அவன் கண் விழித்தான்.
வெற்றி.
வெற்றி.
என் மனசுக்குள்ளிருந்து ஒரு குரல் கூவியது.
எழுந்து உட்கார்ந்தான்.
குனிந்து தன்னைப்பார்த்துக் கொண்டான்.
நிர்வாணம்.
மெலிதாய் வெட்கப்பட்டான்.
உடுத்திக் கொண்டான்.
என்னாச்சு டாக்டர்?
எல்லாம் சரியாய்டுச்சு.
சொன்னேன்.
அவன் விழிகள் விரிந்தன.
நிஜமா?
கண் சிமிட்டினேன்.
ஆமா.எங்கு வேண்டுமானாலும் ரத்தப் பரிசோதனை பண்ணிப்பாரு. அந்த உயிர்க் கொல்லி நோய் முற்றிலும் களையப்பட்டுவிட்டது.
நன்றி டாக்டர்.
கைகுலுக்கினான்.
அப்ப நான்?
போகலாம்.
அப்ப என் பிர்ஜூலா என்ன ஏத்துகுவாளா?
நிச்சயமாக. நோயற்றக் காதலன் குறைவற்ற மகிழ்ச்சி.
சொன்னேன்.
உங்கள் கட்டணம்?
உன் சந்தோஷமே என் கட்டணம்.
மீண்டும் கை குலுக்கினான்.
இப்ப எங்கே இருக்கோம்?
தயக்கமா கேட்டான்.
சொன்னேன்.
வியந்தான்.
ஆமா. அரசாங்கம் சில தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அதுதான் சர்வ தேச எல்லைத் தாண்டி இங்கு உள்ளோம். நீ இனி புதிய மனிதன்.மற்றதை மறந்துடு. நீ உன் இடம் போக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவன் கண்களில் தொழுகை தெரிந்தது.
நான் சிரித்துக் கொண்டே நகர்ந்தேன்.
ரூபின் எதிரில் நின்றான்.
சொல் ரூபின்.
அவனைக் கொண்டு போய் சேர்த்து விட்டோம்.
அவன் காதலி பிர்ஜுலா என்ன சொன்னாள்?
நம்ப மறுத்தாள்.
சரியாய்டுவா.
சொல்லி சிரித்தேன்.
அப்ப அவனோட சடலத்தை..
சந்தேகமாகக் கேட்டான்.
கடலில் வீசி எறி. யார் கண்ணுக்கும் படக்கூடாது.
ரூபின் நகர்ந்தான்.
மனசுள் ஒரு நீர்வீழ்ச்சி குதித்தோடியது.
உலகின் முதல் வெற்றி.
ஜெனோம் தியரியின் உச்சம்.
மனிதப் பிரதி.
குறையுள்ள மனித அசலை அழித்து விட்டு மாசு மருவற்ற நகல்.
புதிய ஆதாம்.
இந்நேரம் தொலைதூரத்தில் காதலியைச் சல்லாபித்துக் கொண்டிருக்கும் அந்த நகல்.
வெற்றியைக் கொண்டாட வேண்டும்.
அநாமிகா… அநாமிகா.
உன் இளமையில் என் வெற்றிக் கையெழுத்திட வேண்டும்.
அதற்கு முன் ஒரு காரியம் இருக்கிறது கண்மணி.
வெளிர்நீல நிறக் கோப்பு.
புரட்டினேன்.
எழுத வேண்டிய கடைசி அத்தியாயம்.
புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
புதிய ப்ரும்ம லிபி.
தலைக்கு மேலே சப்தம் கேட்டது.
வெளியே வந்தேன்.
ஒரு அலுமினியப் பறவை நான்கு சிறகுகளுடன் வட்டமடித்து இறங்க ஆரம்பித்தது.
ஹனாரி.
டாக்டர் ஹனாரி.
இத்தாலிய நடிகன் போலிருந்தான்.
ஆரவாரமாய்த் தழுவிக் கொண்டான்.
மை டியர் ஒல்ட் மாங்க்.
கூவினான்.
உதறினேன்.
அப்பட்டமாய் அவன் கண்களில் குரோதம் தெரிந்தது.
அவன் தான் என் ப்ராஜக்ட்டின் அதிபதி.
தனி ஆளாய் அரசாங்கத்தை எதிர்த்து நின்றவன்.
சர்வதேச எல்லை தாண்டி கடலில் ஓர் ஆராய்ச்சி உலகத்தை நிறுவியவன்.
நம் அச்சு மனிதனைப் போய் பார்த்தேன். நான் வர்றதுக்குள்ற அனுப்பிட்டே. பரவால்ல. ரிமார்க்கபிள். நூறு சதவீத துல்லியம்.
சிரித்தேன்.
அடுத்து என்ன?
நீ தான் சொல்லணும்.
கை நீட்டினான்.
என்ன?
கேட்டேன்
யூஸர் மானுவல்.
ராட்சஷன்.
வெளிநீலநிற கோப்பை உருவி நீட்டினேன்.
வாங்கி முத்தமிட்டான்.
அவசர அவசரமாய் பக்கங்கள் புரட்டினான்.
சாஃப்ட் காபி எதுவும் இருக்கா?
கண்சிமிட்டிக் கேட்டான்.
இல்லை.
க்ரேட். இனி ப்ரம்ம தேசம் என்னுடையது.
என்னுடையது..
அந்தச் சொல் உறுத்தியது.
கொண்டாடணும்.
எழுந்தோம்.
என் தோள் தொட்டான்.
எனது வலது புஜத்தில் தீச்சுட்டது.
கண் விழித்தேன்.
எதிரில் ஹனாரி.
விநோதமாய் சிரித்தான்.
தலைக்குள் மெலிதாய் ஹெலிகாப்டரின் விசிறி சுழன்றது.
எக்கு என்னாச்சு?
கொஞ்சம் மயக்கம்.
ஏன்?
சிரித்தான்.
எவ்வளவு நேரமா?
அம்பத்து ரெண்டு மணி நேரம்.
திடுக்கிட்டேன்.
ஏன்?
திரும்பக் கேட்டேன்.
புரியலையா. நான் ஒருமுறை உன் தியரியை செயல் படுத்தி பார்த்தேன்.
உன் அம்பத்து ரெண்டு வருஷ அனுபவம், மூளை, உடம்பு இவற்றை நான் எடுத்துக் கொண்டேன்.
தலையப் பிடித்துக் கொண்டேன்.
துரோகி.
சிரித்தான்.
ரிலாக்ஸ். எதாவது சாப்பிடு. தலை சமனப் படும்.
எலக்ட்ரானிக் சமிக்ஞை செய்தான்.
கதவு சப்தமின்றி திறந்தது.
கையில் கண்ணாடிக் கோப்பையுடன் வந்தது நான்.
நானேதான்.
ஹனாரி.
கத்தினேன்.
சிரித்தான்.
நான் என்னை நெருங்கி வந்து என்னிடம் கண்ணாடிக் கோப்பையை நீட்டினேன்.
எனக்குப் பிடித்த பழரசம்.
வேண்டாம்.
அருகில் வந்தான்.
உடல் தளர்ந்திருந்தது.
பலவந்தமாய் என் வாயில் ஊற்றினான்
போராட முடியவில்லை.
கடைசித் துளியையும் என் வாயில் கவிழ்த்த பின் கண்ணாடிக் கோப்பையை தூக்கி தூர எறிந்தான்.
ஓர் இசைக் கருவி போல் அதிர்ந்து உடைந்து நொறுங்கியது.
என் நகலை உள்ளே போகச் சொன்னான்.
ஹனாரி… என் இப்டி பண்னினே?
கத்தினேன்.
பரிசோதனை செய்தேன். சக்சஸ்.
தொண்டை எறிய ஆரம்பித்தது.
என்ன எரியுதா? கண்ணீருடன் தலையசைத்தேன்.
சிரித்தான்.
பழ ரசத்தில் விஷம்.
அதிர்ந்தேன்.
என்ன விஷம்?
சொன்னான்.
ப்ளீஸ். என்னக் காப்பாற்று.
அந்த விஷத்திற்கு மாற்று மருந்து கிடையாது என்பது உனக்குத் தெரியும்தானே?
ஏன் ஹனாரி? நம்பிக்கைத் துரோகி.
இனி இவ்வுலகின் கடவுள் நான். உலகம் அறியும் முன் உன்னை மட்டுமல்ல. உன் பெயர் நீக்கப் பட்டுவிடும். உன் நகலையும் அழித்து விடுவேன்.
அவசியமில்லை ஹனாரி.
என்ன?
சிரித்தான்
என் கண்களைப் பார்த்தான்.
அருகில் வந்து உலுக்கினான்.
சொல்.
நீ உருவாக்கிய என் நகல் இன்னும் ஒரு மணி நேரத்தில் தானாய் அழிந்து விடும்.
என்ன சொல்றே?
வெளிநீலநிறக் கோப்பு. அதில் கடைசி அத்தியாயத்தை நான் இன்னும் எழுதவில்லை.
பொய்.
கத்தினான்.
எந்தப் பிரதியையும் வாழவைக்கும் அந்த ரகசியம் இங்கே மட்டும்தான் இருக்கு.
என் நெற்றியைத் தொட்டுச் சொன்னேன்.
அதிர்ந்தான்.
என்னை உலுக்கினான்.
சொல்..சொல்
கடவுளின் வேலையை உன்னால் எடுத்துக் கொள்ள முடியாது ஹனாரி. என்னைப் பின் தொடர்ந்து என் நகலும் அழியும். ஒரே மணி நேரம் மட்டுமே வாழும் எந்த நகலும் உனக்கு உதவாது. புரிந்து கொள்.
பதிலுக்கு அவன் சொன்னது என் காதில் விழவில்லை.
சரியான வார்த்தைகளின் கச்சிதம்..அறிவியல் கதைகள் சுஜாதவுக்கு பிறகு படிக்கிறேன் நல்ல சிறப்பான கதை