நான் ஓவல் அலுவலகத்திற்கு வந்த சேர்ந்த போது, கூட்டம் தொடங்கி இருந்தது . அந்த அறையில் நாங்கள் நான்கு பேர் இருந்தோம் – அமெரிக்க ஜனாதிபதி, அவரது தலைமை அதிகாரி, நாசா நிர்வாகி, மற்றும் பொருளாதார ஆலோசகரான நான்.
நாசா நிர்வாகி முதலில் பேசினார். “ஐம்பது மீட்டர் அகலமுள்ள ஒரு சிறுகோள் மணிக்கு 96௦௦௦ கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அலாஸ்காவில் உள்ள சுகாச் வனப்பகுதிக்கு மேலாக அது வெடிக்கப் போகிறது . அதிர்ஷ்டவசமாக அது மக்கள் வசிக்காத பகுதி, அதனால் உயிர் சேதம் எதுவும் இருக்காது.”
அவர் பேசுவதை நிறுத்தி விட்டு அவருக்கு முன்னாலிருந்த ரிப்போர்ட்டை ஒரு நொடி பார்த்து விட்டு மறுபடி தொடர்ந்தார். “ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது – இந்த சிறுகோள் முற்றிலும் தங்கத்தால் ஆனது. உலகத்தில் தற்போது இருப்பதை விட பத்து மடங்கு தங்கம் இந்த சிறுகோளில் இருக்கிறது. சிறுகோள் வெடித்த இடத்தில கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கிமீ பரப்பளவில் தங்க துண்டுகள் சிதறி கிடக்கும். இந்த துண்டுகளை பொறுக்க ஒரு பெரும் கூட்டம் இந்த இடத்தை நோக்கி படை எடுக்கும். அந்த அளவிலான கூட்டத்தை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும். இதன் காரணமாக, இந்த சிறுகோள் பற்றிய செய்தியை பொது மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைக்க நான் பரிந்துரைக்கிறேன்.”
அந்த அறையில் ஆழ்ந்த மௌனம் நிலவியது. “பொதுமக்களிடமிருந்து எதையும் மறைத்து வைக்க நான் தயங்குகிறேன்,” என்று ஜனாதிபதி கூறி அந்த மௌனத்தை உடைத்தார். என்னைப் பார்த்து, “என்னுடைய பொருளாதார ஆலோசகர் என்ன நினைக்கிறார்?” என்று கேட்டார்.
நான் சில நொடிகள் யோசித்து விட்டு, “இந்த செய்தியை உடனடியாக வெளியிட்டு பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ள பரிந்துரைக்கிறேன்.” என்றேன்.
“காரணம்?”
“இந்த செய்தியை நாம் இப்போது வெளியிட்டால், இதனால் வரும் பின் விளைவுகளை நிதானமாக அலசி ஆராய மக்களுக்கு மூன்று வாரங்கள் உள்ளன. உலகின் தங்க விநியோகம் பத்து மடங்கு அதிகரிக்க போகிறது என்ற உண்மை தங்கத்தின் விலையை மிகக் கடுமையாக குறைக்கும். அவ்வளவு தூரம் தங்கத்தின் விலை வீழ்ந்த உடன், அதை மிகவும் சிரமப்பட்டு வனப்பகுதிக்கு சென்று பொறுக்கவதற்கு பலருக்கு ஆர்வம் இருக்காது.”
ஜனாதிபதி புன்னகைத்தார்.