கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 88,204 
 
 

” நள்ளிரவு 11.35 மணி. பேய் பிசாசுகள் நடமாட இன்னும் 25 நிமிடங்கள் இருகிறது. அதுவரை நீங்கள் என்னுடன் இணைந்திருங்கள். இது ஜான், நீங்க கேட்டுக்கொண்டு இருப்பது சூரியன் fm ”

Fm சவுண்டை லேசாக குறைத்து, கூகுள் மேப்பை பார்த்தவாறு அருண் காரை ஓட்டிகொண்டு இருந்தான்.

கஷ்டமரிடம்,

” சார், ஹோட்டல் பேரு கரக்டு்தான..?” என கேட்க,

கஷ்டமரும் தன் மொபைலை பார்த்து,

” கரக்ட்தான் ஏன் ? என்னாச்சு..? ”

அருண் திரும்பி அவரை பார்த்து,

” இல்ல சார் ரோடு ரொம்ப இன்டீரியரா உள்ள போகுது.. பாதையே சரி இல்ல .. ஒரே இருட்டா இருக்கு.. ஏதோ காட்டுக்குள்ள போற மாதிரி இருக்கு.. நெட்டு வேற விட்டு.. விட்டு கிடைக்குது.. அதான் கேட்டேன் சார்..”

என சொல்ல. அவர்,

ஆன்லைன்ல தான் புக் பண்ணேன். இந்த ஒரு ஹோட்டல்ல மட்டும் தான் ரூம் இருந்தது. முகூர்த்த நாளாம் அதனால சிட்டிகுள்ள எங்கேயும் ரூம் கிடைக்கல. ஈவ்னிங் ஹோட்டல்ல இருந்து கால் பண்ணப்ப கூட, ஊர தாண்டி ஒரே ரோடு தான், நேரா வந்துட்டே இருங்க பீச் ஓரத்துலயே ஹோட்டல் இருக்குனு சொன்னான்”

என சொல்ல, அருண் சற்று வேகமாக வண்டியை ஓட்டுகிறான். வண்டியில் fm சவுண்டை சற்று கூட்டுகிறான்.

“நேரம் சரியாக 11.35 மணியை தொடுகிறது. நீங்கள் கேட்டுகொண்டு இருப்பது சூரியன் எஃப். எம். சிறிய இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து பேசுவோம்”

Fm ஐ ஆஃப் செய்துவிட்டு. வண்டியை தொடர்ந்து ஓட்டுகிறான். தூரத்தில் சிறிய வெளிச்சம் தெரிகிறது. கிட்ட செல்ல செல்ல ஹோட்டல் பெயர் தெளிவாக தெரிகிறது. அப்பாடா ஒருவழியா வந்துட்டோம் என மனதில் நினைத்தவாறு வண்டியை வாசலில் நிறுத்தி, கஷ்டமரை இறக்கிவிட்டு, பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து , வந்த வழியிலேயே வண்டியை இயக்குகிறான்.
மணி 11.55 pm.

Fm ஐ ஆன் செய்கிறான்.

” பேய் வர்றதுக்கு இன்னும் 5 நிமிசம் இருக்கு, அதுவரை என்கூட பேசிட்டு இருங்க, நான் உங்க ஜான், நீங்க கேட்டுக்கொண்டு இருப்பது சூரியன் fm”

” அட இவன் வேற நிலைமை புரியாம..
வராத பேயவும் வர வச்சிருவான் போல
தனியா இந்த நேரத்துல காட்டுக்குள்ள போயிட்டு இருக்குறப்பதான் பேய பத்தி பேசிட்டு இருப்பான்” மத்த நாளுலாம் லவ்வ பத்தி பேசிட்டு இருப்பான்.”

என புலம்பியவாறு அருண் வண்டியை ஓட்டி செல்கிறான். வண்டி திடீரென ஆப் ஆகிறது. வண்டி ஹெட் லைட்டும் ஆப் ஆகிவிடுகிறது. வண்டியில் இருந்து பயத்துடன் இறங்கி மொபைல் லைட்டை ஆன் செய்கிறான். மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகிறது. யாரோ நடந்து வருவது போல் சத்தம் கேட்கிறது. கடல் அலை சத்தம் வேறு கொலுசு சத்தம் போல் கேட்கிறது. பயத்தில் அருண் ஓடிவந்து காரில் ஏறி அமர்ந்து, மறுபடி வண்டியை ஆன் செய்கிறான். லைட்டை ஆன் செய்கிறான் எதுவும் நடக்கவில்லை ஆனால் fm தானாக ஆன் ஆகிறது.

fm இல்,

” பேய் இருக்குனு நம்புறீங்களா இல்லையா..? இந்த கேவியதான் நம்ம நேயர்கள்கிட்ட கேட்டுட்டு இருக்கிறோம். நேயர் ஒருத்தர் லைன்ல இருக்காரு அவருகிட்ட கேட்கலாம்.
சார் வணக்கம் , கேள்வி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். உங்க கருத்தை சொல்லுங்க,”

நேயர்: ” பேய் இருக்கிறது உண்மைதான்.”

Rj: ” எப்படி இப்ளோ உறுதியா சொல்றீங்க?”

நேயர்:
” ஒருநாள் நான் நைட் சவாரிய இறக்கி விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்ப திடீர்னு எனக்கு ஒரு பய உணர்வு எற்பட்டுச்சு. நாம தனியா போயிட்டு இருக்கோம். ரோட்ல ஆள் நடமாட்டமே இல்லை. ஏதாவது பேய் பிசாசு வந்தா என்ன பண்றதுன்னு யோசிச்ச அடுத்த நிமிசம், ரோடு முழுவதும் ஒரே புகை மண்டலமாக மாறிடுச்சு, சந்திரமுகில சூப்பர் ஸ்டார் சொன்னது வேற அந்த நேரத்துல நியாபகதுக்கு வர அடுத்த செகண்டு , தூரத்துல நாய் ஊளையிடுற சத்தம் காருகுள்ள கொலுசு சத்தமும் கேட்டுச்சு. மல்லிகை பூ மணம் மட்டும் வரகூடாதுனு என் குல தெய்வத்தை வேண்டிகிட்டு இருக்குறப்ப, மல்லிகை பூ வாசனை என் பக்கத்துல அடிக்குது. கண்ண திறந்து பார்த்தா ஸ்டீயரிங்ல மல்லிகைப்பூ இருக்குது. எனக்கு கை காலுலாம் நடுங்கிறுச்சு, பயத்துல இங்க இருந்து சீக்கிரமா போயிடனும்னு நினைக்கிறேன். வண்டி ஆப் ஆகுது.
ஸ்டார்ட் பண்றேன்.. பண்றேன்.. ம் ஹும்காரை விட்டு இறங்கி ஒருவித பயத்துடனே கார் பேனட்டை திறந்து பேட்டரி வயர செக் பண்ணிட்டு இருக்கிறேன். எனக்கு பின்னாடி ஏதோ ஒரு உருவம் நிக்கிற மாதிரி உணறேன். திரும்பிப்பாக்கல கண்ணை மூடி குலதெய்வத்தை வெண்டிகிட்டு கண்ணை திறந்து மெதுவா திரும்பி பாக்குறேன். பின்னாடி யாரும் இல்ல. ஆனா ஒரு ஆள் நின்ன தடம் அந்த ஈரமான தரையில் தெரியுது. எனக்கு கால் நடுங்க ஆரம்பிச்சுருச்சு, பேய்க்கு கால் இருக்காதுன்னு தான கேள்வி பட்டிருக்கிறோம். பேய் நம்பிக்கை உள்ளவங்ககிட்ட நாம அறிவியல் அதாரம்னு, விதண்டாவாதம் எவ்ளோ பண்ணிறுக்கோம், இப்ப இந்த தடம் எப்படி சாத்தியம். இப்படி ஆயிரம் கேள்விகள் மனசுல ஓட்டிட்டு இருக்கு. அப்ப இன்ஜின் ஆயில் கீழ சொட்டு சொட்டாக ஒழுகுற மாதிரி சத்தம் கேட்குது. நான் குனிஞ்சு தரைய பாக்குறேன். அந்த ஈர தரையில் கட்டியா ஆயில் கொட்டின மாதிரி தெரியுது. நா கைய வச்சி அந்த ஆயில விரல்ல தொட்டு மொபைல டார்ச் வெளிச்சத்தில் பாக்குறேன். அது ஆயில் இல்ல இரத்தம். கையெல்லாம் பிசுபிசுனு அந்த இரத்த வாடை வேற எனக்கு ஒரு நிமிசம் தலையே சுத்திருச்சு, சுத்தி முத்தியும் பார்த்துவிட்டு மறுபடி அந்த இரத்தத்தை பார்த்துட்டு இருக்கும்போது இன்ஜின் கீழ இருந்து ரத்ததோட ஒரு கை மெதுவா மேல தூக்குது. நான் அப்படியே அலறியடித்து காரின் கதவை திறந்து ஏறி உக்காந்து கதவை லாக் பண்ணிட்டு கண்ணாடி வழியா முன்னாடி பாக்குறேன். அங்கு ஒரு உருவம் மங்கலாக நின்று என்னை பார்த்துகொண்டு இருக்குது. அதுக்கு பின்னாடி இன்னும் இரண்டு உருவம் மங்கலாக நின்றுகொண்டு இருக்குது. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. இன்னிக்கு அவ்ளோதான் நம்ம கதை முடிஞ்சிருச்சுனு நினச்சு பயத்துல குலதெய்வத்தை கூபிடுறதுக்கு பதிலாக இறந்து போன எங்க தாத்தா பேரை சொல்லி கண்ணை மூடி என்னை இந்த பேயிங்ககிட்ட இருந்து காப்பாத்து என சத்தமா கத்தீட்டு கண்ணை திறந்து பாக்குறேன். எனக்கு இடது பக்க சீட்டுல எதோ உருவம் உக்காந்து இருக்குரமாதிரி தெரியுது. நா உடனே திரும்பி பாக்காமல் முன்னாடி பாக்குறேன். அவ்ளோ நேரம் என்னை பார்த்து கொண்டு இருந்த அந்த உருவங்கள் இப்ப என் பக்கத்து சீட்டில் உக்காந்திருக்கும் உருவத்தை பார்த்து திரும்பி போய்கொண்டு இருக்கிறது. அந்த உருவங்கள் மறைந்ததும். தைரியத்தை வர வைத்துகொண்டு பக்கத்தில் இருக்கும் உருவத்தை பார்கிறேன். அது என் தாத்தா. கீழ அவர் காலை பார்கிறேன். கால் இருக்குது. அவர் செத்த அண்ணைக்கு எப்டி இருந்தாரோ அப்படியே உயிரோட இருக்குற மாதிரியே இருக்கிறார். அந்த நொடியே அப்படியே மயங்கி விழுந்துட்டேன். அப்பரம் கண்விழுச்சு பார்த்தா ஊருக்குள்ள மெயின் ரோட்டுல ஒரு கடையோரமா கார் நின்னுட்டு இருக்குது. நான் கார்ல தூங்கிட்டு இருந்திருக்கிறேன். அந்த காட்டுக்குள்ள இருந்து எப்படி இங்க வந்தேன்னு ஒன்னும் புரியல. அதுக்கப்புறம் குற்றாலம் சவாரிக்கு போனபோது அங்க ஒரு சித்தர்கிட்ட நடந்த விசயங்களை சொன்னபோது அவர் சொன்னது. எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. நம்மமேல ரொம்ப பாசம் உள்ள நம்ம இரத்த சொந்தங்கள், நம்ம கூட ரொம்ப வருடமா அநோனியமா பலகுனவங்க, இப்படி நமக்கு நெருக்கமானவங்க இறந்தபின்பு நம்ம கூடயே தான் இருப்பாங்க. நாம நல்லது செஞ்சிருந்தா அவங்க நமக்கு நல்லது தான் செய்வாங்க. ஆனா நம்மளால யாரேனும் பாதிக்க பட்டு இறந்திருந்தா அந்த ஆவிங்க தான் பழி வாங்கும்னு சொன்னாரு. இப்ப சொல்லுங்க நான் சொன்னது கரக்டு தான”

என நேயர் கேட்க,

Rj: ஆக மொத்தத்தில் பேய்கள் நம்ம கூட தான் இருக்குதுன்னு, நேயர் அவரோட அனுபவத்தில் சொல்றாரு.. நன்றி சார். உங்க பேரு என்னனு கேட்க மறந்துட்டேன்.

நேயர்: சிதம்பரம்..

Rj: நன்றி சிதம்பரம் சார். நேயர்களே தொடர்ந்து இணைந்திருங்கள் இது ஜான்….

என Rj பேசிக்கொண்டு இருக்கும்போதே அவ்வளவு நேரம் பயத்தில் கேட்டுக்கொண்டு இருந்த அருண் Fm ஐ ஆப் செய்துவிட்டு. கண்ணை மூடி இறந்து போன தன் தாத்தா சிதம்பரத்தை வேண்டுகிறான். கண்திறந்து பார்கிறான். காரின் பின் சீட்டில் அவன் தாத்தா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆத்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *