மிகுந்த திறமைசாலியான ஹபி என்ற ஒரு இளைஞன் அந்நாட்டு மன்னனின் மகளை உயிருக்குயிராகக் காதலித்தான். ஹபி தனது மகளை மணமுடித்து தருமாறு கேட்டபோது, ராஜா அவனிடம், “நான் உனக்கு நான்கு கடினமான சோதனைகளைக் கொடுக்கப் போகிறேன். நான்கிலும் நீ வெற்றி பெற்று விட்டால், என் மகள் உனக்குத் தான்.” என்றார்.
பெரும் பண்டிதரான ராஜாவின் ஆலோசகரை கடும் வாக்குவாதத்தில் எதிர்கொள்வது முதல் சோதனை. மூன்று மணி நேரம் நீடித்த அந்த விவாததில் மிகுந்த புத்திக் கூர்மையுடன் வாதம் செய்து ஹபி வெற்றி பெற்றான்.
ராஜாவின் விருப்பமான அரேபிய குதிரையை அடக்கி சவாரி செய்வது இரண்டாவது சோதனை. பல குதிரைகளை ஹபி அடக்கி இருந்தாலும், ராஜாவின் குதிரையை அடக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டான். பல முறை முயற்சி செய்து கடைசியில் வெற்றி பெற்ற ஹபி கம்பீரமாக குதிரையில் சவாரி செய்து அனைவரையும் கவர்ந்தான்.
மூன்றாவது சோதனை மிக மிக பயங்கரமான ஒன்று. பல நாட்கள் சாப்பிடாமல் இருந்த புலியின் கூண்டுக்குள் ஹபி தள்ளப்பட்டான். இரண்டு மணி நேரக் கடுமையான போராட்டத்தில், தன் சண்டைத் திறமை அனைத்தயும் காட்டிய ஹபி அந்தப் பசித்த புலியை வெறும் கைகளால் கொன்றான்.
ராஜா மிகுந்த வியப்படைந்தார். மூன்று சோதனைகளிலும் இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை. ஹபி தான் முதல் ஆள்.
கடைசி சோதனைக்காக ராஜா ஹபியை தனது அரண்மனைக்கு அழைத்தார். அவரது முழு குழுவினரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ராஜா மேசையில் ஒரு HP லேப்டாப்பை வைத்தார்.
“இந்த லேப்டாப்பில் MS Word டாக்குமெண்ட் ஒன்று இருக்கிறது. டாக்குமெண்ட்டைத் திறந்து பக்கம் #34க்குச் செல். முதல் பாராவில் இருக்கும் ஐந்து புல்லட்டுகள் (Bullets) அலங்கோலமாக வரிசை மாறி உள்ளன. அதை சரி செய்!”