ஸ்கை ப்ரிட்ஜ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 71,531 
 
 

சிறுகதைகள் தளத்தில் திரு.கண்ணன் அவர்கள் எழுதிய 500வது கதை. வாழ்த்துக்கள் ஐயா.

பெங்களூர்.

அன்று சனிக்கிழமை. விடிகாலை இரண்டு மணி.

ஜூன் 26 ம் தேதி 2021.

மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பயங்கரக் குளிரில் ஊதக்காற்று அடித்துக் கொண்டிருந்தது. பெங்களூர் நகரமே அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

பெங்களூரில் மிகப் பிரபலமான பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய மெஜஸ்டிக்கில் இருக்கும் அபார்ட்மென்ட் ஈடிஏ. ஒவ்வொரு வீடும் இரண்டு கோடி. மொத்தம் பதினோரு டவர்கள். ஒவ்வொரு டவரிலும் பதினெட்டு மாடிகள். ஒரு மாடியில் ஆறு வீடுகள் என மொத்தம் 1188 பணக்கார வீடுகள். ஒவ்வொரு டவரிலும் நான்கு லிப்டுகள் செயல் பட்டாலும், டவர் விட்டு டவர் உடனே சென்றுவர அனைத்து டவர்களின் பதினோராவது மாடியில் உறுதியான ஒரு இணைப்புப் பாலம் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் சென்றுவர முடியும். அதை ஆங்கிலத்தில் ஸ்கை ப்ரிட்ஜ் என்று அழைப்பார்கள்.

பேஸ்மென்ட் கார் பார்க்கிங்; நீச்சல் குளம்; ஸ்குவாஷ் மைதானம், மினிதியேட்டர், க்ளப் ஹவுஸ், டென்னிஸ் மைதானம்; இருபத்திநான்கு மணி நேர செட்யூரிட்டி என சகல வசதிகளும் அடங்கிய குடியிருப்பு இடம்.

இருகோடுகள் புகழ் மறைந்த நடிகை ஜெயந்தி ஜே டவரிலும்; பருத்திவீரன் புகழ் ப்ரியாமணி ஏ டவரிலும் வீடு சொந்தமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ப்ரியாமணி எப்போதும் துபாய் வாசம்தான் என்பதால் அவரது டவர் ஏ பென்ட்ஹவுஸ் எப்போதும் பூட்டியே இருக்கும்.

மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்த அந்த இரவிலும் ட்யூட்டியில் இருந்த செக்யூரிட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ‘டங்’ என்று கம்பியில் மோதிய ஒரு சத்தமும், அதைத் தொடர்ந்து ‘சொத்’ என்ற அமானுஷ்யமான பெரிய சத்தமும் கே ட்டது. .

சற்று தூரத்தில் ரவுண்ட்ஸ் போய்க்கொண்டிருந்த செக்யூரிட்டி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்.

அங்கே ஈரமான கான்க்ரீட் தரையில் ஒரு சிறிய பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள். பதட்டமான செக்யூரிட்டி, தனது பெரிய விசிலை நீளமாக அடிக்க, ட்யூட்டியில் இருந்த மற்றவர்கள் அவரை நோக்கி ஓடிவந்தனர்.

அனைவருமே பவர்புல் டார்ச் வெளிச்சத்தை இறந்து கிடந்த பெண்ணின் மீது அடித்தனர். ஆனால் அவள் முகம் அடையாளம் தெரியாதவாறு சிதிலமடைந்திருந்தது. அவள் போட்டிருந்த உடைகளும் ரத்தத்தில் சொதசொதத்தன.

அப்போது டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் அவள் வலது கையில் ஒரு சாவி இறுகப் பற்றியிருந்தது பளபளவென தெரிந்தது.

உடனே தலைமைச் செக்யூரிட்டி பில்டிங் ப்ரேசிடென்டுக்கு மொபைலில் போன் செய்து அவளை எழுப்பினார். நல்ல தூக்கத்தில் இருந்த அவள் பதறியடித்து எழுந்து கொண்டாள். உடனே போலீஸிடம் நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே போன் பண்ணி சொல்லச்சொன்னாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு போலீஸ் வந்துவிட்டது.

போலீஸ் அந்தப் பெண்ணின் கையில் இறுகப் பற்றியிருந்த சாவியை விடுவித்து எடுத்துப் பார்த்தனர். அது அந்தப் பெண்ணின் வீட்டு நுழைவுச் சாவி என்பது புரிந்து போயிற்று. சாவியில் நம்பர் எதுவும் இல்லை. அதனால் அவள் எந்த வீட்டைச் சேர்ந்தவள் என்பது புரியவில்லை. .

இரவு இரண்டரை மணிக்கு எந்த வீட்டின் கதவைப் போய் போலீஸ் தட்ட முடியும்? அனைவரும் கோடீஸ்வரகள் வேறு.

ஆனால் அந்தப் பெண் ‘B’ ப்ளாக்கைச் சேர்ந்தவள் என்பதை மட்டும் அவள் விழுந்த இடத்தை வைத்து போலீஸால் அனுமானிக்க முடிந்தது. போலீஸ் உடனே விரைந்து செயல்பட்டனர். அமைதியாக பதினெட்டாவது மாடிக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் சாவியை நுழைத்து திறக்க முயன்றனர். அடுத்து பதினேழாவது மாடி, பதினாறாவது என இறங்கு வரிசையில் ஒவ்வொரு வீடாக சாவியை நுழைத்துப் பார்த்தனர்…

இறுதியாக ஏழாவது மாடியில் உள்ள B 706 வீட்டில் சாவி பொருந்தி ‘கிளிக்’ என்று திறந்து கொண்டது. அப்போது மணி மூன்றாகிவிட்டது.

வீட்டின் உள்ளே ஹாலில் நைட் லாம்ப் எரிந்து கொண்டிருக்க வீடு அமானுஷ்யமான அமைதியில் இருந்தது. போலீஸ் மெதுவாக உள்ளே சென்று ஒரு பெட்ரூமின் கதவைத் தள்ளி உள்ளே எட்டிப் பார்த்தனர்.

அங்கு மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். போலீஸ் மிக மெதுவாக “சார்” என்று கூப்பிட அடுத்த நிமிடம் பதறி அடித்து எழுந்த வீட்டின் ஓனர் மஞ்சுநாத் லைட்டைப் போட்டார். உடனே அவர் மனைவியும் எழுந்து கொண்டாள். ஒரு சிறிய குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென யூனிபார்மில் இருந்த போலீஸைப் பார்த்ததும் பயந்து விட்டனர்.

“என்ன ஸார்? எனி ப்ராப்ளம்?” மஞ்சுநாத் கண்களில் ஏராளமான மிரட்சி.

“ஒண்ணும் இல்லை சார்…. உங்க டாட்டர் இப்ப எங்கே?”

“இங்கதான் பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்…”

பதட்டத்துடன் சென்று இன்னொரு பெட்ரூமின் கதவைத் திறந்து உள்ளே பார்த்தார்.

அங்கு அவரது மகள் இல்லை.

முகத்தில் ஏராளமான கலவரத்துடன், “என்ன ஸார் எனிதிங் ராங்?” என்றார்.

“ஆமாம்… எங்களுடன் சற்று வரமுடியுமா?”

மஞ்சுநாத்தும் அவருடைய மனைவியும் லிப்டில் போலீசுடன் தரைத்தளம் வந்தனர். அங்கே இறந்து கிடந்தது தங்கள் மகள் என்று தெரிந்ததும் துடித்துப் போயினர். கதறி அழுதனர்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பிணத்தை அரசு மார்ச்சுவரிக்கு அள்ளிச் சென்றனர். அந்த இடம் உடனடியாக கழுவிச் சுத்தம் செய்யப்பட்டது.

இவ்வளவும் நடந்து முடிந்தபோது மணி நான்கு… மஞ்சுநாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு மேல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

விடிகாலை ஆறு மணியிலிருந்து எப்போதும்போல பலர் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கு அங்கு நடந்தது எதுவுமே சுத்தமாகத் தெரியாது.

இறந்த பெண்ணின் பெயர் பானு. வயது பதின்மூன்று. பிரபல பள்ளியில் படிக்கிறாள். மிகவும் கெட்டிக்கார மாணவி என்பதை போலீஸ் தெரிந்து கொண்டனர். காதல் கீதல் என்று ஏதாவது இருக்குமோ என்று பானுவின் மொபைலை சோதனைக்கு உட்படுத்தினர்.

பில்டிங் காமிராவை வாங்கி B 706 வீட்டை சோதித்தபோது பானு தற்கொலைதான் செய்து கொண்டாள் என்பது உறுதியானது.

இரவு ஒன்று ஐம்பத்தைந்துக்கு வீட்டிலிருந்து பானு வெளியே வந்து மெயின்டோரை பூட்டுகிறாள்; லிப்ட் பட்டன் அழுத்தியவுடன் திறந்து கொள்கிறது; பதினெட்டாவது மாடியில் வெளியே வருகிறாள்; இரண்டு படிகள் ஏறி மொட்டை மாடிக்குச் செல்லும் கதவைத் திறந்துகொண்டு டெரசை அடைகிறாள்.

ஊதக் காற்று வேகமாக வீசுவது அவள் உடைகளின் அசைவிலிருந்து புரிகிறது; அவள் விறுவிறென மொட்டை மாடியின் விளிம்பை நோக்கி நடந்து சென்று அங்கு ஒருநிமிடம் அமைதியாக நிற்கிறாள். ஒருவேளை கடைசிநேர ப்ரேயராக இருக்கலாம்.

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து குதிக்கிறாள்; அப்போது பதினோராவது மாடியில் அமைந்திருக்கும் ஸ்கைபிரிட்ஜின் கைப்பிடியின் மீது அவள் உடல் பட்டு தெறித்து வெளியே தரைத்தளத்தை நோக்கி விரைந்து செல்கிறது….

கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போலீஸுக்கும், மஞ்சுநாத்திற்கும் உடல் பதறி அடங்குகிறது.

கண்டிப்பாக தற்கொலைதான். எனில், என்ன காரணம்? அதுதான் இன்றுவரை யாருக்கும் புரியவில்லை.

ஆனால் நடந்தது என்ன?

நான்கு நாட்கள் முன்பு பானுவின் அம்மாவும் அவள் தங்கை சோனுவும் ஊரில் இல்லை. பானு தன்னுடைய தனியறையில் படித்து முடித்துவிட்டு இரவு பதினோரு மணிவாக்கில் தண்ணீர் குடிப்பதற்காக ஹாலுக்கு வந்தாள். அப்போது அப்பாவின் பெட்ரூமில் லைட் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். அப்பா இன்னமும் தூங்கவில்லையா? அப்படியானால் அவரிடம் சற்றுநேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்கிற எண்ணத்தில் ஒருக்களித்திருந்த பெட்ரூம் கதவைத் தள்ளி உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தாள்…

ஆடிப்போய் விட்டாள். அங்கு அப்பா அவளுக்கு முதுகைக் காட்டியபடி வேலைக்காரி வடிவை வேகமாக முயங்கிக் கொண்டிருந்தார். இவள் உள்ளே பார்த்ததை வடிவு மட்டும் பார்த்துவிட்டாள். ஆனால் வேண்டுமென்றே அப்பாவின் பின்தலையை தன்னுடன் சேர்த்து அழுத்தியபடி, முகத்தில் எந்தவிதப் பாதிப்பையும் காட்டாமல் பானுவை முறைத்துப் பார்த்தாள்.

ஒரு நிமிடம் பானுவுக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் அப்பாவும் வடிவும் ஏதோ தப்பு மட்டும் செய்கிறார்கள் என்பது புரிய உடனே அங்கிருந்து விருட்டென்று திரும்பிச் சென்றாள். தன்னுடைய பெட்ரூம் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். உடம்பு படபடத்தது. அன்று இரவு பானு தூங்கவில்லை. பதின்மூன்று வயது பள்ளி மாணவிக்கு இது எவ்வளவு பெரிய ஷாக்?

மறுநாள் வீட்டைப் பெருக்கும்போது வடிவு இவளுடைய அறைக்குள் நுழைந்து சற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, “பானு நீ நேத்து எங்களைப் பார்த்தது உன் அப்பாவுக்குத் தெரியாது…. அம்மாவுக்கு தெரிந்தால் மாடியிலிருந்து விழுந்து தற்கொலைதான் பண்ணிக் கொள்வாள். நான் என்னுடைய பணத் தேவைக்குத்தான் உன் அப்பாவிடம் படுக்கிறேன்…உனக்கு இதெல்லாம் புரியாது. யாரிடமும் இதுபற்றி மூச்சு விடாதே…” என்று மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டுப் போனாள்.

அன்று மாலையே அம்மாவும் சோனுவும் ஊரிலிருந்து திரும்பி வந்தார்கள்.

பானு அடுத்த மூன்று நாட்கள் தன்னைத் தன் அறையில் தனிமைப் படுத்திக் கொண்டாள். “… அம்மாவுக்குத் தெரிந்தால் மாடியிலிருந்து விழுந்து தற்கொலைதான் பண்ணிக்கொள்வாள்…” என்கிற வடிவின் வார்த்தைகள் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் திரும்பத்திரும்ப அலையடித்தது.

அதைத் தானே செய்து கொண்டால் என்ன?

நிறைவேற்றி விட்டாள். மூன்று மாதங்களாகி விட்டன.

தற்போது பானு ஆவியாக அங்கு அலைகிறாள்.

அந்த ஆவி எப்படியாவது வடிவின் உயிரை பலிவாங்கத் துடிக்கிறது… சரியான சந்தர்ப்பத்திற்காக வடிவைச் சுற்றி சுற்றி வருகிறது.

அன்று ஞாயிற்றுக்கிழமை…

வடிவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பானுவின் அம்மாவிடம், “நான் ‘ஏ’ ப்ளாக் லலிதாம்மா வீட்டுக்குப் போகிறேன். நாளைக்கு அவங்க மங்களூரில் இருந்து திரும்பிவறாங்க, வீட்டை க்ளீன் பண்ணச் சொன்னாங்க..” என்று மஞ்சுநாத்திற்கு புரியும்படி சொன்னாள். மஞ்சுநாத் அவளைத் தனிமையில் சந்திக்கத் தயாரானார். பானு இறந்தபிறகு முதல் சந்திப்பு….

வடிவு லிப்டைப் பிடித்து பதினோராவது மாடிக்கு வந்து, பதை பதைக்கிற வெயிலில் ஸ்கைப்ரிட்ஜில் ஏறி ஏ பிளாக்கை நோக்கி தனியாகச் சென்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து வந்த பானுவின் ஆவி திடீரென ஒரு சுழற்சிப் புயலாக மாறி, தான் உயிரைவிட்ட அதே தடுப்புக் கம்பியின் மீது அவளைச் சாய்த்துக் கீழே தள்ளிவிட்டது.

வடிவு அலறியபடியே கீழே விழுந்து சின்னா பின்னமானாள். ‘ஏ’ ப்ளாக்கின் வீட்டுச்சாவி அவள் கையில் வெயிலில் பளபளத்தது…

உடனே அங்கு ஏராளமானோர் கூடிவிட்டனர். அப்போது அங்கு வந்த மஞ்சுநாத் “பாவம் இப்பதான் எங்க வீட்டு வேலையை முடித்துக்கொண்டு கிளம்பினாள்….” என்றார் சோகமாக.

“மவனே உனக்கு இருக்குடா அடுத்த சங்கு… அம்மாவையா ஏமாத்தின?” என்று பானுவின் ஆவி கறுவியது…

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *