புனர்ஜென்மம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 649 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கின்றான். அவனுடைய உள்ளத்தில் விரக்தி, உடலில் சோர்வு.

நவயுக ஜனனத்தின் தரிசனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அவனுடைய உள்ளத்தில் ஏனோ இந்த விரக்தி?

அவன் முன்னால் நெடுஞ்சாலை நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடக்கின்றது. அது மலடாய் வெறிச்சோடிக்கிடக்கின்றது. சாலையோரத்திலுள்ள புல்பூண்டுகளெல்லாம் கருகிச் செத்துப் போய் கிடக்கின்றன.

மரந்தடிகளிலும் இலைகுழைகளிலும் தெருப்புழுதி அப்பிக்கிடக்கின்றது.

அவன் நடந்து கொண்டேயிருக்கின்றான்.

அவனுடைய சிந்தனை எங்கோ லயித்திருக்க, பார்வை மட்டும் சாலையை வெறித்து நோக்கியபடியே நடந்து கொண்டிருக்கின்றான்.

இவ்வளவு காலமும் அவன் நடந்து வந்த கரடுமுரடான பாதை தன்னைச் சூனியத்திற்குள் கொண்டு போய்விட்டதான உணர்வு அவனுக்கு

இனி என்ன செய்வது?’

அவனுடைய சூனிய மயமான உள்ளத்தில் இந்தக் கேள்விக்குறி திரும்ப எழுந்து அலைமோதிக் கொண்டிருக்கின்றது. 

தனது வலது கரத்தை அவன் அகஸ்மாத்தாகப் பார்க்கிறான். 

நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ள அந்தக்கரம் அவன் மனதில் வெறுமையை அள்ளி வீசுகின்றது. 

அவனுடைய கட்டை விரலிலும் நோதல் தொடங்கி விட்ட தற்கான அறிகுறி. 

அவனுடைய லட்சிய பாதை கானல் நீராகி விட்டதா? 

உடலுறுப்பின் ஒரு பகுதி இழப்பு அவனுடைய உள்ளத்தில் அவ்வளவு பெரிதாய் பாதித்ததாக அவனுக்குப்படவில்லை. ஆனால் அவனுடைய லட்சியம் கானல் நீராகிவிட்டதே என்ற உணர்வு அவனுடைய ஆத்மாவையே ஆட்டம் காணச செய்துவிட்டது. 

அவன் தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு வெளியே வருகின்றான். 

அவன ஒரு சிறந்த தொழிலாளி. அவனுடைய தொழிற்கூடத்தில் அவனையொத்த தொழிலாளர்கள் ஏழெட்டுப் பேர் வேலை செய்தாலும் அவன் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் வேலை செய்வான். சகல விதமான மோட்டார் வாகனங்களையும் பழுது திருத்துவதிலும் அவற்றை லாவகமாகவும் வேகமாகவும் ஓட்டுவதிலும் வல்லவன். அவன் அதிநுட்பமான ஒரு மெக்கானிக். அதனால் தான் அநேகர் அவனைத் தேடி வருகின்றனர். 

பருவத்தைப் பொறுத்தமட்டில் அவனுக்கு மதியம் திரும்பி விட்டதுதான். ஆனால் அவனுடைய உள்ளத்திலும் உடலிலும் இளமைத் துடிப்பும் வாலிப மிடுக்கும் இப்பொழுதும் பொங்கிப் புடைத்துக் கொண்டே இருக்கின்றன. 

உழைப்பினால் முறுக்கேறிய, உறுதியான உடற்கட்டு. செயற்பாட்டில் கரைகாண முடியாத சுறுசுறுப்பும் வேகமும்.

விரிந்து பரந்த அவனுடைய மார்பை எந்த நேரமும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கபில நிற ‘ரீ ‘சேட். 

அவனுடைய சிந்தனையிலும் செயலிலும் தெளிவான அனுபவ முத்திரை. 

குழந்தை மனது அவனுக்கு. மாசு படியாத தெளிவான தூய்மையான இதயமாதலால் அவனுக்கு உறுதியான ஆத்ம பலம். 

அவனுடைய ஆளுமை, தன்னை மறந்து பிறருடைய வாழ்வை ஆழமாக நேசிக்கின்ற உயர்ந்த பண்பிலிருந்து ஜனித்தது. அதனால் தான் அவன் சகலரதும் பெருமதிப்பைப் பெற்றிருக்கின்றான். 

ஒருநாள் அவனுடைய தொழிற்கூடத்திற்கு சமீபமாக வெடிகுண்டொன்று வெடிக்கின்றது. 

‘டிறக் வண்டியில்’ சென்று கொண்டிருந்த காக்கிச் சட்டைகளில் இருவர் படுகாயமடைகின்றனர். 

என்ன நடந்ததென அவன் அந்த இடத்திற்குச் சென்று பார்க்கக்கூடவில்லை. அதில் அவனுக்கு அக்கறையுமில்லை. தனது வேலையிலேயே அவன் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். 

அன்று மாலை அவன் கைது செய்யப்படுகின்றான். 

ஒரு வாரகாலம் விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்படுகின்றான். 

விடுதலை செய்யப்பட்ட அவன் வெளியே வந்த பின்பு அடிக்கடி ரத்தம் ரத்தமாய் வாந்தியெடுக்கின்றான். 

அவன் மூன்று மாதகாலம் ஆஸ்பத்திரி வாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டி நேரிட்டது. 

ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய அவனுடைய உடலின் பல பகுதிகளிலுமிருந்த ஊமைக் காயங்கள் எல்லாம் ஆறிவிட்டன. ஆனால் அவனுடைய இதயத்திலுள்ள காயம்? 

நாளாந்தம் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களினால் அவனுடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்ற தீ கொழுந்து விட்டெரியத் தொடங்குகின்றது. 

ஒருநாள் திடீரென அவன் தலைமறைவாகி விட்டான். புதிய சூழ்நிலை, புதியவர்கள் மத்தியில் அவனுக்கும் புதிய அனுபவங்கள் ஏற்படுகின்றன. 

அவன் வெடிகுண்டுகள் தயாரிக்கின்ற வேலைகளிலும் களத்தில் தாக்குதல் நடத்துகின்ற வேலைகளிலும் உள்ளி ருந்தும் வெளியிலிருந்தும் சம்பவித்த பல கண்டங்களை வெற்றி கரமாகத் தாண்டியுள்ளான். ஆனால் இறுதியாக வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் அவனுடைய தோழர்களைப் பறி கொடுத்துள்ளதுடன் தனது வலக்கரத்தின் நான்கு விரல்களையும் இழந்துள்ளான். அப்படியிருந்தும் லட்சிய வேட்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான். 

கடந்தகாலச் செயற்பாடுகளெல்லாம் கானல் நீராகி விட்டதான உணர்வு அவனுக்கு ஏற்படுகின்றது. 

பாம்பைப் பாம்பே விழுங்குகின்றதென்று அவனுடைய தோழர்களில் ஒருவன் இரண்டொரு சந்தர்ப்பங்களில் இரகசியமாக அவனுக்குக் கூறியபோதும் அவன் அதை நம்பவில்லை. 

ஒருமுறை பாம்பைப் பாம்பு விழுங்குவதை அவன் அறிந்த போது, அவனுடைய இலட்சியக்கோட்டை தகர்ந்து போக ஈடாடிப்போய் விட்டான். 

தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு வெளியே வருகின்றான். 

காலவோட்டத்தில் புயலும் இடியும் நாட்டில் ஏற்பட இருப்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் கட்டியங் கூறுகின்றன. 

எந்த மக்களுடைய நல்வாழ்விற்காக, மேம்பாட்டிற்காக, அவனும் அவனுடைய தோழர்களும் ஆத்ம தூய்மையுடனும் லட்சிய வேட்கையுடனும் போராடிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களின் கடின உழைப்பினால் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த செல்வச் செழிப்பும், வேகமும், கவர்ச்சியும் வர்ண ஜாலமும் நிறைந்த அந்த வாழ்க்கை இன்று சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவனுடைய உள்ளம் குமுறிக் கொண்டிருக்கின்றது. 

கணக்கிலாச் செல்வத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிலத்தாயின் அழிவைத் தடுப்பதற்கு அவர்கள் முனைப்பு ன் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று கை விடப்பட்ட வரண்ட மூளி விளை நிலத்தையும் இடிந்து தகர்ந்த கட்டடங்களையும்தான் அவன் காண்கின்றான். வேதனையில் அவன் உள்ளம் அழுகின்றது. 

வெளியே வந்த அவனால் மீண்டும் தனது முன்னைய தொழிலில் முனைப்பாக ஈடுபட முடியவில்லை. வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஏனோ தானோவென்று வேலை செய்கின்ற துடன் அவன் நகரத்தின் நுழைவாயிலுக்குள் பிரவேசிக்கின்றான். 

அங்கு துயரமான அமைதி நிலவிக் கொண்டிருக்கின்றது. வெறிச்சோடிக் கிடக்கின்ற பாதையின் இருமருங்கிலுமுள்ள வீடுகளின் முன்னால் தொட்டந் தொட்டமாக இரண்டு மூன்று பேர்களாகக்கூடி நின்று மக்கள் தங்களுக்குள் ஏதோ கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் பயப்பீதி அப்பிக் கிடக்கின்றது. 

நகரத்தின் ஆத்மா வேதனைப் பெருமூச்சு விடுவதாய் தென்படுகின்றது அவனுக்கு. 

அவன் இதயச்சுமையுடன் நடந்து கொண்டிருக்கின்றான்.

இளமைக் கனவுகளைத் தமது இதயங்களில் சுமந்து கொண்டு மக்களின் நல்வாழ்விற்காக புன்முறுவலுடன் மரணத்தை அரவணைத்துக் கொண்ட இளசுகளின் வீரக் கோலங்கள் அவன மனக்கண் முன் சொர்ப்பன ஓவியங் களாய்த் தோன்றுகின்றன. 

அவனுடைய இதயத்தில் ஒருவித சோகமும் கோபாவேசமும் கலந்த உணர்ச்சி பொங்கிப் பிரவகிக்கின்றது. 

அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளின் பேரின வாதப்பாஸிஸ நடவடிக்கைகளுக்கு எதிராக தேசத்தின் பல பகுதி களில் இடைக்கிடையே பெரும் புயல்கள் உருவாகி மாபெரும் போராட்டம் வெடிக்க இருப்பதை அண்மைக்காலமாக அவன் அவதானித்து வருகின்றான். 

நேரம் செல்லச்செல்ல நகரம் களை கட்டுகின்றது. 

மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் மத்தியில் அவசரக் கோலம். 

திடீரென மக்கள் மத்தியில் பதட்டம். 

ஏன் இந்தப் பதட்டம்? 

டிறக் வண்டியின் இரைச்சல். 

மக்களுக்கும் பீதி. 

வந்து கொண்டிருக்கின்ற டிறக் வண்டிகளில் கரும் பச்சைக் காக்கிச் சீருடைகள். 

அவர்களின் கைகளில் ஆட்கொல்லித் துப்பாக்கிச் சனியன்கள். 

காக்கிச் சீருடைகள் இடைக்கிடையே இறங்கி நிற்கின்றார்கள். 

ஒரு வயோதிபர் குடை பிடித்தபடியே தள்ளாடித் தள்ளாடி மெதுவாக வந்து கொண்டிருக்கின்றார். கையில் ஒரு சிறிய போத்தல். அது மருந்துப் போத்தலாக இருக்க வேண்டும்.

முதியவர் எதிரே வந்துகொண்டிருக்கின்ற சிலரில் தட்டுத் தடுமாறி முட்டி மோதியபடியே வருகின்றார். 

அவருடைய கண்பார்வை தெளிவற்றதாக இருக்க வேண்டும். 

எதிரே வந்த காக்கிச்சட்டை அந்த முதியவரை திடீரென நெட்டித் தள்ளுகின்றான். 

முதியவர் அலறியபடியே நீரும் சகதியுமாயிருந்த சாக்கடை க்குள் விழுகின்றார். 

குடையை மடக்கி வழிவிட்டு தனக்கு மதிப்புத் தர வில்லையே என்ற ஆத்திரம் போலும் அந்தச் செருக்குப் பிடித்த காக்கிச் சட்டைக்கு! 

அவ்விடத்தால் வந்து போய்க்கொண்டிருப்பவர்கள் குவிந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். 

முதியவர் சாக்கடைக்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருக்கின்றார். 

அவருடைய உடலெல்லாம் சேறும் சகதியும். காக்கிச்சட்டை எக்காளமிட்டுச் சிரிக்கின்றான். 

பார்வையாளரில் சிலர் அந்த முதியவருக்காகப் பச்சாத்தாபப் படுகின்றனர். ஆனால் அவருக்கு உதவ ஒருவர் தானும் முன் வருவதாயில்லை. 

அவர்களுக்குப் பயம். 

சாக்கடைத் தண்ணீருக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருக் கின்ற முதியவரையும் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண்டு நிற்கின்ற காக்கிச் சட்டையையும் விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்கின்றவர்களையும் மாறி மாறிப் பார்த்த அவனுடைய ரத்தம் கொதிக்கின்றது. 

அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த முதியவர் சாக்கடையிலிருந்து வெளியே வருவதற்கு உதவுகின்றான். 

திடீரென இடி முழக்கம். 

வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். 

ஒரு சிறு புள்ளிதானும் வானத்திலில்லை. வானம் வெறுமையாயிருக்கின்றது. 

இடிமுழக்கம் எங்கோ வெகுதூரத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். 

காக்கிச் சட்டையை அவன் வெறுப்புடன் பார்க்கின்றான். அகங்காரம் பிடித்த காக்கிச் சட்டையின் மூஞ்சையில் ஓங்கிக் குத்த வேண்டும் போலிருக்கிறது அவனுக்கு. 

அவன் ஒருவாறு சமாளித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுஅகல்கின்றான். 

காக்கிச்சட்டைகளின் நடமாட்டத்தைப் பார்க்கின்ற மக்களுக்கு ஒருவித பீதி, பதட்டம். 

அவசர அவசரமாகத் தங்களுடைய கருமங்களை முடித்துக்கொண்டு விரைவில் தமது வீடுகளுக்கு சென்றுவிட வேண்டுமென்ற அவதி மக்களுக்கு. 

அவன் நகரத்தின் வடகோடியிலிருந்து நகருகின்றான். காக்கிச் சட்டைகள் அகம்பாவத்துடனும் அதிகாரத் துடனும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். நகரத்தின் இதயத்திற்கு வருகின்றான் அவன். 

மக்கள் கும்பலாய் திரண்டு எதையோ பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். 

மீண்டும் இடிமுழக்கம். 

வானத்தை அண்ணாந்து நோக்குகின்றான் அவன். 

திட்டுத்திட்டாகச் சிறு சிறு கருமுகில் துண்டங்கள் தென் திசையில் தென்படுகின்றன. 

மக்கள் கூட்டத்தை நெருங்குகின்றான் அவன். 

துண்டந் துண்டமாக இருந்த கருமுகில்கள் ஒன்று திரண்டு சூல்கொள்கின்றன. 

தென்திசையின் ஒரு மூலையில் மின்னல் கீற்று. 

அதைத் தொடர்ந்து இடி இடிக்கின்றது. 

மக்கள் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வட்டத்திற்குள் பிரவேசிக்கின்றான் அவன். 

“அடோ, உனக்கு ஈலம் வேணுமோடா?” 

ஒரு காக்கிச் சட்டை நடுத்தர வயதுடைய வழிப்போக்கன் ஒருவனுடைய சேட்டை வலுவாகப் பிடித்து அவனை உசுப்பிய படியே கேட்கின்றான். 

காக்கிச்சட்டையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக் கின்ற அந்த வழிப்போக்கன் திருதிருவென விழித்தபடியே நடுங்கிக் கொண்டிருக்கின்றான். 

கூடி நிற்கின்ற மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். 

‘அட பாவமே’ என்று அவனுக்காகப் பரிதாபப்படுகின்றனர் சிலர். 

ஆத்திரப்படுகின்றனர் வேறு சிலர். 

ஆனால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமலிருக் கின்றது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வளவு பயம். 

வழிப்போக்கன் படுகின்ற அவஸ்தையைப் பார்த்து ரசித்து கைகொட்டிச் சிரிக்கின்றார்கள், காக்கிச்சட்டையின் சகாக்கள் மூவா. 

“அடோ இந்தாடா ஈலம்?” 

வழிப்போக்கனுடைய நெஞ்சிலே குத்துகின்றான் காக்கிச் சட்டை. 

“ஐயோ என்னை அடியாதிங்கோ ஐயா, என்னை விடுங்கோ ஐயா”. 

வழிப்போக்கன் கெஞ்சிக் கேட்கின்றான் காக்கிச் சட்டையை. 

ஆகாயம் அதிர்கின்றது. 

மின்னலும் இடியும் அமர்க்களப்படுகின்றன. 

சில விநாடிகளுக்குள் நிசப்தம். 

“என்ன நீங்கள் எல்லாரும் இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நிக்கிறியளோடா?” 

அவனுடைய ஆவேசக்குரல் அங்கு கூடி நின்றவர்களின் கவனத்தை அவன் பக்கம் திருப்புகின்றது. 

அவன் காக்கிச்சட்டையை வெறித்துப் பார்க்கின்றான்.

முதியவரைத் தாக்கிய அதே காக்கிச்சட்டை. 

கோபாவேச உணர்ச்சி அவனுள் பெரும் எரிமலையாய் குமுறி வெடித்துக் கிளர்ந்தெழுகின்றது. 

“விடடா அந்த ஆளை!” 

இடி முழக்கமாய் கர்ச்சிக்கின்றான் அவன். 

வழிப்போக்கனை விட்டுவிட்டு காக்கிச்சட்டை சத்தம் வந்த திசைக்குத் திரும்புகின்றான். 

முட்டி மோதுவதற்கு தயாராக நிற்கின்ற தினவெடுத்த காளையாய் நிற்கின்றான் அவன். 

தர்மாவேசக் கனல் தெறிக்கின்ற அவனுடைய விழிகள் தீக்கணைகளைக் கொப்புளித்துக் கொண்டிருக்கின்றன. குருக்ஷேத்திரத்தில் போர்க்கோலமாய் காட்சியளித்த காண்டீபனைப் போல நின்ற அவனுடைய வீரக் கோலத்தைப் பார்க்கின்ற மக்களுக்கு வியப்பு. 

காக்கிச் சட்டைகளுக்கு திகைப்பு. 

கணப்பொழுதில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட காக்கிச் சட்டை அவனைத்தன் பிடிக்குள் கொண்டுவர முயல்கின்றான். 

காக்கிச்சட்டையின் பிடிக்குள் அவன் அகப்பட வில்லை.

அவன் லாவகமாகத் தப்பிக் கொள்கின்றான்.

அவன் நிதானமாக விழிப்புடன் நிற்கின்றான்.

“ஆரடா நீ ஆரடா?” 

ஆவேசமாகக் கேட்டுக்கொண்டே அவனைத் தாக்கு வதற்கு முயல்கின்றான் காக்கிச்சட்டை. முடியவில்லை.

“அடோ, ஆரடா நீ?” 

மீண்டும் கோபாவேசமாகக் கத்துகின்றான் காக்கிச் சட்டை. 

“நான் ஒரு தொழிலாளியடா.” 

அவனுடைய வார்த்தைகள் தெறிக்கின்றன. 

“நீ தொழிலாளி?” 

ஒன்றும் புரியாமல் கேட்கின்றான். 

“நான் தமிழன்”. 

பெருமையுடன் கூறுகின்றான் அவன். 

“என்ன நீ தெமிலனா?” 

சந்தேகத்துடன் கேட்கின்றான் காக்கிச்சட்டை.

“நான் தமிழன்தானடா, தமிழன்”

இடிமுழக்கமாய் கத்துகின்றான். 

“நீ தெமிலன். உனக்கு ஈலம் வேணுமாடா? ஈலம்”.

“ஓமடா எனக்கு ஈழம்தான் வேணும்டா”.

அவன் உறுதியுடன் கூறுகின்றான். 

“என்ன, உனக்கு ஈலம் வேணுமாடா?” 

காக்கிச்சட்டை வியப்புடன் கேட்கின்றான். 

“ஓமடா எனக்கு ஈழம்தான் வேணுமடா. ஈழமெண்டால் இலங்கைதானடா?” 

“என்ன ஈலம்?” 

“நான் இலங்கையன்’ 

தனது இடது கை முஷ்டியை உயர்த்திக் கோஷிப்பது போல அவன் பேரிடியாய் முழங்குகின்றான். 

“நீ தெமிழன் உனக்கு ஈலம் வேணுமோடா ஈலம்?”

பேரினவாதத் திமிர் தொனிக்கிறது, காக்கிச்சட்டையின் குரலில். 

கொக்கரித்துக் கொண்டு அவனைத் தாக்குவதற்கு கரத்தை ஓங்கியபடியே அவனை நோக்கி ஓடிவருகின்றான் காக்கிச்சட்டை. 

கோபாவேச உணர்ச்சி அவனுள் பொங்கி பெரும் எரிமலையாய்க் குமுறி வெடித்துக் கிளர்ந்தெழுகின்றது. 

ஆவேசம் கொண்ட இடி மூர்க்கத்தனமாய் பிரபஞ் சத்தையே பாளம் பாளமாய் வெட்டிப் பிளந் தெறிந்து கொண்டிருக்கின்றது. 

அவனுடைய வலது கரம் தடுப்பாக முன்வர இடது கரம் துரிதமாகச் செயல்படுகின்றது. 

உழைப்பினால் முறுக்கேறிய தனது இரும்பு முஷ்டியை வில்லாக வளைந்து ஓங்குகின்றான் அவன். 

இந்த வீமப்பலத் திடீர்த் தாக்குதலை காக்கிச்சட்டை எதிர் பார்க்கவில்லை. 

அவன் நிலைகுலைந்து தடுமாறி நிற்கின்றான். காக்கிச்சட்டையின் சகாக்கள் ஏக்காலத்தில் அவனைத் தாக்க முயல்கின்றனர். 

திடீரென பாரிய முழக்கமாய் வெடிகுண்டுச் சத்தம். நகரமே அதிர்கின்றது. 

குண்டுச் சத்தத்தைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுச் சத்தம். 

காக்கிச்சட்டைகள் தடுமாறி நிற்கின்றனர். 

திகிலடைந்து செய்வதறியாது மக்கள் சிதறி ஓடுகின்றனர். 

மின்னலும் இடியும் மீண்டும் அமர்க்களப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பூமிக்கு ஏதோ ஒரு செய்தியை இடித்துக் கூற விரும்புவது போல் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு மோதுப்படுகின்றன. 

தென்திசையில் திட்டுத்திட்டாய் இருந்த கருமேகங்கள் உருண்டு திரண்டு சூல்கொண்டு வானமெங்கும் வியாபிக்கின்றன. 

மின்னல் இருண்ட வானில் தீக்கோடுகளைக் கிழித்து விட்டு மறைகின்றது. 

வானம் இடிமுழக்கமாய்க் கனைக்கின்றது. 

“நான் இலங்கையன்’ 

அவனுடைய வஜ்ஜிரக்குரல் வானமண்டலத்தை முட்டி மோதுகின்றது. 

மேகம் வெடித்து மின்னல் கருமுகில்களைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகின்றது. பூமியே தீபற்றி எரிவதுபோல மின்னற்கொடி தோன்றி மறைகின்றது. 

துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தபடியே டிறக் வண்டி உறுமிக்கொண்டு வேகமாய் வருகின்றது. 

காக்கிச்சட்டைகளைக் கண்டதும் டிறக் வண்டியின் வேகம் தணிகின்றது. அதற்குள்ளிருந்தவர்கள் பீதியடைந்தவர் களாயிருக்கின்றனர். காக்கிச்சட்டைகள் டிறக் வண்டியில் பாய்ந்து ஏறுகின்றனர். 

துப்பாக்கிவேட்டுக்களைத் தீர்த்தபடியே டிறக் வண்டி யாழ் கோட்டை முகாமை நோக்கி வேகமாகச் செல்கின்றது. 

அவன் நிதானமாக நடந்து கொண்டிருக்கின்றான்.

வானம் ஆனந்தக் கண்ணீர் சொரிக்கின்றது.

மழைத்துளிகள் தங்களுக்குள்ளே முணு முணுத்து இரகசியம் பேசிக் கொண்டிருக்கின்றன. 

இடியோசை! 

திடீரென வானம் சரிந்து கொட்டத் தொடங்குகின்றது. பேய்க்காற்றும் பெருமழையும் முட்டி மோதிச் சாடுகின்றன.

சண்டமாருதம் சுழன்றடிக்கின்றது!

பேய்மழை கொட்டுகின்றது!

மின்னல் வெட்டுகின்றது!

இடி இடிக்கின்றது! 

பிரளயம் வந்துவிட்டதா? 

பாசிஸத்துக்கெதிரான தேசம் பரந்த பேர் அணியில் சங்கமிப்பதற்கு, ஏற்படவிருக்கின்ற பெரும் புயல்களுக்கு முகம் கொடுக்கக்கூடியதாக மன உறுதியுடனும் ஆத்மபலத்துடனும் அவன் தெற்கு நோக்கி நடந்துகொண்டிருக்கின்றான்.

பேய் மழை கொட்டுகின்றது!

சண்டமாருதம் சுழன்றடிக்கின்றது!

மின்னல் வெட்டுகின்றது! 

இடி இடிக்கின்றது! 

இயற்கையன்னையின் சீற்றத்தையும் அச்சுறுத்தலையும் துச்ச மென மதித்து எதிர்காலப் பெரும் புயல்களுக்கு முகம் கொடுக்க அவன் அஞ்சாநெஞ்சனாக நடந்து கொண்டிருக்கின்றான். 

– 1997, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *