கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 62,877 
 
 

நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை மரத்தை வெட்டிய நாளில் இருந்து தான் அவன் இப்படி உணர்ந்தான்.

நிர்மல் ஒரு கம்பெனியில் வேலையாயிருந்தான். சொந்த ஊர் மதுரை. சென்னையில் தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தான். வீட்டு ஓனர் கீழ் போர்ஷனிலும் இவன் பர்ஸ்ட் ப்ளோரிலும் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த ஒரு முருங்கை மரம் சரியாக இவன் வீட்டில் பெட்ரூம் ஜன்னல் அருகில் கிளைகளைப் பரப்பி நின்றது. அது பற்றி ஓனரிடம் இரண்டு வாரமாகவே கம்ப்ளைன்ட் செய்திருந்தான். கொஞ்சம் ட்ரிம் பண்ணுவார் என்று பார்த்தால், மனுஷன் மரத்தையே வெட்டி விட்டார்!

ஆனால் அன்றிரவே அவனுக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. பலமுறை தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தான். ஒரு விதமான பயம் ஏற்பட்டது. பேய் பிசாசுகளிடம் நம்பிக்கை இல்லை அவனுக்கு. இருந்தும் இந்த உணர்வையும் பயத்தையும் அவனால் நியாயப் படுத்த முடியவில்லை. ஒரு வாரமாக இந்த பாடுதான் பட்டுக்கொண்டிருக்கிறான்.

இன்றும் இதோ பதினொரு மணிக்கு திடுக்கிட்டு விழித்து விட்டான். அடிவயிற்றில் ஒரு சில்லிப்பு. கொஞ்ச நேரம் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக, “யாரிங்க இருக்கறது? எனக்கு நல்லா தெரியும். தைரியம் இருந்தா என் முன்னாடி வா! இல்லேனா யாருன்னு சொல்லு!” என்று மையமாகப் பார்த்து கத்தினான்.

அப்புறம் நடந்தவை அவனுக்கு ஒரு கனவு போல இருந்தது. பெட் அருகில் இருந்த மேஜை மேலிருந்த அவன் கணக்கு எழுதி வைக்கும் நோட்டும் அதன் அருகில் வைத்திருந்த பேனாவும் சட்டென்று எழும்பி அந்தரத்தில் பறந்து அவன் முன்னே பெட்டில் விழுந்தது. அந்த நோட்டின் பக்கங்கள் பரபரவெனப் புரட்டப்பட்டு ஒரு காலி பக்கத்தில் வந்து நின்றது. பேனா மூடி திறக்கப்பட்டு சரசரவென அந்த பக்கத்தில் எழுதியது இரண்டே இரண்டு சொற்கள்.

நான் முனி.

நிர்மல் பயத்தின் உச்சிக்கே சென்றான். உடல் வியர்த்துக் கொட்டியது. அந்த பயத்தினூடே “ சரி, உனக்கு என்ன வேணும்? இங்க ஏன் வந்த? தயவு செஞ்சு இங்கிருந்து போய்டு!” என்றான்.

பேனா காலி நோட்டில், “ முருங்கை மரம் என் வீடு. அது இல்லை இப்போ. எனக்கு வேற போக்கிடம் இல்லை. கொஞ்ச காலம் இங்கே இருப்பேன். அப்புறம் வேறு இடம் போய்விடுவேன். உன்னை ஒன்றும் செய்துவிடமாட்டேன். பயப்படாதே!” என்று எழுதியது.

“கொஞ்ச காலமா? உன்கிட்ட பயப்படாம எப்படி இருக்கிறது? நீ யாரோட ஆத்மா? உனக்கு என்ன வேணும் சொல்லு? பலி வேணுமா? ஆடா மாடா? சாராயம் வேணுமா? எதுவானாலும் ஏற்பாடு செய்யறேன். ப்ளீஸ் போய்டு!” என்று நிர்மல் அந்த நோட்டிடம் கெஞ்சினான்.

“நான் நாற்பது வருஷம் முன்னால இருந்த ஒரு கதை எழுத்தாளரோட ஆத்மா. இப்ப முனியா சுத்திக்கிட்டிருக்கேன். என் பேரு இளைய நிலவன். காதல் கதைகள் எழுதுவதில் வல்லவன். நீ நிஜமாவே பயப்படாதே. உனக்கு நல்லது செய்யனும்னு எனக்குத் தோணுது. அதச் செஞ்சுட்டு நான் பாட்டுக்கும் போய்டறேன்!” என்றது முனி.

“நீ இங்கிருந்து போகறது தான் எனக்கு உதவி. வேற எதுவும் வேண்டாம்” என்றான் நிர்மல்.

“என்கிட்டே பிரசுரமாகாத, பல காதல் கதைகள் இருக்கு. அத ஒனக்குத் தரேன். நீ உன் பேர்ல பிரசுரம் பண்ணி பேர் பணம் புகழ் சம்பாதிச்சுக்கோ! இதே மாதிரி நோட்டுபுத்தகம் வெச்சுடு. நான் எழுதித் தரேன். ஆனா என்னிக்கு நீ என்ன எதிர்த்துப் பேசுறியோ அன்னிக்கு நான் இங்கிருந்து போய்டுவேன்” என்று சொன்னதும் நிர்மல் மனதில் ஆசை துளிர்த்தது.

அவனுக்கு சிறு வயது முதலே கதைகள் என்றால் ஆர்வம். பல எண்ணங்கள் அலை மோதினாலும் அவனுக்கு எழுத வரவேயில்லை. அது அவன் மனதின் ஓரத்தில் புதைந்து கிடக்கும் ஒரு கனவு. இப்பொழுது முனியின் புண்ணியத்தில் நனவாகும் போலத் தோன்றியது. காசா பணமா? ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே’ என்று அவன் மனதில் ஓடியது,

“சரி, நீ எழுதிக்கொடு. எனக்கு நிறைய பிரசுர கர்த்தாக்களைத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“இந்தா முதல் கதை ‘ஆசையா? மோகமா’ என்று சொல்லி முனி அசுர வேகத்தில் கதை எழுதியது. கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான கையெழுத்து. முடிந்ததும் நிர்மல் படித்துப் பார்த்தான். மிகவும் அருமையான கதை!

மறு நாள் வேலைக்கு லீவு போட்டு விட்டு தனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகை ஆபீஸுக்குச் சென்றான். அதன் சப் எடிட்டர் இவனுடன் வேலை பார்க்கும் நண்பனின் அப்பா.

“வாடா நிர்மல்! என்ன விஷயம்? திடீர்னு வந்துருக்க?”

“இல்ல அங்கிள், ஒரு கதை எழுதிருக்கேன். அது நல்லா இருந்தா பப்ளிஷ் பண்ண முடியுமான்னு கேட்டுப் போகத்தான் வந்தேன்”

“இதெல்லாம் எப்போதிலேர்ந்து?” என்று சிரித்த அவர், “சரி, உன் அதிர்ஷ்டம், இப்ப வேலை கொஞ்சம் டல். டயம் இருக்கு படிக்க. கொடு” என்று வாங்கிக்கொண்டு உடனேயே படிக்கத் தொடங்கினார்.

மொத்தம் ஏழு பக்கங்கள். பாதி படித்து முடிக்கையில் நிமிர்ந்து இவனைப் பார்த்தார். அதில் ஒரு ஆச்சர்யமான பாவனை. மீதியையும் படித்து முடித்துவிட்டு, “கொஞ்சம் வெய்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு கதையை எடுத்துக் கொண்டு எடிட்டர் ரூமுக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து ஒரு ஆள் வந்து “உங்கள எடிட்டர் கூப்புடுறாரு” என்று சொல்லி எடிட்டர் ரூமைக் காண்பித்துச் சென்றான். இவன் தயங்கியவாறே அவர் ரூமுக்குச் சென்றான்.

“வாய்யா எதிர்கால காதல் கதை மன்னா!” என்று எழுந்து வரவேற்றார் அவர். “இத இந்த வார பதிப்புலேயே போடறேன். இன்னும் நாலு கத எழுதிக்கிட்டு வா!” என்று சொல்லி இவன் எதிர்பாராத ஒரு தொகைக்கு செக் தந்தார்.

நிர்மல் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

உடனே ரூமுக்குச் சென்று முனியிடம் விஷயத்தைச் சொன்னான்.

“உனக்கு சந்தோஷம்னா எனக்கும்தான்” என்றது. கையோடு வேறு நாலு கதைகளையும் எழுதித் தந்தது.
அதற்கப்புறம் நிர்மல் வாழ்வில் நடந்தவைகளை விவரமாக சொன்னால் இது தொடர்கதை ஆகிவிடும். அதனால் சுருக்கமாக”

“ஆசையா மோகமா?” ஒரு சூப்பர் ஹிட் கதையானது. ஆயிரக்கணக்கான லெட்டர்களும் ஈ மெயில்களும் பத்திரிகை ஆபீசுக்கு வந்து குவிந்தன. அதற்குப் பின் அவன் எழுதிய (?) கதைகளும் மிகவும் பிரபலமாகின. அந்த ஒரு பத்திரிக்கை மட்டுமில்லாமல் பல பத்திரிகைகளிலும் அவன் கதைகள் வெளி வந்தன. அவன் எழுத்து நடைக்கு பலர் அடிமையானார்கள். இன்னும் இன்னும் என்று அலைந்தார்கள்

முனி சிறுகதைகள் மட்டுமன்றி தொடர்கதைகளும் எழுதிக் கொடுத்தது. அதில் இரண்டைத் திரைப்படமாக்கும் உரிமையை ஒரு பெரிய ப்ரொடக்ஷன் ஹவுஸ் வாங்கிக்கொண்டது. நிர்மல் பணக்காரன் ஆனான். ஆனால் அந்த வீட்டை விட்டுப் போகவில்லை. ஓனருக்குப் பெருமை.

ஒரு ஆறு மாதம் கழித்து ஒரு பாராட்டு விழாவில் ஒரு பிரபல பத்திரிக்கை ஆசிரியர் இவனைப் பற்றி பேசுகையில், “ காதல் கதை என்றாலே நிர்மல் என்று ஆகி விட்டது. அதில் உங்கள் உயரத்தைத் தொட எவரும் இல்லை. அதே போல் மற்ற genre கதைகளிலும் நீங்கள் முத்திரை பதிக்க வேண்டும் என்று ஒரு வாசகனாய் விரும்புகிறேன். உங்கள் எழுத்து நடைக்கு மர்ம நாவல்அல்லது சூப்பர் நேச்சுரல் அதாவது பேய்க் கதை நன்கு பொருந்தும். எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேய்க் கதை எழுதித் தாருங்கள். அதற்கு அட்வான்ஸாக இந்தாருங்கள்” என்று ஒரு பெரிய தொகைக்கான காசோலையைத் தந்தார்.

நிர்மலுக்குப் பெருமையான பெருமை. அதை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டான். இரவு விழா முடிந்ததும் வீடு சென்றவன் முனியுடன் பேசினான்.

“முடியாது’ என்றது முனி.

“ஏன்?” என்று கத்தினான் நிர்மல். “நானே ஒரு பேய்! எனக்குப் பேய்கள் பிடிக்காது. நான் எழுத மாட்டேன். உனக்குக் காதல் கதைகள் மட்டும் தான் எழுதித் தருவேன். அதுவும் இன்றோடு முடிந்தது. என்ன எதுத்துப் பேசின. நான் போறேன்” என்றது முனி.

“போய்க்கோ! நீ இல்லேனா என்ன? நானே எழுதிக்கறேன்.” என்று நிர்மல் கத்தினான்.

“வேண்டாம்” என்றது முனி. “போடா” என்றான் நிர்மல்.

அடுத்த நாள் வேலைக்காரி எட்டுமணிக்கு வந்தாள். நிர்மல் வீட்டுக் கதவு மூடியே இருந்தது. கதவை பலமுறை பலமாகத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் பயந்து ஓனருக்குச் சொன்னாள். ஒரு பதட்டத்துடன் மேலே வந்த ஓனரும் தட்டினார். பத்து நிமிடம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

உள்ளே நிர்மல் பிணமாகக் கிடந்தான். அவன் ரத்தத்தில் முதல் நாள் வந்த அந்த செக் கிடந்தது.

அவன் லேப்டாப் திறந்திருந்தது. அதில் ஒரு வேர்ட் டாக்குமென்ட் ‘முனி’ என்று தலைப்பிட்டுத் திறந்திருந்தது.

சில வரிகள் எழுத்தப்பட்டும் இருந்தது.

“நிர்மலுக்கு தன் ரூமில் தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜன்னலுக்கு வெளியே இருந்த முருங்கை மரத்தை வெட்டிய நாளில் இருந்து தான் அவன் இப்படி உணர்ந்தான்.”……..

– ஜனவரி 2014

2 thoughts on “முனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *