(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?’ – பழமொழி.
விரை ஒன்று போட்டு, அதிலிருந்து சுரை முளைக்கச் செய்வது மட்டுமல்ல; பரங்கிப் பூ பூக்க வைத்து, பீர்க்கங்காய் காய்க்கும்படி செய்து, வெள்ளரிப்பழம் பழுக்கும்படி பண்ணுகிற அற்புத வித்தை பூலோகத்தில் நடைபெறுகிறது. அதுதான் சினிமா. – யுகதர்மம்.
விரை தூவு படலம்
டைரக்டர் புரட்யூஸர் ஸ்ரீமான் சோணாசலம் சினிமாப் படம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார். தாங்களும் சேர்கிறோம் என்று சில நண்பர்கள் அவர் கூடப் பணம் போட முன் வந்தார்கள். ஒரு மாதிரியாக, இன்னின்ன ஸ்டார்கள்தான் நடிக்க வேண்டும் என்று பேசி முடித்தார்கள்.
‘ஸேரி, எந்தக் கதையை படம் பிடிக்கலாம்?’ என்று ஆராய்ந்தார்கள். பெரிய எழுத்துப் புராணங்களை யெல்லாம் துருவி ஆராய்ந்து கைவிட்டுவிட்டு, வெற்றிகரமாக ஒடுகிற எந்தப் படத்தையாவது காப்பியடிக்கலாமா என்று ஆலோசிக்கும் நிலையை எய்தினர்.
‘சாகாத காதல்’ சிறந்த கதை என்று பட்டது. கதைப் பொறுப்பு சோணா அவர்களிடமே ஒப்புவிக்கப்பட்டது. சோணா இரவு பகலாக உட்கார்ந்து அதையும் இதையும் பார்த்து ஒரு தினுசாகக் கதையை உருவாக்கினார்.
கதை ஆச்சு. வசனம் எழுதியாக வேண்டாமா? அதற்கு ஒரு ஆளைத் தேடிப் பிடித்தார்கள். அவர் கதையைப் படித்துப் பார்த்தார்.
‘கதை எப்டி?’
‘ரொம்ப அபாரம், ஸார்!’
‘நானே எழுதினேன்’ என்று கனைத்தார் முதலாளி டைரக்டர்.
‘அதனாலே தான் அபாரமா அமைஞ்சிருக்கு’ என்று கூடச் சேர்ந்து கனைத்தார் வசனகர்த்தா ‘கோவலன்’.
கதையின் பெயர்தான் ‘சாகாத காத’லே தவிர, கதையில் ஒரு டஜன் சாவுகள் வருகின்றன. எல்லா சினிமாக் கதைகளையும் போலவே, இதுவும் கதாநாயகனும் நாயகியும் கோவணமும் அரைமுடியும் கட்டித் தவழ்ந்து விளையாடுகிற பிராயத்திலேயே ஆரம்பமாகி விடுகிறது. இருவரது பெற்றோர்களும் ‘இது தான் மாப்பிள்ளை. இது தான் பொண்ணு’ என்று பேசுகிறார்கள். பிறகு வேட்டி கட்டிய பயலும், பாவாடை கட்டிய ‘புள்ளெ’யும் ஒன்றாகச் சேர்ந்து, புருஷன் பெண்டாட்டி விளையாட்டு விளையாடுகிறார்கள். இப்படி வளர்கிறது கதை.
இருவரும் பெரியவர்களாகி விடுகிறார்கள். காதல் கருங்கல் பாறைமாதிரி வளர்ந்துவிட்டது. வழக்கம் போல், பெண்ணின் பெற்றோர்கள் வேறிடத்தில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். பையன் ‘அவளை எப்படியும் திருமணம் செய்தே தீருவேன். எங்கள் காதல் சாகாது’ என்று சொல்கிறான்.
ஆனால் கல்யாணம் நடந்து விடுகிறது. மணமகன் பிணமகனாகிறான். திருடர் கூட்டம் வந்து மாப்பிள்ளையைக் கொன்றுவிட்டது. திருடர் தலைவன் பெண்ணை அபேஸ் செய்துகொண்டு ஓடிவிடுகிறான். கதாநாயகன் என்ன இதுவரை துங்கிக்கொண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? மாப்பிள்ளையை திறமையாக ஒழித்துக்கட்ட வழி என்ன என்று கேட்டு காளி தேவியை நினைத்து பூஜை செய்தான். காளி வந்தாள். ‘துார தொலைவிலே உள்ள விஷப் பூ ஒன்றை எடுத்து வந்து கல்யாணப் பரிசாக மணமகனுக்குக் கொடு. அதை மோந்து பார்த்ததுமே ஆள் ‘அவுட்டாயிடுவான்’ பிறகு சுபம், மங்களம்தான்’ என அருள் புரிந்தாள்.
விஷப் பூ தேடிப் போன காதலனுக்கு எவ்வளவோ விபத்துகளெல்லாம் வருகின்றன. கத்திச் சண்டை, சிலம்படி, துள்ளல், தாவல், கொல்லுதல்களுக்கெல்லாம் தாராளமாக இடம் வேண்டாமா? ஒருமட்டும், விஷப் பூ கொய்து எடுத்து வரும்போது தான் காதலிக்குக் கல்யாணம் நடக்கிறது என அறிந்தான் அவன். வேகமாக ஓடிவந்தான். அதற்குள் மணமகன் காலி! காதலி அபேஸ்!
அவ்வளவுதான். மாயமாகக் கிடைத்த குதிரை மீது ஏறி, திருடனைப் பிடிக்க ஒடுகிருன், காதலன். தனியாகத்தான். இரவு எல்லோரும் தூங்கும்போது ஒவ்வொருவர் மூக்கிலும் விஷமலரைக் காட்டிவிடவே, அத்தனைபேரும்’ குளோஸ்!’
‘நாதா. நீங்களா?’ என்று துள்ளித் தாவுகிறாள் புள்ளி மயில். எதிர்பார்த்த முத்தம்!
‘ஆ, இதென்ன அழகான புஷ்பம்!’ என்று பிடுங்க முயல்கிறாள் காதலி. அவன் கொடுக்க மறுக்கவே இவள் கோபம் கொள்கிறாள். எங்கிருந்கோ வந்த அம்பு அவளை ‘சட்னி’ யாக்கி விடுகிறது; அவன் ஒப்பாரி கீதம் பாடுகிருன்.
‘அழாதீர் அன்பரே! அவள் செத்தாள். நான் இருக்கிறேன்’ என்று முன்னே வந்து நின்றாள் பச்சை மயில் வடிவத்தாள் – பதுமை போன்றாள்!
அவன் விஷப் பூ தேடப் போனபோது வழியில் அகப்பட்ட சரக்கு இது கிடைத்தவரை லாபம் என்று காதல் பண்ணி மகிழ்ந்த கதாநாயகன், காதலியைக் கைவிடப் பார்த்தான். அவள் விடுவாளா? தேடிவந்து ஜோடிப் புறாவைக் கொன்று போட்டுக் கூடிவிடத் துடித்தாள்.
“இந்த அழகான மலரை அவளுக்கா கொடுக்க நினைத்தீர்கள்?’ என்று ஆசையோடு எடுத்து மோந்தாள். அந்தோ, அவளும் சிவலோக பிராப்தி அடைந்தாள்.
கதாநாயகன் எங்கள் காதல் சாகாது. இது சாகாத காதல், என்று ஒரு மைல் நீள லெக்சரடித்து ‘கொசுருக்கு’ ஒரு பாட்டும் பாடிவிட்டு விஷமலரை மோந்து பார்த்து விழுந்து சாகிறான்.
‘இதற்கு விஷப் பூ என்று பெயர் வைக்கலாமே’ என்றார் வசனகர்த்தா.
‘கூடாது கூடாது. காதல் – அதிலும், சாகாத காதல் – என்றால் தான் கும்பல் கூடும். மாஸ் மைண்டு எங்களை மாதிரி பீல்டிலே இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும்’ என்று சொன்னார் டைரக்டர் முதலாளி சோணாசலம்.
மூளை காண் படலம்
சில மாதங்கள் ஒடிவிட்டன. ‘சாகாத காதல்’ பட விளம்பரங்கள் சில வந்தன. வசனகர்த்தா எல்லாம் எழுதி முடித்து விட்டார். எனினும் படம் பிறக்கவில்லை.
திடீரென்று ஒருநாள் பட முதலாளி வசனகர்த்தாவிடம் சொன்னார்:
‘நீங்க எழுதியிருக்கிறது சரி. ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா சில சீன்களே மாற்றியாக வேணும். நாங்க எல்லோருமாகக் கூடி யோசித்ததிலே இந்த முடிவுக்கு வந்தோம்.’
‘அதுக்கென்ன! திருத்தினால் போச்சு!’ என்றார் ‘கோவலன்’. அத்துடன் சிறிது ‘முந்திரிக்கொட்டைத் தன’மும் செய்தார்: ‘என்ன திருத்தம்? சின்னப்பிள்ளைகளாக இருந்தே கதை ஆரம்பிக்கிறதே. அதைவிடப் பெரியவர்களாக வளர்ந்த பிறகிருந்து…’
‘சேச்செச்சே!’ என்று குறுக்கிட்டார் சோணா. அது அப்படியே இருக்கவேண்டியதுதான். அதிலே கூட எட்டு வயசுப் பையனும் ஆறு வயசுப் பெண்ணும் தோட்டத்திலே சந்திச்சு லவ் டயலாக் பேசும்படியாக…’
‘லவ்வா! எட்டு வயசுப் பையனுக்கும் ஆறு வயசுப் பெண்ணுக்குமா? நடக்க முடியாதே ஸார்!’ என்று அங்கலாய்த்தார் வசனகர்த்தா. ‘நடக்குது ஐயா, நடக்குது. ஹிந்தியிலே அமர காதல்னு ஒரு படம் வந்துதே. அதை நீங்க பார்க்கலே போலிருக்கு மாஸ் மைண்டு இருக்குதே…’
‘சரி சரி. அப்படியே எழுதிப்போடுவோம்.’
‘இன்னைக்கு ராத்திரியே நீங்கள் எழுதிக் கொடுத்திரனும். நாளன்னைக்கு ஷூட்டிங் வச்சிருக்கோம்!’
‘அதெல்லாம் எழுதிவிடலாமுங்கேன்!’
‘அது சரி. வேறே சில கரெக்ஷன்ஸ் செய்யணும்’
‘சொல்லுங்க’.
‘கள்வர் தலைவன் வந்து மாப்பிள்ளையைக் கொல்றதை விட, காதலனே கத்திச் சண்டை செய்து கொன்றால் நல்லாயிராது?’
‘அப்போ விஷப் பூ?’
‘ஒ, அது வேறே இருக்கு பார்த்திகளா! ஆனாக் கடைசியிலே காளிதேவி வந்து செத்தவங்களையெல்லாம் பிழைக்க வச்சிடுறாள்னு எழுதணும்’.
‘இதென்ன கஷ்டம்! எழுதிவிடலாம் ஸார். திருட்டுப் பசங்க, மணமகன், அவன் இவன் எல்லோரையுமே பிழைக்க வச்சிடுவோம்’.
‘சேச்சே! நீங்க என்ன! மாஸ் மைண்டு தெரியாமப் பேசுறீர்களே! காதலன், காதலி, வடிவழகி மூணுபேரு மட்டுமே பிழைக்கனும். இவங்களைத்தான் காளி உயிர்ப்பிக்கணும்’.
‘சரிதான்’.
‘கடைசியிலே, ஒரு லவ் ஸீன் பிரமாதமா இருக்கனும் டயலாக் என்ன?’
‘ஒ யெஸ் ஸார்’.
சுரை எழு படலம்
பல மாதங்கள் பறந்தோடின. சில ஸீன்கள் ஷூட்ட்டிங் நடந்து டப்பாவில் பிலிம் சுருள்கள் தூங்கின.
சோணாசலம் சொன்னர்: ‘கதையை எவ்வளவோ மாற்றிவிட்டோம். திருடனுக வரும் காட்சிகளையே நீக்கிவிட்டோம். மணமகனுக்கு பிறவியிலேயே ஒரு வித வலிப்பு இருந்தது. அதனுல் அவன் செத்துப் போனான். புஷ்பம் எடுத்து வந்த காதலனை வடிவழகி காதலிக்கிறாள். அவனை விடமாட்டேன் என்கிறாள். முதல் காதலி புள்ளிமயிலிக்குக் கல்யாணமாகிவிட்டது என்று சொல்கிறாள். ஒருநாள் காதலன் வேட்டைக்குக் கிளம்புகிறான். அங்கே கானக்குயிலியைக் கண்டு கருத்தழிகிறான். காமுற்று அவளே அணையத் தாவும் போது சிலையாகிவிடுகிறான் புள்ளிமயிலி காதலனைத் தேடி வருகிறாள். சிலை தென்படுகிறது. இனம் கண்டு துயருற்று மூர்ச்சையாகிறாள். காளிதேவி கருணை கூர்ந்து சிலையை மனிதனுக்குகிறாள். அவன் மயிலியை அள்ளியெடுத்து ‘அடி புள்ளியே, என் உள்ளம் கவர் கள்ளியே! வள்ளி மடமானனைய புள்ளிமயிலியே’ என்று ஒரு பாட்டுப் பாடுகிறான். இந்தப் பாட்டு ரொம்பப் பிரமாதம், போங்கள்! நம்ம ஹீரோத் தம்பி ரொம்ப ஜோராகப் பாடியிருக்குது…இதுக்குள்ளாற, வடிவழகி வந்து, கோபம் கொண்டு அம்பெய்து மயிலியை தொலைத்து விடுகிறா. பிறகு ஒரிஜினல் கதை மாதிரித்தான்…படம் வந்ததும் பாருங்களேன் பிரமாதமாக இருக்கும்’.
பரங்கி வளர் படலம்
‘சாகாத காதல்’ விதை ஊன்றி ஒரு வருஷம் முடிந்துவிட்டது. ஏறக்குறைய பாதிப் படம் தயாராகி விட்டது என்று சொல்லிக் கொண்டார்கள். ஒன்றிரு விளம்பரங்கள் பத்திரிகைகளில் தலைகாட்டின.
சோணாசலம் ‘கோவல’னிடம் கூறினார்:
‘எவ்வளவோ மாறுதல்கள் செய்திருக்கிறோம். நீங்க எழுதிக் கொடுத்ததிலே எவ்வளவோ திருத்தங்கள் செய்திருக்கிருேம். சில ஸீன்களே விட்டிருக்கிருேம். புதுசா வேறே சேர்த்துமிருக்கிறோம். புள்ளிமயிலியை வடிவழகி கொல்ல வேண்டாம். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் நடக்கிற மாதிரி எழுதணும். மாஸ் மைண்டு அதை ரொம்ப் ரசிக்கும். குலேபகாவலியிலே சக்களத்தி போராட்டம், சகல பேருக்கும் கொண்டாட்டம்னு வருமே, அது மாதிரி ரொம்ப ஜோராக எழுதுங்க.’
பீர்க்கங்காய் படலம்
இரண்டு வருஷங்களுக்குப் பிறகு.
‘இன்னும் இரண்டு மாதங்களில் ‘சாகாத காதல்’ வெளியாகி விடும்’ என்று விளம்பரங்கள் கூறின.
‘முக்கால்வாசிக்கு மேலேயே முடிந்து விட்டது.இன்னும் கொஞ்சம் தானிருக்கு. கதாநாயகனுக்கு ஒரு நண்பனை சிருஷ்டிச்சு, அவனுக்கு ஒரு காதலியையும் உண்டாக்கியிருக்கிருேம். நம்ம நகைச்சுவை டிக்டேட்டர் தான் நண்பனாக நடிக்கிறார். அவர் ஜோடிதான் அவருடைய காதலி. அவருக்குத் தேவையான கதை, வசனத்தை அவரே எழுதிக்கிட்டாரு…நீங்கள் எழுதினதிலே சிலதை விட்டுவிட்டோம். சில இடங்களில் புதுசாச் சேர்ந்து…படம் வந்ததும் பாருங்களேன். பிரமாதமாக இருக்கும்’ என்றார் சோணா.
‘சரிதான்’ என்று இழுத்தார் வசனகர்த்தா ‘கோவலன்’.
வெள்ளரி பழுத்த படலம்
இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு, தடயுடலாகத் திரையை எட்டிப் பார்த்தது ‘சாகாத காதல்’.
படத்தைப் பார்த்த கோவலன் தியேட்டரிலேயே மூர்ச்சை போட்டு விழாமலிருந்தது அவர் உடலின் – உள்ளத்தின் தெம்பு அதிகம் என்பதைப் புலணாக்கிற்று.
ஆரம்பத்தில் எழுதியிருந்த கதைக்கும், திரையில் வந்திருந்ததற்கும் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம்! எத்தகைய வித்தியாசம்!
பல இடங்களில் ஒலித்த வசனம், தான் எழுதியிருந்ததுதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது அவருக்கு. அவர் எழுதிக்கொடுத்த வரிகள் சில, வார்த்தைகள் பல, அங்கங்கே ஒலிக்காமற் போகவில்லை!
விஷயமறிந்த ‘கோவலன்’ முனங்கிக் கொண்டார்: ‘இங்கு மட்டுமென்ன! ஹாலிவுட்டிலும் இதே கதைதான். முதலாளிகள் வைத்தது குடுமி. அவர்களாகவே சிரைத்துவிடுவது மொட்டை உலக வழக்கமே இது. நாமென்ன செய்ய முடியும்?’
– 1950
– ஆண் சிங்கம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை.