பேய் பிடித்தவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 12,930 
 
 

எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்ல சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..

எனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது? யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது!!

இந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.

ம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.

போன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.

நாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!

அவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி! அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா? போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா? இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.

கைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு “இனிமே பிரச்சினை இல்லை” அப்படின்னு சொல்றான்.

என்னவோ! பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது? ஹலோ! உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?

– அக்டோபர் 2008

1 thought on “பேய் பிடித்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *