துப்பறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 8,210 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸஸ ரிரி கக மம
பப தத நி நி ஸஸ

என்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை.

“லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன்.

“வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு நிமிஷத் திற்குள் நேரே வந்து நின்றாள்.

“பாட்டுப் படித்தது போதும். வீணை வாத்தி யாரை அனுப்பிவிடு. உன்னிடம் ஒரு சமாசாரம் சொல்ல வேண்டும்.”

“அவரை நான் அனுப்ப வேண்டாம். உங்களுடைய குரலின் சுருதியைக் கேட்டவுடன் அவர் தானாகவே எழுந்து போய்விட்டார். என்ன சமாசாரம், சொல்லுங்கள்.”

“வேறொன்றுமில்லை. தெருக்கோடி-யில் ரோஜா வர்ணத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறார்களே, அந்த வீட்டில் நேற்று ராத்திரி திருட்டுப் போய்விட்டதாம்…”

“அங்கேயா! இதற்குள் அந்த வீட்டிற்கு யார் குடி வந்தார்கள்? இன்னும் கட்டி முடியவில்லை என்றல்லவா எண்ணியிருந்தேன்?”

“அது அப்பவே முடிந்துவிட்டதே! குடி வந்து ஒரு வாரந்தான் ஆகிறது. அதற்குள் ஒரு திருட்டு: பாவம்! நல்ல கமல மோதிரமாம்.”

“பாவந்தான். ஆனால் அந்த விஷயத்தை இவ்வளவு ஆவலுடன் என்னிடம் சொல்லுவானேன்? நான் ஒரு கமல மோதிரம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேனே, இப்பொழுது இந்த மாதிரி திருட்டுக்குப் பயந்து அந்த ஆசையை விட்டு விடுவதற்காகவா?”

“நன்றாயிருக்கிறது! நகைப் பைத்தியத்தை அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியுமா? அதற்காக அல்ல”.

“எனக்கு ஒன்றும் நகைப் பைத்தியம் கிடையாது. வீணை வாசிக்கிற விரலில் ஒரு மோதிரம் இட்டால் அழகாயிருக்குமே என்று கேட்டேன்….”

“வீணை வாசிக்கிற விரல் அல்ல, வீணை வாசிக்கப்போவதாக நீ எண்ணுகிற விரல். இன்னும் ஜண்டை வரிசையில் தான் அது சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு கீர்த்தனையைப் பிடிப்பதற்கு முன்னே, நல்ல வேளையாய், எனக்கு வயது நிரம்பிக் காது மந்தமாய்ப் போய்விடும். அப்புறம் எனக்குக் கவலையில்லை.”

“அதிசயந்தான்! அது இருக்கட்டும். அந்த வீட்டுக்காரருடைய பெயர் என்ன?”

“பெயரா? ராமசந்திர சாஸ்திரிகள் என்று யாரோ சொல்லிக் கேட்ட மாதிரி இருக்கிறது.”

“வக்கீல்தானே?”

“இருக்கலாம். ஏனென்றால் வாசலில் ஒரு ‘போர்டு’ பார்த்த ஞாபகமாயிருக்கிறது.”

“அப்படியானால் அவருடைய சம்சாரத்தின் பெயர் சீதாலக்ஷ்மி யல்லவா?”

இந்தக் குறுக்குக் கேள்விகளை யெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. தயாராக இல்லை. “இதெல்லாம் எனக்கு என்னமாகத் தெரியும்? எதற்காகக் கேட்கிறாய்?” என்றேன்.

“அவர்களா யிருந்தால் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. என்னுடைய பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். பால்யம் முதல் எனக்குத் தெரியும்.”

“அதற்காக என்ன செய்யப்போகிறாய்?”

“என்ன செய்வது? நமக்கு வேண்டியவர்களுடைய வீட்டில் ஒரு திருட்டு நடந்தால், அதைப் பற்றி அவர்களிடம் போய் விசாரிக்க வேண்டியது ஒரு மரியாதையல்லவா?”

“ஏதடா, இது! நீ போய்த் திடீரென்று எவர் வீட்டிற்குள்ளேயோ நுழைந்த பிறகு, அவர்கள், நீ முன்பின் பாராத வேற்று மனிதர்களா யிருக் கப்போகிறார்கள். நீ எங்கே வந்தாய் என்று கேட்டால், பதில் சொல்ல முடியாமல் விழிக்க வேண்டியிருக்கும்.”

“ஒன்றும் விழிக்க மாட்டேன். முதலிலேயே அங்கே போவேனா? அந்த வீட்டிற்கு எதிர்த்த கட்டிடந்தானே எங்களுடைய லேடீஸ் கிளப். அங்கேயிருந்து வேலைக்காரப் பையனைப்போய் ஜாடையாய் விசாரித்துவரச் சொல்லிவிட்டு, நான் பிறகுதான் போவேன். நீங்கள் ஒன்றும்கவலைப்படவேண்டாம்.”

கவலைப்பட வேண்டாமாவது! நான் வேறு என்ன செய்கிறது? லலிதா ஒன்றைப் பிடித்து விட்டால், என்ன சொல்லியும் உபயோகமில்லை என்று எனக்குத் தெரியும். ஆகையால், ஆனது ஆகட்டுமென்று அத்துடன் விட்டுவிட்டேன்.

அன்று சாயங்காலம் அவள் கிளப்பிலிருந்து திரும்பி வருவதை நான் சற்று ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன நடந்ததோ, என்ன சொல்லப் போகிறாளோ என்று யோசனை. சந்தோஷத்துடன் கையைக் கொட்டிக்கொண்டு வந்தாள்.

“நான் விசாரித்தது நல்லதாய்ப் போய்விட்டது.அந்த அம்மாள் தான் என் பாட்டியின் சிநேகிதி சீதாலக்ஷ்மி. அவளை இன்றைக்குக் கிளப்பில் மெம்பராகச் சேர்த்துவிட்டேன்.”

“அது போகட்டும். திருட்டைப் பற்றி என்ன சொன்னாள்?”

“என்ன சொன்னாளா? என்ன சொல்ல வில்லை? உங்களுக்குப் பாதி விஷயந்தான் தெரியும் போலிருக்கிறது. பூராவாக அந்த அம்மாள் என்னிடம் சொல்லிவிட்டாள். ஆனால் போலீசாரிடம் இன்னும் ஒன்றும் தெரிவிக்கவில்லையாம். என்னைப் போக வேண்டாமென்றீர்களே! போனதனால் தானே சுவாரசியமான முழு சமாசாரமும் தெரிய வந்தது?”

“முழு சமாசாரம் என்ன? எனக்குத் தெரிந்த பாதி சமாசாரம் என்ன?”

“பெட்டியிலிருந்து கமல மோதிரம் திருட்டுப் போனதைத்தானே நீங்கள் கேள்விப்பட்டீர்கள்? ஆனால் அது வைத்திருந்த இடத்தில் எதைக் கண்டார்கள் தெரியுமா? அதற்குப் பதிலாக, திருடன் ஒரு பச்சை மோதிரத்தை வைத்துவிட்டுப்போயிருக்கிறானாம். அது உங்களுக்குத் தெரியாதே? அவன் ஏன் அப்படிச் செய்தானே; மறதியோ, கைப் பிசகோ, அல்லது வேண்டுமென்று செய்த காரியமோ, பகவானுக்குத்தான் வெளிச்சம்.”

இதை யெல்லாம் கேட்கக் கேட்க, எனக்கு உண்டான ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. “பச்சையாவது, மோதிரமாவது, வைத்துவிட்டுப் போகவாவது! நல்ல பச்சையானால் கமலத்தைக் காட்டிலும் கிராக்கியாச்சே!” என்றேன்.

“தன்னுடைய கல்லைப்போல் இதற்கு இரண்டு பங்காவது விலை இருக்குமென்று அந்த அம்மாள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.”

“அப்படியானால் அதை உடனே போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாமா?”

“எதற்காகவாம்? ஒரு நஷ்டம் ஏற்பட்டால் போலீசாருடைய துணையைத் தேட வேண்டியது தான். ஒரு லாபம் கிடைத்தால் அதைத் தமுக்குப் போடுவானேன்? தைரியம் இருந்தால் அந்தத் திருடன் வந்து தன் மோதிரத்தைக் கேட்கட்டுமே!”

“ரொம்ப நன்றாயிருக்கிறது உன்னுடைய வாதம்! திருடன் வைத்துவிட்டுப் போனதும் ஒரு திருட்டுச் சொத்தாகத்தானே இருக்கும்? அதை நாமே எடுத்துக்கொள்வதா? சொந்தக்காரனைக் கண்டுபிடிக்க வேண்டாமா?”

“இந்த மாதிரிதான் அவளுடைய புருஷனும் சட்டம் பேசினாராம். ஆகையால், வேறொன்றும் செய்யவேண்டாம், சொந்தக்காரனையும் திருடனையும் நான் கண்டுபிடித்துவிடுகிறேன் என்று அந்த அம்மாளிடம் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.”

“நீயா?” என்று ஆச்சரியப்பட்டேன்.

லலிதா பதில் சொல்லாமல், கண்ணாடிக்கு எதி ராக உட்கார்ந்துகொண்டு, தன்னுடைய கோணல் வகிட்டைத் தொட்டுத் தொட்டுப் பிரியத்துடன் தடவிக்கொடுத்து இன்னும் சற்றுக் கோணலாக்கிப் பார்த்தாள்.

“வகிட்டின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தி, இதை எனக்குத் தெளிவாகச் சற்றுச் சொல்லு. நீ ஏற்றுக்கொள்ளவாவது? நீ வீடுவீடாய்ப் போய் விசாரிக்கப்போகிறாயா, அல்லது இருந்த இடத்திலிருந்து மனோ சக்தியைச் செலுத்தப் போகிறாயா?” என்று பரிகசித்தேன்.

“அது எப்படியோ! துப்பு அறிவதில் மற்ற வர்களுக்குத் தெரிந்தது எனக்குத் தெரிகிறதா, இல்லையா, பாருங்களேன். வேறொன்றுமில்லாத போனாலும், உங்களுடைய சிநேகிதர், இன்ஸ்பெக்டர் மௌளிக்கு உள்ள சாமர்த்தியம் எனக்கு இல்லாமல் போகிறதா, பார்க்கலாம்.”

“ஏனென்றால் சில துப்பறியும் கதைகளை நீ படித்துவிட்டதிலிருந்தோ?”

“சில கதைகளா? இந்த ஐந்தாறு வருஷமாய், மூன்று பாஷைகளிலும் வெளிவருகிற கதை ஒன்று விடாமல் படித்துக்கொண்டு வந்திருக்கிறேனே?”

“மூன்று பாஷைகளா? உனக்கு மூன்று பாஷைகள் என்ன தெரியும்?”

“ஆமாம். தமிழ் ஒன்று, இங்கிலீஷ் ஒன்று. இதைத் தவிர, சில பேர்கள் – சில பேரென்றால், நீங்களில்லை, உங்களைச் சொல்லுவேனா? – வேறு சில பேர்கள் தாங்கள் அசல் தமிழ் எழுதுவதாக நம்பிக்கொண்டு எழுதுகிற பாஷை இருக்கிறதே, அது ஒன்று. ஆக மூன்று.”

நான் சற்றுக் கண்டித்துப் பேசினேன். “இதோ பார், லலிதா! இது ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள் செய்யக்கூடிய காரியமில்லை. விளையாட்டுத்தனமாய், நீ தலையிட்டுக்கொள்ளாதே. நாளைக்குக் காலையில் நான் போய் விசாரித்துவிட்டு வருகிறேன்.”

“உங்களிடம் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லையே. நீங்கள் கேட்டால் சொல்லுவார்களா? நானும் கூட வருகிறேன்.”

“வேண்டாம். மௌளியிடமிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் யூனிபாரத்தைக் கடன் வாங்கிப் போட்டுக்கொண்டு, போலீஸ் தோரணையில் போய்க் கேட்கிறேன். அப்பொழுது ஒன்றையும் மறைக்கமாட்டார்கள்” என்று சொல்லி, மேல் பேச்சை நிறுத்தினேன்.

மறுநாள் காலையில் நான் கிளம்பிப்போய் விசாரித்துவிட்டு வருவதற்குமுன் மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் போஜனம் செய்யாமல் நான் சொல்லப்போவதைக் கேட்பதற்காக லலிதா ஆசையுடன் காத்திருந்தாள்.

“நான் அப்பொழுதே சொன்னேனே, இது ஒரு ஸ்திரீ ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியமில்லை என்று? அந்த வீட்டுப் புருஷரை மடக்கி வெருட்டிக் கேட்டபோது தான் முழு உண்மையும் வெளிப்பட்டது. அவர்கள் பெட்டியில் என்ன இருந்தது தெரியுமோ, அந்தப் பச்சை மோதிரத்தையும் தவிர? ஜாடாவாக அடிக்கணுவில் வெட்டப்பட்ட யாருடைய மோதிர விரலோ ஒன்று இருந்ததாம்! ஆகையால்தான். அவர்கள் பயந்துகொண்டு உடனே போலீசாரிடம் சொல்லவில்லை. கமலமோதிரம் கெட்டுப்போனதைப் போலீஸ்காரர் நம்பாமல், தாங்கள் தான் நகைக்கு ஆசைப்பட்டு மற்றொருவருடைய விரலை வெட்டினதாகத் தங்கள் மேல் குற்றம் சுமத்திவிட்டால் என்ன செய்கிறது என்கிற அச்சம் தான்” என்று நான் கேள்விப்பட்டதையும், ஊகிப்பதையும் சொன்னேன்.

“வெட்டின விரலா? ஐயோ! பெட்டியெல்லாம் ரத்தம் கொட்டி யிருக்குமே? நல்ல வேளை, நான் பெட்டியைப் பார்க்கவில்லை” என்று சொல்லி லலிதா, தேகம் முழுவதும் சிலிர்த்தாள்.

“அது நிஜம். இனிமேலாவது இந்த விஷயத்தை விட்டுவிடு. நமக்கு என்னத்திற்கு இது? வா, நேரமாகிவிட்டது, சாப்பிடப் போகலாம்” என்று அழைத்துக்கொண்டு போனேன்.

இருந்தாலும் அன்று சாயங்காலம் லலிதா என்ன செய்யப்போகிறாளோ என்று எனக்குக் கவலைதான். ஆனால் பல விதம் எண்ணினேனே ஒழிய யதார்த்தத்தில் அன்று நடக்கப் போவதை நான் எதிர்பார்க்கவில்லை.

தீபம் ஏற்றுகிற வேளையாக இருக்கும். லலிதா கண்களைப் பிசைந்துகொண்டு, மூச்சுத் திணற மாடிப்படி ஏறிவந்து, “ஐயோ! அந்தப் பாவியிடம் உங்களைக் காட்டிக்கொடுத்து விட்டேனே! இனி நாம் ஒரு க்ஷணம் இங்கே தாமதிக்கக் கூடாது. எங்கேயாவது ஓடிப்போக வேண்டும். புறப்படுங்கள். சீக்கிரம் புறப்படுங்கள்” என்று வாய் குழற மன்றாடினாள்.

நான் திடுக்கிட்டு, “என்ன சமாசாரம்?” என்று கேட்டேன்.

“அந்த சீதாலக்ஷ்மியிடம், இந்த மாதிரி ‘என்னுடைய அகத்துக்காரரல்லவா இன்று காலையில் இன்ஸ்பெக்டர் வேஷம் போட்டுக்கொண்டு உங்களை வெருட்டி உண்மையைக் கண்டுபிடித்தார்?’ என்று என்னுடைய பெருமையை வெளியிட்டேன். அப்பொழுது அந்தப் பாவி என்ன செய்தாள், தெரியுமோ? இதுதான் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கு வழி என்று தீர்மானித்து, உடனே கிளப்பில் எல்லாரையும் வைத்துக்கொண்டு ஒரு பெரும் புளுகாய்ப் புளுகிவிட்டாள்: திருட்டுப் போன பெட்டியில் முதலில் அவர்கள் ஒன்றையும் காணவில்லையாம். ஆனால் இன்று காலையில் நீங்கள் வந்து பெட்டியைப் பரிசோதித்துவிட்டுப் போன பிறகு, அவள் தற்செயலாகப் பெட்டியைத் திறந்து பார்த்தாளாம். அப்பொழுது தான் ஒரு வெட்டுப் பட்ட மோதிர விரல் மாத்திரம் அதில் இருந்ததாம். ஆகையால் நீங்கள் தான் அதைக் கொண்டு வந்து பெட்டியில் வைத்திருக்க வேண்டுமாம். நகைக்கு ஆசைப்பட்டோ, க்ஷத்திரத்தினாலேயோ நீங்கள் குற்றம் செய்துவிட்டு, பிறகு நீங்கள் தப்பித்துக் கொண்டு அவர்கள் மேல் குற்றத்தைச் சாட்டுவதற்கு நல்ல வழி கிடைத்தது என்று எண்ணி, ஒரு போலீஸ்காரன் அவர்கள் வீட்டுத் திருட்டை விசாரிக்க வருகிற மாதிரி பாவனை பண்ணி நீங்கள் இவ்வளவையும் செய்திருக்க வேண்டுமாம். இல்லாத போனால் நீங்கள் வேஷம் போட்டுக் கொள்வானேன்? அவர்கள் வீட்டுக்குப் போவானேன்? நீங்கள் போலீஸ்காரனில்லை என்று இப்பொழுது தெரிந்ததன் பேரில் தான் அவளுக்கு இருந்த திகில் நீங்கியதாம். இப்பவே இதெல்லாம் நிஜப் போலீஸ் காரர்களிடம் சொல்லப்போகிறார்களாம். ஐயோ! இப்படிப் பேசிக்கொண்டு பொழுதைப் போக்கி விடுகிறேனே! சீக்கிரம் புறப்படுங்கள். உங்களுக்கு அவசியமான சாமானை எடுத்து இந்தப் பெட்டியில் வைக்கிறேன். எத்தனை வேஷ்டிகள் வேண்டும்? எத்தனை ஷர்ட்டுகள் வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டு, அலமாரியைத் திறந்து, அதிலுள்ள உருப்படிகளை எடுத்துக் கன்னா பின்னா வென்று, ஒரு பெட்டியில் திணிக்கத் தொடங்கினாள்.

நான் ஒரு க்ஷணமே ஆலோசித்தேன். ஏனென்றால் ஒரு க்ஷணத்திற்குள் தீர்மானித்து முடிவுக்கு வர வேண்டிய காரியமாக இருந்தது. அவ்விதமே தீர்மானித்து, லலிதாவின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன்.

“இதோ பார், லலிதா! இதுவரையில் உன்னுடைய கற்பனா சக்தியையும் நடிப்புத் திறமையையும் பூராவாக ரஸித்தேன். ஆனால் நீ இப்படி என்னுடைய சலவை செய்த பட்டு ஷர்ட்டுகளைக் கசக்குகிறது என்றால்,…அதை என்னால் பார்த்துச் சகிக்க முடியாது. இந்தக் கஷ்டத்தைக் காட்டிலும் நான் உண்மையை ஒப்புக்கொண்டுவிடுகிறேன். அந்த ராமசுப்பா தீக்ஷிதரை நான் இதுவரை கண்டது மில்லை, கேட்டதுமில்லை-”

“அது யார், ராமசுப்பா தீக்ஷிதர்? ரோஜா வீட்டிற்குக் குடி வந்ததாக நீங்கள் முன்பு சொன்ன மனிதனைக் குறிக்கிறீர்களோ? அவருடைய பெயர் ராமசந்திர சாஸ்திரிகள் என்றல்லவா சொன்னீர்கள்?”

“அவரும் அவருடைய பெயரும் அடிமாண்டு போகட்டும். எந்தப் பெயராயிருந்தால் எனக்கென்ன? அந்த மாதிரி ஒரு மனிதன் இருந்தால் தானே? வீடே இன்னும் கட்டி முடியவில்லை. ஒருவரும் குடி வரவில்லை. திருட்டும் நேரவில்லை. என்னுடைய ஷர்ட்டுகளைக் கசக்காமல் கொடுத்து விடு.”

“அப்படியானால், அவரே கிடையாது என்று நீங்கள் சொல்லிவிட்டால், அவருக்கு சீதாலக்ஷ்மி என்று சம்சாரம் கிடையாது. அவர்களை என் பாட்டிக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. பரோபகாரியாக ஒரு திருடனும் பச்சை மோதிரத்தை வைத்துவிட்டுப் போகவில்லை என்று நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். இந்தாருங்கள், உங்களுடைய ஷர்ட்டுகளை அரவணைத்து மடித்து வையுங்கள். ஆனால் அநியாயமாய் ஒரு விரலை அறுத்து அதைப் பெட்டியில் கொண்டு வந்து வைத்தீர்களே, அந்தப் பாவத்திற்கு என்ன செய்கிறது? அதை நினைத்தால் தான் எனக்கு பரிதாபமாயிருக்கிறது.”

“அதுவா, அது இஷ்டப்படி செய்யட்டும். சொந்தக் கையை விட்டுப் பிரிந்து வந்த மாதிரியிலே, திரும்பிப்போய் ஒட்டிக்கொள்ளட்டும். அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. உன்னுடைய சுபாவத்தைப் பற்றி நினைத்தால் தான் எனக்குத் திகிலா யிருக்கிறது. நீ ஜண்டை வரிசையை ஓயாமல் வாசித்ததை நிறுத்துவதற்காக உன்னை நான் கூப்பிட்டு, சாதாரணமாய் நடக்கக்கூடிய ஒரு திருட்டைக் கற்பனைசெய்து ஒரு வார்த்தை சொன்னால், நீ அதற்கு மேல் எவ்வளவோ சிருஷ்டித்து அண்டப் புளுகுகளாய் ஜோடித்துவிட்டாயே…”

“பர்த்தாவை அனுசரித்துப் போவது ஓர் உத்தம ஸ்திரீயின் கடமை. வேண்டுமானால் என்னுடைய பாட்டியைக் கேட்டுப் பாருங்கள். அவள் எத்தனையோ தடவை இப்படி என்னிடம் புத்திமதி
சொல்லியிருக்கிறாள்.”

“நல்ல கடமை! அவசியத்தின்மேல் நான், ஒரு புருஷன், ஒரு சின்னப் பொய்யைச் சொன்னால், நீ போட்டி போட்டிக்கொண்டு பொய் பேசலாமா? நீ, ஸ்திரீயாய், லக்ஷணமாய்….”

“என்னுடைய லக்ஷணத்திற்கு என்ன குறைவாம்?” என்று நிலைக்கண்ணாடியை அதிகப் பிரசங்கித்தனமாய் அவள் கேட்டாள். “இருந்தாலும் ஒரு குறையை ஒப்புக்கொள்ள வேண்டியது தான். இந்த விரலில் ஒரு மோதிரம் இல்லாதது ஒரு மூளிதான்” என்று காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டாள்.

ஆனால் அதற்குத் தக்கபடி பதில் சொல்ல எனக்குத் தெரியும். “இதோ பார், நீ இவ்வளவு துப்பு கண்டுபிடித்தாயே, உனக்காக வாங்கி, இங்கே ஒரு வேஷ்டிக்கு அடியில் நான் ஒளித்து வைத்திருந்த இந்த மோதிரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே?” என்றேன்.

“அது இருக்கும் இடத்தை, நான் இன்னும் தேடத் தொடங்கவில்லையே ஒழிய அது வரப்போகிறது என்று எனக்கு அப்பொழுதே தெரியுமே.”

“என்னமாய்த் தெரியுமாம்?”

“நாலாவது நாள் ராத்திரி நான் தூங்கிக் கொண்டிருக்கையில் என் விரலுடைய அளவை எடுத்தீர்களே, அப்பொழுதே எனக்குத் தெரிந்து விட்டது.”

இது ஓர் அபாண்டப் புளுகு. நான் அளவு எடுக்கவே இல்லை. கண் திட்டமாகத்தான் மோதிரத்தைப் பொறுக்கி வாங்கினேன் என்று வாஸ்தவமாய்ச் சொல்லுகிறேன். ஆனால் நான் என்ன சத்தியம் செய்தால் என்ன? அவள் சொன்னதையே சாதித்துக்கொண்டு அதற்காக இன்னும் ஒரு நாடகத்தை நடிக்கப் போகிறாள். நான் தோற்றுப் போய்விட்டேன் என்று ஒப்புக் கொள்வதே நல்லது.

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *