மூத்த குடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 12,306 
 
 

“இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?”, கேட்டாள் விமி.

“இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள், ஆறாயிரத்து முன்னூற்று அறுபத்திரண்டு பெண்கள்” என்றான் லெஸ்டோ.

“ழண்கள்?”

“என் கணிதம் சரியாக இருந்தால், ஆயிரத்து முன்னூற்று எண்பத்தி நாலு பேர்” என்றான் லெஸ்டோ, புன்னகையுடன்.

“குறை காணவில்லை, மன்னித்துவிடு” என்றாள் விமி. “எஞ்சியவரில், புதியவர் முதியவர் எத்தனை?”

“பத்து வயதுக்குட்பட்ட அறுபத்தி ஒன்பது புதியவர்கள். ஆயிரம் வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தொள்ளாயிரத்து எழுபது, இரண்டாயிரம் வயதுக்கு மேற்பட்டவர்கள் நூற்றுப் பத்து”

“போகுமிடத்தில் இருபது வயது கூட வாழச் சாத்தியமில்லையாம். நம் இன்றைய நிலைக்குத் திரும்பி வர, லட்சக்கணக்கான வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் அறிஞர்கள்.” பெருமூச்சுவிட்டாள் விமி. தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்தாள். “என்ன லெஸ்டோ?” என்றாள்.

“நான் சொன்னதைச் சிந்தித்தாயா?”

“தொடங்கிவிட்டாயா? லெஸ்டோ, உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அது காதலா என்று தெரியவில்லை. காதலுக்கு இது நேரமில்லை என்று நினைக்கிறேன்.”

“நாமறிந்த உலக வாழ்க்கை முடியப்போகிறது, விமி. இதை விட வேறு என்ன, நேரம் காலம்?”

“அப்படியெனில், நம் இருவருக்குமிடையில் காதலை வேறு போட்டுக் குழப்புவானேன்? புது உலகில் நாம் ஒன்று சேருவோமென்று என்ன நிச்சயம்?”

“நம் காதல் நிரந்தரம், விமி. நம் காதலின் சக்தியே புது உலகில் நம்மைச் சேர்க்கும் சாதனமாகுமென்று உனக்கு ஏன் புரியவில்லை?”

“இப்போதைக்கு சீரகக் கூட்டத்திற்கு நேரமாகிறது என்பது மட்டுமே எனக்குப் புரிகிறது. போகலாம், வா”. எழுந்து நடக்கத் தொடங்கிய விமி, லெஸ்டோ தன்னைத் தொடராததைக் கவனித்துத் திரும்பி வந்தாள். “காதல் பேச்சு வந்துவிட்டால், நீ உன் மூளையைக் கழற்றி வைத்து விடுகிறாய்” என்றாள்.

இன்னும் ஊடி நின்ற லெஸ்டோவை நெருங்கி அவன் கைகளைக் கோர்த்து முகத்துடன் முகம் உரசி, “இது, நீ என்னை விடாமல் காதலிப்பதற்கு” என்றாள். அவன் உதட்டில் துரித முத்தமிட்டு, “இது.. புதுவுலகில் என்ன ஆகுமோ என்று மற்றவர் அலைபாயும் போது, நீ மட்டும் நம் காதலைக் காப்பாற்றத் துடிக்கிறாயே, அதற்காக” என்றாள். பதில் முத்தமிடத் துணிந்த அவன் உதடுகளைக் கவ்வி, நாவுடன் கலந்து, உணர்ச்சி பெருக நீண்ட முத்தமிட்டாள். “இது.. உன் நினைவுகளுக்கு. ஒரு வேளை புது உலகில் நாம் சேர்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போகலாம்” என்றாள். விலகினாள். பிறகு லெஸ்டோவைத் தூண்டி, “ஊடினது போதும். கிளம்பு. பிழைத்திருந்தால் புது உலகில் ஏகாந்தமாய்க் காதலிப்பதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு என்னுடன் வா. காதலை விடப் பொறுப்பான வேலை நமக்கிருக்கிறது. வாழ்வைத் தேடும் நம் இறுதிப் பயணங்கள், வரிசையாக இன்றிரவு தொடங்கும்” என்றாள்.

இறுதி மக்கட்தொகைப் புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் லெஸ்டோ. தொலை தூரத்தில் சூ இன்னும் தகித்துக் கொண்டிருந்தது. சொட்டு இயற்கைக் குடிநீருக்காக ஏங்கினான். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் வற்றியதும், உலகின் கடைசி மழை அதற்கு முன்பும் பெய்து ஓய்ந்ததும் நினைவுக்கு வந்தது. ‘இன்றைக்கு வருடத்தின் ஐநூற்றி ஏழாவது நாள். என் பிறந்த நாள். இன்றைக்கா உலக முடிவு தொடங்க வேண்டும்?’ என்று நினைத்தான்.

பெரியவர் றமாலி, சீரகக் கூட்டத் தலைவர். உலகத்தின் தலை சிறந்த ழண். கூட்டத்திற்கு சீக்கிரமே வந்துவிட்ட றமாலி, சமீபத்தில் மூகணிலிருந்து திரும்பியிருந்த சக ழண் பகுவைப் பார்த்துப் புன்னகை செய்தார். சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த இருபத்தேழு குழுத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உலக வாசிகளின் பணிவான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, பேசத் தொடங்கினார். “உலகத்தின் இறுதி வாசிகளே, வணக்கம். ஐநூறு வருடப் பயிற்சியில் எல்லாமே சொல்லியிருந்தாலும், மூகணைப் பற்றிய விவரங்களை மறுபடியும் கற்றுத் தெளிவடைவோம்”

றமாலி கைகளை உயர்த்தி, விரல்களை அங்குமிங்கும் சுட்டினார். அவர் சுட்டிய இடங்களில் நேரொளி வாயில்களில் பல்வேறு படங்கள் தோன்றின. “எல்லாமே மூகண் காட்சிகள். நம் கோளைப் போலவே மூகணும் சூவைச் சுற்றி வருவதால், இங்கு போலவே பகலிரவு அங்கேயும் உண்டு. நம்முடைய நாளுக்கும் மூகண் நாளுக்கும் சில மணி நேரங்களே வித்தியாசம். நம்மைப் போலவே மூகண் வாசிகளும் பகலில் இயங்கி இரவில் ஓய்வெடுக்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் பாருங்கள்.” அவர் சுட்டிய காட்சிகளில், மூகண் வாசிகள் மிக நெருக்கத்தில் இருந்தனர். “அங்கேயும் ஆண்கள் பெண்கள் என்று இனங்களுண்டு. உங்களைப் போலவே அவர்களும் சந்ததிப் பெருக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்”

“மூத்தவரே, இதுவரை மூகண் வாழ் ழண்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?” என்றாள் விமி.

“யாமறிந்தவரை அங்கே ழண்கள் இல்லை. ஆனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை” என்றார் பகு.

“ழண்கள் இல்லாமல் எப்படி வாழ முடியும்? என்றாள் விமி. “அப்படியென்றால் மூகணில் உயர்ந்தவர் யார்? யாருக்கு நாங்கள் பணிய வேண்டும்? யார் எங்கள் வாழ்விற்கும் வளத்திற்கும் அருள்வார்கள்? உதவி செய்வார்கள்?”

“ழண்களைப் பற்றிப் பிறகு பேசுவோமே” என்று புன்னகைத்த றமாலி, “அங்கே பாருங்கள்” என்றார். பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகை. நேரொளி வாயில் காட்சிகளில் நதிகளும், ஆறுகளும், கடல்களும் பொங்கி ஓடிக் கொண்டிருந்தன. “நம் உலகத்தை விட மூகண் மிகப் பெரிது. மூகணின் நீர் நிலைகள் நம் மொத்த நில அளவுக்கு இணையென்று நம்புகிறோம், இன்னும் பல கோடி வருடங்களுக்கு வற்றாது. மூகணைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அதன் நீர்நிலைகள் தான் என்பது பொது அறிவு” என்றதும், கூட்டத்தில் பலர் உற்சாகத்துடன் கைகளை உயர்த்தினர். றமாலி தொடர்ந்தார். “அங்கே பாருங்கள். மூகண் வாசிகளில் ஒருசிலர் தோற்றத்தில் நம்மைப் போலவே இருப்பதால், அவர்களுடன் கலந்திருக்க எளிதாக இருக்கும்”

“நம்மை விட மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே? என் பிள்ளைகள் கூட அவர்களை விட உயரமாகவும் வலுவாகவும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. நாம் அங்கே தனியாகத் தெரிவோம்” என்றார் ஒரு குழுத் தலைவர்.

“மூகண் வாசிகள் பல ரகம் என்றாலும், பெரும்பாலும் இரண்டடிக்கு மேல் யாரும் உயரவில்லை. ஒரு சில வாசிகள் ஐந்தடி வரை வளர்ந்திருக்கிறார்கள். நீங்கள் இந்தத் தோற்றதில் அங்கே தனியாகத் தெரிந்தாலும், போகப் போக சரியாகிவிடும்” என்றார் பகு.

“நடப்பதற்கு கால், கை இரண்டையும் பயன்படுத்துகிறார்களே?”

“கைகள் இல்லை, எல்லாமே கால்கள். நாமும் அவர்களைப் போல் நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த உலகை விட மூகணில் ஈர்ப்பு பல மடங்கு அதிகமென்பதால், நீங்கள் இயற்கையாகவே கால்களையும் கைகளையும் உபயோகித்து நடக்க வேண்டி வரலாம். கவலைப் படாதீர்கள். நாளடைவில் எல்லாம் பழகி விடும்”

“இருந்தாலும், நம்முடைய அளவைப் பார்த்து அவர்கள் பயந்து போய், பழக விரும்பாவிட்டால்?” என்றனர்.

“கவலைப் படாதீர்கள். இங்கிருந்து மூகணுக்கு விண்வெளிப் பயணம் செய்யும் போது உங்கள் எலும்பிலும் சதையிலும் நிறையவே சேதமேற்படும். அங்கே இறங்கும் போது எடையும் வலிவும் குறைந்து ஓரளவுக்கு மூகண் வாசிகள் போலவே இருப்பீர்கள்”

“சாப்பாடு?”

“சாப்பாடு, தண்ணீருக்குப் பஞ்சமில்லை” என்றார் பகு.

“எதற்குப் பஞ்சம்?”

அவர்களைப் பார்த்து ஒரு கணம் தயங்கி விட்டு, “மூச்சுக் காற்றுக்கு” என்றார்.

“குடிக்கத் தண்ணீர் இல்லாத இடத்திலிருந்து மூச்சு விடமுடியாத இடத்துக்குப் போவதா? நல்ல காரியம்” என்று சிலர் எழுந்தனர்.

அவர்களை அமரும்படி பணித்துவிட்டு றமாலி தொடர்ந்தார். “அங்கே மூச்சுக் காற்று வேறு விதம். அங்கே இருக்கும் மூச்சுக் காற்று புதிய வளர்ச்சிக்கு ஆதாரம் என்று ழண் அறிஞர்கள் கருதுகிறார்கள். மூகண் பயணப் பயிற்சிகளில் நீங்கள் அந்த மூச்சுக்காற்றைத் தான் உள்வாங்கினீர்கள். எந்த பாதிப்பையும் அடையவில்லை.”

சீரகத்திலிருந்தவர்கள் மெள்ள அமைதியானார்கள். லெஸ்டோ எழுந்து “ழண்களைப் பற்றிப் பிறகு பேசலாம் என்றீர்களே?” என்றான்.

“நம் கோளைப் போல அனேகமாக ஒரே நேரத்தில் தோன்றியிருந்தாலும், ழண்களுக்கு இன்னும் மூகண் தயாராகவில்லை. அங்கே எங்களை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இன்றைய ழண்கள் உங்களுக்கு உதவி செய்துவிட்டு மூகணிலோ இங்கேயோ அழிவார்கள். எங்களுக்குப் புது உலகில் இடமில்லை”

“என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே? நீங்கள் இல்லாமல் எப்படி வாழ்வது? எங்களுக்கு யார் வழி காட்டுவது?”

றமாலி அமைதியாகப் பேசினார். “ஒவ்வொருவருக்குள்ளும் ழண்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுங்கள். புது உலகக் காற்றைப் பற்றிச் சொன்னேனில்லையா? வளர்ச்சியைப் பல விதங்களில் தூண்டும் அந்தக் காற்று, ழண்களை மீண்டும் புது உலகிற்குக் கொண்டு வரும். உங்களில் பலர் வளர்ந்து விருத்தியடைந்து ழண்களை வெளிக்கொண்டு வருவீர்கள். இது கண்டிப்பாக நிகழும்”

சிறிது நேரத்துக்குப் பிறகு, பகு பேசத் தொடங்கினார். “இன்றிரவு பயணங்கள் தொடங்கும். எஞ்சியிருக்கும் பதினாறு கலன்களில் அனைவருமே சென்றாக வேண்டும். உங்களில் பதினாறு பேர் குழுத் தலைவராக நியமிக்கப் படுவீர்கள். உங்களுடன் வரும் பயணிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு”

“பதினாறு கலன்களில் இருபதினாயிரம் பேருக்கு மேல் எப்படிப் போவது?”

“குழந்தைகளையும் முதியவர்களையும் பெரும்பாலான ழண்களையும் இங்கேயே விட்டுப் போகவேண்டும். புது உலகில் இடம் கிடையாது. குழந்தைகளும் முதியவரும் இந்தப் பயணத்தின் போது தடையாகத் தான் இருப்பார்கள். மேலும் பயண அபாயங்கள் அவர்களைக் கொன்று விடும்”.

கூட்டம் சலசலத்து மீண்டும் அமைதியானது. கடைசிப் பயணம் தவிர்க்க முடியாதென்பதை உணரத் தொடங்கினார்கள். “எப்போது பயணம்?” என்றார்கள், கூட்டத்தில் சிலர்.

“இன்றைக்குத் தொடக்கம். நம்மைப் போல் சூவைச் சுற்றுவதால், மூகண் நமக்கு மிக அருகில் இருக்கும் இந்த நாட்களில் கிளம்ப வேண்டும். மூகண் அருகில் வரும் போது செய்யும் பயணம், சேதத்தைக் குறைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எல்லோரும் புறப்பட்டால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாங்கள் உங்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய முடியும்” என்றார் பகு.

றமாலி எழுந்து, “ஓய்வெடுங்கள். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உங்கள் அன்பைக் கொடுத்துவிட்டு விண்துறைக்கு வாருங்கள். இன்றிரவு கிளம்பும் கலன்களின் குழு விவரத்தை நானும் மற்ற ழண்களும் தீர்மானித்து வைக்கிறோம்” என்றார்.

உலக முடிவின் நிச்சயம், அப்போது தான் எல்லோரையும் தாக்கியது. சீரகத்திலிருந்து வெளியேறியவர்கள் குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் பிரியமான ழண்களிடமும் பேசினார்கள். அணைத்துக் கொண்டார்கள். அழுதார்கள். ஒரு சிலர் நெருங்கி அமர்ந்து வாய் பேசாமல் அந்த இறுதிக் கணங்களை நினைவுக்குள் நிறுத்திக் கொண்டார்கள்.

விமி லெஸ்டோவுடன் கை பிணைத்து, “கொஞ்சம் வெளியே நடக்கலாமா?” என்றாள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மின்னிய நட்சத்திரங்களையும், இரண்டு சந்திரன்களையும், தொலைவில் தெளிவாகத் தெரிந்த சில வெளிக்கோள்களையும் பார்த்து ரசித்தபடி இரவின் குளிரில் நடந்தார்கள். “ழண்கள் நம்மைக் கைவிட்டது போல் தோன்றுகிறது” என்றான் லெஸ்டோ. விமியின் கைகளை அழுத்திக் கொண்டான்.

“ழண்கள் திரும்பி வருவார்கள் என்றே தோன்றுகிறது” என்றாள் விமி.

“எப்படி?”

“நம்முள்ளிருந்து தான். புது உலகில் நம்மில் சிலர் விருத்தியடைந்து ழண்களை வெளிக்கொண்டு வருவது சாத்தியமென்றே படுகிறது”

“அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னது, விமி”

“இருக்கலாம். நம் நலனுக்காக அவர்கள் செய்திருக்கும் தியாகத்தை நினைக்கும் பொழுது, நமக்காகவே திரும்பி வருவார்கள் என்றே தோன்றுகிறது. நம்மிலிருந்து ழண்கள் உருவாவது என்பது, எத்தனை மகத்தானது என்று சிந்தித்துப் பார் லெஸ்டோ..”

“விமி, எப்படி உன்னால் நம்பிக்கையோடு இருக்க முடிகிறது?”

“ஒரு வேளை காதல் படுத்தும் பாடோ என்னவோ, யார் கண்டது?” என்று சிரித்தாள்.

“நீ என்னுடன் ஒரே கலனில் வரச் சம்மதிக்க வேண்டும்” என்றான் லெஸ்டோ.

“சரி. அவ்வளவு தானே?” என்றாள்.

“மூகணில் இறங்கியவுடன் என்னுடன் இருக்கச் சம்மதிக்க வேண்டும்”

“சரி, அவ்வளவு தானே?” கண்களை விரித்துச் சிரித்தாள்.

“என்னைக் காதலித்து, மூகணில் என்னை விட்டுப் பிரியாமலிருக்க வேண்டும்”

விமி அமைதியாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“என்ன, பதிலே காணோம்?”

“சொன்னால் தான் புரியுமா?” என்றாள். அருகே, விண்துறையிலிருந்து அழைப்பொலி கேட்டது.

அனைவரும் திரும்பி வந்தபோது குழுப்பிரிவுகளும் பயணத்திட்டங்களும் தயாராக இருந்தன. பயணிகள் எல்லோரும் முறையாகப் பதினாறு கலன்களிலும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். புறப்படத் தயாராக இருந்த கலன்களில், முதல் கலனில் விமியும், மூன்றாம் கலனில் லெஸ்டோவும் குழுத்தலைவர்களாகப் பணிக்கப்பட்டனர். விமி லெஸ்டோவை நெருங்கி, அவன் கைகளை அழுத்தி “லெஸ்டோ, இதை உன்னிடம் சொல்லியாக வேண்டும். நான் பிறந்த நாளிலிருந்தே உன்னைக் காதலிக்கிறேன், புது உலகில் என்னை மறந்து விடாதே லெஸ்டோ” என்றாள்.

“கிளம்பும் போது சொல்கிறாயே, விமி. பேசக் கூட நேரமில்லையே, இது நியாயமா?”

“அதான் புது உலகில் நிறைய பேசப் போகிறேமே?” என்று சொல்லிவிட்டு முதல் கலனில் ஏறினாள்.

கலன்கள் கிளம்பத் தயாரானதும் றமாலி அவர்களிடம் கடைசியாகப் பேசினார். “மூகணின் மூத்த குடிக்கு வாழ்த்துக்கள். பயமில்லாமல் செல்லுங்கள். உங்களுக்குள் ழண் இருப்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்குச் சொல்ல வேண்டியதில், ஒன்றுதான் மிச்சம்” என்றவர், கலன் புறப்பாட்டு விசையை இயக்க உத்தரவிட்டார். சற்று பொறுத்து பேசத் தொடங்கினார்.

“மூகண் வாசிகள் நம்மை விட பலகோடி ஆண்டுகள் பின்தங்கியிவர்கள். மனமும் அறிவும் முதிர்ச்சியடைந்த இந்த நிலையில் நீங்கள் போனால் உங்களுக்கு ஆபத்து என்பதால், சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டோம். சென்ற ஆயிரம் வருடங்களாக உங்கள் மரபணுக்களை மூகண் வாசிகளுக்கு இணையாக சிறிது சிறிதாக மாற்றி வந்தோம். மூகணில் இறங்குமுன் இந்த மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள். முதலில், பேசும் சக்தியையும் நினைவுகளையும் இழப்பீர்கள். பயணத்தின் போது பேசும் சக்தியையும் இந்த உலகின் நினைவுகளையும் இழக்கும்படி கலனின் சுகாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்த சில சந்ததிகளில் வளர்ச்சி குன்றி மூகணின் மற்ற வாசிகளுக்கு இணையாகப் பல்லாயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று விடுவீர்கள். இந்த உண்மையைப் பயிற்சியில் மறைத்து விட்டோம். ழண்கள் திரும்பி வர நீங்கள் அழியாமலிருக்க வேண்டும். அதற்கு உங்கள் இனத்தைப் பின்னோக்கித் திருப்புவதே சிறந்த வழி. எங்களின் மொத்த அழிவைத் தவிர்க்க சில இன்றியமையாதத் தியாகங்கள் தேவை. புது உலகில் பல்லாயிரம் வருடங்களில் உங்களில் சிலர் வளர்ச்சியடைய, உங்களிலிருந்தே ழண்கள் வெளிவருவார்கள். அதற்கான வேர்விதிகள் உங்கள் மரபணுக்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் வாழ்வைத் தேடி உங்கள் அறிவையும் வளர்ச்சியையும் தியாகம் செய்வதற்கு, தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள்” என்று அவர் சொல்லி முடிக்க, திட்டமிட்டபடி எல்லா கலன்களும் வானில் ஏறின. மூகண் என்றும் சில சமயம் மூன்றாவது கண் என்றும் வழங்கப்படும், சூவைச் சுற்றி வரும் நீல நிறக் கோளை நோக்கிப் பயணத்தைத் தொடங்கின.

லெஸ்டோ “விமி, விமி, நம் காதல்..” என்று அமைதியாக அலறினான்.

– 2011/01/05

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *