கொங்காணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 841 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொங்காணி சிறுகதையைப் பற்றி ஒரு குறிப்பு

‘சீருடையும் கொங்காணியும்’ அல்லது ‘கொங்காணியின் சொந்தக்காரர்கள்’ என்னும் தலைப்பில் இச்சிறுகதை 1959,1960களில் எழுதப்பட்டது.

நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நண்பர் அமரர் பி.மகாலிங்கம் (மாலி நடத்திய கலீர் கலீர் கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியாகிப் பின்னர் சிலர் திருத்தங்களுடன் தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்கள் வெளியிட்ட ‘தீபம்’ ஈழத்து இலக்கிய மலருக்குத் தபால் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாகப் பிரசுரமாகவில்லை. பிரதிகள் வைத்துக் கொள்ளவில்லை.

அண்மையில் நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் அலுவலகம் மூடப்பட்ட போது ஒருபைலில் (File)நைந்து போய்க் கிடந்த எழுத்துப் பிரதியை மாலியின் சகோதரர் ஊடகவியலாளர் பெ.ராமானுஜம் அனுப்பியிருந்தார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் மாற்றங்கள் எதுவும் செய்யாமல் திருப்பி எழுதியிருக்கின்றேன். அவ்வளவுதான்.

ஒரு காலகட்டத்தில், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வாறு தங்கள் கல்வி வாய்ப்பை இழந்தனரென்பதை இச்சிறுகதையின் மூலமாக வாசகருக்குச் சொல்லியிருக்கிறேன்.


நாவலப்பிட்டியிலிருந்து கொத்மலை ரோட்டில் எட்டாவது மைல் போஸ்ட்டில் ஒரு பஸ் தரிப்பு. தார் ரோட்டிற்கு மேல் ஒரு சிறு மேட்டில், ‘எண்ணெய் டெங்கி’ நிலைத்திருப்பதால், அந்த பஸ் தரிப்பிற்கும் ‘எண்ணெய் டெங்கி’ என்ற பெயரே பிரபலமாகிவிட்டது.

போற பஸ்ஸில் ஏறி எண்ணெய் டெங்கி’ என்று குறிப்பிட்டால்தான், பஸ் கண்டக்டருக்குப் பயணியின் இறங்கும் இடம் விளங்கும்.

அந்த இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு மெல்லிய வளைவில் முப்பது படிகள் ஏறினால் –

தாராளமாக ஐந்து வகுப்புகளையும் உள்ளடக்கிய, ஒரு பென்னாம் பெரிய நீட்டு மண்டபம்.

‘கட்டபூலா தமிழ் கலவன் பாடசாலை’ என்ற பெயர்ப் பலகை பாடசாலையை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும். பாடசாலையை ஒட்டினாற் போல் வீடும், வீட்டைச் சுற்றி ஆளுயரத்திற்கு வளர்த்து, அழகாகக் கத்தரிக்கப்பட்ட சப்பாத்துச் செடி வேலி. மாஸ்டரின் இல்லத்திற்கு முழுப் பாதுகாப்பு அதுதான்.

முன்வாசல் கதவுக்கும், பக்கவாட்டில் யன்னல்களுக்கும், பச்சைத்திரைச் சீலை போடப்பட்டிருக்கிறது.

மாலை ஆறுமணிக்குப் பிறகு, மின் விளக்கைத் தட்டிவிட்டால் பத்துமணி வரைக்கும் ரோட்டிலிருந்தோ, எண்ணெய் டெங்கியி லிருந்தோ பாடசாலையையும் விடுதியையும் பார்க்கும்போது அது கண்கொள்ளாக்காட்சி.

சரியாகக் காலை ஏழேகால் மணிக்குத் தலைமையாசிரியர் முன் வாசலில் நின்று கொண்டிருப்பார். தலைமை ஆசிரியர் என்றதும் உதவி ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் என்று பொருள் அல்ல. தோட்டப்பாடசாலை என்றால் ஒரேயொரு ஆசிரியரும் ஐந்து வகுப்புகளும்தான். ஆசிரியரை மாஸ்டர் என்றும் வாத்தியார் என்றும்தான் அழைப்பார்கள்.

மாஸ்டர் தூய வெள்ளை வேஷ்டி, வெள்ளை சேர்ட், மேல் கோட் அணிந் திருப்பார். காலுக்கு ‘பம்ஸ்’ சப்பாத்து அல்லது லெதர் செருப்பு. தலைக்குத் தேங்காயெண்ணெய் பூசி, சரியாக நடுவில் வகிடு எடுத்து பக்கவாட்டில் வாரி விட்டிருப்பார். ஆள் கருப்புத்தான்.

தோட்டப் பாடசாலை ஆசிரியர் நாயகம் மாஸ்டர், பல தசாப்தங்களாக இப்படித் தான் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டரின் சைகையைச் சிரமேற்கொண்டு காலை மணியை அடித்தான், மாணவத்தலைவன் ராமையா.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும், வகுப்புகளுக்குச் சென்று, அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

இரண்டாம் வகுப்புக்கும், மூன்றாம் வகுப்புக்கும் நேற்று, விளங்கப்படுத்திய எண்கணிதப் பாடத்திலிருந்து, பயிற்சிக் கணக்குகளைக் கரும்பலகையில் எழுதிவிட்டு வந்து, மேசைக் கடிகாரத்தைப் பார்த்தார் நாயகம் மாஸ்டர்.

கீழ்ப்பிரிவுக்கும் முதலாம் வகுப்புக்கும் மொழிப்பாட விளக்கமும், எழுத்து வேலையும் கொடுத்துவிட்டு, நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கு இலக்கண விளக்கமும், மொழிப் பயிற்சியும் கொடுத்துவிட்டு மீண்டும் முதலாம், இரண்டாம்….. மூன்றாம்…… என்று கால அட்டவணையின்படி சுற்றிக் கொண்டிருந்தார்.

மேசைக் கடிகாரமும் அவர் போல் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

ராமையாவும் கடிகாரத்தைப் பார்த்து இடைவேளை மணியை முடுக்கிவிட்டான். அமைதி கலைந்தது.

ஓட்டமும் நடையுமாக இரைச்சலுடன் பிள்ளைகள் திடுதிடுவென்று மைதானத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர்.

காலை உணவுக்கும், தேநீருக்கும் மாஸ்டர் விடுதிக்குச் சென்று திரும்பி வரும் போது இடைவேளை முடிந்திருந்தது.

ஓரிரு நிமிடங்களில் நிசப்தம் நிலவியது. “பெருமாய், மாறி ரெண்டுபேரும் வாங்க பிள்ளைகள்……”

அவர்கள் வந்து நின்றனர்.

“ரெண்டாம், மூன்றாம் வகுப்புகளுக்கு மொழிப்பயிற்சி வேலை கொடுத் திருக்கு…. பிள்ளைகள் சத்தம் போடாம பாத்துக்குங்க…… நா வரும் வரைக்கும்”

கொப்பிப்புத்தகங்களை எடுத்து அவற்றைச் செய்வதில் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.

சிறிது நேரத்தில் மாஸ்டர் வந்து கொப்பிகளைப் பார்வையிட்டுத் திருத்தங்களைச் செய்து விளக்கங்கள் கொடுத்தார்.

“எல்லா மாணவர்களும் எழும்பி நில்லுங்கள். உங்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்….” என்று மாஸ்டர் கூறியதும், மயான அமைதி நிலவியது.

“மாணவர்களே நாளைக்கு பெரியதுரை பாடசாலையைப் பார்க்க வருகிறார். எல்லா பிள்ளைகளும் துப்பரவாக உடுப்பு உடுத்தி வரணும் சரியா…. இப்ப இருந்து பாடவேலைகளை ஒழுங்கா செய்ங்க… நான் வந்து பார்க்கிறன். எல்லா கொப்பிகளும் திருத்தப்பட்டிருக்கணும்….”

சற்று நேரத்திற்குப் பிறகு வந்து கீழ்ப் பிரிவு மாணவர்களுக்கு ராகத்தோடு பாடல்கள் கற்பித்தார். பாரதி பாடல்கள் உட்பட.

அப்புறம், வழக்கம் போல…. ஐந்து வகுப்புகளுக்கும் உரிய மாணவர் வரவு இடாப்புகளை அடையாளப்படுத்திவிட்டு மணியைப் பார்த்தார்.

எழுந்து தலை நிமிர்ந்து நின்று முழு மண்டபத்தையும் ஒரு பார்வை.

“ராமையா….. பெரியசாமி….” என்று சொன்னதும், வழக்கம் போல அவர்கள் கீழ்ப்பிரிவு மேற்பிரிவு…. முதலாம் வகுப்பு மாணவர்களை ஒழுங்காக வரிசைப் படுத்தி…. வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பிவிட்டு வந்தனர்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் மாஸ்டர் வகுப்பு வாரியாகப் பயிற்சிப் புத்தகங்களைப் பார்வையிடவும், திருத்தங்கள் செய்யவும் தொடங்கினார்.

கால அட்டவணையின் பிரகாரம் இப்பொழுது நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடவேளை.

மாஸ்டர் அவ்வகுப்புகளை இணைத்து இரண்டாம் நாளாக ஆங்கில மொழியில் வினைச்சொற்களைப் பற்றிய விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

தோட்டப் பாடசாலை மாணவர்கள் ஆங்கில பாடத்தில் பின்தங்கிவிடக் கூடாது என்ற கரிசனை மாஸ்டருக்கு.

மாஸ்டரின் திட்டப்படி ஒரு பாடவேளையை எடுத்துக் கொண்டால், பாட விளக்கத்திற்குப் பதினைந்து நிமிடங்கள் மாணவர்கள் சுயமாகப் பயிற்சி வேலைகளைச் செய்து முடிப்பதற்குப் பதினைந்து நிமிடங்கள். மிகுதி பதினைந்து நிமிடங்கள் திருத்தங்கள் செய்வதற்கு. இது மாஸ்டரின் கற்பித்தல் ஒழுங்கு.

ஒரு நாளின் அனைத்துக் கற்பித்தல் விடயங்களையும் வெற்றிகரமாக முடித்து விட்டு இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களையும் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு இன்றைக்கு நான்கையும் ஐந்தையும் உட்காரச் செய்துவிட்டு மனம் விட்டுச் சுதந்திரமாக உரையாட விரும்பினார் மாஸ்டர்.

“மாணவர்களே! இப்ப உங்கள்ள யாரு யாரு டவுன் ஸ்கூலுக்குப் போகப் போறீங்க என்று பார்க்கணும்….”

ஒரு சில மாணவர்கள் கையுயர்த்தி விருப்பத்தைத் தெரிவித்தனர்.

“பெருமாய், மாறி, வயசு காரணமா எப்படியும் போக ஏலாது. ஆண்கள்ள சுந்தரும், தொரராஜூம் போக ஏலாது…..”

ஒங்க அப்பா அம்மா சரியான வயதில் கொண்டாந்து பள்ளிக் கொடத்தில சேர்த்திருந்தா ஒங்க தலையெழுத்து மாறியிருக்கும். ஆனா ஏதோ ஒன்று தடுத்திருக்கு. சரி நீங்க என்ன செய்வீங்க…. செக்ரோலில் பெயர் பதிஞ்சி கொங்காணிக்கு தலைவணங்கி வேலக்கி போறத தவிர, சீருடை, டவுன் ஸ்கூல் மேல் படிப்பு எல்லாமே பகல் கனவு.

“பெருமாயும், மாறியும் ஓய்வா சும்மா இருக்கிற நாள்ள வந்து வழக்கம் போல கும்மிப்பாட்டுக்கு உதவி செய்ங்க.”

“சேர் நான் பொடவைக் கடையில் வேலைக்குப் போகப் போறன்….” இது தொரராஜ்,

இப்படியாக –

“சேர் நான் கட்டாயம், டவுன் ஸ்கூலுக்குப் போகணும்….” தேவகி.

“பொறுங்க……. பொறுங்க…. ஏழு பேருக்குடவுன் ஸ்கூல்ல ஆறாம் வகுப்பு படிக்க தகுதியிருக்கு. அவங்க யாருன்னாவடிவு, ரேவதி, தேவகி, ராமையா, பெரியசாமி…. மலையப்பன், செல்வராஜ். இந்த ஏழுபேரும் போவீங்களா…..?”

வடிவு எழும்பி நின்றாள்.

“என்ன வடிவு….?”

“நா போறது சந்தேகம் சேர்….” என்றாள் மிகுந்த கவலையுடன்.

“ஏன்…?”

“அப்ப மத்தவங்க எல்லாரும் போறீங்க….சந்தோஷம்…”

“வடிவு……! கூடிய மார்க்குகள் எடுத்து எப்பவும் வகுப்பில் முதலாவதாகவும் வந்து… இப்ப திடீரென்று என்ன வந்திச்சி ஒனக்கு…?”

“எனக்கு தொடர்ந்து படிக்கத்தான் சேர் ஆசை….. நான் கஷ்டப்பட்டதும் அதுக்குத்தான் சேர்..ஆனா..ஆனா…வீட்டு நிலம் அதான் சேர் ரொம்ப கவல…”

“அப்படி இல்ல வடிவு…நீ எப்படியும் அழகாக சீருடை உடுத்தி…ஆறாம் வகுப்புக்கு…படிக்கத்தான் போகணும்…கட்டாயம் போறே…சாயங்காலம் அப்பாவ வந்து என்னப் பார்க்க சொல்லு…..”

“ரொம்ப தேங்ஸ் சேர்…இன்னக்கே வர சொல்றன்…”

அன்று மாலை ஐந்து மணிக்கு அலுவலக மேசைக்கு முன்னால் வந்து நின்றான் ரத்தினம் தேவர்.

சிறிது நேரத்தில் நாயகம் மாஸ்டர் விடுதியிலிருந்து வந்தார்.

“மாஸ்டர் வரச் சொன்னீங்களாம்…”

“ஓ புள்ளய டவுன் ஸ்கூலுக்கு அனுப்ப வசதி இல்லன்னு சொல்லியிருக்கே?”

“ஆமா சேர் அவதாய்க்காரி சீக்காளி. ஒழுங்கா வேலக்கி போக ஏலாது. ரொம்ப கஷ்டம். அதான் வடிவுக்கு இப்ப வயசும் சரி. செக்ரோல்ல பெயர் பதியலான்னுதான்…..”

“உங்க கஷ்டம் எனக்கு வெளங்குது. என்னதான் இருந்தாலும்…இது ரொம்ப அநியாயம் ரத்தினம். படிப்பில் அவ பெரிய கெட்டிக்காரி.”

“தெரியுங்க…மாஸ்டர்…ஆனா…?”

“இப்ப நீ ஒண்ணும் பேசாதே ரத்தினம், நா சில யோசினகள சொல்றன், அப்புறம் ஒங் இஷ்டம்..நல்லா கேட்டுக்க…யோசிச்சு ஒரு முடிவ வந்து சொல்லணும்”

“வருஷா வருஷம் ஓம் மகளுக்கு தேவயான சப்பாத்து சீருடைய வாங்கித்தாரது என் பொறுப்பு….

இல்லாட்டி போனா மகள எங்க வீட்ல விட்டுடு…நாங்க எல்லாத்தையும் பாத்துக்குவம், நீ ஒரு சதமும் குடுக்கத் தேவல்ல…

இன்னொரு வழி இருக்கு. அதாவது ராமேஷ்வரத்தில் எங்கட வீட்ல விட்டு படிப்பிக்கலாம். ஒனக்கு ஒருசெலவும் இல்ல…ஒனக்கு தெரியும் என் மூத்த மகள் ஊர்ல பட்டப்படிப்பு படிக்கிறா..அவ லீவுக்கு இங்க வார நேரமெல்லாம் ஓம் மகளையும் கூட்டிக் கொண்டு வருவா.. சரியா..? நீ இப்ப வீட்டுக்கு போய் எல்லாரோடயும் பேசி ஒங் குடும்பம் எடுத்த முடிவ…வந்து சொல்லணும்…அவசரப்படத் தேவை இல்ல…”

நாயகம் மாஸ்டர் இந்திய வம்சாவழி. பி.யூ.சி. வரைக்கும் படித்தவர். தசாப்தங்களுக்கு முன் சட்டபூர்வமாக இங்கு வந்து குடியேறித் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு, கற்பித்தலை ஒரு சேவையாகக் கருதி செய்து கொண்டிருப்பவர். மலையகக் கல்வித்துறையில் மாணவர்களை உயர்த்த வேண்டுமென்பதே அவரது குறிக்கோள்.

சொல்லிவைத்தாற் போல மறுநாள் காலை 10.30 மணிக்கு பெரியதுரையும் கண்டக்டர் ஐயாவும் பிரசன்னமாகி, மாஸ்டருடன் வகுப்புகளை பார்வையிட்டனர்.

கீழ்ப்பிரிவுகளை பார்வையால் அளந்துவிட்டு மூன்றாம் வகுப்புக்கு வந்தார்கள்.

ஒரே பார்வையில் வயதையும் வளர்ச்சியையும் பார்த்து, “இரண்டு பேர் ஓவரேஜ்’ என்பதை கண்டுபிடித்து, ஐந்தாம் வகுப்பில் இருக்க வேண்டியவர்கள்…. ஆனால் பயிற்சிப் புத்தகங்களில் திறமையாக வேலை செய்திருக்கிறார்கள்…’ என்ற முடிவுடன் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கொப்பிப் புத்தகங்களுடன் வந்து வட்டமாக நிற்குமாறு கண்டக்டரையா பணித்தார்.

பிள்ளைகள் தம் பெயர்களையும் வயதையும் மிகத் தெளிவாக உச்சரித்தனர். அதிகாரிகள் கொப்பிப் புத்தகங்களையும் பார்வையிட்டனர். நுணுக்கமாக அவதானித்து அவர்களை வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு பெரியதுரையும் கண்டக்டர் ஐயாவும் கலந்துரையாடி, மதிப்பீட்டை நிறைவு செய்து கொண்டனர்.

ஒவ்வொருவரது குடும்பப் பின்னணியும் கண்டக்டர் ஐயாவுக்கு வெளிச்சம்.

மாஸ்டரும் மிக நுணுக்கமாக அவதானித்துக் கொண்டார்.

ஒருவாரம் இரண்டு வாரம் என்று நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

‘ரத்தினம் தேவரை ஸ்கூல் பக்கத்துக்கே காணல்ல….’

ஒரே ஒரு நாள் எண்ணெய் டெங்கிகிட்ட பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்ததை மாஸ்டர் கண்டார். மாஸ்டரைக் கண்டதும் அவன் தலை மறைவாகி…. பஸ் வந்ததும் ஏறியிருக்க வேண்டும்.

‘மகளின் படிப்பு விடயமாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்களோ….. தெளிவில்லை …’

பாடசாலையில் மகள் வடிவு சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தாள். மாஸ்டர் ஒன்றும் கேட்கவில்லை.

‘சும்மா மனம் நோவிக்கக் கூடாது’ என்று நினைத்திருப்பார்.

“எங்கள பல தசாப்தங்களுக்கு முன் தென்னிந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வந்தது கூலி வேலைகளுக்குத்தான். சீருடை உடுத்திப் பாடசாலை களுக்குப் போய் வருவதற்கு இல்ல” என்பதை ரத்தினம் குத்திக்காட்டுகிறானோ! என்னவோ, பொறுத்துத்தான் பார்க்கணும் … எதிர்நீச்சல் போடத் தெரியாத அப்பாவிக் கூட்டம்.”

திடீரென்று ஒருநாள் கண்டக்டர் ஐயா பாடசாலைக்குள் நுழைந்தார்.

“மாஸ்டர் எப்படி…..?”

“எல்லாம் நல்லதுதான்….”

“ஒங்களுக்கு கொஞ்சம் வேலை கொறையுது”

“எப்படி….?”

“ஸ்கூல்ல இருந்து பன்னிரண்டு பேர செக்ரோல்ல பெயர் பதிய தெரிவா யிருக்கு….”

“இதுக்குத்தானே அண்டக்கி நீங்களும் தொரெயும் ஸ்கூலுக்கு பார்வையிட வந்தீங்க”

மாஸ்டரின் உள்மனம் குமுறியது. பேச்சு வரல்ல.

“சும்மா…. ஒரு சம்பிரதாயத்துக்காக……”

“ஒங்க லிஸ்ட்படிக்கு யாரு…. யாரு?” என்று ஒரு வினாவைத் தொடுத்தார்.

“மாறி, பெருமாய், தேவகி….. சுந்தர், தொரராஜ்….. என்று….”

“அப்ப வடிவு…..?”

மாஸ்டர் ஆர்வத்துடன் வினவினார்.

“மாஸ்டர் கொஞ்சம் இப்படி வாங்க. நா ஒங்களுக்கு ஒரு விசயம் சொல்லனும்……”

கண்டக்டரையா, மாஸ்டரை ஒரு பக்கத்திற்கு அழைத்துச் சென்று-

“நேற்றுரத்தினம் என் வீட்டுக்கு வந்து…கால்ல விழுந்து வணங்கிட்டான்…..”

“ஏன்…?” ஒருகணம் மாஸ்டர் அசந்து போய்விட்டார்.

ரத்தினம் அழாத குறையாக முறையிட்டான். “…எப்படியும் மகள் செக்ரோல்ல பேர் பதிங்க ஐயா… மாஸ்டர் சொல்றது நல்ல விசயம்தான்…. ஆனா ஐயா எங்கட நிலம்….. சம்சாரம் காமாட்சி நிலம ஒங்களுக்கு தெரியுந்தானே! இன்னும் இரண்டு மாசத்துக்கு மேலே துப்பரவா அவளால ஒரு வேலையும் செய்ய ஏலாம போகும், அப்ப நாங்க என்ன செய்றதுங்க…. வடிவு நாலு காசி சம்பாதிக்கிற வயசில இப்ப என்னத்துக்கு படிப்பு… இரண்டு தம்பிமார் இருக்கிறாங்க… இன்னும் பள்ளிக் கொடத்துக்கு விடல்ல…”

“ரத்தினத்தின் முறைபாடு எனக்கும் ஞாயமாத்தான் படுது…நீங்க என்ன சொல்றீங்க மாஸ்டர்…?”

“படிப்பிச்ச ஆசிரியர் என்ற முறையில் சில யோசனைகள் சொன்னேன்…. இனி அது தாய் தகப்பன் விருப்பம்….நா தலையிட இல்ல…”

அன்று வேலைக்குப் போன வடிவின் தாய் அரைநாளோடு திரும்பிவிட்டாள், மலையேறி கொழுந்து எடுக்க முடியாத நிலையில்.

வந்ததும் கொழுந்துக் கூடையை வெளி விறாந்தையில் தொங்க வைத்தாள். கொங்காணியை மடித்து கூடையில் செருகினாள். பாயை விரித்துச் சுருண்டு படுத்துவிட்டாள்.

பகல் உணவுக்கு சங்கு ஒலித்ததும் ரத்தினம் தேவர் பதறியடித்துக் கொண்டு வந்தான்.

“இஞ்ச…சுருக்கா வா…டாக்டரையா போகப் போறார்…மருந்தெடுத்து வந்துருவோம்…”

‘மருந்து மாத்திரைகளை எடுத்து திரும்பிலயத்துக்கு வந்தபோது, பாடசாலை யிலிருந்து வந்த வடிவு, மேல்லயத்திற்குச் சென்று தம்பிமாரயும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள்.

“இந்தா பார் வடிவு…. நாளையிலிருந்து நீ பள்ளிக் கொடத்துக்கு போகத் தேவயில்ல. ஒன்னோட…பன்னிரண்டு பேர் வேலக்கி…கைகாசி செக்ரோல்ல’

பெயர் பதியப் போராங்க….மாஸ்டர்கிட்ட சொல்லிட்டேன்….ஒனக்கு அடுத்த மாசம் டவுன் ஸ்கூலுக்கு அனுப்ப சீருடை வாங்க வச்சிருந்த சல்லிய குடுத்தார்.”

கவலையை குறைப்பதற்காக வடிவின் அம்மா கண்கலங்கியிருந்தாள்! கூடையில் செருகியிருந்த கொங்காணியை எடுத்து சவர்க்காரத் தண்ணீரில் ஊறவைத்து, தேய்த்துக் கழுவி வெய்யிலில் காயப் போட்டாள்!

வடிவுக்கு இனி பாடசாலையை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

ஆறாம் வகுப்புக்குப் போக சகல தகுதிகள் இருந்தும், விதி விளையாடி விட்டது.

அன்று விடியலில் வடிவின் அம்மாயி’ அழுது புலம்பினாள்.

“மாஸ்டர் அவ்வளவு சொல்லியும்…நா என்ன புள்ள செய்றது? உன்ன மேலே படிக்க வைக்க ஏலாம போச்சே…! இந்தப் பாவியாலதான் உன் படிப்பு நாசமாப் போச்சி…”

“இந்தா…சும்மா அழுது தொலைக்காம மொத மொதல்ல புள்ளய சந்தோஷமா வேலக்கி அனுப்பிவைக்கிறியா…”

வடிவுக்கு அழுது முகமும் கண்களும் சிவந்திருந்தன.

அம்மாயி கழுவிக் காயப் போட்டிருந்த கொங்காணியைத்தான் மகளின் தலையில் கவிழ்த்தி சரி செய்துவிட்டாள்.

‘பெரட்டுக் களத்தில் அந்தப் பன்னிரண்டு பேரும் வரிசையாக நின்றனர்.

கொங்காணிகளைப் போடுவதும் கழற்றுவதும், ‘கொங்காணி மடிப்பு’ மடிப்பதிலும் ஒரே தடுமாற்றம்.

புல்லுவெட்டு கங்காணி’ என்று கூப்பிட்டார் கண்டக்டர் ஐயா.

வீரப்பன் முன்னுக்கு வந்து நின்றான்.

“கங்காணி இவக புதுசுங்க. ‘ஆயுதகாம்பராவிலிருந்து பன்னிரண்டு புது ‘சொரண்டிகள் எடுத்துக் குடுங்க…கைகாசு செக்ரோலில்தான் ‘பேர்’ போடுறது. பன்னிரண்டு மணி சங்கு ஊதினதோட அனுப்பி விடுங்க….நாலுமணிக்கு மடுவத்துக்கு வரணும் பேர் போடுறதுக்கு…”

வீரப்பன் கங்காணி அவர்களைப் பொறுப்பெடுத்து, மலைக்கு அழைத்துச் சென்றார்.

வடிவு புல்லுவெட்டு மலையில் ஏறிக்கொண்டிருந்தாள்.

சீருடையை இழந்த அவளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக மலைக் குளிர்க்காற்றில் அசைந்து கொண்டிருந்தது அவள் போர்த்தியிருந்த கொங்காணி.

– ஞாயிறு தினக்குரல் 23.02.2014

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *