நானும் என் மந்திர உலகமும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 4,425 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்ன வயசில் அந்த அதிசயம் நடந்தது.

ஒரு நாள் இரவு ஒரு சொப்பனம் கண்டேன். என் வகுப்பு அறை இடம் மாற்றப்பட்டிருப்பதாக அந்தக் கனவு. மறுநாள் நான் பள்ளிக்குப் போக அதிசயமாக என் வகுப்பறை அதேபோல் இடம் மாறியிருப்பதைக் கண்டுகொண்டேன். அதுதான் மாய மந்திர உலகத்தைப் பற்றிய என் நம்பிக்கைக்கு ஆரம்பம்.

பின்னர், ஊரில் ஒரு பெரியவர் வித்தை ஒன்று செய்வதைக் கண்டேன். கோலிக் குண்டைக் கையில் வைத்து மாயமாய் மறைந்து போகப் பண்ணுவார். பிறகு, வயிற்றுச் சதையைக் கிள்ளி அதிலிருந்து அந்தக் கோலியை வெளியில் எடுப்பார். வயிற்றுச் சதையில் கீறல் விழுந்து உள்ளே வெள்ளைச் சவ்வுகூட நம் கண்ணில் விழும்.

வருடா வருடம் பீதாம்பரையரின் சீடர் ஒருவர் ஊரில் வந்து வித்தை காட்டுவார். வெறும் கையில் ஒரு பட்டுத் துணியைப் போட்டு மூடி, மந்திரம் சொல்லித் திறக்க மா ஜீனி, கைநிறையக் கொழித்துக் கீழே எல்லாம் உதிரும். வெறும் தந்திரம் என்று இதை என்னால் நம்ப முடியவில்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் என்னைப் பெரிதும் பாதிக்க, நான் ஹைஸ்கூல் மாணவன் (செயின்ட் சேவியர்ஸ் ஹைஸ்கூல் பாளையங்கோட்டை) ஆனபோது மத்திர விவகாரங்களில் இறங்கினேன்.

சுவடிகளையும், மாந்திரீகப் புத்தகங்களையும் தேடி அலைந்தேன்.

கிராமத்தில் (கீழநத்தம், திருநெல்வேலி ஜில்லா) எனக்கு ராஜகோபாலன், வெங்கட் ரங்கன் என்று இரு சகாக்கள் சேர்ந்தார்கள். நான் மாந்திரீகத்தைத் தீவிரமாகப் பின்பற்றலானேன்.

சுடுகாட்டுக்குப் போய், அதன் நடுவில் நின்று ஐபிப்பது, சாம்பல் எடுத்துப் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபட, ஊரில் என்னைப் பற்றி ஒரு ருசுகுசுவான மரியாதைப் பேச்சு பரவலாயிற்று.

இரவில் ஆற்றங்கரையில் (தாம்ரவர்ணி) பதினோரு மணி வரை உட்கார்ந்து பீடம் அமைத்து, தனியாக இருந்து மந்திர உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினேன்.

போதாததற்கு என் வீட்டு மச்சிலில் நான் படிக்கும் மேஜை மீது ஒரு நாய்க்குட்டியின் மண்டை ஓடு ஒன்று வைத்திருந்தேன். அசப்பில் அது ஒரு சிறு குழந்தையின் ஓடு போல் தோன்றும். இதுவும் பலரை என் அருகிலிருந்து விரட்ட உதவியாக இருந்தது.

சீக்கிரத்தில் என் மந்திர முயற்சிகள் யாவும் வீண். அவற்றால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று எனக்குத் தெரியலாயிற்று.

ஆனால். ஏற்கனவே உபாசகன், மாத்திரீகன் என்று என்னைப் பற்றிப் பெயர் பரவி விட்டதால், என் தோல்வியை நான் வெளியே ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தச் சமயத்தில் எழுந்ததுதான் என் மாய ஜாலக் கண்ணாடி ஐடியா?!

காவியான வீட்டில் ஒரு இருட்டறையில் மாயாஜாலக் கண்ணாடி ஒன்று வைத்தோம்.

அதைக் கேள்வி கேட்டால் அது ஜோசியம் சொல்லும் என்று ஊரில் செய்திகள் பரப்பினோம்.

நிறையப்பேர் பய பக்தியோடு வர ஆரம்பித்தார்கள்.

உள்ளே கண்ணாடிக்கு ஒரு கோணத்தில் என் நண்பன் ராஜகோபாலளை வேஷம் போட்டு நிறுத்தி வைத்திருந்தோம். அவன் கையில் ஒரு மூடிய பெட்ரூம் விளக்கு கொடுத்திருந்தோம். அவன் நிற்பது தெரியாதட்டிக்கு அமைப்புகள் செய்திருந்தோம்.

யாராவது கேள்வி கேட்டவுடன், ராஜ கோபாலன் அந்த பெட்ரூம் விளக்கு மூடியைச் சிறிது சிறிதாகத் தளர்த்த அவள் வேஷ உருவம் அந்தக் கண்ணாடியில் சிறிது சிறிதாக உற்பத்தியாவது போல் தோற்றம் உண்டாகும்.

அதைப் பார்த்தவுடனே வந்திருந்த ஆள் அநேகமாக அசந்து போய்விடுவான். சரி. கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது?

பிரசித்தி பெற்ற நெப்போலியன் உபயோகித்த ஓராகுலம்(Oraculam) என்ற ஜோசியப் புத்தகம் சென்ற நூற்றண்டில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அதன் காப்பி ஒன்று எங்கள் வீட்டுப் பரண்களிலிருந்து எங்களுக்குக் கிடைத்தது. நெப்போலியன் இந்த ஒராகுலத்தைப் பார்த்துத்தான் சண்டைக்கோ சமாதானத்துக்கோ புறப்படுவான் என்று கூறுவார்கள்.

அது தொடுகுறி சாஸ்திரம் போல் ஒரு புத்தகம் என்று நினைக்கிறேன்.

அதை உபயோகித்து ஜோசியப் பதில்களை உள்ளிருந்தவாறே குரலை மாற்றிப் பேசுவான் ராஜகோபாலன்.

இந்தப் பதில்கள் பலித்தனவோ, இல்லையோ. சீக்கிரம் எங்கள் புகழ் பக்கத்துக் கிராமங்களில் பரவ, நிறையப் பேர் குறி கேட்க வர ஆரம்பித்தார்கள்.

பணமும் கொடுக்க ஆரம்பிக்க, அதை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டோம்.

அப்போதுதான் அந்தத் தலைவலி வந்தது.

பக்கத்துக் கிராமங்களிலிருந்து வரும் தைரியசாலிக் கல்லூரி மாணவர்கள் சிலர் எங்களுக்குச் சவால் விட ஆரம்பித்தார்கள்.

குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமை வந்தால் எங்கள் மந்திர சக்தியைக் காட்டுவதாகப் பதில் சவால் கொடுத்தோம்.

வருவதாகச் சொல்லிவிட்டார்கள்.

அவர்கள் எங்களைவிட வயதில் அதிகமான கல்லூரி மாணவர்கள். பலவான்கள்.

ஊரில் எங்களுக்கு இரண்டு மூன்று பெரியவர்கள் சொன்னபடி கேட்பார்கள்.

அவர்களில் ராமசாமி என்பவரைக் கிராமத்துக்கு அரை மைலில் ரஸ்தாவில் நிறுத்தி வைத்தோம். மற்றொருவரைக் கிராமத்தில் பக்கத்தில் நிறுத்தி வைத்தோம்.

அந்த மாணவர்கள் வரும்போது அந்த ராமசாமி, “ஏம்பா? நீங்க எங்க போறீங்க” என்று கேள்வி கேட்டார்.

ஊர் பேரைச் சொன்னார்கள்.

உடனே அவர், “வேணுகோபாலன் வீட்டுக்கா?” என்று பயத்தோடு கேட்டார்.

“ஆமாம்.”

“ஐயோ; உங்களுக்கு ஏன் இந்தப் புத்தி? உங்களுக்காகத்தான் அவன் பூஜை செய்கிறானா? ஜாக்கிரதை. காலுக்கடியில் பாம்பை வரவழைத்துவிடுவான்” என்று மேலும் பல சொல்லிக் காபரா படுத்தி வைத்தான்.

மாணவர்களுக்குப் பத்து சதவீத திகில். அப்படியும் முன்னேறி வந்தார்கள்.

இரண்டாவது பெரியவர் அவர்களைத் தடுத்து மேலும் கொஞ்சம் பயமுறுத்தினார்.

ஆக. கிராமத் தெருவுக்குள் நுழையும் போது மாணவர்கள் பாதி அவுட்டாகினர்.

நான் யோக வேஷம் போட்டுத் தலையில் தலைப்பாகை கட்டியிருந்தேன். என்மீது தாம்புக் கயிற்றையும் சுற்றிக் கட்டியிருந்தார்கள்.

என் எதிரே பெரிய சாணிக் குவியல். அதில் தலை கீழாக ஒரு மழுக் கத்தியை நட்டு வைத்திருந்தோம். சுற்றிவர விளக்கு பூஜை விவகாரங்கள் எல்லாம்.

மாணவர்கள் என் வீட்டு வாசலில் வந்ததும் ஏற்கனவே காஷாயம் போல் ஒரு வஸ்திரம் தரித்திருந்த ராஜகோபாலன் அவர்களை எதிர்கொண்டான், பேசவில்லை. அதற்குப் பதிலாக வாசலில் நிறுத்தி வைத்து ஹிஸ்டீரிகலாக மந்திர உச்சாடனம் செய்தான்.

ஒரு தெருக் கும்பல் அவனை வேடிக்கை பார்த்தது.

பிறகு ‘ஹோ ஹோ’ என்று சத்தம் போட்டு மாணவர்களை மெல்ல மாடிப்படியில் ஏற்றி மேலே கொண்டு வந்தான்.

மாடி ஏறி நிஷ்டையில் இருந்த என்னையும் என் புஜா முறைகளையும் பார்த்த மாணவர்கள் பிரமித்து விட்டார்கள்.

ஏற்கெனவே முக்காலும் அவுட்டாகி இருந்தவர்கள் மாடியில் வந்தபோது முழுதும் அவுட்டாகி விட்டார்கள்.

நான் தூப தீபங்கள் பிரமாதமாகப் போட்டேன். கடுமையான உச்சாடனம் செய்தேன்.

பிறகு மெள்ளக் கண்களைத் திறந்து, – இங்கு யாருக்காவது வயிறு ஊத வைக்க வேண்டுமா? என்றதுதான் தாமதம்.

அந்தக் கல்லூரி மாணவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று படிகளில் தாளம் போட்டுக் குதித்து, தெருக் கும்பலிடையே புகுந்து வெளிவந்து மேற்கு நோக்கிப் பீறி ஓடினார்கள்.

விடுவானா ராஜகோபாலன்!

அவர்கள் பீதியைப் புரிந்து பிள்னால் ஓடி, சீக்கிரம் அவர்களைக் கடந்து மறு பக்கம் போய் ரஸ்தாவில் குறுக்கே ஒரு கோடு கிழித்து, ‘இதைத் தாண்டினால் செத்துப் போவீர்கள்’ என்று சபதம் போட்டான்.

ஆச்சரியம்! அந்த மாணவர்கள் உறைந்து போய் நின்று விட்டார்கள்.

நாங்கள் சீக்கிரம் அந்த இடத்தை அடைய எங்கள் ஏமாற்று வேலை விளைவித்த பலனைப் பார்த்துக் குபீர் என்று எங்களையும் மீறிச் சிரிப்பு வரச் சிரித்தோம்.

நடந்ததெல்லாம் நாடகம் என்று அறியவே அந்த மாணவர்களுக்கு வெகுநேரம் பிடித்தது.

அநேகமாக அந்தச் சம்பவத்தோடுதான் என்று நினைக்கிறேன். என் மந்திர உலகச் சோதனைகள் நின்றுவிட்டன!

– 24-08-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *