எலும்புகளின் தேடல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,729 
 
 

“சங்கர், நீங்களும் உங்க மூன்று பேர் கொண்ட குழுவும் இன்னைக்கு இரவு விமானத்தில் ரஷ்யா போகனும்” என்றார் இந்திய உளவுத் துறை அதிகாரியில் ஒரு முக்கியப் பிரமுகரும் தமிழருமான மாறன்.

தானும் தனது குழுவும் ஏற்கனவே சேமித்த சில தகவல்களின் படி ஒரு முடிச்சு கிடைத்திருக்கிறது. அதை அங்கே சென்று உறுதிப் படுத்தி விட்டு வருகிறோம் என்று சங்கர் வாக்களித்தார்.

“இது உலகளாவியப் பிரச்சினை, எங்கே எப்போ அடுத்து அந்தப் பிரச்சினை வெடிக்கும்னு தெரியலை. ஏற்கனவே நாம நிறைய இழந்துட்டோம். நியாபகம் இருக்கட்டும் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப் பட்டிருப்பவர் உலக பணக்காரர்களின் பட்டியலின் இருப்பவர்” என்று அறிவுரை கூறினார்.

சரியாக இன்றிலிருந்து ஒரு மாதம் முன்பு குமரி மாவட்டத்தில் சரமாரியாக மக்கள் நோயுற்று இறந்திருக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களின் உடலிலுள்ள இரத்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கியதே. மேலும் குமரிக் கடலில் பல இலட்சம் மீன்களும் இறந்தது. இதை போல் தென் ஆப்ரிக்காவிலும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. இது போன்று இதுவரை உலகம் முழுதும் 27 இடத்தில் நடந்துள்ளது. இது இன்னும் எங்கு தொடரலாம் என்ற ஆய்வறிக்கை ஒன்றைப் பற்றிப் பேசுவதற்காகவே சங்கர் ரஷ்யாவிற்கு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு சங்கரும் அவரது குழுவும் ஒரு வாரத்திற்கு முன்பு பயணிக்க ஆரம்பித்த போது, திடீரென்று ஒரு லாரி பலமாக மோதி இருவர் உயிரழந்தனர். சங்கரும் அவருடன் உள்ள மூவரும் உயிர் தப்பினர். ஒரு வாரம் கழித்து இன்று மீண்டும் செல்கிறார்.

“சார், இந்தக் குழுவுல நாம இப்போ நாலு பேருதான் இருக்கோம். மீதி இரண்டு பேர் இறந்ததற்கு ஒரு வேளை அந்த லாசன் தான் காரணமாக இருக்குமா?” என்றார் முகில்.

“இது பற்றி சி.பி.ஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைக்கிறேன்” என்று சங்கர் கூறும் போது விமானம் கிளம்பியிருந்தது, நால்வரும் சிறு கலக்கத்தினுடனே சென்றனர்.

தான் சேகரித்த விசயங்களை உலகின் பல இடங்களிலிருந்து கூடிய அதிகாரிகளிடமும், லாசன் தற்பொழுது வசிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளுக்கும் சொல்ல ஆரம்பித்தார் சங்கர்.

“இது வரைக்கும் திடீர் மரணங்கள் இப்படி நடந்த எல்லா இடத்திலும், ஏதோ தொற்று நோய்தான் காரணம் என்று பலரும் அந்த கிருமியைத் தேடி அலைகின்றனர். ஆனால் இது எந்தக் கிருமியாலும் வந்ததல்ல. இது லாசன் என்பவரின் ஆராய்ச்சியால் வந்த விணை. அவர் நடத்தும் மியூஸியம் ஒன்றும் அவரது தொழிலில் முக்கியமான ஒன்று. அது சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்து இருக்கிறது. இதற்குக் காரணம் லாசன் நிறுவணம் கண்டு பிடித்த டினோசர்களுக்கும் முந்தைய உயிரனங்களின் எலும்புகளும், ஆதி மனிதனின் எலும்புகளும், இன்னும் பலப்பல…. இவையெல்லாம் நடந்து முடிந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர் சில இடங்களில் எலும்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் குமரியை ஒட்டிய கடல் பகுதியிலும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று சில அரிய உயிரினங்களின் எலும்புகளைக் கைப்பற்றி அங்கே வைத்திருக்கிறார்.”

இடையே குறுக்கிட்ட இங்கிலாந்திலிருந்து வந்த அதிகாரி, அவர் எலும்புகள் எடுக்காத இடத்திலும் பல பேர் இறந்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு சங்கர், லாசன் எலும்புகள் எடுத்த இடங்களின் பட்டியலும், உலகில் இது வரை இது போன்ற மரணம் நிகழ்ந்த 27 இடங்களின் பட்டியலையும் அளித்தார். அதில் அவர் 28 வதாக ஒரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

“இந்த கேள்விக்கான விடை அவர் சமீபத்தில் தனக்கான ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதுதான். அவர் அந்த செயற்கைக்கோளை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னால் செலுத்திக் கொண்டார். அந்த செயற்கைக் கோள் மூலம் எக்ஸ்ரே போன்ற ஏதோ ஒரு புதிய கதிர்வீச்சு மூலம் அவர் உலகின் பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளார். இவற்றில் மக்கள் வாழும் பகுதியும் அடங்கும். தரையைத் துளைத்துச் சென்று அங்கே எலும்புகள் எங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அவர் கண்டு பிடித்திருக்க வேண்டும். அந்தக் கதிர்வீச்சின் காரணம்தான் பொறுமையாகச் செயல் பட்டு அந்த ஊர் மக்களை சில ஆண்டுகள் கழித்து கொன்றிருக்க வேண்டும். என்னுடைய கணக்கு சரியென்றால் அவர் 11 வதாக எலும்பு எடுத்த இடம் ரஷ்யாவில் உள்ள பனி அதிகமும், மக்கள் குறைவாகவும் வசிக்கும் ஒரு பகுதியின் இந்தப் பட்டியலில் இறுதியாக இருக்கும் இடம்தான். அடுத்த மரணம் அங்கேதான் நிகழும், அது கணக்குப் படி ஒரு மாதத்திற்குள் நிகழும்” என்று சொல்லி முடித்தார் சங்கர்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகளில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அது ரஷ்யாவைச் சேர்ந்த அந்த கிரமாத்திலுள்ள 700 பேர் இதே போன்று திடீரென மரணித்திருக்கின்றனர் என்றது.

– ஜூலை 7, 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *