மனோவியல் பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,811 
 

நான் அந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். எங்களுக்கு மனோவியல் தொடர்பில் விரிவுரை எடுக்க வருபவர் ஒரு மனோவியல் பேராசிரியர். ஆரம்பத்தில் எங்களுக்கு அவரைக் கண்டால் பயமாக இருக்கும். அவரது இறுக்கமான முகத்தோற்றம் அவர் ஒரு கடுமையான ஆசாமியாக இருப்பார் என்ற மன உணர்வையே எங்களுக்குத் தோற்றுவித்தது. அத்துடன் மனோவியல் என்பதும் ஒரு கஷ்டமான பாடமாகத்தான் இருக்கும் என்றும் நாங்கள் நினைத்தோம்.

ஆனால் பேராசிரியருடன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே எங்களுக்கிருந்த எல்லா சந்தேகங்களும் பறந்து போய்விட்டன. நாங்கள் எதிர்பார்த்ததைவிட பேராசிரியர் எங்களுடன் மிக நட்புடன் பழகினார். மனோவியல் பாடத்தைக் கூட ஒரு புதிராக இல்லாமல் ஒரு அழகிய வாழ்க்கை அனுபவமாக்கிவிட்டார். எங்களது முதற் தவணை முடிந்தபோது அவர் எழுந்தமானமாக பரீட்சை ஒன்றை வைத்தார். அந்த பரீட்சை வினாத்தாளில் இ-றுதியாகக் கேட்டிருந்த கேள்வி எல்லோரது புருவத்தையும் மேலே உயர்த்துவதாக இருந்தது. அந்த கடைசிக் கேள்விக்கு எங்களில் யாருக்கும் விடைத்தெரியவில்லை.

அந்தக் கேள்வி அப்படி ஒன்றும் கடினமாக கேள்வியல்ல. அத்துடன் அது பாடத்துடன் சம்பந்தப்பட்டதும் அல்ல. அப்படியென்ன புதுமையான கேள்வி என்று நீங்கள் நினைக்கக்கூடும். அது வேறு ஒன்றும் இல்லை. “நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் கல்லூரிக்கு வரும்போது இந்தக் கல்லூரி வளவை கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருப்பாளே ஒரு பெண் அந்தப் பெண்ணின் பெயரென்ன?” என்பதுதான் அந்தக் கேள்வி.

பேராசிரியர் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும் என்று என் சிந்தனை சுழன்றடித்தது எங்கோ பறந்து சென்றது. அப்போது அந்தப் பெண்ணின் முகம் என் ஞாபகத்துக்கு வந்தது. அவளுக்கு ஒரு முப்பதைந்து அல்லது நாற்பது வயதிருக்கும். அந்த முகத்தில் சதா ஒரு சோகம் அப்பிக் கொண்டிருப்பது போல் என் மனதுக்குத் தோன்றியது. வேலை செய்வதற்கு வசதியாக கீழே தொங்கிக் கொண்டி-ருக்கும் சாரி முனையை மேலே இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டிருப்பாள் அவள் ஒரு ஏழைப்பெண் என்பதனை அவள் தோற்றத்தில் இருந்தே ஊகித்து விடலாம். சில சயமங்களில் அவள் வெற்றிலையை வாயில் போட்டு சப்பிக் குதப்பிக் கொண்டிருப்பாள் அவள் தொடர்பில் இத்தகைய விவரணை மட்டுமே எனக்கு இப்போதைக்கு ஞாபகத்துக்கு வந்தது. அத்துடன் பாடசாலை இடைவேளையின்போ-து அவளிடம் போய் பேசிப் பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆர்வமும் உண்டாகியது.

இடைவேளையின் போது எனது இரண்டு நண்பிகளையும் அழைத்துக் கொண்டு அந்த அம்மாவைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் சென்றபோது அந்தம்மா கல்லூரி தேநீர் விடுதியில் ஒரு ஓரமாக நின்றுகொண்டு சாயத்தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்தாங்க. நாங்க எங்களுக்கு ஒவ்வொரு டீக்கு சொல்லி விட்டு அவுங்களை அணுகி ஒங்களோட கொஞ்சம் பேசனும்னு சொல்லி வந்து மேசையில் அமருமாறு அழைத்தோம். நாங்க திடுதிப்புன்னு அவுங்கக்கிட்டபோயி இப்படி கதைத்ததும் அவங்க ரொம்பவும் கூச்சப்பட்டாங்க. மேசையிலயெல்லாம் வந்து உக்கார்ரது நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. வேறு வழியில்லாம நாங்களும் அங்கேயே நிண்டுகிட்டே பேச வேண்டியதாப் போச்சி.

அவுங்கக்கிட்ட இருந்து நாங்க தெரிஞ்சிக்கிட்டது ஒரு சோகக் கதையாகவே இருந்தது.

அவுங்களோட பேரு செவ்வந்தி. அப்பா, அம்மா படிக்கல அவுங்களையும் அவுங்க படிக்க வைக்கல. அவங்களோட கணவனும் படிக்கல. ரெண்டு பேருமே கூலிவேல செஞ்சிதான் பொழப்ப ஓட்டுறாங்க. அவங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளங்களும் ஒரு பொடியனும் இருக்காங்க. மூத்த புள்ள எட்டாம் வகுப்புவரை படிச்சிட்டு நின்டுருச்சி அத கலியாணம் முடிச்சி கொடுத்துடாங்க. ரெண்டாவது புள்ள பள்ளிக்கூடத்த விட்டுட்டு இப்போ வீட்டுலத்தான் இருக்கு. சின்ன பொடியன் இன்னும் ஸ்கூலுக்கு போய்கிட்டிருக்கான். அவனுக்கும் சரியா படிக்க வறாது. அவுங்களோட கணவன் வேல செஞ்சு சம்பாதிக்கிற காசுல முக்கால் வாசிய தண்ணியடிச்சி வீணாக்கிடுவாரு. அதுமட்டுமல்லாம குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து. அவுங்களையும் புள்ளைகளையும் அடிச்சி ரகலை செய்வாரு.

இதுதான் அவுங்க சொன்ன கதையின் சாராம்சம்.

இந்த கதையைக் கேட்க கேட்க எனக்கும் எனது ரெண்டு நண்பிகளுக்கும் கூட சோகமாகத்தான இருந்தது. ஆனா அவங்களது கதையை கேட்ட பின்பு எங்களுக்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிந்தது. நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு விடயங்களை நாம் கண்ணால் பார்த்தும் கூட அவற்றை நாம் ஏன் அப்படி என்று தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. என்பதுதான் அது. அந்த அம்மாவைப் பொறுத்தவரையில் இந்தக் கல்லூரியில் எவ்வளவு காலம் தொழில் பார்த்து வருகிறார்கள். ஆனால் எப்போதாவது யாராவது சென்று “அம்மா எப்படியிருக்கிறீர்கள்?” என்று இன்முகத்துடன் சுகம் விசாரித்திருப்பார்களா? என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இப்போது எனக்கு எங்கள் பேராசிரியர் ஏன் அந்தக் கேள்வியை வினாத்தாளில் உள்ளடக்கினார் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிவது போல் மனதுக்குப்பட்டது. நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தில் ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, இனம், மொழி, மதம், ஒருவனது நிறம் கருப்பா, சிவப்பா, அவன் குட்டையா, நெட்டையா என்றெல்லாம் பாகுபாடு காட்டி எவ்வாறெல்லாம் மனிதர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள், வதைத்து மிதிக்கப்படுகின்றார்கள். என்பதை எத்தனை பேர் சிந்தித்து பார்க்கிறார்கள்? ஏன் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நிகராக சமமாகப் பழக முடிவதில்லை. மேட்டுக் குடிமகன், கீழ் மட்டக் குடிமகன் என ஏன் ஒருவரை பிரித்து வைத்துப் பார்க்கிறார்கள், பழகுகிறார்கள்.
நானும் எனது நண்பிகள் இருவரும் அந்த அம்மாவை சென்று பார்த்து அவங்களை மேசையில் வந்து அமருமாறு கூப்பிட்டபோது வந்து அமருவதற்கு அவர்கள் ஏன் கூச்சப்பட்டார்கள் என்பது தொடர்பில் இப்போது எங்களுக்கு விளங்கத் தொடங்கியது. அவர்கள் அவ்விதம் வந்து அமர அதிகாரவர்க்கம் தடை விதித்திருக்கிறது. அப்படி மீறி வந்து அமர்ந்தால் பின்னர் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடலாம். அல்லது அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் இந்த அவலமான வேலைக்கூட பறிக்கப்பட்டு விடலாம்.

பேராசிரியர் என்ன நோக்கத்துக்காக அந்தக் கேள்வியை எங்களிடம் வினவினார் என்பதனை எம்மால் நேரடியாக ஊகிக்க முடியாது போன போதும் அதனால் எம்முள் ஏற்பட்ட சிந்தனைத் தெளிவு மகத்தானதென்றே நான் கருதினேன். அன்றில் இருந்து அது யாராக இருந்தாலும் உரிய மதிப்பும் மரியாதையும் அன்பும் காட்ட வேண்டுமென்ற சிந்தனை எங்களிடம் ஏற்பட்டது. இதுவும் ஒரு வித மனோவியல் தத்துவம் தான் என்றும் என் மனதுக்குப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *