“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. கொஞ்சம் தூக்கம் வரும். அதுனாலே நைட்ல சாப்பிட்டா, வெளில போகறத தவிர்க்கறது நல்லது” என்று சொன்னார்.
என்னடா திடுதிப்புன்னு டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போயிட்டேன் என்று நினைக்காதீர்கள். ஒரு இரண்டு மாதகாலம் முன்னர் ஆரம்பித்த ப்ராப்ளம் இது.
ஜூன் மாதம் கடைசி வாரம் என்று நினைக்கிறேன். விஜயநகர் சிக்னலில் காத்துக்கொண்டிருந்தபோது தான் சீனுவாசனைப் பார்த்தேன். சீனு என் மனைவியின் தூரத்துச் சொந்தம். போனதடவை ஊருக்குப் போயிருந்தபோது என்னிடம் அவசரம் என்று சொல்லி ஒரு பத்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கியவன் திருப்பித்தரும் வழியாகத் தெரியவில்லை. இன்றைக்கு வசமாக மாட்டினான் என்று நினைத்து சிக்னல் வந்ததும் யூ டர்ன் எடுத்து அவன் நின்றிருந்த பக்கம் வந்து பார்த்தபோது அவன் காணாமல் போயிருந்தான். என் சோகக்கதையை வீடு திரும்பி மனைவியிடம் சொன்னபோது அவள் முகம் மாறி லேசாக வியர்த்தாள்.
“என்னடி என்ன விஷயம்?” என்று கேட்டதும் “ சீனுவாசன் செத்துப்போய் ரெண்டு மாசம் ஆறதுன்னா. உங்ககிட்ட சொல்லிட்டேன்னு நெனச்சேன்…” என்று இழுத்தாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இரவு வெகு நேரம் கண் விழித்து அந்த சம்பவத்தை அசைபோட்டேன். எப்படி யோசித்தாலும் நான் சீனுவை பார்த்தது உண்மை போலத்தான் தோன்றியது. எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.
இது நடந்து ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் நண்பன் காரில் அவனுடன் மவுண்ட் ரோடு பக்கம் சென்று கொண்டிருந்த போதுதான் கோபியைப் பார்த்தேன். கோபி என் பால்ய நண்பன். ஸ்கூலிலிருந்து காலேஜ் வரை ஒன்றாகப் படித்தோம்(?). ஒரு நான்கு வருஷங்களாக தொடர்பு குறைந்திருந்தது. கார் ஒட்டி வந்த நண்பனிடம் வண்டியை ஒரு ஓரம் நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி எதிர்பக்கம் பார்த்தால் கோபியைக் காணோம். ஏமாற்றமாக போய்விட்டது. அவன் போன் நம்பரும் இல்லாததால் எங்கள் common friend மகேஷுக்குப் போன் போட்டேன். வழக்கமான ஹாய் ஹலோ முடிந்ததும் விஷயத்துக்கு வந்தேன். எதிர் முனையில் கனத்த மௌனம்.
“டேய்! உண்மையிலேயே கோபியத்தான் பார்த்தியா? அவன் ஒரு விபத்துல
சிக்கி ஒரு மாசம் முன்னாடி செத்துட்டானேடா” என்று அலறினான் மகேஷ்.
நான் உறைந்தேன்.
அன்று இரவும் என் தூக்கம் போச்சு என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. மனைவி வேறு என்னை ஒரு வினோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தாள். பூஜை அறைக்குப்போய் நெற்றிக்கு விபூதி இட்டுக்கொண்டு தலைகாணியை எடுத்துகொண்டு ஹாலுக்குப் போய் படுத்துக்கொண்டாள்.
இந்த இரண்டும் கூட பரவாயில்லை. பத்து நாள் முன்னர் நான் சித்தப்பாவைப் பார்த்ததுதான் top. அவரும் இதே மாதிரி ஒரு சிக்னலில் தான் மாட்டினார். அதே மாதிரி மாயமாகிப் போனார். என் மனதில் ஏதோ ஒரு மின்னல். உடனே சித்திக்கு போன் போட்டேன்.
“மறு முனையில் பரிச்சியமில்லாத ஒரு குரல். “ராமலிங்கம் வீடுதானே?” என்று confirm செய்து கொண்டேன். “ஆமாம் சர், நீங்கள் யாரு? அவருக்கு உறவா?” என்று அந்தக் குரல் கேட்டது.
“நான் அவர் அண்ணா மகன். என்ன விஷயம்?” என்று கேட்டதற்கு, “உங்கள் சித்தப்பா ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் முன்னால்தான் ஹார்ட் அட்டேக்கில் காலமானார்” என்று வருத்தத்துடன் தெரிவித்தது அந்தக் குரல்.
அப்புறம் நான் சித்தப்பா வீட்டுக்குப் போனது, எனக்கு அதிர்ச்சியடைய கூட நேரமில்லாமல் எல்லாம் நடந்து முடிந்தது என்று பதினைந்து நாட்கள் ஓடிவிட்டது.
இதெல்லாம் முடிந்த பிறகு தான் டாக்டர் ஆதிமூலம் விசிட். அதுவும் மனைவியின் நச்சரிப்பின் பேரில். எனக்குக் காத்துக் கருப்பு பிடித்துவிட்டதாக நினைத்தாள். மாந்திரீகம் அது இது என்று போவதற்கு டாக்டர் மேல் என்றுதான் இந்த விசிட்.
“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார். சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. கொஞ்சம் தூக்கம் வரும். அதுனாலே நைட்ல சாப்பிட்டா, வெளில போகறத தவிர்க்கறது நல்லது” என்று சொன்னார்.
ஒரு லாங் லீவுக்கு அப்புறம் இன்றைக்குத் தான் ஆபீஸ் போனேன். வேலை செய்யவே மனம் இல்லை. மாலையில் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். வழியில் வேளச்சேரி சிக்னல். பலவிதமான சிந்தனையில் மூழ்கியிருந்த நான் ஏதோ நினைவில் ரோட்டின் அந்தப் பக்கம் பார்த்தேன்.
பார்த்தேன். திகைத்தேன். சிலிர்த்தேன். உறைந்தேன்.
ரோட்டின் அந்தப் பக்கம் நான்.
– செப்டம்பர் 2013
Sir mr ‘ CR. Vengadesh intha kathai romba mokkaya irukku konjam better’a try pannunga
குட் imagiaion