”எங்கே சார் ஒடறீங்க…. இவ்வளவு அவசரமா ?”
“ஒரு திருடனைத் துரத்திக்கிட்டு ஓடறேன் சார் !”
“ஜெர்மன்காரங்க கண்டுபிடிச்சிருக்கிற துப்பாக்கி வந்துட்டா இவங்களை பிடிக்கறது சுலபம்!”

“துப்பாக்கியா?”
“ஜெர்மன் போலீசார் கலகக்காரர்களை அடக்கறத்துக்குப் புதுவிதமான ஒரு துப்பாக்கியைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம்.”
“எப்படி அது?”
“அந்தத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டதும் அதுலேயிருந்து ஒரே சமயத்துலே இரண்டு குண்டுகள் பாயும்…. இரண்டும் ரப்பர் குண்டுகள்….நைலான் கயிற்றிலே பிணைக்கப்பட்டிருக்கும்….!”
“இது என்ன செய்யும் ?”
“கலகக்காரர்கள் நூறு அடி தொலைவுலே இருக்கறப்போ இதைச் சுட்டால் அவை பறந்து போய் அவங்க கால்களைச் சுற்றிப் பின்னிக்கொண்டு அவங்களை நகரவிடாம செஞ்சுடும்…. அதுக்கபுறம் போலீசார் நிதானமா நடந்துபோய் அவங்களைக் கைது செஞ்சுடுவாங்க!”
“சரி சார்… இதைப் பத்தியெல்லாம் நின்று நிதானமா பேசிக்கிட்டிருக்க இது நேரமில்லை… நான் வர்றேன்…அப்புறமாப் பேசிக்கலாம்….?”
”இதுக்குமேலே போய் அவனை எங்கே சார் கண்டு பிடிக்கப் போறீங்க?”
“எப்படியாவது அவனைக் கண்டு பிடிச்சே ஆகணும்!”
“அப்படி என்னத்தைத்தான் அவன் திருடிக்கிட்டு ஒடறான்?”
“திருட வந்தவன் அதைப் பார்த்துட்டு திருடாமே ஒடறான்?”
“அப்புறம் எதுக்காக அவனைத் துரத்தறீங்க?”
“அவன் கால்லே விழுந்தாவது தயவு பண்ணி அதை எடுத்துக்கிட்டுப் போங்கன்னு கெஞ்சிக் கெட்டுக்கலாம்-ன்னுதான் ஒடறேன் !”
“எதை?”
“பதினைஞ்சு வருஷமா என்கிட்டே இருக்கிற அந்தப் பழைய ஜோடி செருப்பை!”