டமாருக்கு நாய்கள் என்றாலே ஆவாது. நைட்டு சரக்கடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு வரும்போது இருட்டில் தெருவில் தூங்கும் சொறிநாய்களை மிதித்துவிடுவான். ஒரு குடிகாரனுக்கு இதற்கு கூட உரிமையில்லையா என்ன? உயிரே போய்விட்டது போல அந்த நாய்கள் ‘வாள் வாளென்று’ கத்தி அதனாலேயே அவனுக்கு பலமுறை போதை தெளிந்துவிடும். மறுபடியும் போய் ஒரு கட்டிங் அடிக்க வேண்டும்.
இந்த மேட்டராலேயே நாய்கள் மீது கொலைவெறி ஏற்படும். எங்கு எந்த நாயைப் பார்த்தாலும் குறிபார்த்து கல்லால் அடிப்பதை டமாரு ஒரு வேண்டுதலாகவே செய்து வந்தான். கல்லை கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி நம்மாளுக்கு பொருந்தவே பொருந்தாது. நாயை அடிப்பதற்காகவே பாக்கெட்டில் ரெண்டு, மூன்று கல்லு எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பான். அதிலும் குறிப்பாக நடுரோட்டில் நாலு பேர் பார்க்க காதலிக்கும் நாய்களையும், தெருவோரத்தில் எதையாவது தின்னும் நாய்களையும் பார்த்தால் கூடுதல் ஆர்வத்தோடு அடிப்பான்.
டமாரும் ஒரு காலத்தில் நாய் வளர்த்தவன் தான். சூப்பர் ஸ்டாரின் தாய்வீடு படத்தைப் பார்த்தவன் அதுபோலவே ஒரு நாய் வளர்க்க ஆசைப்பட்டான். இராம. நாராயணன் படங்களில் நாய்கள் செய்யும் சாகசங்களை கண்டவன் நாய் இனத்தை நேசிக்க ஆரம்பித்தான். ஒரு கார்த்திகை மாத மழைநாள் இரவில் சாய்பாபா கோயில் வாசலில் ஒரு நாய் நாலு குட்டி போட்டது.
பெரிய நாய்க்கு தெரியாமல் ரகசியமாக ஒரு குட்டி நாயை அபேஸ் பண்ணிக் கொண்டு வந்து சீராட்டி, தாலாட்டி வளர்த்தான். காலையில் டீக்கடைக்கு போகும் போது நாலு பொறை வாங்கிப் போடுவான். ஊட்டில் தனக்கு போடப்படும் சோற்றில் ஒரு பங்கினை அந்த நாய்க்கும் போடுவான், அது கண்டதை தின்றுவிடக்கூடாது என்பதில் டமாரு குறியாக இருந்தான். பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக சோனியாக அந்த நாய் தென்பட்டாலும் கம்பீரமாக, வெயிட்டாக டைகர் என்று பெயர் வைத்தான். டமாரின் காலையே டைகர் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும்.
டமாரின் பால்ய சிநேகிதன் முத்து. ஒரு முறை டமாரு வீட்டுக்கு வந்தவன் டைகரை பார்த்து ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டான். அவனோடு டைகர் நல்லவிதமாகவே விளையாடியது. “டமாரு பார்க்க நல்ல ஜாதி நாயா தெரியுது. நம்ம தெரு சொறிநாய்ங்க கூட ஏதாவது அஜாலு குஜாலு ஆயிடப்போவுது. கொஞ்சம் கேர்புல்லா இருந்துக்கோ” என்று அட்வைஸ் செய்தான்.
முத்து சொன்னது நியாயமாகவே டமாருக்கு பட்டது. நடுத்தெருவில் வேறொரு பொட்டை நாயோடு டைகரை இணைத்துப் பார்க்கவே டமாருக்கு குமட்டியது. அதற்கும் முத்து இன்னொரு ஐடியாவை எடுத்துவிட்டான், முத்து ஒரு ஐடியா மணி. “தோ பாரு டமாரு. நாயின்னா கொஞ்சம் முன்ன பின்ன தானிருக்கும். இப்போ டைகரு ஒழுக்கமா நடந்துக்கணும்னா நீ நெனைச்சியானா அதோட வாலை கொஞ்சம் வெட்டி உட்டுடணும்”
“இன்னாடா சொல்றே முத்து. வாலை வெட்டணுமா?”
“ஆமாண்டா. அய்யிரு வூடுங்கள்ல நீ பாத்ததில்லை. அவுங்கல்லாம் அப்படித்தான் செய்வாங்கோ.”
முத்து சொன்னால் சரியாக தானிருக்கும் என்று டமாரு நம்பினான். தெருநாய்களோடு சேர்ந்து டைகர் கெட்டுப்போகாமலிருக்க இதுதான் வழியென்றால் அதை செய்துவிட வேண்டியதுதான் என்று டமாரு முடிவெடுத்தான். டைகரின் வாலை வெட்ட ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்தான். லஸ் கார்னர் பாய் பேன்சி கடையில் பத்து ரூபாய் கொடுத்து ஷார்ப்பாக ஒரு கத்தி வாங்கினான்.
வீட்டில் யாருமில்லாத ஒரு நேரத்தில் நாலு பொறையை எடுத்து டைகரின் முன்னால் போட்டான். போனஸாக எக்ஸ்ட்ரா பொறை கிடைத்த சந்தோஷத்தில் டைகர் வாலை ஆட்டிக்கொண்டே பொறையை மொசுக் மொசுக்கென்று திங்க ஆரம்பிக்க, டமாரு கத்தியை எடுத்தான். அப்போது அவன் முகம் அந்த காலத்து நம்பியார் முகம் போல மாறிப்போனது. முகத்தில் சிகப்பு விளக்கு எரிந்ததைப் போல வில்லன் எஃபெக்ட்.
டைகர் ஆட்டிக் கொண்டிருந்த வாலை நீவி விட்டவன் அப்படியே இழுத்துப் பிடித்து சரக்கென்று கத்தியை போட்டான். கத்திப் பட்டதுமே டைகர் துள்ளிக் குதித்து பெருங்குரலெடுத்து குலைக்க ஆரம்பித்து விட்டது. வாலும் முழுமையாக அறுபடாமல் பாதியாக தொங்கிக் கொண்டிருக்க மேட்டரை சரியாக முடிக்காமல் விட்டுவிட்டோமே என்று கலங்கிவிட்டான் டமாரு.
எப்போதுமே முதலாளி விசுவாசத்தோடு நன்றியான பார்வையை டமாரு நோக்கி செலுத்தும் டைகர் அப்போது வெறிபிடித்த ஓநாயைப் போல ஆவேசமாக காட்சியளித்தது. பக்கத்தில் நெருங்கிய டமாரை சைக்கோ கொலைவெறியோடு பார்த்த டைகர் பாய்ந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கையை கடித்து, சத்தம் போட்டு குலைத்துக் கொண்டே குணா கமல் மாதிரி டமாரை ஆவேசமாக சுற்றி சுற்றி வந்தது. டமாருக்கு குலை நடுங்கிவிட்டது. சடாரென்று கதவை மூடிக்கொண்டு ஓடித்தப்பினான். வீட்டுக்குள் டைகர் வால் வலி தந்த வேதனையில் கோரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
டைகர் ரொம்ப ஸ்ட்ராங்காக கடிக்கவில்லையென்றாலும் லைட்டாக குமாரின் கை எரிந்தது. கை வலித்ததை விட தான் செல்லமாக வளர்த்த நாயை இப்படி சின்னாபின்னப் படுத்திவிட்டோமே என்றுதான் அதிகமாக வருத்தப்பட்டான். அன்றிரவு சோகம் தாங்காமல் எப்போதையும் விட கொஞ்சம் அதிகமாகவே குடித்தான். குடித்துவிட்டு வழக்கமாக அவன் போதையில் விழுந்து கிடக்கும் லஸ் கார்னர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்தான். கண் செருகிக்கொண்டே போனது.
யாரோ தன் முகத்துக்கு அருகே மூச்சு விடுவதைப் போல உணர்ந்தவன் ஒன்றரை கண்ணை லேசாக திறந்துப் பார்த்தான். டைகர். டைகரைப் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்ட டமாரு, தான் அதற்கு இவ்வளவு கொடுமை செய்தும் நன்றியோடு தன்னை தேடி வந்திருக்கிறதே என்ற உணர்ச்சிப் பெருக்கில் டைகரை கட்டியணைத்து முத்தம் தர முயன்றான்.
அவன் கன்னத்தில் தான் முத்தம் தர முயன்றான். அந்த நேரத்தில் டைகர் கொஞ்சம் முகத்தை திருப்பிவிட அதனது உதட்டில் முத்தமிட வேண்டிய நிலை வந்துவிட்டது டமாருக்கு. இவன் முத்தமிட்டமிட்டதுமே குடி நெடி தாங்காத டைகர் ஆவேசமாகி இவனது உதட்டை கடித்து குதறிவிட்டு, வந்த வழியே திரும்பி நிதானமாக ஓடியது. திரும்ப ஓடும்போது தான் கவனித்தான் டமாரு, வால் முழுமையாக இருந்தது. அய்யய்யோ டைகர்னு நெனைச்சின்னு வேற ஏதோ நாய்க்கு முத்தம் கொடுத்து உதட்டை கிழிச்சிக்கிட்டோமே என்று நொந்துப் போனான்.
டீயில் தொட்டு பொறையை சாப்பிடும்போது வாயில் போனது போக மீதி இருக்கும் பொறையின் ஷேப்பை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாதிரியாக பிஞ்சிப்போய் அமீபா ஷேப்பில் இருக்கும். இப்பொது டமாரு குமாரின் உதடும் அதுபோல தான் ஒழுங்கற்ற ஒரு வடிவத்தில் இருந்தது. வாலை அறுக்க முயற்சித்த அன்றே டைகர் வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தது. அது எங்கேயிருக்கிறது என்று தேடிக்கண்டுபிடிக்கிற மனநிலையில் டமாரு இல்லை.
கிட்டத்தட்ட டைகரை மறந்துவிட்ட நிலையில் ஒரு நாள் மாலை திருவள்ளுவர் சிலைக்கு எதிரேயிருந்த டாஸ்மாக்கில் சரக்கு அடிக்க டமாரு போனான். கடைக்கு எதிரே பாதிவால் அறுந்து ஒப்புக்குத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு நாய் இன்னொரு பெண் நாயுடன்.. ச்சே.. ச்சே.. எது நடக்கக்கூடாது என்று டமாரு நினைத்தானோ, அது அவன் கண் முன்பாகவே நடந்துகொண்டிருந்தது. எப்போதும் குவார்ட்டர் அடிக்கும் டமாரு அன்று வெறுப்பில் ஹாப் அடித்தான். நாயென்றாலே டமாரு குமாருக்கு வெறுப்பு வந்த கதை இதுதான்.
நேற்று இரவு மெலோடி தியேட்டரில் அடிமைப்பெண் பார்த்துவிட்டு வந்தான். சரக்கடிக்காததால் ஸ்டெடி என்று சொல்லிக் கொள்ளும் ரேஞ்சில் டமாரு இல்லை. தெருமுனைக்கு வந்தபோது எப்போதும் டமாருவை பார்த்து குரைக்கும் கருப்பு நாய் அவன் போதையில் இல்லை என்பதை தெரிந்துகொண்டு அன்று கொஞ்சம் ஓவராகவே குரைத்தது. சூ.. சூ.. என்று டமாரு விரட்டியும், ரெண்டு மூன்று கல்லெடுத்து அடித்தும் கூட அவனை கடிப்பதைப் போல அருகில் வந்து அச்சுறுத்தியது.
வாத்தியார் படம் பார்த்துவிட்டு வந்த வீரத்தாலோ, என்னவோ வாத்தியார் அடிமைப்பெண்ணில் சிங்கத்தை தலைக்கு மேல் தூக்கிப் போடுவதை சடாரென குனிந்து அந்த கருப்புநாயை தலைக்கு மேல் தூக்கி நான்கு சுற்று சுற்றி எங்கேயோ தூக்கிப் போட்டான். ஒரு இருபதடி தூரத்தில் போய் விழுந்திருக்கும் போலிருக்கிறது. வலியில் “அய்யய்யோ.. அம்மா!” என்று கத்தியது.
மறுநாள் காலை டமாரு ட்யூட்டிக்கு கிளம்பும்போது தெருமுனையில் சாவுமோளம் அடித்துக் கொண்டிருந்தது. “எது புட்டிக்கிச்சோ தெரியலையே?” என்ற கேள்வியோடு தெருவில் வந்தபின் தான் தெரிந்தது, அஞ்சலை ஆயா செத்துவிட்டதாம். நேற்று இரவு “அய்யய்யோ.. அம்மா!” என்று கத்தியது நாயல்ல என்பது டமாருக்கு இப்போதுதான் புரிந்தது.
– அக்டோபர் 2009