தெற்றுப்பல் சிரித்தது…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 49,022 
 

நான் சொல்லப் போகும் விஷயம் உங்களுக்கு கண்டிப்பாக, நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். என்னை மனப்பிறழ்வு ஏற்பட்டவன் என்று கூட நீங்கள் நினைக்கலாம். அதற்காக நான் வருந்தப் போவதில்லை. இந்த கதையை வாசிக்கத் தொடங்கியதால், உங்களுக்கும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.

தெற்றுப் பல் என்றதும் உங்களுக்கு தோன்றுவது என்ன? நடிகை சித்தாரா, பாவனா, போன்ற தெற்றுப் பல் அழகிகளின் புன்னகை தானே. ஆம், பெண்களுக்கு அழகாகத் தான் இருக்கிறது. எனக்கும் அவர்களைப் போல தெற்றுப்பல் உண்டு. ஆனால் நான் பெண் அல்ல. ஆண். ஒரு எழுத்தாளன். உங்கள் மனதில் இந்த நொடிக்கு முன்னால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதை நான் புரிந்து கொள்கிறேன்.

உங்கள் ஆர்வம் குறைந்து விட்டது எனில், என் வாழ்க்கையின் சுவாரசியமான பகுதி பற்றி இனிமேல் தான் கூறப் போகிறேன். இந்த தெற்றுப் பல், நான் பிறந்ததிலிருந்து என்னுடன் இல்லை. திடீரென்று ஒரு நாள், எனக்கு முளைத்தது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இரவு சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாகி உறக்கத்திலிருந்து விழித்து கொண்டேன். நேரம் இரவு இரண்டு மணி ஆகியிருந்தது. எழுந்து வீட்டின் பின்னால் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தேன். நல்ல குளுமையான காற்று. பலாப்பழ வாசத்துடன் வீசியது.

கொல்லிமலை. சுற்றுலாத் தனத்தால் இன்னும் மாசுபடாத இயற்கை இங்கே தான் இருக்கிறது. வாகன இரைச்சல், கரும்புகை, மூக்கை அடைக்கும் புழுதி, வெறுப்பேற்றும் டிராபிக் இன்றி சுத்தமான காற்றும், மூலிகை வாசமும், அளவான குளிரும், மாலை நேர சாரல் மழையும், அருவிகளும் என, எப்போதும் மனதை மயக்கும் மலை இது. என் எழுத்துப் பணிகளுக்கு எல்லா விதத்திலும் அமைதி இங்கே தான் கிடைக்கிறது. எனவே கோடை காலத்தை இங்கே தான் வாழ்ந்து ரசிக்கிறேன்.

கொல்லிமலை முழுவதுமே, பலாவும் அன்னாசியும் ஏப்ரல், மே மாதங்களை குத்தகைக்கு எடுத்து தங்கள் வாசனைப் பெருமைகளை மலை முழுவதும் பேசித் திரியும். காபியும், மிளகும் இன்ன பிற வாசனைப் பொருட்களும் விளையும் மலை. உங்களுக்கு பலாப்பழ வாசனை பிடிக்காமல், தலையை சுற்றும் ஆசாமி என்றால், மலையில் கஷ்டம் தான். வாசனையை உள்ளிழுத்துக் கொண்டே எதிரே பார்த்தேன். தூரத்தில், உயர்ந்த மலையின் உச்சியில் மாசி பெரியசாமி கோவிலின் விளக்கு மங்கலாக தெரிந்தது.

வானம் நிலவின்றி இருளாக கிடக்க, மீன்கள் தெளிவாக மின்னிக் கொண்டிருந்தன. பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தம் காதுகளில் தாக்கியது. பார்வையை கோவிலின் விளக்கிலிருந்து திருப்பி எழுந்தேன். திடீரென்று எதிரே கண்ணைக் கூசும் வெளிச்சம் ஒன்று, வானத்திலிருந்து இறங்கியது. பச்சையும் நீலமும் கலந்து, லேசர் ஒளி போல ஒரே நேர்க்கோட்டில், மைக்ரோ நொடிகளில் இறங்கி வெளிச்சம் அணைந்து, மீண்டும் இருள் மூடிக் கொண்டது.

கதைகளில் மட்டுமே கண்ட காட்சி, எனக்கு நேரே இருநூறு மீட்டர் தூரத்தில் நடந்துவிட்டது. அது என்ன? என்னவாக இருக்கும்? ஏதாவது சிறிய விண்கல் காற்று மண்டலத்தின் உராய்வில் எரிந்து விடாமல் தப்பித்து வந்ததா? ஆர்வமும், பயமும் போட்டி போட, இதயம் துடிப்புகளை எகிற விட்டது. அருகில் சென்று பார்ப்பதா? வேண்டாமா? எவ்வளவுதான் பகுத்தறிவோடு பேசினாலும், சிந்தித்து அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்தாலும், நேரடி அனுபவமாக சந்திக்கும் போது நடுங்கத்தான் செய்கிறது மனது.

நீ ஒரு எழுத்தாளன். இது போல பல காட்சிகளை வடிவமைத்து, உன் கதைகளில் உலவ விட்ட நீ பயப்படலாமா? என்று மனது அறிவைக் கீறி விட, அருகில் சென்று பார்த்து விட முடிவு செய்தேன். வீட்டிற்குள் சென்று சிறிய டார்ச் லைட் எடுத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மெல்ல அடிகள் எடுத்து வைத்து நடந்தேன். நூறு மீட்டர் தூரம் நடந்திருப்பேன். மீண்டும் ஒரு வெளிச்ச மின்னல் முன்பு போலவே. இம்முறை மேல் நோக்கி, வானத்தை பார்த்து சென்று மறைந்தது. “மை காட், சம் திங்க் கோயிங் ஆன் தேர்” வாய்விட்டு பேசிக்கொண்டு, வேகமாக நடந்தேன். கால்களில் செடிகள் இடறின. அந்த இடத்தை அடைந்து, டார்ச் லைட் வெளிச்சத்தை அடித்தேன். எதுவும் இல்லை. ஆம் எதுவுமேயில்லை அங்கே.

உங்களைப் போல தான் நானும் ஏமாந்தேன். ஏதோ இருக்கும் என வந்தால் இங்கே ஒன்றுமில்லை. நம்முடைய மனம் எப்போதும் இயற்கையாக நடக்காத, விதிகளுக்கு உட்படாத செயல்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. எனவே தான் இது போல நடக்கிறது போலும், பிரமையாக இருக்குமா? என்று நினைத்துக் கொண்டு, டார்ச் லைட்டை வானத்தை நோக்கி அடித்தேன். பின் அணைத்தேன். மீண்டும் அடித்தேன்.

மீண்டும் டார்ச்சை அணைத்து, திரும்பிய போது காலடியில் வைரம் போல ஏதோ மின்னியது. குனிந்து பார்த்தேன். வெள்ளையாக, ஒரு பெரிய கல் உப்புப் பரல் போல இருந்தது. மேலே சிறிய மண் துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. ஆனால், மின்னியது. இரண்டு விரல்களின் நுனிகளால் எடுத்து, வெளிச்சத்தில் பார்த்தேன். அது மெல்ல நெளிந்து கொண்டிருந்தது.

எனக்கு கால்கள் நடுங்கத் தொடங்கியது. வியர்த்து வழிய, நடுங்கும் கைகளால் பிடித்து, அதை உற்று பார்த்தேன். அதற்கு முகம், கண்கள், வாய் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவைகள் இருக்க இது ஒரு விலங்கா என்ன? ஏதாவது பூச்சியின் லார்வா வாக இருக்கலாம். ஆனால் அதனுடைய மின்னும் ஒளி எப்படி? என்று அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அது நெளிவதை நிறுத்தியது. என்னை உற்று நோக்கத் தொடங்கியது. கண்கள் இல்லையெனினும் அது என்னை பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. இதயத் துடிப்பு கட்டுக்கடங்காமல் உதற, நான் மயங்கத் தொடங்கினேன்.

மென்மையான சூரிய ஒளி சன்னல் வழி கண்களில் பாய, மெல்லக் கண் விழித்தேன். வீட்டிற்குள், படுக்கையில் இருந்தேன். நேற்று இரவில் நடந்தது நினைவுக்கு வர, வேகமாய் எழுந்து உட்கார்ந்தேன். மயங்கியதற்கு பின் என்ன நடந்தது என்று பிடிபடவில்லை. நீண்ட நேரம் சிந்தித்து மூளை சோர்வாகியது. கண்களை துடைத்துக் கொண்டு அருகிலிருந்த கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். என்ன இது? என் பற்களின் வரிசையில் ஏதோ ஒரு மாற்றம். ஆம். எனக்கு தெற்றுப்பல் முளைத்திருந்தது. உற்று நோக்கினேன். கண்ணாடியில் அது தனியாக என்னைப் பார்த்து சிரித்தது. என்னிடம் பேசத் தொடங்கியது. அன்றிலிருந்து நான் அறிவியல் புனைக் கதைகள் எழுத தொடங்கினேன். இந்தக் கதை தான், ‘அது’ எழுதிய முதல் அறிவியல் புனைவு.

Print Friendly, PDF & Email

2 thoughts on “தெற்றுப்பல் சிரித்தது…

  1. மிக அருமை. நீங்கள் நிச்சயம் பெரு முழு நாவல் எழுதலாம். உங்கள் கற்பனை வளம் அருமை. தமிழும் அறுவியலும் கைகோர்த்து நடப்பது அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *