கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 24,440 
 

சாரங்கன் வேலை முடிந்து போனபோது ஹாலில் சரசு உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை அர்ச்சனா முகத்தில் எந்த பிரதிபலிப்புமின்றி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். டிவியில் கவுன் போட்ட ஒரு லேடி ஆங்கில எழுத்து உச்சரிப்பை க்ளோஸப்பில் சொல்லிக் கொண்டிருந்தாள். சி.டி. ஓடிக்கொண்டிருக்கிறது. அர்ச்சனாவுக்கு ஐந்து வயசாகிறது. ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்த சரசுவின் அண்ணன் அர்ச்சனாவுக்கென்று என்று சில ஆங்கில கேஸட்டுகளை வாங்கி வந்திருந்தான்.

“ மச்சான்! இதெல்லாம் ஆங்கில எழுத்து உச்சரிப்புகளையும், ரைம்ஸ்களையும், சொல்லித்தரும் கேஸட்டுகள். டெய்லி இந்த கேசட்டுகளை டிவியில போட்டு வுட்ரு. அர்ச்சனா பார்க்கட்டும். கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உள்ளே போவட்டும். டீச்சர் ட்ரெயினிங்ல ஒரு சொற்றொடர் இருக்கு. (One seeing is thousand sayings.) ஒரு தடவை பார்க்கிறது ஆயிரம் தடவை கேட்கிறதுக்கு சமம்னு சொல்வாங்க.”—

அவன் கொடுத்த சி.டி.தான் இப்ப ஓடிக்கிட்டிருக்கு. சாரங்கன் குழந்தையைக் கூப்பிட்டார்.

“அர்ச்சனா குட்டீ!…அர்ச்சனா..! கண்ணே..”— குழந்தை திரும்பவில்லை. இப்போது சோகம் அவரை கப்பிக் கொள்கிறது.

“சரசு! குழந்தையை தெரப்பி கிளாஸுக்கு கூட்டிப்போய் வந்துட்டியா?.”

“ஆச்சு. ஒரு வருஷமா கிளாஸுக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கோம். டாக்டர கேட்டீங்களா?. என்ன சொல்றாரு?.”.

“ஏன் அதை கிளறி விட்டு அழப்போறியா?. எனுக்கு நம்பிக்கை இருக்கும்மா, கொழந்தை பார்டர் லைனில்தான் இருக்காளாம். பயிற்சி குடுக்கக் குடுக்க சரியாயிடுவாளாம்.” —- அவள் காபி போட உள்ளே போனாள்.

ஆரம்பத்தில் அர்ச்சனா எல்லாக் குழந்தைகளையும் போலத்தான் வளர்ந்து வந்தாள். அவளுக்கு மூணு வயசாக இருக்கும் போதுதான் மற்றக் குழந்தைகள் போல இவள் இல்லை என்று அவர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. ஏற்கனவே அவர்களுக்கு லேசாக ஒரு சந்தேகம் இருந்தது என்றாலும் மனசு அதை ஏற்க மறுத்தது. ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கூட அவள் பேசவில்லை. ஒரு இடத்தில நிற்கிறதில்லை, ஒரே ஓட்டம்தான். குழந்தை துரு துருன்னு இருக்காள்னு சந்தோஷப் பட்டார்கள். எத்தனை தடவை சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் அவள் முகம் பார்க்கிறதில்லை. முதலில் செவிடோ என்று சந்தேகப் பட்டார்கள். அப்புறம் இல்லை என்று தெளிந்தார்கள். அவள் வயசுள்ள மத்த குழந்தைகளோட சேரமாட்டாள். தனிச்சித்தான் விளையாடுகிறாள். அப்புறந்தான் ஐயோ நம்ம குழந்தைக்கு என்னவோ பிரச்சினைன்னு ஓடினார்கள். அப்போதுதான் அர்ச்சனாவுடைய குறைபாடு தெரிந்தது. ஆட்டிசம் குறைபாடு. அந்த அடியை அவர்களால் தாங்க முடியவில்லை. அப்படி அழுதார்கள். ஒண்ணே ஒண்ணு அதுவும் இப்படியா பிறக்கணும்?. அப்புறம் கொஞ்ச நாளில் மனசை திடப்படுத்திக் கொண்டு டாக்டர் ஆலோசனைப்படி அவளுக்கு பயிற்சியைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இவளைவிட சின்ன பிள்ளைகள் எல்லாம் நல்லா பேசறதை, கூடி விளையாட்றதைப் பார்த்து விட்டு அப்பப்ப குமைந்துக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சிகளை காட்டாத ஒரு மந்தத் தன்மையான முகம். கவனிக்காம கொஞ்சம் அசந்தால் அவ பாட்டுக்கு எங்காவது போய்க் கொண்டேயிருப்பாள். பார்த்து இழுத்து பிடிக்கணும்.

ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க.. இவங்க ஊர்ல அதுக்கான சிறப்புப் பள்ளிக்கூடம் இல்லாததினால ப்ளே ஸ்கூல்ல எல் கே ஜியில சேர்த்து விட்டாங்க. ஆனால் சேர்ந்தாப்பல மூணு மாசம் ஒரு பள்ளிக்கூடத்தில நிலைக்க முடியல. மத்த பிள்ளைங்க வெச்சிருக்கிற பொம்மைகளையெல்லாம் போய் பிடுங்குகிறாள், கொடுக்கலேன்னா அடிக்கிறாள், கிள்ளி விடுகிறாள் என்று கம்ப்ளயிண்ட்டு. கிளாஸ்ல உட்கார்றதில்லை. டீச்சர்ங்க சுலபமா ஹைபர் ஆக்டிவிட்டி இங்க எங்களால சமாளிக்க முடியாதுன்னு சொல்லிட்றாங்க. இந்த ஏழு மாசத்தில மூணு ஸ்கூல் மாறியாச்சி. இது இப்படியே போய்விடாது, சீக்கிரத்திலேயே மத்த பசங்க இவளுக்கு லூசு, பைத்தியம்னு எதாவது பேர் வெச்சி ஒதுக்கிடுவாங்க, அதுக்குள்ளார இவள் ஃப்ரீயா பேச ஆரம்பிக்கணும்னு டீச்சர் சொன்னப்ப அவர்களுக்கு உள்ளே படபடவென்று வந்து விட்டது. கடவுளே!. அன்னிக்கு ராத்திரி ரெண்டுபேருமே தூங்கவில்லை. மறுநாள் சாரங்கனும் சரசுவும் அர்ச்சனாவை செக்கப்புக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

கிளினிக்கில் கூட்டம் அதிகமில்லை ஒரு பத்து பேர் உட்கார்ந்திருந்தனர். போனதிலிருந்தே குழந்தை ஒரு இடத்தில் நிற்காமல் வெளிப்பக்கமாக வெறி வந்தவள் போல் இழுத்துக் கொண்டிருக்கிறாள். இது வழக்கந்தான். அவளை இருவரும் மாறிமாறி இழுத்துப் பிடிக்க போராடிக் கொண்டிருந்தனர்.அவள் பெருங்குரலெடுத்து போடும் கூச்சலும்,அழுகையும், பெஞ்சில் உட்கார்ந்து இருந்த மற்ற நோயாளிகளுக்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும், த்சு…த்சு..என்று உச்சுக் கொட்டியபடியே இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அர்ச்சனா குட்டீ! கத்தக் கூடாது தப்பு. உனக்கு என்னா வேணும்?. சொல்லு சாக்லட் பார் வேணுமா? வாங்கித் தர்றேன். அழக்கூடாது சரியா?.”—- அவர் சாக்லட்பார் வாங்க வெளியே ஓடினார். அந்தம்மா எப்படியாவது குழந்தையின் அழுகையை நிறுத்தினால் போதும் என்று சமாதனப் படுத்த பலவிதமாய் போராடிக் கொண்டிருந்தார். எதைச் செய்தும் கர்ணகடூரமான அவள் குரல் ஓயவில்லை. கொஞ்ச நேரத்தில் நீளமான சாக்லட்பார் அர்ச்சனாவின் கைக்கு வந்தது. அதைப் பார்த்து விட்டு இன்னும் சத்தமாய் அழ ஆரம்பித்தாள்..அதற்குள் அந்த மனிதருக்கு மாலைமாலையாக வியர்வை முத்துகள்.

“ சார். குழந்தைக்கு என்னா வேணும்னு கேளுங்களேன். அத்த வுட்டுட்டு…”—-சற்று எரிச்சலுடன் சொன்ன மனிதரை பரிதாபமாக பார்த்துவிட்டு சாரங்கன் திரும்பிக் கொண்டார். இப்ப வேறு வழியின்றி அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தார். அரை மணி நேரம் கழித்து வந்தார்கள். இப்ப அது சாதுவாய் அவருடன் உள்ளே நடந்து வந்தது. இப்போது கைகளில் ஒரு ஜீப் பொம்மை. அடுத்து டாக்டரிடமிருந்து இவர்களுக்குத்தான் அழைப்பு. உள்ளே போனார்கள்.

“ என்னசார் ஒரு வருஷத்தில ரெண்டுபேரும் இப்படி ஆயிட்டிருக்கீங்க?. முதல்ல உங்களுக்குத்தான் கவுன்சலிங் தரணும் போலிருக்கே.”—உடனே அந்தம்மா அழ ஆரம்பித்து விட்டாள். அவர் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டார். குழந்தை ஓடிப்போய் டாக்டர் டேபிளில் இருந்த பேனாவையும், ஸ்டெத்தையும் தூக்கியது. சரங்கன் குழந்தையை இழுத்து பிடிக்க, டாக்டர் சிரித்துக் கொண்டே கன்னத்தை தட்டிவிட்டு குழந்தை கையிலிருந்து அவைகளை வாங்கிக் கொண்டாள். குழந்தையின் கேஸ் ஷீட்டை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.

“ நாந்தான் குறைவான அளவில் ஆட்டிச பாதிப்புள்ளவள் என்று இவளுக்கு வியாதி நிர்ணயம் செய்திருந்தேனே. எதுக்கு சும்மா கிளறி கிளறி அழுதுக்கிட்டு. இந்நேரத்துக்கெல்லாம் உங்க கவனம், முயற்சி, உழைப்பு எல்லாம் குழந்தைக்கு பயிற்சி தர்றதிலேயே இருக்கணும். உங்க அர்ப்பணிப்புதான் அவளை மனுஷியாக்கும்.”

“ ஒண்ணுமே தெரியலீங்க. எதை கேட்டாலும் சிரிச்சிக்கிட்டே இருப்பாள். எத்தினி நாளைக்கு இந்த மண்ணை காப்பாத்தப் போறோம்?. எங்க காலத்துக்கு அப்புறம் எங் கொழந்தை கதி?. அதுவும் பொம்பளை புள்ளையா இருக்காளே. ”.—-அவர்கள் பரிதாபமாகக் கேட்டார்கள்.

“மாரால ஊர்ந்து நகர்றது, தவழ்ந்து முட்டி போட்டு வர்றது, இதெல்லாம் வராம நேரிடையா அர்ச்சனா எழுந்து நடந்தாள்னு சொன்னீங்களே, அது தப்பு. என்னவோ ப்ராப்ளம்னு அப்பவே நீங்க சந்தேகப் பட்டிருக்கணும். குழந்தைகள் ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரணும். அப்படி வந்தால்தான் நார்மல். இல்லேன்னா அப்நார்மல். ஓகே நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்க.”

டாக்டர் மீனா அவர்களை வெளியே அனுப்பிவிட்டு தன் உதவியாளருடன் குழந்தையின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய ஆரம்பித்தாள். பத்து நிமிஷம் கழிச்சி மீனா அவர்களை உள்ளே அழைத்தாள்.

“போன தடவைக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை. ரெண்டுமூணு குரலுக்கப்புறம் மூணு வார்த்தைகள் தான் ஆனா நிமிர்ந்து எதிரில் முகம் பார்த்து பேச ஆரம்பிச்சிருக்காளே. கவனிச்சீங்களா? இதோ பாருங்க இந்த பென்சிலை காட்டி இது என்னான்னு கேட்கிறேன். எ பென்சில்னு இங்லீஷ்ல சொல்றா சார். எப்படி?. ஆச்சரியமா இருக்கு.” “ டிவியில ஆங்கில உச்சரிப்பு, ரைம்ஸ் சி.டி.களை போட்டுப் போட்டு இவளை பார்க்க வைக்கிறோம் டாக்டர்.”

“வெரி குட், பயிற்சியை விட்ராதீங்க. நான் சொல்றத நல்லா மனசுல வாங்கிக்கோங்க. இவளைப் போன்ற பிள்ளைகளுக்கு இருக்கிற ஒரு பொதுவான விஷயம் மற்றவங்களோடு பழகறதில இருக்கின்ற சிக்கல்கள்தான். அதுக்கு உங்க அன்பும்,பயிற்சியும்தான் மருந்து. பூங்கா, கடற்கரை, கோவில், பொருட்காட்சின்னு கும்பல் இருக்கிற இடமா அடிக்கடி கூட்டிப் போகணும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங். இதுமாதிரி பயிற்சி தரணும்..”—-அத்துடன் முடித்துக் கொண்டு டாக்டரம்மா யாரையோ கூப்பிட்டாள்.

“சீதா! இவங்களை கூட்டிப் போயி கவுன்ஸலிங் குடுங்க. உம் ரெண்டுபேரும் போங்க.”——அவர்கள் அர்ச்சனாவை கூட்டிக் கொண்டு சீதா என்ற அந்த பெண்மணியுடன் அடுத்த அறைக்குச் சென்றார்கள். கவுன்ஸலிங் ஆரம்பித்தது.

“என் குழந்தை என்னைக்காவது அர்த்தத்தோட பேசுவாளாம்மா?.”—கேட்கும் போதே அந்தம்மாள் அழுகிறாள். “முதல்ல ஒரு விஷயத்தை ரெண்டு பேரும் புரிஞ்சிக்கணும். ஆட்டிசம்ன்றது நோயல்ல, குறைபாடு. பேசறது கூட பெரிய விஷயமில்ல. மூளைக்கு வரும் தகவல்களைப் பயன்படுத்தி அலசி புரிஞ்சிக்கிறதுலதான் குழப்பம். பயிற்சி…பயிற்சி… அதுலதான் ஓரளவுக்கு ஒழுங்கு நிலைக்குக் கொண்டுவர முடியும்.”— சொல்லிவிட்டு பொம்மைகளுடன் விளையாடும் அர்ச்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்ப அவள் உலகத்துக்குப் போயிட்டா பாருங்க. அப்படி போக விடக் கூடாது. நிஜ உலகத்திலேயே புடிச்சி வைக்கணும். அதுக்கு என்னபண்ணணும்?. அவ கிட்ட நிறைய பேசணும், கேள்வியா கேட்டு துளைச்செடுக்கணும். அவள் வாயிலயிருந்து வார்த்தைகளைப் பிடுங்கணும். அடுத்து கிரியேட்டிவ்வா அவளே யோசிச்சி பதில் சொல்றமாதிரி கேட்கணும். சதா காக்கா என்ன கலர்னு கேட்டுக்கிட்டிருக்காம கருப்பு கலர்ல உனக்கு என்னென்ன தெரியும்னு கேட்கணும்.”— இப்போது இருவருமே பேசமுடியாமல் கண்கலங்கி நின்றார்கள்.

“என்ன பாவம் பண்ணோம் இந்த மாதிரி ரெண்டாங் கெட்டானை கடவுள் எங்க கையில கொடுத்துட்டானே ஐயோ.”

“த்சு..சூ..அழறத நிறுத்துங்க. ஓரளவு சரியான நேரத்தில கண்டு பிடிச்சி இங்க கொண்டு வந்துட்டீங்க. ராத்திரியில படுக்கும் போது அவளுக்குப் புரியுதோ இல்லையோ சின்னச் சின்ன கதைகளை ஆக்‌ஷனோடு தினசரி சொல்லிக்கிட்டே இருங்க. அவளுடைய கற்கும் திறமை பலப்படும். நீங்க கொடுக்கிற தூண்டுதலில்தான் போகப் போக புரிஞ்சிக்க ஆரம்பிப்பாள். ஆட்டிச பாதிப்புள்ளவர்களில் பலர் அபார புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?. ஒரு நாள் திடீரென்று உங்க பெண் எல்லாவற்றையும் கத்துக்க ஆரம்பிக்கலாம் அல்லது நிதானமாகவும் படிப்படியாகக் கத்துக்கலாம். நீங்க செய்ய வேண்டியதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளை இவளுக்குக் குடுக்கிறதுதான். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என்று எல்லா கிளாஸ்களையும் இவளுக்கு அறிமுகப் படுத்துங்க. அப்ப இவள்கிட்ட எதாவது ஒரு திறமையை நீங்க பார்க்கலாம். பொதுவா ஆட்டிச பாதிப்புள்ளவங்க கற்பனைவளமும், புதுமையான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லாம் நாம தர்ற பயிற்சியிலதான் இருக்குது..”—சாரங்கன் சுரத்தில்லாமல் பார்த்தார்.

“என்ன நம்பிக்கை வரலியா?.இதோ பாருங்க. நாமெல்லாம் சராசரி மனிதர்கள். வழக்கமாகப் சாப்பிட்டுத் தூங்கி*, படித்து பட்டம் பெற்று வேலை தேடி, வேலை பெற்று, கல்யாணம், குழந்தை, அதன் உபத்திரவங்கள்…இப்படி வாழும் சராசரி மனிதர்கள். பெரும்பாலும் இந்த க்ரூப்பிலிருந்து சாதனையாளர்கள் உருவாகிறதில்லை. இதிலிருந்து தனித்து தெரிகின்றவர்கள்தான் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐஸக் நியூட்டன், தாமஸ்ஆல்வா எடிசன், இசை மேதை மொஸார்ட், உயிரியல் ஆராய்ச்சியாளர் சார்லஸ் டார்வின், இப்ப இருக்கிற மைக்ரோசாஃப்ட்டின் அதிபர் பில்கேட்ஸ், இப்படி எல்லாரும் ஆட்டிசம் பாதிப்புள்ளவங்கதான். ஒன்பது வயசில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் இன்று ஒலிம்பிக் போட்டிகளின் தங்கமகன். நீச்சல் போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களைக் குவித்த மைக்கேல் ஃபெல்ப்ஸ். முதல்ல அவள் சுயமாக வாழறதுக்கு கற்றுத்தர முயற்சிக்கணும். அவள் தானே ஜட்டியைப் போடவும், மற்ற உடுப்புகளைப் போடவும் ஒவ்வொரு ஸ்டெப்பாக கற்றுக் கொடுங்கள். அவள் தடுமாறும் போது நாமே அதைப் போட்டு விட கைகள் துறுதுறுக்கும். ஆனால் எப்படி போட்றதுன்னு பொறுமையா கற்றுத் தர்றதே சரியான அணுகுமுறை. நீங்களே எப்போதும் உதவி பண்ணிக்கிட்டிருந்தால் குழந்தை தனித்து இயங்க முடியாத நிலைக்கு போயிடும். ஓகே அடுத்த மாசம் வாங்க, இன்னொரு அஸஸ்மெண்ட் இருக்கு.”——-அப்போது அந்தம்மா கலவரத்துடன் கத்தினாள்.

“ஏங்க…ஏங்க…கொ..கொ..கொழந்தை எங்கேங்க?.. ஐயோ!..அர்ச்சனா..எ.ங்.கே..அர்ச்சனா!.. கண்ணே!”– எங்கியும் காணவில்லை. பதறினார்கள். ஒரு கணம் அவருக்கு திக்கென்று நெஞ்சு அடைக்க,சற்று மயக்கம் வந்தது போல தள்ளாடினார். குழந்தை எங்கியும் இல்லை. எப்படி மறந்தோம்?. வெளியே ஓடினார்கள். அந்த மருத்துவ மனை ஆட்கள் அத்தனை பேரும் ஓடி ஓடி தேடினார்கள். எங்கேயும் இல்லை. முப்பதடி தூரத்திலேயே சர்..சர்னு வாகனங்கள் பறக்கும் மெயின் ரோடு இருக்கு. அய்யய்யோ! கண்ணே!, அவள் பெருங் குரலெடுத்து கதற, அவருடைய மயக்கம் போன இடம் தெரியவில்லை, ஓடினார். பிளாட்பாரத்திலும் இல்லை. எந்தப் பக்கம் போயிருப்பான்னு யூகிப்பது கடினம். இருந்தாலும் தெய்வத்தின் மேலே பாரத்தைப் போட்டுட்டு வலது பக்கம் திரும்பி சற்றேரக் குறைய ஓடினார். வலப்பக்கம் ஒரு பெரிய பொம்மைக் கடை இருக்கிறதால இந்தப் பக்கம்தான் போயிருப்பான்னு யூகம். அந்த பொம்மைக் கடையிலும் தேடிட்டார், இல்லை. ஒரு பத்து பன்னிரெண்டு கடைகளை தாண்டி ரொம்ப தூரம் ஓடினார். எங்குமில்லை. அப்படியே நின்று விட்டார். வியர்வை மாலை மாலையாய் ஒழுகுகிறது.அய்யோ! என்ன பண்ணுவேன்?.

கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் எங்கேயும் தெரியவில்லை. அர்ச்சனா…அர்ச்சனா! கண்ணே!. முகத்தைப் பொத்திக் கொண்டுஅழுதார் ஒருவேளை எதிர் பக்கம் போயிட்டிருப்பாளோ?. இன்னும் கொஞ்ச தூரம் ஓடினார் ஊஹும். இப்போது இடப்புறமாக ஓடினார். ஒருமணிநேரத் தேடலில் அவள் எங்கேயும் இல்லை. விதிர்த்து போய் பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விட்டார். ஐயோ கண்ணே! எஞ்செல்லம்! எங்கடீ போயிட்ட?.ஐயோ! இது வக்கிரமான உலகம்டீ கண்ணே. பொம்பள பிள்ளையா போயிட்டியேடீ. உடமாட்டாங்களே. கண்ணே! யார்கிட்டவாவது மாட்டி, ஐயய்யோ!. உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் தேடிக் கொண்டு அவர் மனைவி வந்து விட்டாள். எல்லோரும் பார்க்க,இரண்டுபேரும் மாய்ந்து மாய்ந்து அழுதார்கள். யாரோ ஒரு பாதசாரி யோசனை சொல்ல காவல் நிலையத்துக்கு ஓடினார்கள். அவள் அழுதுக் கொண்டே இருக்க, அவர் என் மகள் அர்ச்சனாவை தொலைத்து விட்டேன், தேடிக் கொடுங்கள் என்ற ரீதியில் உட்கார்ந்து கம்ப்ளயிண்ட் எழுதி கொடுத்தார்.

“அவளுக்கு ஒண்ணுமே தெரியாதுங்க. பேசக்கூட தெரியாத மண்ணுசார்.”—சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழுதார். எஃப்,ஐ.ஆர் காப்பியுடன் வீட்டிற்கு திரும்பினார்கள்.

அவரால் வீட்டில் உட்கார முடியவில்லை. மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினார். கிளினிக்கிலிருந்து நாலாபக்கங்களிலும் போய் தேடினார். அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பஸ் ஸ்டேண்டுக்குப் போயி எல்லா பஸ்களிலும் ஏறி தேடினார். எங்கியும் காணவில்லை. இதுக்கு மேல எங்க போய் தேடுவதென்று புரியாத நிலை. சோர்ந்து போய் வீட்டிற்கு திரும்பினார். குழந்தை இல்லாமல் இவர் தனியாக வருவதைப் பார்த்துவிட்டு அவர் மனைவி ஒப்பாரி வைத்தாள். போய் உட்கார்ந்தார். அவ்வளவு சீக்கிரம் ரொம்ப தூரமெல்லாம் போயிருக்க முடியாது. ஒருவேளை குழந்தையை கடத்தி விக்கிறாங்களாமே யாராவது அப்படி கடத்தியிருப்பாங்களோ. அப்படி நினைக்கும் போதே அவருக்கு மயக்கமாய் இருந்தது. எங்க இன்னா கதியில இருக்காளோ?. குழந்தைக்கு காலையில் இரண்டு இட்லியை ஊட்டியதோடு சரி. மாலை நாலு மணியாச்சி. ஐயோ! எங்கொழந்தைக்கு பசின்னு கூட சொல்லத் தெரியாதே. நினைக்க நினைக்க ஒரு கட்டத்தில் இருவருக்கும் அழுகை கூட நின்றுபோய் மனசு சிந்திக்க முடியாமல் இறுகிப் போனது. கண்ணே! எங்கடீ இருக்க. எஞ்செல்லம். ரெண்டுபேரும் சுருண்டு படுத்து விட்டார்கள். வெளியே யாரோ கூப்பிட்றாங்க.. யாரு..?. கதவைத் திறக்க, வெளியே பக்கத்து வீட்டு லட்சுமி அம்மாள். அவள் விசாரிக்க இருவரும் விஷயத்தைச் சொல்லி அழுது தீர்த்தார்கள். அவள் போனபிறகு மீண்டும் வெறுமை வந்து விட்டது. அவர்களுக்குள் பேசிக் கொள்ள எதுவுமில்லை. அவர் தரையில் படுத்து விட்டார். மாலை வரை நண்பர்களுக்கெல்லாம் போன் பண்ணி தகவலைச் சொன்னார். யார் கண்ணிலாவது படாதா என்கிற நப்பாசை. இப்போது மீண்டும் யாரோ கூப்பிடுகிறார்கள். அவர் எழுந்து கதவைத் திறந்தார்.

ஒரு போலீஸ்காரருடன் அர்ச்சனா நிற்கிறாள். இருவரும் ஓவென்று கதறியபடி ஓடிப்போய் வாரியணைத்துக் கொண்டார்கள். இருவருக்கும் சந்தோஷத்தில் திக்குமுக்காட முத்தமாய் பொழிந்தார்கள். போலீஸ்காரர் அவரிடம்

“காந்தி சிலையாண்ட இருந்தாய்யா.”—-சாரங்கனும் சரசுவும் கையெடுத்து கும்பிட்டார்கள். கண்ணீர் பீறிடுகிறது.

“ எங்குழந்தை மனவளர்ச்சி இல்லாத மண்ணுசார்னு சொன்னியேப்பா. உம்பொண்ணு கிட்ட தமிழ்ல கேட்டா பதில் சொல்லல. சரின்னு வேர் ஈஸ் யுவர் ஹவுஸ் னு இன்ஸ்பெக்டர் ஐயா இங்லீஷ்ல கேட்டதுக்கு, முன்பக்கம் கையைக் காட்டி ஃப்ரண்ட் எ டெம்பிள், இன் ரைட் சைடு ஸ்கூல்னு தெளிவா லேண்ட் மார்க் சொன்னாய்யா. இவளைப் போயி மண்ணுன்னு சொன்னியே.”

சாரங்கன் கிளர்ந்து வரும் ஆனந்த அழுகையை அடக்க முடியாமல் குழந்தையை அணைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுது தீர்த்து விட்டார். அவர் மனைவி நிலை பற்றி சொல்லவே வேண்டாம். ராஜாத்தி..ராஜாத்தி..என்று சொல்லிச் சொல்லி அவள் கொடுத்து கொண்டிருக்கும் முத்தங்கள் ஒன்றே சாட்சி.

“யோவ்! எம்பொண்ணை தொலைச்சிட்டேன்னு நீ கம்ப்ளயிண்ட் குடுத்த இல்லே?. உம் பொண்ணு இன்னா சொன்னா தெரியுமா?. ஐ லாஸ்ட் மை ஃபாதர்னு சொன்னா. அவ உன்னை தொலைச்சிட்டாளாம்.. .சரி சரி அப்புறமாய் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து போட்டுட்டு வந்துடு.”—–போலீஸ்காரர் கிளம்பிவிட்டார். உணர்ச்சியின்றி ஜடமாய் நிற்கும் தன் குழந்தையை அவர்கள் வாரி அணைத்துக் கொண்டார்கள்.

“அடிக்கண்ணூ! நீ எம்மா புத்திசாலிடீ?. அது எங்களுக்குத் தெரியாம போச்சேடீ.”—-முதலில் இந்த விஷயத்த டாக்டர் அம்மா கிட்ட பொய் சொல்லணும். அவர் நினைத்துக் கொண்டார்.

நன்றி: தினமணி கதிர்(31-03-2019)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *