நானும் என் மனைவியும் உற்சாகமாக புது டிவியின் முன் அமர்ந்தோம். என் நண்பர்கள் அனைவரும் புகழ்ந்து பேசிய லேட்டஸ்ட் டிவி மாடலை ஒரு வழியாக வாங்கி விட்டோம். அப்படி என்ன தான் இந்த டிவியில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு ஆவல்!
நான் டிவியை ஆன் செய்து விட்டு அதன் பளபளப்பான புதிய ரிமோட் கண்ட்ரோலை கைய்யில் எடுத்துக் கொண்டேன். உடனே பார்க்கக்கூடிய ப்ரோக்ராம்கள் என்று ஒரு லிஸ்ட் திரையில் தோன்றியது.
எந்த ப்ரோக்ராமை பார்ப்பது என்று நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
லிஸ்டில் முதலில் இருந்தது பேரழிவு நிலநடுக்கம். என் மனைவி இன்டரஸ்ட் இல்லை என்பது போல் உதட்டை சுளித்தாள்.
லிஸ்டில் அடுத்து இருந்தது வெள்ளத்தால் அழிவு. ம்ஹும், எனக்கு அதில் ஆர்வம் இல்லை.
அடுத்து இருந்தது உலகளாவிய நோய்த்தொற்று. இது கொஞ்சம் சுவாரஸ்யமாகத் தெரிந்தது. என் மனைவியும் ஆர்வத்துடன் தலையசைத்தாள்.
ரிமோட்டின் நடுவில் இருந்த பெரிய சிவப்பு பட்டனை அழுத்தினேன். Program Loading… என்ற வரி திரையில் தோன்றியது.
நாங்கள் இருவரும் பூமியில் கட்டவிழ்த்து விட்ட கொடூரத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தோம் .