பாழடைந்த கிணறு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 45,124 
 

ஒரு பாழடைந்த ஓலைக்குடிசை வீடு…. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய வட்ட கிணறு… எட்டிப்பார்த்தால், முகம் கண்ணாடியில் தெரிவது போல தெளிவாக தெரியும்…

குடிசையோரம் ஒரு தொத்தலான ஆடு கட்டப்பட்டிருந்தது. ஒரு உருவம் நடுங்கியவாறே குடிசைக்குள் நுழைந்தது. குடிசைக்கு வெளியே ஒரு பூனை, ஒரு சுண்டெலியை துரத்திப் பிடித்துக் கொண்டிருந்தது.

அடுத்த‌ இரண்டாவது நிமிடம், குடிசைக்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது.

“பாட்டி.. பாட்டி..”

“யாரு?”

“நான் பிரபாகர்.. சுகாதாரத்துறையில இருக்கேன்.. கிராமம் முழுதும் எல்லாரையும் பார்த்து சில அறிவுரைகள சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்..”

“ஓ.. ஏதாவது சாப்பிட்டியாப்பா..?”

“ம்… ஊருக்குள்ள சாப்பிட கொடுத்தாங்க..”

“அப்படியா.. நான் உனக்கு எதுவும் கொடுக்க முடியாது.. ஏனா நானே சாப்பிட்டு பல‌ நாளாச்சு..”

“இந்தாங்க பாட்டி.. பிஸ்கெட்டு.. எடுத்துக்குங்க”

“பரவால்லப்பா.. வச்சுக்க.. நான் இப்படியே இருந்து பழகிட்டேன்..”

“சரிங்க பாட்டி.. உங்களுக்கு கொரோனா பத்தி தெரியுமா?”

“என்னாது.. குரோனாவா.. தெரியலையே!”

“அது ஒரு தொற்று நோய்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பக்கத்துல நின்னு பேசும் போதும், கைகள் மூலமாவும் அடுத்தவங்களுக்கு பரவும். இதத் தடுக்க அடிக்கடி கைகழுவனும், முகக்கவசம் மாட்டிக்கனும், சமூக இடைவெளியப் பேணனும்”

“அப்படியாப்பா..! எங்கிட்ட யாரும் பேசறது இல்ல, நானும் யார்கிட்டையும் பேசறது இல்ல.. அப்பறம் என்ன சொன்ன? கையக்கழுவனுமா? அதான் எங்களை இந்த ஊரு பல‌ வருஷத்துக்கு முன்னேயே கை கழுவி விட்டுருச்சே.. அடுத்தென்ன..! சமூக இடைவெளியா..! என் சமூகமே என்னை விட்டு விலகித்தானே இருக்கு.. எனக்கு எப்படிப்பா இந்த நோய் வரும்?”

“ஓ.. ரொம்ப வருத்தமா இருக்கு பாட்டி.. எதுக்காக உங்கள ஒதுக்கிவச்சிருக்கு?”

“செய்யாத தப்புக்கு எம்புருஷன் மேல பழிபோட்டு, ஊரவிட்டு தள்ளி வச்சிட்டாங்க.. அந்த துக்கத்துலேயே அவரும் போய் சேர்ந்திட்டாரு.. நான் மட்டுமே தனியா இங்க முப்பது வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்..”

“ரொம்ப பாவம் பாட்டி நீங்க..”

“அதான்பா.. ஒரு முடிவு எடுத்துட்டேன்.. இனியும் கஷ்டப்பட உடம்புல தெம்பு இல்ல”

“ரொம்ப கஷ்டம் பாட்டி”

“சரி.. சரி.. நேரம் காலத்தோட கெளம்பு.. காத்து கருப்புனு ஊருக்குள்ள சுத்தறதா பேசிக்கறாங்க‌”

“சரி பாட்டி… இந்தாங்க “கபசுரகுடி நீர்” பாக்கெட்.. அப்பப்போ தண்ணியில கலந்து குடிங்க”

“சரிப்பா..”,

மெல்ல எழுந்து நடக்கத் துவங்கினான் பிரபாகர்.. கொஞ்ச தூரம் நடந்தவன்.. ஏதோ உரைக்க பின்னே திரும்பிப்பார்த்தான்.. அதுவரை வாசலில் கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டையும் காணோம், பூனை, சுண்டெலி எதையுமே காணோம்..

பிரபாகர் ஒரு சந்தேகத்துடன் திரும்பி வர, அந்தப் பாட்டி.. தள்ளாடிய படியே பாழடைந்த கிணற்றை நோக்கிச் செல்வது தெரிந்தது.

“பாட்டி.. பாட்டி..”, என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான்…

அதற்குள் கிணற்றின் அருகில் வந்த பாட்டி.. அப்படியே உள்ளே குதித்து விட்டார்..

அதிர்ச்சியுடன் கிணற்றுக்குள் பார்க்க, உள்ளே வெளிச்சமாய் உட்கார்ந்திருந்தார் தாத்தாவுடன், பாட்டி.. பக்கத்திலேயே ஆடும்,பூனையும்.. இவனைப் பார்த்து கைகாட்டி “வா வா”வென அழைத்தார் பாட்டி..


அடுத்த நாள் காலை…

முகத்தில் தண்ணீர் பட, கண்களை கசக்கியவாறே மயக்கத்திலிருந்து எழுந்தான் பிரபாகர்.. அவனைச்சுற்றி இருபது முப்பது பேர் நின்று கொண்டிருந்தனர்..

“என்ன சார்.. எதுக்கு அந்த குடிசை பக்கம் போனிங்க?”

“அங்க ஒரு பாட்டி இருக்கு… அதுக்கு அட்வைஸ் பண்ணுங்கனு ஊருக்குள்ள சொன்னாங்களே!”

“எவனோ இளவட்டம் உங்ககிட்ட விளையாண்டிருக்கான் சார்.. முப்பது வருஷத்துக்கு முந்தியே தாத்தாவும், பாட்டியும் அவங்க கூட இருந்த நாய், பூனையோட அந்தக் கிணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. அந்தப்பக்கம் யாருமே போக மாட்டோம்..”

பிரபாகருக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது..

அப்போது எங்கிருந்தோ ‘மியாவ்’ ‘மியாவ்’ என்ற சத்தம் கேட்க, மீண்டும் மயங்கினான் பிரபாகர்.

Print Friendly, PDF & Email

1 thought on “பாழடைந்த கிணறு

  1. கதை அமானுஷ்யமாக இருந்தாலும் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
    எழுத்தாளர் வேளாங்கண்ணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *