மிமிக்ரிகோ ஆஸியானா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,416 
 
 

கல்யாணின் மடிகணினித் திரையில் ஒரு பறவை நின்றிருந்தது. எடை, 5 கிலோ. கழுகு போல் கூரிய மூக்கு. கண்களில் அசாதாரணமான கொலை வெறி மின்னியது. அலகு நுனியில் ரத்தம் ஈஷியிருந்தது. அழகிய குஞ்சமாய் வால் பகுதி.

அழிந்துபோன மிருகங்களை ஆராயும் கிரிப் டோஜிவாலஜிஸ்ட் கல்யாணும் பறவைகளை ஆராயும் ஆர்னிதாலஜிஸ்ட் முரளியும் அமர்ந்திருந்தனர்.

முரளி, கல்யாணிடம், ”டாக்டர்! திரையில் நீங்கள் காணும் பறவையின் பெயர் மிமிக்ரிகோ ஆஸியானா. அழிந்து போன இனம். இதனைக் கடைசியாக 1908-ல் நியூஸிலாந்தில் பார்த்ததாகத் தகவல். இது 100 வகைக் குரல்களில் கூவும் திறமை உடையது. ஒவ்வொரு வகைக் குரலில் கூவும்போதும் அதற்கேற்ப அதன் நிறம் மாறும். மாமிசப்பட்சிணி. வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் பெண்ணாகவும், அடுத்த ஆறு மாதங்கள் ஆணாகவும் வாழக்கூடியது. ஆண், பெண் இனப்பெருக்கம் தேவையில்லாமல் தானே முட்டையிடக்கூடியது. 50 வருடங்கள் வரை உயிர் வாழும் தன்மைகொண்டது. 1908-ல் கிடைத்த அதன் எச்சத்தை தற்சமயம் ஆராய்ந்ததில் அது எய்ட்ஸ் நோய்க்கு மிகச் சிறந்த மருந்து எனத் தெரியவந்திருக் கிறது!”

”கேட்கவே மெய்சிலிர்க்கிறது டாக்டர் முரளி!”

”கடந்த இருபது வருடங்களாக உலகின் பல மூலை களுக்கும் சென்று இந்த மிமிக்ரிகோ ஆஸியானா பறவையைத் தேடி வருகிறேன். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் இப் பறவையைக் கடைசியாகப் பார்த்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.”

”வாவ்!”

”சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மிமிக்ரிகோ ஆஸியானாவை எங்கு பார்த்தாகக் கூறினார்களோ, அங்குதான் கூடாரமிடப் போகிறோம். 50 கி.மீ ரேடியசுக்குள் சல்லடையிட்டுத் தேடுவோம். அப் பறவை நம் கைக்குச் சிக்கினால் நமக்குப் புகழும் பண மும் குவியும். ஓவர்நைட்டில் உலக நாயகர்கள் ஆகி விடுவோம். என்ன சொல்கிறீர்கள் கல்யாண்?”

”நான் தயார் முரளி!”

முரளியையும் கல்யாணையும் ஆப்ரோ அமெரிக்கன் போபோவையும் சுமந்துகொண்டு குட்டி ஹெலிகாப்டர் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள் இறங்கியது. கல்யாண் சார்ந்திருக்கும் ஆராய்ச்சி நிறுவனம் அமர்த்தித் தந்திருக்கும் சமையற்காரன்தான் போபோ. போபோவுக்கு சமையல் தவிர, உலக விஷயம் எதுவும் தெரியாது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிநவீனக் கூடாரம் அமைத்தான் போபோ. இரவு, காட்டு முயலைப் பிடித்துச் சமையல் செய்து பரிமாறினான்.

தினமும் அதிகாலை ஜி.பி.எஸ். கருவிகள், மயக்கத் துப்பாக்கிகள், பைனாகுலர்கள், பற வைகளைப் பிடிக்கும் வலைகள், பறவை இரை, நீர்க் குடுவைகள் சகிதம் தேடுதல் வேட்டைக்கு முரளியும் கல்யாணும் கிளம்பிப் போயினர். விசேஷ கருவிகள் வைத்து மிருங்கங்கள் நடமாட்டத்தை ஆராய்ந்தனர்.

தொடர்ந்து 42 நாட்கள் தேடுதல் வேட்டை. மிமிக்ரிகோ ஆஸியானா கிடைக்கவில்லை.

43-வது நாள்…

கிளம்பும் அவர்களை இடைமறித்தான் போபோ. சமிக்ஞையில் வினவினான். ”என்ன சமைக்கட்டும்?”

”எது வேண்டுமானாலும்… சைவமாய் இருந்தால் சரி!”

தேடிக் களைத்து ஏமாற்றமாய் திரும்பும் இருவரின் நாசிகளை வித்தியாசமான சமையல் வாசனை தாக்கியது.

”காட்டுக் கோழியா போபோ?”

பதில் பேசாமல் சிரித்தான் போபோ. இவருக்கும் சாப்பாடு பரிமாறினான். சமைக்கப்பட்ட மாமிசம் புதுவிதச் சுவை தந்தது. ஒரு எலும்புகூட மிச்சம் வைக்காமல் கடித்துத் துப்பினர்.

சிவப்பு ஒயினைச் சூப்பிக்கொண்டே எதன் மாமிசத்தைச் சாப்பிட்டோம் என்கிற குறுகுறுப்புடன் பல கேள்விகளை எடுத்து வீசினர். எதற்கும் முழுமையான பதில் சொல்ல போபோவுக்குத் தெரியவில்லை.

கூடாரத்தின் பின்பக்கம் ஏதோ ஒன்று மேய்ந்துகொண்டு இருந்ததாகவும், அதனுடன் பலமாகப் போராடி, அதனைக் கொன்று சமைத்ததாகவும் சமிக்ஞையில் கூறி முடித்தான்.

”மொழி தெரியாத சமையல்காரனோடு நாம் போராட வேண்டியிருக்கு!” என்று அலுத்துக்கொண்டனர்.

திடீரென்று போபோவின் அப்பாவி முகம் சூரியனித்தது. ஆப்பிரிக்க மொழியில் மிழற்றிக்கொண்டே ஓடினான். தனது கேமரா செல்போனை எடுத்து வந்தான். அதனை ஆன் பண்ணி குட்டித் திரையைச் சுட்டிச் சுட்டி ”இதைத்தான் வேட்டையாடிச் சமைச்சேன்!” என்றான்.

திரையைப் பார்த்ததும் கல்யாணும் முரளியும் அதிர்ந்தனர். திரையில் இருந்தது இரண்டு கிலோ எடையுடைய மிமிக்ரிகோ ஆஸியானா. அதன் வாயில் துண்டாடப்பட்ட குட்டி விரியன்பாம்பு!

”அடப்பாவி! குடியைக் கெடுத்தாயே! சமையலில் மிஞ்சிய பறவையின் உடல் பாகங்களை எங்கு போட்டாய்?” இருவரை யும் இழுத்துக்கொண்டு போபோ ஓடினான். நெருப்பில் மிமிக்ரிகோ ஆஸியானாவின் உடல் மிச்சங்கள் கரிந்துகொண்டு இருந்தன. நெருப்புக்குச் சிக்காத சில சிறகுகள் நொடிக்கு ஒரு நிறம் காட்டின.

இருவரும் தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதனர்.

சில நாட்களுக்குப் பின்…

ஒரு ஜீப்பில் வந்து இறங்கினான் போபோ. அப்பாவி முகம் தொலைத்திருந்தான். ஃபுல்சூட்டில் இருந்தான். ஒரு புதரில் ஒளித்துவைக்கப்பட்டு இருந்த பறவைக் கூட்டை வெளியெடுத்தான் போபோ. கூட்டுக்குள் சில சிறகுகள் கத்தரிக்கப்பட்ட மிமிக்ரிகோ ஆஸியானா இருந்தது!

”துரோகி… துரோகி!” என்றது மிமிக்ரிகோ ஆஸியானா, கல்யாண் குரலிலும் முரளியின் குரலிலும். அதன் உடல் பகுதி இரு வர்ணங்களுக்குத் தாவி பின் இயல்பு நிறம் மீண்டது!

– 17th செப்டம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *