புதியதோர் உலகம் செய்வோம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 7,548 
 
 

உடலில் தீடீரென வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு… தலையிலிருந்து கால் வரை தீயாய் எரிந்தது…இதே போன்ற அனுபவம் ஜோவுக்கு முன்பொரு முறை ஏற்பட்டபோது பயந்துபோய் வேகாவுடன் தொடர்பு கொண்டாள்..

பொத்தானை அமுக்கியதும் ‘பீப்! பீப்!’ என்றது…

எப்போதுமே அவன் பிஸிதான்…

ஜோவுக்கு மயங்கி விழுந்துவிடுவோமோ என்று கிலி பிடித்துக் கொண்டது…

நல்லவேளை..! வேகா கிடைத்து விட்டான்.

“வேகா…. எனக்கு உடல் முழுவதும் தீயாய் எரிகிறது…”

“இதற்கு முன் இப்படி வந்திருக்கா ஜோ…?”

“இல்லை… இல்லவேயில்லை.. சீக்கிரம் சொல்லு.. இல்லையெனில் நான் எரிந்து சாம்பலாகிவிடுவேன்….!”

“அதெல்லாம் ஒன்றும் நடக்காது… உன்னுடைய கட்டுப்பாட்டு அறையில் ஒரு நீளமான நீல நிற குழாய் தொங்குகிறதா..?”

“ஆமாம்…”

“அதன் மேலிருக்கும் பொத்தானை அமுக்கி வாயில் வைத்து உறிஞ்சு…உன் உடலில் குளிர் பரவ ஆரம்பிக்கும்.. உடல் பழைய நிலையை அடைந்ததும் ‘ டிங் ‘ என்ற மணிச்சத்தம் கேட்கும்..உறிஞ்சுவதை நிறுத்தி விடு…! “

“வேகா….நீ என் ஆபத்பாந்தவன்..அனாத ரட்சகன்….”

“போதும்…எனக்கு வேலையிருக்கிறது…”

“இரு இரு…. எதனால் இப்படி…? “

அதற்குள் வேகா தொடர்பைத் துண்டித்து விட்டான்…. ஒரு வினாடி கூட வீணாக்க மாட்டான்… வேகா தான் அவளின் குரு…

அதனால் இந்தமுறை அவள் பயப்படவில்லை… வேகாவை நினைத்துக் கொள்ள , கன்னத்தில் லேசான சிவப்பு பூச்சு….!

ஜோ பதினாறு வயதே நிரம்பிய , தலை முழுவதும் க்ரே மேட்டரால் நிரப்பப் பெற்ற ஒரு அறிவியல் பைத்தியம்….

பூமியைச் சேர்ந்தவள்தான்…

இப்போது அவளது இருப்பிடம் விண்வெளி நிலையம் , நுண்கலம் எண் அறுபது ××××….!

பூமியிலிருந்து மிக தொலைவில் , மேகக் கூட்டங்கள் அவ்வப்போது ஹலோ சொல்லி விட்டுப் போகும் நீலவான்வெளியில்…. அந்தரத்தில்…! அவளது கனவு நினைவேறிய உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள்…

ஜோவின் உடலிலுள்ள அணுக்கள் எல்லாமே அறிவியல் தாகம் கொண்டவை… அவளுடைய முன்னோர்கள் பலர் சந்திரன், செவ்வாய் என்று பல கிரகங்களைச் சுற்றி வந்தவர்கள்.. சிலர் அங்கு சிலகாலம் தங்கியுமிருக்கிறார்கள்..

அவளது தாய்வழி சொந்தமான மோனி விஞ்ஞானத்தில் நோபல் பரிசு பெற்றவர்…ஐந்து வருடங்கள் விண்வெளி ஆராய்ச்சிக்காக தனியாக நுண்கலத்தில் தங்கியிருந்து சாதனை படைத்த பெண்மணி..

தந்தை வழி சொந்தமோ ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் தயாரிக்கும் தொழிலில் முதன்மையான இடத்தைப் பிடித்து வானத்தையே வில்லாக வளைத்தவர்கள்..

தொழில்நுட்ப அறிவும் , அறிவியல் பின்புலமும் சேர்ந்து ஜோவை ஒரு முன்னணி விண்வெளி வீராங்கனையாக உருமாற்றியிருந்தது….

இல்லையெனில் , ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் , விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பேரில் , வயதில் குறைந்த ஜோவுக்கு எப்படி முதலிடம் கிடைத்திருக்கும்..??

அவளே தனது கலத்தை பழுதுபார்க்க அனுமதியும் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியம்..மற்ற விண்கலங்கள் பழுதானாலும் முதலில் அழைப்பு வருவது ஜோவுக்குத்தான்..

வருடத்தில் இரண்டு முறை பூமிக்கு செல்ல அனுமதி..மூன்று நாட்கள் மட்டுமே குடும்பத்துடன் செலவழிக்க முடியும்..அடிக்கடி வீட்டுடன் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை..

ஆனாலும் ஜோவின் பெற்றோர்கள் அவளை நினைத்து பெருமைப் படவே செய்வார்கள்…

ஜோவுக்கு வேகாவின் அறிமுகம் கிடைத்தது அவள் வாழ்வில் வீசிய வசந்தம்…..

எப்படி நிகழ்ந்தது அந்த சந்திப்பு?


ஜோவுக்கும் வேகாவுக்கும் கண்டதும் காதலா…?

இல்லையில்லை.. கண்டதும் மோதல்….

நேர்முகத் தேர்வுக்கு தயாராகி நிற்கிறாள் ஜோ.. அவளது முன்னால் இருபது வயதிலிருந்து அறுபது வயதுவரை ஆணும் பெண்ணுமாய் சுமார் பதினைந்து விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள்..

வேகாவும் அதில் அடக்கம்.. வயதில் சிறியவன்…

“எக்ஸ்க்யூஸ் மீ ஃப்ரண்ட்ஸ்…! உங்கள் அனுமதியுடன் முதலில் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்…

“ஜோ…! உன்னுடைய வயது என்ன என்று கூறமுடியுமா….?”

“பதினாலாம் வயதில் காலடி எடுத்து வைத்து பத்து நிமிடம் , ஐந்து வினாடிகள் ஆகின்றது….”

“டியர் ஃப்ரண்ட்ஸ்…நமது விதிப்படி பதினாறு வயது பூரத்தியாகாத இவளை எப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைத்தீர்கள்…?? ஷீ இஸ் டிஸ்க்வாலிஃபைட் ! இவளுக்காக நேரம் விரயம் செய்வது சரியல்ல என்பது என் கருத்து…..!”

வயதில் மூத்த அறிவியல் நிபுணர் மாக் அவனிடம்,

“ஒரு நிமிடம் வேகா….ஜோ இந்த விதிக்கெல்லாம் அப்பாற்பட்டவள்… எல்லாவற்றையும் பரிசோதித்த பின்னரே ஆராய்ச்சி கழகம் இவளை பரிந்துரை செய்துள்ளது… நாம் நேர்முகத் தேர்வைத் துவங்கலாம்…”

“இவள் மிகச் சிறந்த அறிவாளியாக இருக்கலாம்.. நான் பதிநான்கு வயதில் விண்ணப்பித்தபோது எனது திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கூட அளிக்காமல் நிராகரிக்கப்பட்டது இன்னும் என் மனதில் வடுவாக இருப்பது உங்களுக்கே தெரியும்…..”

“வேகா…நீ எந்த யுகத்தில் இருக்கிறாய்….?? ‘ தினம் ஒரு விதி செய்வோம் ‘. இதுதானே நமது கோட்பாடு…

நாங்கள் ஒரு கேள்வியும் கேட்கப் போவதில்லை…உன்னிடமே அவளை விட்டு விடுகிறோம்… முப்பது நிமிடங்களில் உன் முடிவைக் கூறு..அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்….”

ஆரியின் கூற்றை அனைவரும் ஆமோதித்தனர்.. ஆரியின் பேச்சுக்கு மறுபேச்சு என்பதே கிடையாது…

ஜோவுக்கு ஒரே ஆச்சரியம்..இருபது வயது இளைஞன் இவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறான் என்றால்…..??

பரிசோதனைக்குப் தயாரானாள் ஜோ….!


பரிசோதனைக் கூடத்திலிருந்து பதினைந்தே நிமிடத்தில் புயலென வெளியே வந்தான் வேகா…

எல்லோர் முகத்திலும் ஈயாடவில்லை…

அவளை துரத்தியடித்திருப்பானோ..?? ஒரு பொக்கிஷத்தை தவற விட்டிருப்பான்…! அவசர புத்திக்காரன்….!

“இவள் சாதாரணப் பெண்ணல்ல….விண்ணை ஆளப் பிறந்தவள்… இவளிடம் இப்போதே நாம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கலாம்.. ஐயம் வெரி சாரி ஃபார் பீயிங் ஜட்ஜ் மென்ட்டல்…..! என் செயலை நினைத்து வெட்கப் படுகிறேன்….”

“வேகா…என்ன சொல்கிறாய்…? எங்கே அவள்…?”

எல்லோர் குரலும் ஒருமித்து ஒலித்தது…

விண்ணோடு விண்ணாக ஐக்கியமாகி விட்டாள்….. இரண்டு நாளைக்கு அங்கிருந்து நகர மாட்டாளாம்….!”


ஏழெட்டு வாரங்கள் வேகாவுடன் செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ள விண்கலத்தில் பணியாற்றினாள்….

அவளுடைய வேகத்துக்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

வேகாவை ஜோவுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது…. செவ்வாய் கிரகத்தைப் பற்றி எத்தனை தகவல்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறான்….??”

“வேகா..இந்த கிரகம் உனக்கு மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கே…இங்கேயே நிரந்தரமாக தங்கப் போறியா….?? நானும் நீயும் இங்கே சேர்ந்து வாழ்ந்தால் எப்படி இருக்கும்….?”

“ஜோ…. அதெல்லாம் இப்போதைக்கு நடக்காத காரியம். நிரந்தரமாக குடியேறும் நாள் அதிக தூரம் இல்லை…ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம்…தேன்நிலவு எங்க சொல்லு…??”

“நிலவுக்கு போவோம்…
இடமொன்று பார்ப்போம்..
மாளிகை அமைப்போம்..
மஞ்சத்தில் இருப்போம்…”

ஜோ பாடத் துவங்கினாள்….

அப்போதுதான் அது நடந்தது…

செவ்வாய் கிரகமே குலுங்கியது…அவர்களது விண்கலத்தின் அதிர்வுகள் அவர்களை சுழற்றி சுழற்றி அடித்தது….

“வேகா… ஒரு பெரிய விண்கல் நம்மை நோக்கி வேகமாக வருகிறது..வினாடிக்கு எழுபது கிலோமீட்டர் என்று காட்டுகிறது பார்…..!”

நாம் உடனே இதை திசை திருப்ப வேண்டும்….!

விண்கற்கள் ஒன்றும் புதிதல்ல… சிறிதும் பெரிதுமாக அவை வான் வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கும்…

பெரும்பாலான கற்கள் கிரகங்கள் மீது மோதுவது போல் வந்தாலும் பாதியில் எரிந்து தீக்கோளங்களாய் உருமாறி பின்னர் மறைந்துவிடும்…

ஆனால் இந்த விண்கல் இதுவரை காணாத அளவுக்கு பெரியதுமட்டுமல்ல…அதி வேகமானதும் கூட….

“ஜோ! ஐயம் ஹெல்ப்லெஸ்…..! இன்னிக்கு நமக்கு ஒரு முடிவு கட்டித்தீருவேங்கிற வெறியோட வருது பாரு…!”

“ஹே…! டோன்ட் லூஸ் ஹோப் மேன்….நீ கொஞ்சம் நகரு….! ஐ கேன் ஹாண்டில் இட…”

ஜோ கை பட்டதும் ஒரு மாயாஜாலமே நிகழ்ந்தது….

விண்கல் மெல்ல மெல்லத் தன் பாதை விட்டு விலக ஆரம்பித்தது….

இருவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்….

“என் முதல் முத்தத்தை ஏற்றுக் கொள்வாயா. ?”

“ஃபளையிங் கிஸ்ஸா….??”

“நோ…! கிஸ் வைல் ஃப்ளையிங்..”


வேகாவை நினைக்க நினைக்க ஜோவுக்கு அவன் மேல் காதல் கூடிக் கொண்டே போனது… செவ்வாய் கிரகத்தை அப்படியே ஆக்கிரமித்து கொண்டுவிட்டானே….

செவ்வாயில் மனிதன் குடியேற்றப் போகும் நாள் இதோ…இதோ.. நெருங்கிவிட்டது…

விண்வெளி ஆராய்ச்சியில் அவன் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜோ…

ஆனால் அவளது கனவு நிறைவேறும் நாள் எப்போது….??

ஜோவின் குறிக்கோள் தான் என்ன..?

டைட்டன் , வெள்ளி , கெப்ளர் …… இவற்றின் மீதான காதல் வேகாவிடம் உள்ளதை விட பன்மடங்கு…..

எப்படியும் அதில் ஒன்றில் குடியேறுவதே ஒரே இலக்கு…..

வெள்ளி , செவ்வாயை விட அருகில் இருந்தாலும் மனிதன் வாழ இன்னும் ஏற்றதாக இல்லையே.. ஆனாலும் அது காதல் சின்னமல்லவா….?

வேகாவுடன் அதில் சேர்ந்து குடியேறும் நாள்…..அது காதல் தேவதைக்கு செலுத்தும் காணிக்கை….!

பலமுறை இந்த கிரகங்களைச் சுற்றி வந்ததுமட்டுமல்ல.. அதில் தங்கியும் இருக்கிறாள்….!

இந்த கிரகங்களை மனித வாழ்க்கைக்கு தயார் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்.. ஏன் மனிதனை இந்த கிரகங்களில் வாழும்நிலைக்கு தயார் செய்யக் கூடாது…??


அழைப்புமணி….!

இது அவளது தனிப்பட்ட விவரங்களுக்கானது…கிர்ரென்று ஒலித்த பொத்தானை அமுக்கினாள்..

“ஜோ..! நீ இன்னும் இருபது வினாடிக்குள் உனது வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்..!”

“அப்பாவுக்கு ஏதாவது….??”

“ஆம்…நேரத்தை வீணாக்காதே…. ஒவ்வொரு வினாடியும் முக்கியம். விண்கலம் உன்னை அழைத்துச் செல்ல தயாராக நிற்பதைக் காண முடிகிறதா…??”

தலைமை செயலகத்தின் உத்தரவு….!

ஜோ முகம் கருத்தது….அப்பாவை இழக்கப்போகிறேனா….??

நூற்று ஐம்பது வருடங்களாகிவிட்டது விஞ்ஞானி எமிக்கு… பத்து வருடங்களுக்கு முன்னால் இதயம் செயலிழக்க ஆரம்பித்தது…

செயற்கை உபகரணங்களுடன் ஒருவர் வாழ ஏழு வருடம் மட்டுமே அனுமதி உண்டு…

ஓ..? எப்படி மறந்தேன்…? அப்பாவின் வாழ்க்கை முடிய இன்னும் சில நிமிடங்களே விதிக்கப்பட்டுள்ளது…. அவளது கடைசி சந்திப்பு…

அப்பா முகத்தில் ஒரு வருத்தத்திற்கான ரேகையும் காணவில்லை….விடைபெற தயாரானவர் போல் முகத்தில் ஒரு புன்னகை…

“ஓ! மை டியர் ஜோ..! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்.. இன்னும் ஒரே வினாடிக்குள் எரியூட்டும் இயந்திரத்திற்குள் செல்லவேண்டும்…

உனது கனவு நனவாகும் நாள் தொலைவிலில்லை…! உன்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் எனக்கு வந்து கொண்டேயிருந்தது…நீ விரைவிலேயே டைட்டனில் குடியேற வாழ்த்துக்கள்…

கேல்….! நீதான் உன் பெண்ணின் வழிகாட்டி…உன்னிடமிருந்தும் விடைபெறுகிறேன்…”

எமி எரியூட்டும் இயந்திரத்தை நோக்கி நடந்தார்…

கேல் ஜோவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்…..

அப்பாவின் கனவை நனவாக்கவேண்டும்….! ஏன்….? அவளது கனவும் அதுதானே….!


எங்கு பார்த்தாலும் மினுக் மினுக்கென்று மின்னிய நட்சத்திரங்கள்…கருநீல பட்டில் வைத்துத் தைத்து போல…அங்கங்கே தெறித்து விழும் வால் நட்சத்திரம்..விண்கலத்தை உராய்வது போலச் செல்லும் எரிநட்சத்திரம்..இந்த வாணவேடிக்கை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது….!

எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த அனுபவம்…?
ஜோ மிகவும் பரவச நிலையில் இருந்தாள்…

அப்பாவின் நினவு அவ்வப்போது வந்து போனது…

வேகா இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்….?

இப்போதெல்லாம் அவன் அவளை அடிக்கடி தொடர்பு கொள்ளுவதை நிறுத்தி விட்டான்… அவள் அழைத்தாலும் தொடர்பை துண்டித்து விடுகிறானே….!

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு முறை சென்று பார்க்கலாமா….?

அவளுக்கு மூச்சு விட நேரமில்லை….

இது என்ன…? தூரத்தில் ஒரு விண் கல்….!

செவ்வாய் கிரகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறதா…..?? வேகா நிச்சியம் கவனித்திருப்பான்….! இருந்தாலும் அவனை தொடர்புகொண்டு எச்சரித்தால் என்ன….??

ம்ஹூம்…. வேகா கிடைக்கவேயில்லை….!

அவளால் அதன் பாதையை மாற்றி அமைக்க முடியும்…. ஆனாலும் வேகாவிடம் தெரியப்படுத்துவது அவசியம்…. அவசரம்…

“ஜோ…! சாரி…! அதிக நேரம் பேச முடியாது..! மிகவும் நெருக்கடியான நிலமை…”

“வேகா..அது பற்றி எச்சரிக்கத்தான்….”

“ஜோ ! என்னால் ஒரு வினாடி கூட வீணாக்க முடியாது.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. விரைவில் என் கனவு நனவாகும் போகிறது… நீயும் நானும் செவ்வாயில் சேர்ந்து வாழும் நாள் இதோ ..இதோ…. மிகவும் அருகில்…!”

“வேகா.. ஏன் அவளிடம் இதெல்லாம் சொல்கிறாய்..? ப்ளீஸ்..கட் தி கால்….”

இது என்ன ? பின்னாலிருந்து ஒரு ஆண் குரல்….வேகாவுடன் யாரோ கூட இருக்கிறார்களா….??

விண்கல் வேகமாக நெருங்கி வருகிறது…! ஜோ மிகவும் படபடப்பானாள்….

வேகா கெட்டிக்காரன் தான்..பாதையை திருப்பி விட்டானே…..!

“ஆனால்…! ஆனால்..! அது பூமியை நோக்கி அல்லவா திரும்பி விட்டது….

ஏதோ தப்பாகத் தெரிகிறது….வேகாவின் அருகில் கேட்ட குரல்?? அவனை யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா…?? வேகா ! ஆர் யூ ஸேஃப் ??

நான் அவனை மறுபடியும் அழைக்கத்தான் போகிறேன்….

“வேகா…! ஆர் யூ ஓக்கே….??”

“ப்ளீஸ் ஜோ என்னை நிம்மதியாக வேலை செய்ய விடமாட்டாயா….?“

“வேகா..வேகா….! அந்த விண்கல்….பூமியை நோக்கி….”
“ஜோ. .. ஸ்டாப் நாகிங்…எல்லாமே என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது….விவரமாக பேச இது நேரமில்லை… லவ் யூ ஜோ….”

இடையில் ஒரு குரல்…

“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்….வேகா… தொடர்பை துண்டிக்கப் போகிறேன்..”

அப்போது கேட்ட அதே குரல்…

ஜோவுக்கு எல்லாமே புரிந்துவிட்டது…பூமியை தகர்க்க சதி செய்கிறான்…. எல்லாமே வேகாவுக்கு தெரிந்தே நடக்கிறது….செவ்வாயை தனதாக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டான்…!

“நோ..நோ….! உயிரே போனாலும் நான் இதைத் தடுத்தே தீருவேன்…

பூமியைப்போல் போட்டியும் பொறாமையும், பூசலும் நிறைந்த மற்றோரு கிரகத்தை உருவாக்க நினைக்கும் உன்னைப் போன்றவர்கள் செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிக்க ஒரு போதும் நான் துணையாக நிற்க மாட்டேன்…!

ஜோ ஒன்றை நினைத்து விட்டால் நடத்தியே தீருவாள்….!

மெல்ல மெல்ல செவ்வாயை நோக்கித் திரும்புகிறது அந்த விண்கல்…..

வான் வெளியில் ஒரு யுத்தமே நடக்கிறது….

இதோ … இன்னும் சில நொடிகளில்…

செவ்வாய் கிரகத்தில் ஒரு நெருப்புக் கோளம்…!

“வேகா..என்னை மன்னித்து விடு…! “

வேகாவின் உடலில் தீடீரென்று வெப்பம் பரவத் தொடங்கியது…. உடல் முழுவதும் தீயாய் எரிகிறது…..”

“ஜோ….நீ வென்று விட்டாய்! நீதான் விண்ணை ஆளப் பிறந்தவள்…!

இதோ…கடைசியாக நான் உனக்குக் தரும் காதல் பரிசு..!

ஒரு முத்தத்தை காற்றில் பறக்க விட்டான்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *