சென்னையிலிருந்து மும்பை பயணம் – இரண்டே நிமிடங்களில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் கிரைம் த்ரில்லர் புனைவு
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 12,920 
 
 

மும்பையின் பரபரப்பான சாலைகளுக்கு மத்தியில் ஒரு உயரமான கட்டிடத்தின் ஏழாவது மாடியில் ஒரு சிறிய அறை. ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்திருந்த சேகர் வெளியில் நெளியும் ஊமைப் படப் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்.

சாம்பல் நிற உடை அணிந்த முப்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஒருவன் உள்ளே நுழைந்து தனது பிரீஃப்கேஸை மேசையில் வைத்தான். திரும்பி சேகரைப் பார்த்து புன்னகைத்தான்.

“வணக்கம், சேகர். என் பெயர் அலோக் படேல். மும்பை டிராவில்ஸ் நிறுவனத்தில் பாதுகாப்புத் துறையின் தலைவனாக இருக்கிறேன். சென்னையிலிருந்து மும்பைக்கு எங்களுடைய மின் வேக வாகனத்தில் வந்த உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?”

சேகர் எழுந்து நின்று, “ஓ, அருமையான அனுபவம். முழுப் பயணமும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விட்டது. நான் சென்னையில் வீட்டை விட்டு காலையில் வெளியேறியபோது எப்படி இருந்தேனோ அதே புத்துணர்ச்சியுடன் இப்போது இருக்கிறேன்.” என்று சொல்லி விட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டான். “ஆனால் மும்பை வந்த பிறகு பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக இந்த அறையில் அடைக்கப் பட்டிருக்கிறேன். என்ன நடக்கிறது இங்கே? நான் எப்போது வெளியேற முடியும்?”

“ஓ, மன்னிக்கவும், உங்கள் பயணத்தில் ஒரு சிக்கல்.”

“என்ன சிக்கல்?”

“சொல்கிறேன். அதற்கு முன் மின் வேக வாகனம் எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்லியாக வேண்டும். மின் வேக வாகனத்தில் ஏறிய ஒருவர் பல ஆயிரம் மைல் தூரத்தை ஓரிரு நிமிடங்களில் கடக்க முடியும். அந்த மாயாஜாலம் எப்படி சாத்தியமாகிறது என்று தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாது, சொல்லுங்கள்.”

“சென்னையில் நீங்கள் மின் வேக வாகனத்தில் ஏறிய உடன் உங்கள் உடம்பில் உள்ள அத்தனை செல்களையும் டிஜிட்டல் தகவலாக மாற்றி மைக்ரோ வினாடியில் மும்பைக்கு அனுப்பி விட்டோம். மும்பையில் உள்ள எங்கள் இயந்திரம் அந்த டிஜிட்டல் தகவலை படித்து திருப்பி மனிதனாக, அதாவது உங்களாக, மாற்றி விட்டது.”

“அப்படியென்றால், இங்கிருக்கும் நான் ஒரு ஜெராக்ஸ் காப்பியா?”

“ஆமாம், நீங்கள் ஒரு காப்பி தான். ஆனாலும் உங்களுக்கும் ஒரிஜினல் சேகருக்கும் கடுகளவு வித்தியாசம் கூட இல்லை.”

“சரி. அப்படியென்றால், சென்னையிலிருக்கும் ஒரிஜினல் சேகரை என்ன செய்வீர்கள்?”

“மும்பையில் உங்களை பத்திரமாக உருவாக்கிய பின் சென்னையிலிருக்கும் சேகரை டெர்மினேட் அதாவது ஒழித்து விடுவோம்.”

“அதாவது, கொன்று விடுவீர்கள்?”

“ஆமாம், ஆனால் அங்கு தான் சிக்கலாகி விட்டது.”

“என்ன ஆயிற்று?”

“இன்று காலை சென்னையிலிருக்கும் சேகரை டெர்மினேட் செய்வதற்காக எங்கள் ஊழியர்கள் சென்ற பொது அவரைக் காணவில்லை. எங்களுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை எல்லாம் மீறி திடீரென அவர் சென்னை அலுவலகத்தை விட்டு வெளியேறி விட்டார். நங்கள் எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.”

சேகரின் முகத்தில் புன்னகை தண்டவமாடியது. “உங்கள் சிக்கல் எனக்கு புரிகிறது. ஆனால் அந்த சிக்கலை தீர்க்க, நீங்கள் தவறான சேகரிடம் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று சொல்லி விட்டு பெரிதாக சிரித்தான்.

“இது ஒரு சீரியசான விஷயம், சேகர். ஜோக்கிற்கு இடமில்லை. மின் வேக வாகன சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஒரே நபரின் இரண்டு பதிப்புகள் இருப்பதை அவை அனுமதிப்பதில்லை. இது வெளியே தெரிந்தால் நாங்கள் எங்கள் லைசென்ஸை இழக்க நேரிடும்.”

“இதில் என்னை ஏன் குடைகிறீர்கள்? சென்னையில் காணாமல் போன சேகரைக் கண்டுபிடிக்க நீங்கள் சென்னையில் உள்ள காவல் துறை அதிகாரிகளின் உதவியை அல்லவா பெற வேண்டும்?”

அலோக் ஆயாசத்துடன், “நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. எங்கள் கம்பெனிக்கு அது தேவையில்லாத எதிர்மறை விளம்பரம் என்று நாங்கள் நினைக்கிறோம்.” என்றான்.

“அதை விட்டால் உங்களுக்கு வேறு வழி ஒன்றும் இல்லையே?”

“ஒரே ஒரு வழி இருக்கிறது.” என்று சொன்ன அலோக் மின்னல் வேகத்தில் தன் பிரீஃப்கேஸிலிருந்த .44 கைத்துப்பாக்கியை எடுத்து, சேகர் சுதாரிப்பதற்குள் சுட்டு விட்டான். சேகர் தன் மார்பைக் பிடித்துக் கொண்டு விழுந்த சக்கர நாற்காலி சிறுது தூரம் சென்று சுவரில் இடித்து, நாற்காலி ஒரு புறமும், சேகர் ஒரு புறமும் அலங்கோலமாக விழுந்தார்கள்.

அலோக் நிதானமாக தன் கைத்துப்பாக்கியின் வாயிலிருந்து வந்த புகை ஆவியை ஊதி விட்டு கீழே கிடந்த உயிரற்ற சேகரின் உடலைப் பார்த்தான்.

“அடுத்த முறை மும்பை போக வேண்டும் என்றால், ட்ரெயினோ பிளேனோ பிடித்து போடா, முட்டாள்!”

பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *