்களைக் கொண்டு புதிய தலைமுறை ஒன்றை செய்ய முயற்சித்தாங்க. இப்படி உருவாகியவங்களுக்குப் பெயர்தான் நியூமன்கள். எந்த நேரத்திலும் சிறப்பாக செயல்படக் கூடியவங்க. ‘சூப்பர் ஹ்யூமன்’ இல்ல ஆனா ‘சூப்பர்’ ஹூமன்கள் இந்த நியூமன்கள். ஈவன் அப்படிப்பட்ட நியூமன் வம்சத்தில் வந்தவள். நியூமன்கள் உருவாக்கம் டாப் சீக்ரட். என்போன்ற டாப் லெவல் அரசு விஞானிகள் சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்களுக்கே அது தெரியாது. Please keep it that way.

நியூமென்கள் எல்லாவற்றிலும் சிறப்பாயிருந்தார்கள் என்றேனல்லவா. ஒரே ஒரு குறை இருந்தது அவர்களிடம். அவர்கள் இயல்பாகவே வேறொரு நியூமனைத்தான் காதலித்தார்கள். நீயூமன்களுக்குள்ளேதான் குழந்தைபெற்றுக் கொண்டார்கள். என்னைப் போன்ற அறிவில் சிறந்த மானுடர்கள்கூட அவர்களை ஈர்க்கவில்லை. இப்ப புரியுதா ஏன் வசியம் எனக்கு முக்கியமானதா பட்டுதுண்ணு?

வசிய மருந்து செய்ய அதிக நேரம் ஆகல. பழைய இயற்கை மூலிகைகள், சில அடிப்படை உலோகங்களின் கலப்பாய் அமைந்திருந்தது அந்த மருந்து. எல்லாவற்றிற்கும் நேரடி கெமிக்கல் மாற்றுக்களை சேர்த்து மருந்து செய்தேன். வசிய மருந்து குறித்த குறிப்பில் ஒரு சிறப்பு செயல் முறை ஒன்று இருந்தது. அதாவது மருந்து செய்வதற்கு வசியம் செய்யப்படுபவரின் பின்னால் சென்று அவருடைய தலைமுடி ஒன்றையும் அவரின் கால் பட்ட மண்ணையும் எடுத்துவரவேண்டும். முதலில் இது எதற்கென்றே பிடிபடவில்லை. ஆனால் கொஞ்சம் யோசித்தால்… முடியிலிருந்து அவரின் டி.என்.ஏவைப் பெற முடிகிறது. இதைப் பயன்படுத்தி மூளையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சரி. காலடி மண்? ம்ம்ம் அதுக்கு அறிவு பூர்வமான விளக்கம் கிடைக்கல ஆனா என் யூகப்படி நீங்க வசியம் செய்யப்போற ஆள் உங்களுக்கு பரிட்சயமான, நீங்கள் நெருங்கிச் செல்லுமளவுக்கு பரிட்சயமானவராயிருப்பவரா எனத் தெரிந்து கொள்ள அப்படி சொல்லியிருக்கலாம். அதாவது முன்ன பின்ன தெரியாத ஆளோட முடியொன்றை வச்சி செய்து வசியம் மாறிப்போவதை தடுக்க ஒரு யுக்தியாக இருக்கலாம்.

மருந்தை ஜூசில் கலக்கி என் ஆய்வகத்திலிருந்த குரங்குகளுக்கு அளித்து சோதனை செய்தேன். ஹ்ம்ம். இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் கேள்வி புரியுது. இரண்டுமே வேறுவேறு வகைக் குரங்குகள். ஆதலால் ‘வசியம்’ இல்லாம அவற்றால் ஒன்று சேர முடியாது. மூன்றாம் நாள் ஒரு குரங்கு குடித்த அதே கோப்பையிலிருந்து இன்னொன்று குடித்தது. அதற்கு அடுத்த நாள் நடந்ததை விவரிக்க முடியாது. ஆய்வகத்தை மூடிவிட்டுப் போக வேண்டியிருந்தது.

‘வசிய மருந்து’ வேலை செய்தது. தொடர்ந்து சில ஆய்வுகளில் இதை இன்னும் உறுதி செய்தேன். வசியம் செய்பவரும் செய்யப்படுபவரும் ஒரே கோப்பையில் அந்த மருந்தைக் கலந்து குடித்தால் ‘வசியம்’ நிகழும். இது எப்படி வேலை செய்யுதுண்ணு நீங்க யூகிச்சிருக்கலாம். ஆமா. எச்சில் ஒரு சிறந்த டி.என்.ஏ source, ஆதாரம்.

ஈவன் அன்றைக்கு வழக்கத்தை விட அழகாகத் தோன்றினாள். என் மூளை டோப்பமைனில் விளையாடிக்கொண்டிருந்தது. ‘என் ஆய்வில் சந்தேகம். சந்திக்கலாமா?’ எனக் கேட்டிருந்தேன். ‘மே பார்க். 3 மணிக்கு வந்துவிடு’. என்றிருந்தாள். God! She was beautiful. கடையில் எங்களுக்கு பிடித்த ட்ரினிட்டி ஜூஸ் ஆர்டர் செய்தோம். மாம்பழம், பலா, வாழை என மூன்று பழங்களையும் ஜெனெட்டிக்சில் ஒன்றிணைத்து உருவாக்கிய பழம் ‘ட்ரினிட்டி’. இவற்றின் ஒருங்கிணைந்த சுவையை ஏதோ பழைய புத்தகத்திலிருந்து கண்டுபிடித்திருந்தனர். அவளின் காதலனிடமிருந்து ஃபோன் வந்தது. அவள் கவனிக்காத இடைவெளியில் வசிய மருந்து கலந்திருந்த என் ஜூசை அவளின் கோப்பையில் கொஞ்சம் கலந்தேன். அது போதும் மருந்து வேலை செய்ய.
மனிதர்களிடம் என் வசிய மருந்து என்ன எதிர்வினைய உருவாக்கும் என்பது தெரியாததால் அவளிடம் எக்ஸ்க்யூஸ் சொல்லிவிட்டு மரமொன்றின் பின்னிருந்து கவனித்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் என்னை பதபதக்க விட்டு விட்டு ஜூசை எடுத்துக் குடித்தாள். ஒரு மடக்கு உல்ளே போனது. முகம் சுளித்தாள். ஜூசை கீழே தரையில் வைத்தாள். நான் மறைவிலிருந்து ‘நோ’ எனக் கத்திக்கொண்டு ஓடி வரும் முன்பு ஈவனின் செல்ல நாய்க்குட்டி ஜூசை முழுமையாகக் குடித்திருந்தது.

– ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *