ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்  
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 82,371 
 
 

வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட டூட்டி, பினாங்கில் வாங்கிய தொப்பித் துணி சாயம் போயிருந்தது , பூட்டியா ஆயிஷாம்மா கனவில் சொன்ன சில செய்திகள் பின் உண்மையாகிப் போனது, குணங்குடியப்பாவின் எக்காலக்கண்ணி ஒரிரண்டு, கையானம் காய்ச்சுவது எப்படி?, நான் பிறந்தபோது அசல் சீனாக்காரன் சாயலில் இருந்தது, ‘கடவுள் மனது வைத்தால் கழுதை கூட குஸ்தி போடும்’ என்ற கனைப்புகள் என்று பலதும் அதில் இருக்கும். மோதிரம் பற்றி மட்டும் இல்லை. ‘கமர் பஸ்தா ஹோனா’ என்று தலைப்பிட்டு , எந்த ஆலிம்ஷாவோ பேசியதை பேசியதுபோலவே எழுதி அடிக்கோடிட்டும் வைத்திருந்த 786வது பாரா மட்டும் என்னைக் கவர்ந்தது. ‘மாக்கான் வருவான்’ என்று பிள்ளைகளுக்கு – நாலு வருடத்திற்கு ஒருமுறை ஊர் வந்து- பூச்சாண்டி காட்டிய வாப்பா பயந்ததின் அடையாளங்களில் ஒன்று.

‘நாம பயப்படுறதுலெ 99.99% நடக்குறதில்லை. எது நடந்துடுமோண்டு நினைக்கிறோமோ அது நடக்காது. பயம் வருதுல்லெ? ஒரு தாள்லெ எழுதி வச்சுக்குங்க. இப்படி ஒரு பயம் வருது…இப்படி ஆயிடுமோண்டு தோணுதுண்டு குறிச்சி வச்சிக்குங்க. அப்புறமா அதை எடுத்துப் பாருங்க. ஒண்ணும் நடந்திருக்காது!. இப்படி உள்ள பயம்தான் நம்ம லை·ப்லெ முக்காவாசி நேரத்துலெ செஞ்சிட்டு வரோம்ட்டு புரியும்..வேற வார்த்தையிலெ சொன்னா உங்க லை·ப்லெ இதே மாதிரி முட்டாள்தனமான காரியத்துக்குத்தான் டைம் செலவு பண்ணியிருக்கீங்கண்டு புரியும். ‘புள்ளக்கி அம்மை வாத்துடுமோண்ட நினைப்பு..அந்த நினைப்புலெ சோறு உண்ண முடியாம போறது…பேச வேண்டிய செய்தியை பேசாம போறது..·போன் call-ஐ அட்டென்ண்ட் பண்ண முடியாம ஆயிடுறது…நல்லா பேசுறாவங்கள்ட்டெ கூட தூக்கியெறிஞ்சி பேசுறது..இந்த reactionலாம் வரும். எழுதிவைங்க. அப்பவே பயம் பாதி குறைஞ்சி போயிடும்!’

இதை மட்டும் எழுதிய வாப்பா தனது பயங்களை ஏன் எழுதி வைக்கவில்லை; எல்லா சபராளிகளுக்கும் அது பொதுவென்றா என்ற கேள்விகள் எழுந்தன. அடுத்த நிமிடம் தூக்கில் போடப் போகிறவனிடமோ அல்லது உயிரைத் துச்சமாக நினைத்து களத்தில் நிற்கிற போராளியிடமோ, ரிபோர்ட்டரிடமோ ‘எழுதி வை; ஒன்றும் நடக்காது’ என்று சொன்னால் அறிவுரை சொன்ன அந்த ஆலிம்ஷாவைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் வந்தது.

ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டதால்தான் ‘ஷைத்தானுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்’ என்று கட்டளையிடும் ஆண்டவன் பயந்துகொண்டு வெளியில் தலைகாட்டுவதில்லை என்று பட்டது. அப்படியும் சொல்ல முடியாது. பயத்தைச் சொன்னால் , ‘பயப்படாதீங்க. எல்லாம் சரியாப் பொயிடும்’ என்று மூக்குப்பொடி அடைத்த தாயத்து போடுபவர்களுக்கு அந்த ஆலிம்ஷா எவ்வளவோ தேவலைதான்.

தாயத்து பற்றி எழுதும்போது நண்பன் பாஸ்கரனின் ஞாபகம் வருகிறது. சூலமேந்திய சிவனுக்கும் துர்க்கைக்கும், வெட்டரிவாளோடு திரியும் வால்முனீஸ்வரனுக்கும் பயப்படாதவன் (‘டேய் அமீரு… இதெல்லாம் எங்கள்ட்டேர்ந்து அவங்களை பாதுகாக்கடா..!’) மேலவாவூர் போய்விட்டு இரவில் திரும்பும்போது இரத்தம் கொட்டும் கண்களை உடைய ஒரு வெண் உருவத்தை , காந்திமேடைப் பக்கத்தில்-பார்த்து பயந்து போனான். அது இடிப்புகளின் இன்னல் தெரிந்த தேசப் பிதாவாகக் கூட இருக்கலாம். வீட்டையே சுட்டெரிக்கும் அகோரக் காய்ச்சல். வாசலில் வேப்பிலை. ‘ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி…’ – தேவராய சுவாமிகள் அருளியதெல்லாம் காக்கவில்லை. எஜமானின் தர்ஹாவுக்கு போகலாமா?

‘தேனே யுறுதி வையவர் பேரிலே – யவர்
தானே யுதவு வாரினு நேரிலே’

தானாகவே கையால் ‘பூட்டு’ பூட்டிக் கொண்டு தலை விரித்தாடும் எத்தனை பேய்கள் வந்து திரும்புகின்றன அங்கே! சாபுமார்களின் ‘சாவி’ காரணமா அல்லது அவர்களின் அத்தனை கடைகளையும் மீறி முற்றத்தில் புகுந்து கொட்டும் அருள் காற்றா?

‘போவாதீங்க….சாம்பிராணியோட ‘ஹாஹ¥வ்ஹ்.’ண்டு புரியாத பாஷையிலெ பேசி கூடவே மொட்டையும் அடிச்சிடுவாங்க…’ என்ற லூயிஸ் சார் கடற்கரை சர்ச்சுக்கு கூட்டிப் போனார். அன்பைக் கொட்டுவார் சார். அன்பு , நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது; அது திரளான பாவங்களை மூடும். பயப்படத்தான் வேண்டும். சர்ச்-இல் ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியமெ’ன்று சொன்னதும் பாவி பாஸ்கரனின் அதைரியம் கூடிப் போனது. . கடைசியாகத்தான் வண்ணாந்தெரு நாராயணசாமியார். அங்கேதான் தாயத்து கட்டப்பட்டது. ஆனால் குணமாகக் காணோம். ஆஜாத்பட்டறையில் வேலையில் பார்க்கும் அவன் தி.க. மாமா தாயத்தை உடைத்துப் பார்த்தால் பால்டின் தகரத்தில் (வெள்ளி!) ஒரே ஒரு கீறல்! பாஸ்கருக்கு கொஞ்ச நாளில் தானாகவே – மனநல மருத்துவர் மஸ்தான் மரைக்காயரிடம் காட்டியும் கூட – சரியாகிவிட்டது. பிறகும் குழப்பம் குறையாத அவன், நல்ல சீடனாக அந்த தகட்டை எடுத்துக் கொண்டு போய் சாமியாரிடமே காட்டியிருக்கிறான்.

‘அது கோடல்ல மகனே. நான்! நான் போட்ட கோடு!’ – என்ன ஒரு சூ·பிஸ்ட் டச்! ஊர் அப்படி!

பாஸ்கர் இங்கேதான் புத்திசாலியாக மாறினான். ஒரு பெரிய கோட்டை சாமியார் வீட்டு வாசலில் போட்டு அதற்கப்புறம் அதைத் தாண்டவே இல்லை! இப்போது ஊரில் பெரிய அரசியல்வாதியிருக்கும் அவனுடைய துணிச்சல் எனக்குக் கிடையாது.

‘Tora! Tora! Tora’ என்று என் சின்ன வயதில் ஒரு சினிமா வந்தது. ‘Tora’ என்றால் புலி என்று அர்த்தமாம் . இதை ‘துரத்தித் துரத்திக் கொலை’ என்று மொழிபெயர்த்திருந்தார்கள் போஸ்டரில்! எப்படி பார்க்க முடியும் ? பயத்தை விரட்ட , இரத்தம் சீறிப்பாயும் புடைத்த செந்’தலை’ காட்டி ஒருவர் நிர்வாணமாகி விடும் சிறுகதை ( திரு.அஞ்சாநெஞ்சன் எழுதியது என்று நினைக்கிறேன்) ஒன்றை ஒரு இணைய தளத்தில் போனவருடம் படித்துவிட்டு – நடை நன்றாக இருந்தாலும் – வெலவெலத்துப் போனேன். பெண் பேயோ? பெரும் நோயோ? அற்புதமாக எழுதும் பெண் எழுத்தாளர் வனமோகினியின் எந்தப் பட்டியலிலும் இடம்பெறும் அவரது ‘பின்னே ஒரு பிசாசு’வை அந்தத் தலைப்பாலேயே இதுவரை படிக்கவில்லை. சமயங்களில் சில கவிஞர்கள்…

பெர்முடா முக்கோணப் பேயின் ரகசியத்தை எனக்குச் சொன்ன கவிப்புலி வீரமுத்து துணிந்து துப்புவதாவது:

‘ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்’

கெட்டகனவு வந்தால் இடதுபுறமாக துப்ப வேண்டும் என்று ஹதீஸை எப்படி புதுப்பிக்கிறார்! உலகம் , 70.8% தண்ணீராலானதா? யார் சொன்னது? எச்சில் ஐயா, எச்சில்!

உப்பத் தெரிந்தும் துப்பத் தெரியாத கவியரசனோ , ‘கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆ….ஆ…ஆ…..’ என்கிறான் . மரைக்கான் வீட்டுப் பெண்கள் , தமிழச்சி அல்லவோ? எனது பயங்கள் , முகம் பார்த்து தாய்ப்பால் கொடுத்த (அந்த காலம்!) தாயாரிடமிருந்துதான் ஆரம்பித்தன. ‘மஹரி நேரத்துலெ போவாணாம்…ரூஹ்ரூஹானி வரும்டா முருவம்..!’ என்று வீரத்தை முளையிலேயே கிள்ளுகிற அச்சுறத்துலையும் மீறி தெருவில் விளையாடும் ‘ஹராங்குட்டிகளி’ன் ஊளைகளும் , மறக்காமல் அத்தனை விளக்குக் கம்பங்களின் நிழல்களையும் அகலக்கால் வைத்து தாண்டியபடி வரும் வாவூர் குடிகாரர்களின் அலறல்களும் ‘ஆவுசம்..ஆவுசம் போச்சு’ என்றுதான் குறிப்பிடப்படும். ஆவுசம் என்றால் ஜின்..அது உண்மையிலேயே இருக்கிறது என்று தனி அத்தியாயமே ஒதுக்கியிருக்கிறது இறைமறை. ஜின்கள், மறைவாக இருக்கும் மேற்படியான்கள். கண்ணுக்குத் தெரிந்தால் தாங்களும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு விடுவோமென்ற பயமோ? இதில் ‘ஏன்?’ என்று கேட்டவர்கள் கெட்ட ஜின்கள்!

‘ஆவுசமாம் ஆவுசம்; எல்லாம் வேஷம்’ என்றார் ஒரு சஹர் பாவா – தாழ்ந்த குரலில் , சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு!

உண்மை தெரியாமல் வீட்டுக்குள் உறங்கும் பெண்கள் தெருவிற்கு வந்து எட்டிப் பார்த்தால் அல்லவா தெரியும் , ‘ஆவுசம்’ எந்த சபராளி வீட்டு நாச்சியாரிடம் கொசறுகிறது அல்லது எந்தத் திண்ணையில் எந்த சின்னப் பையன்களின் பின்பக்கத்தோடு ஒட்டிக்கொண்டு மூச்சிரைக்க உருளுகிறதென்று…

என்னை ஒண்ணுக்கு கூட சரியாகப் பேய விடாத தாயாரால் நான் வளர்ந்தேன். அதட்டி, ‘பேயிடா..’ என்றால்!

‘பயப்படுறவங்களை பார்த்தா எனக்கு ரொம்ப பயம்’ என்று அடிக்கடி இருட்டறையில் கிசுகிசுப்பார் எனக்கு புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொடுத்த (1/15 sec at f22 = 1/30 sec at f16… ) ஒருவர். ஹைதர் காலத்து கேமராவில் அவர் எடுத்த Double Exposureல் மினாராவில் பறக்கும் பாவட்டத்தின் அசைவுகளில் ஒரு சிறு மாறுதல் கூட தெரியாதது அப்போதைய ஆச்சரியம். சாதாரண ISO 100 speed ·பிலிமில் Shutter Speed 1 sec வைத்து (aperture f2.8) அவர் எடுத்த தர்ஹாவின் வாண வேடிக்கை ·போட்டோவும் ஊரில் மிகவும் பிரபலமானதுதான் . அதற்காக அவர் கைகள் என் மானியில் அடிக்கடி உரச வேண்டுமா? இப்படி செய்வதின் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரிவதற்குள் வாழ்வை எப்போதும் பயமுறுத்தும் சாவுக்கு இரையானார்.

ஒழுங்காக வாழ்ந்தால் சாவு ஏன் பயமுறுத்துகிறது ? ‘ஆண்டவனே, என்னுடைய அடிப்பாகத்திலிருந்தும் நான் தாக்கப்படுவதிலிருந்தும் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்’ என்ற ‘துஆ’ , அர்த்தத்தோடுதான் கொடுக்கப் பட்டிருக்கிறது!.

பேய்க்கதை மன்னனின் கதைகளில் வருவது போல ‘கும்ம்ம்ம்ம்’ இருட்டோடு இருக்கும் என் வீட்டின் பெரும் நடுக்கட்டு… கரும் பிசாசுகளாய் மாறிவிடும் நெல் பத்தாயங்கள்… மறைந்து மறைந்து தெரிந்து பயமுறுத்துவதற்காகவே உயிர்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு முட்டை விளக்கு…. ‘பித்தம் படபடங்குது பீக்குழா தெறிக்கப் பாக்குது’ என்பார்களே..அப்படி வரும். முகச்சதை ‘ஜிவ்’வென்று இழுத்துக் கொள்ளும் . கல்யாணமாவதற்கு முன்பு வரை கூட ஏதாவது வேகமாகப் பாடிக் கொண்டோதான் ஓடிக் கடந்திருக்கிறேன். எல்லா ஒலிம்பிக் ரிகார்டுகளும் அவுட்! . சமயத்தில் அந்தப் பாட்டே ஆந்தை முழியுடன் பயமுறுத்தும். ‘பயமெனும் பேய்தனை யடித்தோம்…ஜயபேரிகை கொட்டடா-கொட்டடா…!’ தமிழ் சினிமாக்களில் திகில் காட்சிகள் வந்தால் (ராஜேந்தர், ராமநாராயணன் படங்கள் தவிர தமிழ் சினிமாவே ஒரு திகில்! ) கண்களைப் பொத்திக் கொண்டு விரலிடுக்குகளின் வழியாகத்தான் வீரத்தோடு பார்த்து முடிப்பது. பாடிவரும் பேய்களை இன்றுவரை நெஞ்சம் மறப்பதில்லை! ‘யா அலி.. என்னைக் காப்பாற்றுங்கள்..!’. இந்த லட்சணத்தில் நான் அப்போது பெரியார் பக்தன் ! ஐயாவுக்கும் பயம் கிடையாதா என்ன? இப்போது வந்து அவர் சீடர்களைப் பார்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

யார்தான் , எதுதான் பயப்படவில்லை? கார்கில் வீரராயிருந்தால் கருந்தேளுக்கு பயப்பட மாட்டாரா என்ன?
கணினிக்கு வைரஸ் பயம். காலாகாலத்துக்கும் வறுமை பயம். தவளைக்கு பாம்பு பயம். பாம்புக்கு கீரி பயம். ஒரு நிமிடம் நின்று உற்றுப் பார்த்தால் சின்னஞ்சிறு கல் கூட தன் ஆதித்தோற்றத்தையும் மாற்றத்தையும் கதைகதையாய் சொல்லி பயமுறுத்துகிறது.

பயத்தின் மூலத்தைப் பார்க்க , Hypnotic Regression செய்யத் தெரிந்தவரிடம் நம்மை ஒப்படைத்து , ‘அஞ்சல குஞ்சம் ஆறுமுக தாடி ஏழு பளிங்கு எட்டண கொட்டை துளாங்கு ராஜா தூசிக்கு ராஜா’ விளையாடிய நிலைக்கும் கீழே சென்று , இதையும் தாண்டி தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும்போது நமக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்கும் கீழே போய் பார்த்து உண்மையை கண்டு பிடிக்கலாமாம். அவர் அங்கே தன்னையே பார்ப்பதற்கும் வாய்ப்பு உண்டுதான். ஆனால் அப்படி கண்டு பிடிப்பவருக்கு நேற்று போட்ட வண்ணான் பில்லோ பகல் ஆக்கிய வவ்வால் மீன் பொரியலோ நினைவில் இருக்கும் என்பதற்கு சாட்சி இல்லை.

மண்ணறைப் புழுக்கள் நெளியாத மனமோ இந்த பாழாய்ப்போன பிரபஞ்சம் எழுப்பும் கேள்விகளில் குழம்பாத இனமோ உண்டா? இறைவனை நெருங்கினால் எல்லா மர்மமும் புரியும் என்று ஹஜ்ரத் உவைஸ் கர்னீ கூறுகிறார்கள். அது எப்படி என்று கிலோமீட்டர் கணக்கு பார்த்து காலம் செலவழிப்பதை விட பெரியவர்கள் செய்வதற்கும் சொல்வதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நம்பிப் போவது நல்லது.

ஒருமுறை, ‘உள்ளூர் மையத்தாங் கொல்லைக்கும் வெளியூர் ஆற்றுக்கும் பயப்படனும்’ என்று ஒரு பெரியவர் சொல்லும்போது, எனது பயங்களைப் பழிக்கும் சுல்தான் என்னைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்: ‘பறக்குற பிளேன்லெ ஏறி மனுஷன் நிக்கிற காலத்துலெ பொன்னப்பயலுங்களுக்கு பேப்பயம்! நான்லாம் நடு ராத்திரிலெ கூட சுடுகாடு போயி வந்திக்கிறேன், தெரியுமா? ஆம்புளைண்டா பயப்படக்கூடாதுடா!’

எப்போதுமே எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டு தூங்கும் என்னைப் பார்த்து அந்த ‘ஹிம்மத்வாலா ‘ வேறொன்றும் சொன்னான். ஜெயிலில்தான் அப்படி தூங்குவார்களாம். நம் நாட்டு ஜெயில் அல்ல. அங்கு எங்கே விளக்குகள் இருக்கின்றன? சௌதி ஜெயில். இவனுக்கு எப்படித் தெரியும் ? 35 லட்சம் ரியால் கம்பெனி காசை திருடியதாக தவறாக சந்தேகப்பட்டு போலீஸ் ஜெயிலில் வைத்து விட்டதில் வந்த அனுபவம். சௌதி அரபிகள் முட்டாள்கள். முழு மூடன்கள். சுல்தான் திருடியது முப்பத்து நாலே முக்கால் லட்சம் மட்டும்தான். எப்படியோ அவனுடைய அண்ணன்காரன் பணத்தை தோது பண்ணிக் கொடுத்து ( இதற்கு வேறு அரபி!) ஊர் போய் , அங்கே ஒரு ஆளை போட்டுத் தள்ளி விட்டு துபாய்.

கழிந்து கொண்டு பேய்கள் ஓடாமல் என்ன செய்யும் ? அஞ்சுவ தஞ்சாமை பேதமை என்கிறார் செந்நாப் போதார் எனும் நபி.

சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருந்து விட்டு பின் அதன் size பெரிதானதும் கோபித்து தினசரிப் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்து விட்ட எழுத்தாளர் வீரத்தெருமகன், ‘Taking a new step, uttering a new word, is what people fear most….ஸம்சயாத்மா விநச்யதி’ என்றார். கீதாவ்ஸ்கி! ‘பயம் என்பது வியாதி’ என்று சொல்லிக் கொண்டே பைத்தியக்காரனாகவும், பிச்சைக்காரனாகவும், துறவியாகவும் மாறி மாறி நடந்து போகும் (இந்த நொடியில் தான்ஜானியாவின் வடபுறத்திலுள்ள Kilimanjaroவிலோ பெருவின் Machu Picchuவிலோ இருக்கிறார்.) இருக்கும் இவரிடம் தன் படைப்புகள் எதையும் கொடுக்க நண்பர்கள் பயப்படுகிறார்கள். ஆனாலும் அவர் நடந்து கொண்டே….

வீ.தெ, ‘இருட்டை விரட்ட டார்ச்லைட் தேவை’ என்று துணிவானந்தா போல எளிமையாகச் சொல்லி கூடவே ரீசார்ஜபிள் பேட்டரிகளும் அனுப்பி இருந்தால் உபயோகமாக இருந்திருக்கும். ஞானத்தின் திறவுகோலான அந்த டார்ச்லைட்டும் சபராளிகளுக்கு உதவும் என்ற உத்தரவாதம் இல்லை.

நானும் கல்யாணபின் பேயை விட மனைவிக்கே அதிகம் பயப்பட்டேன். பாட்டனாவின் இரத்தம்! உம்மா வீட்டிலிருந்து என் புகுந்த வீடு (எங்கள் ஊர் வழக்கம்) இருக்கும் ஜீயான் தெரு போவதற்குள் ‘அஸ்மா வூடு வரைக்கிம் வரவா தம்பி?’ என்று அப்போது ஊர் வந்திருந்த வாப்பா கேட்பார்கள். வாப்பாவின் உண்மையான கரிசனத்திற்கு , மரங்கள் விரித்த கூந்தலுடன் ஆடும் , தெருவின் திருப்பத்திலுள்ள இருட்டுப் பள்ளிக் கூட மைதானம் காரணமாக இருக்காது . அப்போதெல்லாம் மோதிரம் போட்டிராத வாப்பாவின் தைரியம் தெரிந்ததுதான். ‘—-காரனாலெ கலவரம் அடிக்கடி நடக்குது இப்பல்லாம். கல் வேகமா எரியிறானுங்க. ஜன்னல் கண்ணாடிலாம் நொறுங்கி முத்தத்துக்கு வந்து வுழுது’ என்று படித்த என் தங்கச்சி மூலமாக உம்மா போட்ட கடிதத்திற்கு, அழகான நீண்ட திண்ணைகள் உள்ள வாசல் பக்கத்தை இடித்துவிட்டு கண்ணாடி துண்டுகள் பதித்த (நொறுங்கி விழுந்தவைகளே இப்போது உதவின. Recycling!) பெரும் சுவரை உடனே எழுப்பச் சொன்னவர்கள். பயணத்தில் இருந்தால் எதுவும் சொல்லலாம்!

இருட்டு எனக்கு எப்போதும் பயத்தை தரும். அதை விரட்ட வரும் அஸ்மாவின் – என் மனைவி – துணிச்சல் அதை விட… நடு இரவில் வயிற்றைப் புரட்டும்போது கொல்லைக்குப் போனால் எனக்கு பாதுகாப்பாக வரும் அவள் ( என் உம்மாவின் வேண்டுகோள்) நான் கழுவிவிட்டு வெளியே வரும்வரை சமையல் கட்டு பின்புற வாசலில் தனியாக உட்கார்ந்த்திருப்பாள். கொல்லையைப் பார்த்தாற்போல் இருக்கும் சமையற்கட்டு ஜன்னல் , மூங்கில் சட்டங்களிலான பெருக்கல் குறிகள் கொண்டது. உள்ளிருந்து ஜன்னல் வழியாகக் கசிந்து பக்கவாட்டிலும் மெல்லப் பரவும் வெளிச்சமும் இருளும் அவளது வெள்ளை முகத்தில் போடும் கோடுகளின் நெளிச்சல் – இதை அதிகரிக்க அவள் ரொம்ப சாலிஹ்-ஆன பெண்ணாய் தலையை மறைத்திருப்பது – மற்றும் ‘நடு ஜாமத்தில் வந்தேனே….’ பாட்டு… மறுமுறையும் நான் கழுவ ஓட வேண்டியிருக்கும். தூங்கும்போதோ அவளுக்கு முழு இருட்டு வேண்டும். நான் எதிர்த்ததால் ஒரே ஒரு சிவப்பு விடி லைட்…..வேண்டுமென்றே செய்கிறாள் இந்தக் கச்சடா..!

அஸ்மாவுக்கு பயமே கிடையாதா ? ‘இன்னும் கொஞ்சம் இன்னுங்கம்மா’ என்று முதுகில் கால்போட்டு இறுக்கிப் பிணைத்த வண்ணம் என்னைக் கொஞ்சுவதற்குப் பின்னே அது இருக்கிறது. ஊர்லே இருக்க மாட்டாஹலே மச்சான்..!. ஆனால் மச்சான் ஊர்லேயே இருந்துடுவாஹாண்டும் பயம்…!

முதல் வளைகுடா யுத்தத்தின்போது ‘இங்கே குண்டு போட்டுக்கிட்டிக்கிறான் புள்ளெ..’ என்று ஒரு சௌதி மாப்பிள்ளை சொன்னதற்கு ‘அப்படித்தான்மா சும்மா பொய் சொல்வாஹா. நீங்க அங்கேயே இரிங்க’ என்று ‘தொதல்’ சொன்னதாம். அப்படி வீண் தைரியம் சொல்பவள் அல்ல அஸ்மா. ‘ ஊருக்கு வந்துருங்க மச்சான், அல்லா இக்கிறான் நமக்கு’ என்றாள் அப்போது துபாய்க்கு பிழைக்க வந்த என்னிடம். ஆனால் கூடவே மறக்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதியதை மாற்றிச் சொன்னால் ‘அஸ்மா’ என்கிற வார்த்தைக்குள் உள்ள ‘ஸ’ என்ற எழுத்தின் மேலுள்ள புள்ளியில் உட்கார வைக்க முடிகிற நானூறு கோடி அனுக்களில் ஒன்றை மட்டும் எடுத்துப் பிளந்தால் வரும் குண்டு.

‘இங்கெ நீங்க வந்துட்டா நம்ம புள்ளங்கெ கதி?’ என்றாள்.

சதி!

வேலைக்கு என்று அரபுநாடு வந்த காலத்திலிருந்து எப்போ அரபி திருப்பி அனுப்பி விடுவானோ என்ற பயம்தான் தினமும் வதைக்கிறது. வேலையே செய்யாமல் அரபியையே பயமுறுத்திக் கொண்டிருப்பவர்களை விட்டு விடுவோம். ‘ஏ நாயே, பார். தூசி!’ என்று அரபி , சுட்டுவிரலால் தொட்டு நீட்டினான் என்றால் தன் சுட்டுவிரலை தூசியில் தொட்டு நடுவிரலை அவனுக்கு காட்டும் எமகாதகன்கள். ஆனால் என்னைப்போன்ற சோதாக்களுக்கு அலுவலகத்தில் காலை வைக்கும்போதுதான் ‘அப்பாடா, இன்னும் வேலையில் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கை வரும். ஆனால் நாளை? அது அனைவரையும் பயமுறுத்துவதற்கென்றே இருக்கிறது. அச்சங்களின் தலைக்காவிரி அது. ‘இன்றி’ல் வாழ்ந்து விட முடியும். நாளை எனும் குன்றில் வாழ துணி(வு) வேண்டும். அலுவலகத்தில் உள்ள முக்கியமான ஒருவர் விடுமுறைக்குப் போவதாகச் சொன்னால் அந்தத் துணியும் பறந்து நாணக் கேடாகிவிடும்.

மேனேஜர் அ·ப்தாப் ஹஸன் , அமெரிக்காவுக்கு (பிள்ளைகள் வேலை பார்ப்பதால் அந்நாடு இப்போதெல்லாம் அவர் மதத்தைக் கருவறுக்க நினைப்பதில்லை! ) விடுமுறையில் போவதாகச் சொன்னதும் அடிவயிறு கலங்கிற்று.

விடுமுறை காலங்களில் அவர் துபாயை விட்டு எங்கும் போனவரல்ல. விடுமுறை சம்பளம், டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை எடுத்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுவார். ஒரு ஒரே முறை தன் தாயார் மௌத்திற்கு ஒன்றரை நாள் கராச்சி போய் வந்தார். அவர் தாயும் என் பயத்தைப் புரிந்து கொண்டு வியாழன் காலை வ·பாத்தாகியிருந்தது. வெள்ளி விடுமுறை. தப்பித்தேன்.

இந்த முறை இரண்டு மாதம் கச்சிதமாக என்னை சாகடிக்கப் பார்க்கிறார்.

உதவி மேனேஜர், Personnel Dept. வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தா, பியூன் மூவரையும் கம்பெனி ‘ஆப்பம்’ என்று வேதனையுடன் கிண்டலடிக்கப்படும் onewayல் அனுப்பியிருந்ததால் கம்ப்யூட்டர்களில் கணக்கும் அவைகளின் பிணக்கும் பார்க்கும் கடன்காரன் நான்தான் அவர் வேலைகளையும் பார்க்க வேண்டும்.

அவர் வேலைதான் என்ன? l..C சம்பந்தமான கடிதங்கள் எழுதுவது, அரசாங்கப் பண்ணைகளுக்கான கொட்டேஷன் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு கொடுக்கும் லஞ்சம் (Sales Promotion Code : 5201001) சம்பந்தமாக பிரிட்டிஷ்காரர்களுடன் பேசுவது, Bank Rreconciliation. இதர நேரங்களில் தனக்கு கம்பெனி கொடுத்திருக்கும் சீறிப்பாயும் ‘ஜாகுவார்’க்கு செலவுகள் வைப்பது. கார் , அமெரிக்காவிலுள்ள பிள்ளைகளுடன் சதா மொபைலில் பேசும். விதவிதமாக சூட்களும் போடும்.

கார் ஒட்டுவது தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தையும் நானும் செய்துவிட முடியும். ஆனால் பலுச்சிகளான அர்பாப்களிடம் அவர்களுக்கு விளங்குமாறு கரிக்கோடு போட்டுச் சொல்லும் கணக்கும், அவர்களின் கொடூரமான குதறல்களுக்கு தகுந்தாற்போல் தைரியமாக அவர் சமாளிக்கும் விதமும் எனக்கு அறவே வராது. தவிர தேசிய மொழியான மலையாளத்துடன் போட்டிபோடும் ஹிந்தியோ எனக்கு தடுமாறும்.

மூத்த முதலாளி வந்தால், ‘என்றும் சாகாத பின்லேடன் புகழ் வாழ்க’. நடு முதலாளி வந்தால், ‘ஒட்டகத்திற்கு எப்படி நகம் வெட்டுவது?’. இளைய முதலாளி வந்தால், ‘லெபனான்காரிட முலைதான் டாப்’.

அற்புதம். இந்தா Golden Sandல் Central A/cயோடு Fully furnished 3 Bedroom Flat!

இத்தனை வசதிகளுக்குக் காரணமாக அவர் சொல்வது ராவல்பிண்டியில் பார்த்த ஒரு ·பகீரை! அங்கே அவர் பேங்க் கிளர்க்காக வேலை பார்த்தபோது நடந்த சம்பவம்.

‘உதறவைக்கும் குளிர்…கம்பளி போர்த்தி, கால் பக்கம் ஹீட்டர் வைத்துக் கொண்டு உறவுக்காரரின் இல்லத்தில் வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன் – கடுமையாக மழை பெய்கிறது….நனைந்து கொண்டே வாசலில் ஒரு ·பகீர் போனார். அவரை அந்த ஊரில் நான் பார்த்ததே இல்லை. நேரே என்னிடம் வந்தார். உடல் தெரியும்படி வெறும் ஒரு மெல்லிய உடை…சும்மா வந்து நின்றார். மற்றவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் ‘ச்சாய்’ வேண்டுமா என்று கேட்டு கொடுத்தேன். குடித்தார். ‘அடுத்த மாதம் நீ இங்கிருக்க மாட்டாய். உனக்கு எல்லா வசதிகளும் வரும்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இவர்? 20 கி.மீ தூரத்தில் கோல்ரா ஷரீ·ப் என்று இருக்கிறது. அங்கேதான் இப்படிப்பட்ட ஆட்கள் – நேக் ஆத்மிலோக் – சுற்றுவார்கள்…நான் வெளியில் வந்து பார்த்தேன். யாரும் இல்லை..மறைந்து விட்டார்! அடுத்த மாதம் துபாய்க்கு வந்து விட்டேன். எது சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் முதலாளி… என் வாழ்க்கையே மாறி விட்டது. தனக்கென்று எதுவும் கேட்காதவர்கள் பிறருக்காக கேட்கும் ‘துஆ’ பலிக்கத்தான் செய்கிறது..!’ – ஹஸனுக்கு இன்னும் வியப்பு மாறவில்லை.

ஹஸன் எனக்கென்று கேட்டாலும் பலிக்கும். ஆனால் அவர் இப்போது ·பகீர் அல்ல. எனவே நான் ஒரு நல்ல ·பகீராக , அல்லது நல்ல ·பகீருக்காக காத்திருக்க , அலுவலகம் இருக்கும் குடவுனிலேயே – புல்கட்டுகளுக்கு பக்கத்தில் – தனியாக ஒரு பழைய போர்டபிள் கேபினில் தங்க சிபாரிசு செய்திருக்கிறார். ·பகீர் வந்தாலும் வருவார். மழை வராது. புழுதிக் காற்றுதான் எப்போதும். எல்லா வசதியானவர்களுக்கும் பின்னால் ·பகீர்கள் இருக்கிறார்கள்.

·பகீரைப் பார்க்கப் போய் அந்த ·பகீரிடமிருந்தே வாங்கித் தின்ன ஆரம்பித்தவர்களின் கதையும் எனக்குத் தெரியும். .·பகீரை நினைக்கும்போதெல்லாம் மேனேஜர் நினைவுதான்.

மேனேஜர் இந்தமுறையும் இங்கேயே இருந்திருப்பார்தான். மகளுக்கு இவர் போனால்தான் பிரசவமாகும் என்பதில்லை. ஆனால் கம்பெனி இருக்கிற சூழ்நிலையில் இப்போதே Gratuity காசை கொஞ்சம் கொஞ்சமாக பலமாதிரி எடுத்தால்தான் உண்டு. அர்பாப்களை பயமுறுத்தும் Staff Loan போட்டுச் சென்றார்.

எப்படி சமாளிக்கப் போகிறோம் ? பெரும் உருவம் என்னை இறுக்கிக் கட்டிப் பிடித்தது.

‘நாம யார்ண்டு தெரியிறதுக்கு சரியான சான்ஸ்ங்கனி இது!’ என்று ஆன்மீகம் பேசினார் ஒரு அன்பர். நாமூஸின் வருகையால் திடீரென ஒளிவெள்ளமும் அதைத் தொடர்ந்து dtsல் இடிமுழக்கம் போன்ற எதிரொலியும் எழுந்து அலையெனைப் பரவிய குகை…

‘அதுக்கு கண்ணாடிலெ பாத்தா போதாதா ? ஏன், என்னைப் பாருமேன் நீம்பரே இப்ப’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டேன். ‘தட் தட்’டென்று காலடி மெள்ள வைத்தவண்ணமோ, ‘சர சர’ என்று சருகுகளின் மீது ஊர்ந்த வண்ணமோ இனம் தெரியாத விலங்குகள் என்னைத் தொடர அனுமதிக்கக் கூடாது. அது பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. இருக்கிற குழப்பங்கள் போதும்.

ஹஸனுக்கு அசாத்திய தைரியம். Mazen Danaவாகவோ மனித வெடிகுண்டாகவோ மாறியிருக்கக் கூடியவர். ‘உலகம் முழுதும் நம்மவங்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயம்தான் அடிப்படை’ என்பார். யாருடைய பயம்? ‘நம்மவங்கள்’தான் உலகமா ? ‘பரஸ்பர நம்பிக்கையின்மையால் அல்லவா?’ என்று கேட்டேன். ‘ஜாடு !’ என்று ஒற்றுமையை விளக்குமாறால் அடித்துவிட்டு ஒரு ‘கானா கராப் கரேகா’ பார்வை பார்த்தார் பாருங்கள்…. இப்போது நினைத்தாலும் ‘வெதக் வெதக்’ என்றிருக்கிறது.

அவர் பார்வை பற்றிய என் பார்வை சரிதானா?

அறியாமைதான் பயத்தின் விஷ விதையென்றால் அதைத் தோண்டி எடுத்துவிட்டு தெளிவெனும் மலர் தூவ வேண்டிய வேண்டிய கனவுகளோ தீங்கனவுகளாக வந்து தொலைக்கின்றன. துரத்தி வரும் பேய்கள் நெஞ்சின் மேலேறி நின்று குரல்வளையை மிதிக்கும். வற்றி வரண்டு கிடக்கும் அணையின் தெரியும் ஒரே ஒரு சொம்பு தண்ணீரில் நூறு நரகல்கள். கொதிக்கும் கல்லில் வைக்கப்பட்டும் விறைத்து நிற்கும் குறியை யானையின் பாதமென்று மிதித்துக் கூழாக்கும். Greomeன் ‘Solomons_Wall’ பாதிப்பில் நான் வரைந்திருந்த பெருஞ்சுவர், கேன்வாஸிலிருந்து குதித்து வெளியேறி பிள்ளைகள் மேல் சரியும். …ஐயோ, ஒலுவுடன் ஓதிப் படுத்தும் ஓடவில்லை என் பயம். அபயமளி ஆயத்துல் குர்ஸியே!

‘யா முதகப்பிரு’ என்று 21 தடவை தினமும் ஓதிவந்தால் கெட்டகனவு வராது’ என்று அஸ்மாவுல் ஹ¥ஸ்னா (இறைவனின் திருநாமங்கள்) வில் போட்டிருக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தால் ஈராக் ஜனங்கள் பயன்படுத்தி இருப்பார்களே….! பிஸ்மில்லா ஹில்லதி லா யளுற்று மஅ அஸ்மிஹ் ஷைஉன் வஹ¤வஸ் சமீஉல் அளீம்’ என்று ஓத வேண்டுமோ?

‘தூங்கும்போது பயமுறுத்தும் கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் சாப்?’ – மேனேஜரிடம் ஒருநாள் கேட்டேன். மார்க்கமும் அதிகம் தெரியும் அவருக்கு.

‘உடனே முழித்து விட வேண்டும்!’ – டுமீல்!

கரைத்துத்தான் குடித்திருக்கிறார். Electroencephalographஐயே இவர்தான் கண்டு பிடித்தாரோ?
பாதாளத்திலிருந்து புறப்பட்டு வரும் பேய்களை சாந்தப்படுத்தவும், சந்தோஷப்படுத்தி விரட்டவும் முன்னேறிய தைவான்காரர்கள் ஆடும் நிர்வாண நடனம்கூட இவர் சொல்லிக் கொடுத்ததாகத்தான் இருக்கும்.

இவரிடம் கேட்டிருக்கக் கூடாது. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தானாகவே எல்லாம் தெரியும். ‘மந்தூக்’ என்று அழைக்கப்படும் கம்பெனியின் P.R.O ஊர் போயிருந்த சமயம் கம்பெனி டிரைவர்-ஐத்தான் P.R.O வேலையை பார்க்கச் சொன்னார் முதலாளி. அவன் பயந்தான். முதலாளி சொன்னார்: ‘ சாதி கே பெஹ்லே தும்கோ மாலும் தா? bபாத் ‘காம்’ அச்சீதரா(ஹ்)ஸே மாலும் ஹோகயானா?!’

அதாவது முதலிரவில் மனைவியோடு சேர்வதற்கு ஒத்திகையா பார்த்து கொள்கிறோம் என்று….ஒன்றும் தெரியாமல் பூந்து (தெரியாமல் பூந்தால்தானே சுவாரஸ்யமே!) விளையாடுவதற்கும் நிஜமான வேலையின் பிரச்சனைகளுக்கும் வித்யாஸம் இல்லையா?

நான் மானேஜரிடம் கண்டிப்பாகச் சொன்னேன்: ‘உங்கள் இடத்தில் சசி-ஐ வைத்து விட்டுப் போங்கள்.’ சசி, அர்பாபின் வேறொரு அலுவலகத்தில் இவர் பார்க்கும் அதே வேலையை குறைந்த சம்பளத்தில் பார்க்கும் மலையாளி. பத்மராஜனை நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது பாக்யராஜைப் பார்ப்பவன். அதிசயமாக இவன் கொடுத்த மலையாள கேஸ்ஸட்டில் ஒரு ஆவி, இன்னொரு ஆவி தன்னைத் தொடும்போது பயந்து போய் திரும்பும்! இந்த மலையாளிகளின் நகைச்சுவையே தனிதான்…!

சசிக்கு என் மீது பிரியம் பிறந்தது Customer Statement Reportக்கும் Receivable Listingக்கும் தொகைகளில் வேறுபாடு வரும்போது அதை கண்டுபிடித்து master dbf ·பைலில் தானாகத் திருத்தம் செய்யும் சின்ன ·ப்ரோக்ராமை எழுதிக் கொடுத்ததால். இவனுக்கும் தெரியாத விஷயமே இல்லை. பிளேன் கூட ஓட்டத் தெரியும் ! ரொம்ப சுலபம்தான் அது. வால் பக்கம் நின்று கொண்டு வேகமாக தள்ளிக் கொண்டே போனால் ‘டக்’கென்று பறந்து விடும். அந்த சமயம் நாம் உள்ளே குதித்து உட்கார்ந்து விட வேண்டும். அவ்வளவுதான்! ‘சம்ச்சா’ மட்டும் தனக்கு அதிகம் வராது என்று சொல்லிக் கொள்வான். பரவாயில்லை. ‘மஸ்கா’ தெரிந்தவன் ஓரிரு நாளில் அதை கற்றுக் கொள்ள முடியும். சாதி கே பெஹ்லே…

‘அக்கௌண்ட்ஸ¤க்குத்தான் நீ இருக்கிறாயே.. L.Cக்களை அவன் ஆ·பீஸில் இருந்தே சசி பார்த்துக் கொள்வான். அந்த ‘ஜமானா’ எல்லாம் இப்ப எங்கேப்பா? கொட்டேஷன் மட்டும் அப்பப்ப அடிச்சி கொடுத்துடு. Cheque/Cash PV போடுறதுக்கு காசிம்-ஐ இங்கே வச்சிடுறேன்’

யா ‘ரப்’பே… அவரா? ஊர் ‘பிஸாது’ தவிர அவருக்கு வேறு என்ன தெரியும்?. எந்தத் துப்பட்டி எவன் தொட்டு அழுக்கானது என்று ‘கபர்’ கொடுத்துக் கொண்டிருப்பார் எப்போதும்…இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கிறது சிக்கத்-அல்-ஹைல் ரோடில். என் தயக்கத்தைச் சொன்னேன் மேனேஜரிடம்.

‘முக்கியமாக இந்த ‘நஹயத் bபேவகூ·கள்’-ஐ சமாளிக்கத் தெரியும்’

அர்பாப்களைத்தான் அதி முட்டாள்களென்று சொன்னார். அறிவாளிகளை வேலை வாங்குபவர்கள் முட்டாள்களா? சரியென்று வைத்துக் கொண்டாலும் அப்படி அவர்கள் இருப்பதால் அல்லவா இன்னும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன! ‘வழிச்சி நக்கிட்டு போனப்புறம் வந்திக்கிறீங்களே’ என்று சிலர் சொல்வதெல்லாம் சும்மா.

காசிம் காக்கா வந்தார். தேஜஸ் பொங்கும் ஹஸன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தேரைக்கு முடி முளைத்தாற்போல இருக்கும் புது முகம் எப்படியோ இருந்தது. எங்கள் குடவுன் ஒன்றின் சூப்பர்வைசர்-ஆக இருக்கும் அவரது முகம் பரிச்சயமானதுதான். ஆனால் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் வரவில்லை.

அவருக்கும் இது தற்காலிக இடம் என்று தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் மேனேஜர் வேலை தெரியாத இந்த மேனேஜருக்கு கம்பீரம் கூடவே வந்து முகத்தில் உட்கார்ந்து கொண்டது. நாற்காலியின் சக்தியோ ? எங்கள் ஊரிலேயே அதிகம் படித்து உயர்நீதிமன்ற நீதிபதியான ஒருவரின் ஞாபகம்…. நீதிபதி, அந்த சமயம் தமிழக கவர்னர் இறந்ததால், தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்டார். அடுத்த நாள் கவர்னராகவே ஊருக்கு பந்தாவாக வந்து அலம்பல் பண்ணிவிட்டுப் போனார். ஒருவாரம் அவரை எல்லோரும் கவர்னர் என்றுதான் அழைத்தார்கள். அதுபோல இப்போது ‘முதீர்’ என்றால் இந்த முதிர்ந்த காக்காதான்.

‘ஆடிஓடி அலிபாதுஷாவை கொலுவுலெ வச்ச மாதிரிலெ நம்மளை வச்சுப்புட்டாஹா!’ என்றார் என்னிடம் பெருமையாக.

‘அலி பாதுஷாவா?’

‘அந்தக்காலத்துலெ அப்பாஸ் நடகம்டு, நம்ம ஊர்லெ ஒன்ணு போட்டாஹா. அதுலெ வர்ரவறு..’

அந்த அலிபாதுஷாவே இவர் முன்னால் எலிபாதுஷா ஆகிவிடுவார் போலிருந்தது. காக்கா அத்தனை அழகாக அர்பாப்களின் குருட்டுக் கேள்விகளை சமாளித்தார்.

‘நாம ஆபீஸ் வேலை செய்யாக்காட்டி கூட பரவால்லே. இவனுங்களுட அஹடம்புஹடம் வேலைலாம் கரெக்டா செஞ்சிடனும்’ என்றார். அர்பாப்களின் ஈரான் சொந்தக்காரர்களுக்கு மாறிமாறி transit visa எடுப்பது, அவர்களின் அமானத் கணக்கில் (உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு வினோத கணக்கு!) இருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் Dewa, Etisalat பில்கள் மறக்காமல் கட்டுவது, குடவுனில் வளர்க்கப்படும் ஆடு கோழிகளுக்கு தீவனம் வாங்கிப் போடுவது…

Sign Authorityயாக உள்ள பெரிய முதலாளி Sponserஆக இருக்கும் இன்னொரு கம்பெனியின் பார்ட்னருக்கு , கப்பியும் கயிறுமாய் இணைந்த கூட்டாளியாக இருந்தார் காக்கா. ரொம்ப நல்லதாகப் போயிற்று எனக்கு. அர்பாப்களின் தொந்தரவாவது பரவாயில்லை, இந்த அஜியா டிரேடிங் தொந்தரவு.. அல்ஐன்-ல் உள்ள மராய் பண்ணையிடமிருந்து செக் வந்துவிட்டதா என்று நாள் முழுவதும் உயிரை எடுத்து விடுவார்கள். அங்கேயுள்ள சூடானி அக்கௌண்டன்டிடம் கேட்டபடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் – இத்தனை டன் அல்·பால்·பா (ஒரு வகை புல்) போனது வந்து என்று. போகாமலேயே போடப்படும் இன்வாய்ஸ¤க்கும் அதற்கான செக்குக்கும் தனி கணக்கு..! கணக்குக்கு நான். கமென்ட்ரிக்கு காக்கா.

காக்கா , அஜியா டிரேடிங் தவிர (மாட்டிவுட்டுடவான் மரைக்கான்!) மற்ற கம்பெனிகளின் எந்த விசாரணக்கும் பதில் கொடுப்பதில்லை. ‘டர்ர்ர்’ என்று கிழிக்கும் சத்தம் வந்தால் எங்கிருந்தோ ·பேக்ஸ் வந்திருக்கிறது என்று அர்த்தம்.

‘ஸ்பெயின் கம்பெனிக்கு 24000 டன் பெல்லட்ஸ் ஆர்டர் கொடுத்தோமே , என்னாயிற்று?’

‘அர்பாப், குறைந்தது ரெண்டு லட்சம் டன் எடுக்க வேண்டும் என்கிறார்கள்’ என்பார் ·பேக்ஸை பார்த்தார் போல. ஈமெயில் பார்க்கும் நான் ‘காக்கா’ என்று குரல் கொடுத்தால் ‘ ‘ஆமா, அந்த ஸ்டேட்மென்ட்தான். பிரிண்ட் எடுங்க’ என்று திசை திருப்புவார். ‘சப் கஸ்டமர்ஸே பாக்கி வசூல் கர்ணா அபி ஜரூரி ஹை’ – இது அர்பாபுக்கு. என் அருகே வந்து ‘ எல்லா ‘பலா’வையும் தாடி வந்து பாத்துக்குவான்..நீங்க பயப்படாம இரிங்க. இவனுங்க தரையிலெ நீந்தச் சொன்னா நாம தரைக்கு அடியிலே நீந்துறமாதிரி பாவ்லா காட்டனும்’ என்றார்.

நவீன தீயணைப்புக் கருவிகளை உடனே குடவுனில் பொருத்தச் சொல்லி Defence அலுவலகத்திலிருந்து ஒருநாள் ·பேக்ஸ் வந்தது.

‘டர்ர்ர்ர்ர்’

நான் பதறினேன்.

‘அட, சும்மா இரிங்க அமீர்தீன். இவன்லாம் இப்படித்தான் பயமுறுத்துவான். எந்த இங்கிலீஸ் கம்பெனியாச்சும் இவனுங்களை பயமுறுத்தியிருப்பான். அதான்…! இப்படித்தான் முன்னாலே ஒரு ஷார்ஜா கம்பெனிலே வேலைபாக்கும்போது வர்றதையிலாம் கிழிச்சிப் போடுவேன். ரொம்ப கெடுபுடியான ·பேக்ஸா இருந்தா மட்டும் என் முதலாளிட்டெ – தங்கமானவன் அந்த அரபி – கொடுக்குறது’

‘அப்பாடா..’

‘குஷ் ஹ¥ம்மக்……’ ண்டு அவன் கிழிச்சிப் போட்டுடுவான்!

இதைத்தான் அண்டர்ஸ்டாண்டிங் என்கிறார்கள். அந்த அரபி, ‘காசிம் மௌஜூத்?’ என்று கரகரத்த குரலில் காக்காவின் பெண்டாட்டியிடம் கேட்டால் ‘ அஹ பாத்ரூம்லெ குளிச்சிக்கிட்டிக்கிறாஹாம்மா..’ என்று பதில் சொல்லுமாம். அரபிக்கும் புரிந்துவிடும்!

புரிந்து கொண்டு, பயங்களை வேரறுத்தால் முன்னுக்கு வந்து விடலாமோ? என் சம்பளமே வாங்கும் காக்கா குடும்பத்தை வரவழைத்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் குடவுனில் இவரிடம் கொடுக்கும் பணம் குறைந்தது மூன்று மாதத்திற்குப் பிறகுதான் – தான் ஒரு ஹாஜியாரென்ற நினைப்பு வந்தவுடன் – RVயாக மாறும். ரொட்டேஷனுக்கு சைட் பிஸினஸாக ‘உண்டியல்’. களிமண் கண்டவனெல்லாம் உண்டியல் செய்கிற துபாயில் இவருடையது உடையாதது. ஆயிரம் ரூபாய்க்கு 50 ·பில்ஸ் (பைசா) மட்டும் எனக்கு டிஸ்கவுண்ட்.

பிற அனுகூலங்களும் கிடைத்தன.

ஆபீஸ் கம்ப்யூட்டரை upgrade செய்கிறேன் என்று ஊரிலுள்ள கம்ப்யூட்டருக்கு தேவையானதையெல்லாம் வாங்கிவிட்டேன். Light Pen , DVD Writer, Web Camera..பழைய மேனேஜர் போல ஏன், எதற்கு என்று கேட்காமல் உடனே செக்! நான் ஏனோ எனது வெகுநாள் கனவான IBM Thinkpad வாங்கிக் கொள்ளவில்லை..!

‘அமீர்தீன், நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரனா இக்கிறதுக்கு…மனசுவச்சா என்னா வேணும்லாம் செய்யலாம். அஞ்சு நாளைக்கி ஒருமுறை இவனுங்க வூட்டுக்கு தலைக்கி ஆறாயிறம்டு போவுது. கையெழுத்து வாங்கிட்டு அறுபதாயிரம்டு மாத்துனா இந்த மடையனுவளுக்கு தெரியவா போவுது ?’ என்றார் ஒருநாள்.

என் முகம் வெளிறியது.

‘ஆனா நாம ஈமான்தாரிங்க.. அப்படிலாம் செய்ய மாட்டோம்’ என்றார் ‘வத்துகல்லிமுனா அய்தீஹ¤ம் வ தஷ்ஹது அர்ஜுலுஹ¤ம் பிமாகானு யக்சிபூன்’ என்று சூரா யாஸீன் ஓதும்போது நெஞ்சம் நடுங்குபவர். கைகளும் கால்களும் மறுமை நாளில் சாட்சி சொல்லுமாம். தோலே சொல்லுமே வேதத்தில்! சாட்சி சொன்னால்தான் இறைவனுக்கும் தெரிவதை எண்ணி நடுங்கத்தான் வேண்டும்…!

‘சூரத் யாசீன் பொருட்டாலே
சொர்க்கம் தருவாய் ரஹ்மானே’

தினமும் பட்டான் ரெஸ்டாரெண்ட்டில் மணக்கும் புலாவும், தள தளவென்ற ‘நிஹாரி’யும் , கூடவே இரவுக்கான பார்சல்களும் கிடைத்தன. மலையாளி கடையில் இரவுக்கு ஏதாவது கறி வாங்கி அதை மூன்று வேளை வைத்துக் கொள்கிற எனது பிசுக்குத்தனம் எங்கே போயிற்று? காலையில் வரும்போதே காக்கா , காசுபிடுங்கும் கராமா ஹோட்டல்களிலிருந்து சுதியான டி·பன் வேறு வாங்கி வருகிறார். சரவணபவன் தோசைக்கு கராச்சி தர்பார் கடாய்கோஷ்தான் சட்னி!

ஹர்ஜ் புல்கட்டுகள் வாங்க Imprest Accountல் காக்காவிற்கு கொடுத்திருந்த 25000 திர்ஹத்திற்கு, வாங்கிவிட்டதாக ஒரு Purchase Voucher (SRVயுடன் சேர்த்து) போட்டால் என் Staff Advance , ஒரு JV மூலம் , முதலாளி போலவே கையெழுத்திட்ட காக்காவால் காணாமல் போகும்..

‘ஆடிட்டர்ண்டு ஒத்தவன் இக்கிறான் காக்கா…’

‘கொடுக்குற காசுக்கு ரிபோர்ட் எழுதுறவன்தான் தம்பி துபாய்லெ ஆடிட்டர் !அவனுவளும் பொழைக்கத்தானே வந்திக்கிறானுவ..’

‘….. …. …..’

‘மிஞ்சி மிஞ்சி என்னாவும்? சௌதி மாதிரி காட்டான் ஊரா இது , தலைவெட்ட ? காசையிலாம் செலவு பண்ணிட்டேண்டு சொன்னா கொஞ்சநாள் ஜூமைரா ஜெயில்லெ வச்சிட்டு ஊருக்கு ஒரேயடியா அனுப்புவான். மயிறு ஒண்ணாச்சு. நமக்கு நல்லதுண்டு எடுத்துக்கப் போறோம் !’

என்ன துணிச்சல்! ஊர்க்காரர்களின் குறைகளையெல்லாம் ஒன்று விடாமல் தமாஷாகச் சொல்லி எப்படியெல்லாம் இறுக்கத்தைக் குறைக்கிறார்! என் பயத்தை எழுதிவைக்கவில்லை என்றாலும் ஆலிம்ஷா எழுதியிருந்தது சரிதான் என்று பட்டது. நாம்தான் வீணாக பயப்படுகிறோம்.

‘தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே..’

ஒரு மாதம் ஓடிய சுவடே தெரியவில்லை. தீய கனவுகளும் வரவில்லை! பயங்கரமான தைரியம். சான்றாக , ஒரு நாள் விடுமுறை போட்டுவிட்டு எல்லா மெகா சீரியல்களையும் பார்த்ததைச் சொல்லலாம். ஒரே ஒரு பிரச்சனை , அடுத்த நாள் நான் ஒரு அடி எடுத்து வைக்க அரை நாளாயிற்று, அவ்வளவுதான்!

இன்னும் மூன்று வருடத்தில் நடக்கப் போகிற மகளின் கல்யாணத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை போலிருக்கிறதே… வேலையில்லாமல் ஊருக்கு விரட்டியடிக்கப்பட்டாலும் கூட வீட்டுத் திண்ணையில் ஒண்டிக் கொள்வதெற்கென்று ஒரு நசுங்கிய அலுமினிய குவளையை வாங்க வேண்டிய அவசியமும் இல்லைதான். செல்லும் என் வாய்ச் சொல்…. வாப்பா போல கடைசி காலத்தில் பயந்து சாக வேண்டியதில்லை.

வாப்பா மலேசியாவில் எல்லாவற்றையும் முடித்து விட்டு ஊரோடு வந்த போதுதான் அந்த தங்க மோதிரம் போட்டிருந்தார்கள். சிலபேரைப்போல கையை விடப் பெரிதாக கல் வைக்காமல் மிகச் சிறியதாக ஒன்று பதிந்திருந்தது. ·பைரோஸ் என்று நினைக்கிறேன். மோதிரத்தில் முத்திரையெல்லாம் இல்லை. இருந்திருந்தால் ‘காதர்ஷா’ ‘முஸ்லிம்’ ‘சபராளி’ என்று மூன்று வரிகள் இருக்கலாம். ஆனால் பயணம் முடிந்த சபராளி கிழவர்களுக்கு முத்திரையால் பயன் என்ன?

மோதிரம் எப்படியும் இரண்டு பவுன் இருக்கும். புதியது மாதிரி தெரியவில்லை. ஆனால் பாலிஸ் பண்ணப்பட்டு பளபளப்பாகவே இருந்தது. நான் ஆசைப்பட்டதற்காக ஒருநாள் எனக்கு மாட்டிக்கூட பார்த்தார்கள் வாப்பா. தொளதொளவென்று இருந்தது. கொஞ்சநாளைக்கு பிறகு எனக்கு சரியான அளவில் வந்து விடும் என்றார்கள். இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் என்ன…பட்டும் தங்கமும் ஆண்களுக்கு விலக்கப்பட்டதல்லவா என்று ஆளாளுக்கு கேள்வி. ‘நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹ¥ அலைஹிவஸல்லம் போட்டார்கள்- போடவில்லை- போட்டவரை கடிந்தார்கள்- வெள்ளி முலாம் பூசிய இரும்பு – இல்லை வெள்ளியேதான்’ என்று குழப்பினாலும் அது ஹராம் என்பதில் சந்தேகமே இல்லை அவர்களுக்கு. எடு ஹதீஸ்களை! தன்னை நெருப்பு வளையத்தில் இறக்கியவர்களுக்கு பதில் சொல்லாமல் வாப்பா சிரித்துக் கொள்வார்கள். கேட்பவர்களின் தங்கப்பல் நினைத்தோ? ‘ஊண்டி நடக்குற வயசுலெ ஊண்டு கேக்குதோ ஒன் மாப்புள்ளைக்கி? இன்னுமா மஹண்டுபோயி கெடக்குறாஹா?!’ என்று கிழத் தோழிகள் வீட்டில் கேலி செய்வதை பொறுக்காதவர்களாய், ‘வாதனை…கலட்டித்தான் என்னெட்ட கொடுங்களேன்….’ என்று உம்மா கேட்டதற்கும் அதே சிரிப்பு. வாப்பாவின் நண்பர்கள் – நெய்னா மாமா, செல்லமாலிமார் போன்றோர் – கடைசி காலத்தில் மனைவி பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்டு பரம்பைசா இல்லாமல் கிழிந்த கைலியும் பரட்டைத் தலையுமாய் தர்ஹா வாசலில் போவோர் வருவோரிடம் காசு வாங்கித் தின்றதை நினைக்கிறார்களா ? ‘ஒதவும்….கையி
லெ ஏதாச்சும் இருக்கனும்..’ என்று முணுமுணுப்பது மட்டும் கேட்கிறது…..

சௌதியில் இருக்கும்போது வாப்பா மௌத்தான செய்தி… ‘சந்துக்’-இல்தான் எடுத்தார்களாம். இப்போதும் வாப்பாவை நினைத்தால் மோதிரக் கையோடுதான் நினைக்கத் தோன்றுகிறது. கஜ்ஜாலி மரைக்காயர் தெரு முனையில் , சைக்கிள்கடை ஜப்பாரின் கேலிகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கேயுள்ள உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் வாப்பா…..பேப்பரை பிடித்துக் கொண்டிருக்கும் சுருங்கிய கைக்கு பொருந்தாத மோதிரம்….அது கடைசியில் என்னாயிற்று என்று உம்மாவிடம் கேட்க எனக்கு பயம்.

மோதிரத்தை விற்றுவிட்டார்களா அல்லது மாப்பிள்ளை பவுனாக மருமகன்களுக்குப் போயிற்றா? துணிந்து ஒருநாள் கேட்டதற்கு , வாப்பா தோட்டத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறுதலாக போட்டு விட்டார்கள்; ஆட்களை இறக்கித் தேடியும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு உம்மா என்னை வெறுப்பாகப் பார்த்தார்கள். ‘பெரீய ரசூலுல்லா மோதிரம் பாரு..’ என்று முணுமுணுத்தார்கள். தெரியாமல் சொன்னாலும் அதற்கும் ஒரு ஹதீஸ் இருக்கிறது! மூன்றாம் கலீ·பாவான உதுமான் (ரலி) , ஒரு கிணற்றில் ‘தவறுதலாக’ ரசூல் (ஸல்)ன் முத்திரை மோதிரத்தை நழுவ விட்ட சம்பவம். மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லையாம். விட்டுவிட்டார்கள். முடியையும் நேசிப்பவனுக்குத்தான் தெரியும் மோதிர நஷ்டம். உம்மா சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. எனக்குள் வார்த்தைகள் புரண்டன…

கனவுகள் ஊறும் பச்சைக்கிணற்றில்
ஏணியிருக்கும் இறங்கிப் போக
ரத்தப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
பக்கச்சுவர்கள் குத்திக் கிழிக்க
ஆழம் போனால் காலம் நீளும்
வானம் ஏணி தூக்கிப் போகும்!

இதேபோலத்தான் நான் ஹைஸ்கூல் படிக்கும் சமயத்தில் உம்மாவின் தங்க வளையல் ஒருமுறை காணாமல் போயிற்று. ‘பால்கிதாப்’ பார்த்த தைக்கால்சாபு, அது கிணற்றில் விழுந்துவிட்டது என்று சொல்லியதால் மொத்தக் கிணற்றுத் தண்ணீரையும் சேறையும் வெளியில் கொட்டினார்கள். வளையல் அகப்படவில்லை.

‘தேடிப் பார்த்தோம்; காணவில்லை என்று சொல்லி விட்டு வா’ என்று உம்மா சின்னமாமாவை அனுப்பினார்கள். சின்னமாமாவுக்கு சாபுவை பிடிக்காது. எந்த அவுலியாக் குஞ்சுகளையும்தான். ஆனாலும் போனார் என்னையும் அழைத்துக் கொண்டு. சொன்னபேச்சைக் கேட்காவிட்டால் சோறு கிடைக்காதென்ற பயம். அங்கே ஒரே பெண்கள் கூட்டமாக இருந்தது பார்க்க வித்தியாசமான இருந்தது. சாபுக்கு ஒரு பெண்மணி மிக மரியாதையாக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். ‘ இந்த —ளுவ மாப்புள்ளைக்கி ஒரு கிளாஸ் தண்ணி கூட கொடுத்திக்க மாட்டாடா….பாத்துக்க’ என்றார் மாமா குசுகுசுவென்று. இதை சாபிடம் சொல்ல அவரால் முடியாது. செவுனை செய்து விட்டால்?!. என்னைப் பார்த்ததும் ‘யாரு…சின்னாச்சி மவனா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்ட சாபு மறுபடியும் கணக்கு போட்டு ,’வெளிலே வந்துட்டேங்குதே…! அள்ளிப்போட்ட சேத்தையெல்லாம் தோண்டிப்பாக்கச் சொல்லு’ என்றார்கள் மாமாவிடம்.

சேற்றில்தான் இருந்தது! அந்த சாபு இப்போது உயிரோடு இல்லை. பால்கிதாபை விட படைத்தவன்கிதாப் மர்மமானது. ஆயிரம் ஜந்த்ரி வந்தாலும் அளக்க இயலாதது.

வாப்பாவை மோதிரத்தோடு அடக்கியிருக்கவும் மாட்டார்கள். அது எங்கோ இருக்கிறது தேடிக்கொண்டு – முழுதாகவோ வடிவம் மாறியோ..

அமெரிக்காவிலேயே பழைய மேனேஜர் தங்கி விட்டால் அந்த மாதிரி மோதிரம் நூறு வாங்க முடியும் என்னால். என் வாழ்க்கை வடிவம் மாறிவிடும்தான்…. அப்போதுதான் அவரிடமிருந்து மெயில் வந்தது : ‘நான் இங்கே ஜன்னத்திலே இருக்கிறேன். க்யா ஜபர்தஸ்த் மால்ஹை! ஆமாம், அங்கே பிரச்சனை இருக்கிறதா?’

‘மொபைல் எடுத்துக் கொண்டு போங்க சாப்… ஏதும் பிரச்சனை இருந்தால் கேட்கிறேன்’ என்று போகும்போது நான் சொன்னதற்கு ‘தொந்தரவு எல்லாம் செய்யாதே…அவசியம் இருந்தால் மட்டும் ஈமெயில் செய்’ என்று கறாராகச் சொன்ன மேனேஜரின் நெஞ்சுக்கு என்னாயிற்று?

ஏ தாடி, நீ வந்தால்தான் பிரச்சனை… சொர்க்கப் பூங்கா உனக்கு மட்டுமா? இப்போதெல்லாம் கனவுகளில் என் இரு இருபக்கங்களிலும் விக்டோரியாவும் நயாகராவும் கொட்டுகிறது. மடியில் குழந்தைகள்.
எதிரே தெரியும் மானசரோவர் சுத்தமான பாலால் நிரம்பியிருக்கிறது. அதில் மேடைபோட்டு நான் மயங்கும் குலாம் அலி கச்சேரி நடக்கிறது. ‘துக் கி லஹர்னே ச்சேடா ஹோகா’ கஜலில் அவன் வேறுபடுத்திக் காட்டும் லஹர் (Wave) களில் ஒரு லஹர் , எனக்காகவே ஹார்மோனியத்திலிலிருந்து புரண்டு வந்து காலை நனைக்கிறது! நுரையாக சாரங்கி….

பாடியே என் பயம் போக்கும் குலாம் அலிக்கு பாப்·போபியா! புனிதமான மேடை , குட்டிக்கரணம் அடிப்பதற்கு அல்ல என்பான். இருந்தாலும் நமது எல்லா பயங்களையும் மட்டுமல்ல எல்லை பயங்களையும் போக்கும் நிஜக் கலைஞன். நான் அவனது கஜலில் திளைக்க என் மனைவியோ அவள் பாட்டுக்கு ‘பியார் கியாதோ டர்னா க்யா…’ என்று குஜல் பாடிக் கொண்டிருக்கிறாள் உற்சாகமாக. ஆமாம் என் விலா எலும்பே…!

‘ஒரு பிரச்சனையும் இல்லை ‘ என்று ஹஸனுக்கு பதில் அனுப்பிய அடுத்த நாள் கனவின் தன்மை மாறிவிட்டது. பிரமாண்டமான கக்கூஸ் பேஸினில் பாதி உயிரோடு மிதந்தேன். என் மனைவி எத்தனை முறை Flush செய்தும், வாளி வாளியாக தண்ணீர் ஊற்றியும் தொட்டிக்குள் போகாமல் சுற்றிச் சுற்றி வந்தேன். நகங்களை முடிகளாகக் கொண்ட ஒரு தடித்த ஆணின் கை (ஆனால் வளையல் போட்டிருந்தது) எங்கிருந்தோ நீண்டு வந்து அவளை அறைந்து தள்ளிற்று. என்னைப் பிடித்துத் தூக்கி, மூத்திரம் ஆறாய் ஓடும் தரையில் போட்டு உற்றுப் பார்த்தது…

திடுக்கிட்டு எழுந்து ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட்களை ஊதித்தள்ளினேன். துற்சொற்பனம் நீங்க வீரகவிராஜ் இராமசாமி எழுதிய அருட்ப்பா புகையிடையே தெரிந்தது. என்றோ படித்து மறந்து புதைந்த ஒன்றை வேரோடு பிடுங்கி , சரியான சமயத்தில் கொடுக்கும் நமது சக்தியே ஒரு பயம்தான்….

‘மீரான்ற னிணையடியை மறவாவிம் மனத்தினிலே மேவுகாட்சிப்
பேரான கனவில்வரும் பெண்ணாசை யுறமேவும் பிணியை நீக்கி…’

அறைக் கதவு மெள்ளத் தட்டப்படும் சப்தம்…. பயந்து போனேன். இந்த அதிகாலையில் யாராக இருக்கும்? திறந்து பார்த்தால் அங்கே யார் நிற்பார்கள் ? ‘எதுக்கும் பயப்படக் கூடாது தம்பி…உத்துப் பாருங்க…பிரச்சனையை நேரா மோதனும்..’ என்று மௌத்தான வாப்பாவின் குரல் கேட்பதுபோன்ற உணர்வு…. நிஜமாகவே என் சீதேவி வாப்பா வந்து விட்டார்களா ? ‘காணாமல் போன’ மோதிரத்தோடு இருப்பார்களா?

தைரியமாகக் கதவைத் திறந்தால் நாத்தூர் நின்றான். சுபுஹ் தொழுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னாலேயே தயாராகி விடுபவன். இறையச்சம் மிக அதிகம்.

‘க்யா பீர்பக்ஷ்?’

‘ஹஸன் சாப் வாபஸ் ஆகயா ஜீ’

வந்திறங்கியதுமே விமான நிலையத்திலிருந்து அவனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். நரகத்தில் இறங்க ஜனங்கள் மிகவுமே அவசரப்படுகிறார்கள்…’இத்னி ஜல்தீ க்யூங் ?’ – அமைதியாகக் கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்தேன். உறக்கம் வரவில்லை. காசிம் காக்காவுக்கும் தகவல் தெரிந்திருக்கும். அவர் இனி நேராகவே ஆபீஸ் வராமல் குடவுனுக்கு போய் விடுவார். குளித்து விட்டு சீக்கிரமே அலுவலகம் போனேன். எனக்கு முன்னால் ஹஸன் இருந்தார் – எல்லா ·பைல்களையும் , வவுச்சர்களையும் புரட்டிப் பார்த்தபடி.

புஷ்ஷ¥க்குப் புதிதாக முளைத்த முடிகள் பற்றி ஹஸன் பேசாதது குறித்து ஆச்சரியம்தான். சீக்கிரமே அன்று வந்த அர்பாப்களிடம்தான் மெல்லிய குரலில் ஹிந்தியில் என்னமோ பேசினார். மஹ்ரிப் முடிந்ததும் என்னிடம் தன்மையாக அடுத்த வாரம் oneway-ல் ஊர்போக தயாராக இருக்குமாறு கூறினார். அதிர்ந்துபோய் நின்ற என்னிடம் ‘நகல் க·பாலத்’ (Visa Transfer) கொடுக்க முடியாததும், ‘ஹர்மான்’ (6 month Ban) ஐ தவிர்க்க முடியாததும் தன்னை மிகவும் துன்பத்தில் ஆழ்த்துவதாகச் சொன்னார். பதினைந்து வருடம் சேர்ந்து வேலைபார்த்த என்னை மறக்க முடியாது என்று தழுதழுப்பான குரலில் கூறியவர் முதலாளி , தனது நினைவாக வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்ததாக ஒரு பழைய மோதிரமும் கொடுத்தார். வாப்பா அணிந்திருந்த அதே மோதிரம்….!

அருஞ்சொற்பொருள்:
கமர் பஸ்தா ஹோனா – Be Courageous
எஜமான் – இறைநேசர் சாஹ¥ல் ஹமீது பாதுஷா
துஆ – பிரார்த்தனை
சபராளி – வெளிநாடு போய் வருபவர்
சஹர் – நள்ளிரவிலிருந்து அதிகாலை பாங்கு சொல்லும் வரை உள்ள நேரம்
மஹரி / மஹ்ரிப் – அந்தி நேரத் தொழுகை நேரம்
ஹராங்குட்டி – சைத்தானுக்கு பிறந்தவன்
ரூஹ்ரூஹானி – பேய்
மைய்யாத்தாங்கொல்லை – அடக்கஸ்தலம்
மௌத் / வ·பாத் – இறப்பு
தொதல் – தடியானவர்களை கிண்டலாக சொல்வது
அர்பாப் – முதலாளி
நாமூஸ் – ஜிப்ரயில் (அலை)
நேக் ஆத்மிலோக் – பக்திமான்கள்
ஆயத்துல் குர்ஸி – குர் ஆன் 2வது அத்தியாயம் 255வது வசனம்
சம்ச்சா / மஸ்கா – காக்கா பிடிப்பது
ரப் – இறைவன்
கபர் – செய்தி
பிஸாது – வதந்தி
குஷ் ஹ¥ம்மக் – ஆபாசமான திட்டு
மௌஜூத்? – இருக்கிறானா?
கானா கராப் கரேகா – வயிற்றலடிப்பேன் என்று சொல்வது
முதீர் – மேனேஜர்
bபலா – பிரச்சனை
ஈமான்தாரி – (மார்க்கத்தைப் பேணும்) நம்பிக்கையானவர்
சூரா யாஸீன் – குர் ஆனின் இதயம் என்று சொல்லப்படும் 36ஆம் அத்தியாயம்.
ரஹ்மான் – இறைவன்
சுதியான – பிரமாதமான
வாதனை – வேதனை
மஹண்டு – மகிழ்ந்து மயங்கி
நாயகம் – நபி (ஸல்)
ஹராம் – (மார்க்கத்தில்) விலக்கப்பட்டவை
ஹதீஸ் – நபி (ஸல்) அவர்கள் சொன்னது/செய்தது/அங்கீகாரம் கொடுத்தது
சந்துக் – மைய்யத்துப் பெட்டி
பால்கிதாப் – ‘ரமல்’ போல அரேபிய எண்கணித சோதிட முறைகளில் ஒன்று
ஜந்த்ரி – பஞ்சாங்கம்
செவுனை – செய்வினை
அவுலியாக்குஞ்சு – இறைநேசர்கள் போல் நடிப்பவர்
ஜன்னத் – சொர்க்கம்
கனியாப் பெண்கள் – கன்னிப் பெண்கள்
நாத்தூர் – Watchman

abedheen@yahoo.com
http://abedheen.tripod.com/

– அக்டோபர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *