கிருஷ்ணர் பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 6,358 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீபாவளிக்கு இரண்டு வாரம் முன்பு…

வழக்கமான திருவல்லிக்கேணி வீட்டில் வழக்கம் போல எச்சுமிப் பாட்டி கொடுத்த பழைய சாதத்தை அதிகமாகச் சாப்பிட்டு மப்பாகிப் போய் தூங்க ஆரம்பித்தான் கிச்சா.

‘என்ன எச்சுமி, மணி பத்து ஆறது, இருக்கானா, இல்லை போயிட்டானான்னு தெரியாத அளவுக்கு அடிச்சுப் போட்ட பொணம் மாதிரி உம் பேரன் தூங்கறான்…’ என்று யானையைவிட மோசமாகப் பிளிறிக் கொண்டே வந்தார், ஜுராஸிக் பார்க்கில் நடிக்க சான்ஸ் கிடைக்கும் அளவுக்கு ஆகிருதியில் அட்டகாசமாக வளர்ந்திருக்கும் கும்பகோணம் ‘ஐடியா ஆராமுது’.

கிச்சாவை அவசர அவசரமாக எழுப்பி முடித்த ஆராமுது, தனது சாக்குமூட்டை சைஸுக்கு இருந்த ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ‘ராமர்பிள்ளை கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல்’ சம்பந்தமான பேப்பர் கட்டிங்கை எடுத்தபடி, ‘ராமர்பிள்ளை செஞ்ச சாதனை தெரியுமாடா உனக்கு?’ என்று கேட்க, ‘ஜகம் புகழும் புண்ணிய கதை ராமரின் கதையே’ பாடிய ராமரின் பிள்ளைகளான ‘லவ-குசா’ கதையை ஒப்பித்து முடித்தான் கிச்சா!

கிச்சாவின் இந்த வெகுளித்தனமான பதிலால் சாந்தமான ஆராமுது மாமா, கிச்சாவை இறுகத் தழுவி அணைத்து ஆலிங்கனம் செய்து, கிழிந்த பாயாக ஆன கிச்சாவிடம் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த ராமர்பிள்ளையைப் பற்றி விலாவாரியாகக் கூறிவிட்டு, ‘கிச்சா, நீ என்ன கண்டுபிடிப்பியோ, ஏது கண்டுபிடிப்பியோ, எனக்குத் தெரியாது. அடுத்த மாசம் தீபாவளிக்கு நான் இங்கே வரும்போது, நீ ஒரு சயின்டிஸ்ட்டா ஆகியிருக்கணும். என் கைல அடிச்சு சத்தியம் பண்ணு…’ என்று தனது தோசைக்கல் சைஸில் இருந்த கையை நீட்ட, வேறு வழியில்லாமல் தீபாவளிக்குள் சயின்டிஸ்ட்டாக ஆகிக் காட்டுவதாக ஐடியா ஆராமுது மாமாவின் கையிலடித்துச் சத்தியம் செய்தான் கிச்சா.

பரவசமடைந்த ஆராமுது, தான் கொண்டு வந்த பித்தளையைத் தங்கமாக மாற்றும் ‘பளபளா சூர்ணம்’, ‘ஜின்ஜின் நாய்க்கடி’ லேகியம், பாம்புக் கடிக்கான ‘ஸர்ப்ப நீக்கி’ (இதை ‘ஸ்த்ரீ சம்போகத்துக்கும்’ பயன்படுத்தலாம்), தேமல், படை, சொறி, சிரங்குக்கான ‘அரி அரி நின்னே’ தைலம் போன்ற சித்த மூலிகைகள் விவரம் அடங்கிய ஒரு தடிமனான செல்லரித்துப் போன புத்தகத்தைக் கிச்சாவிடம் கொடுத்து, ‘இதைப் படி… அப்புறம் ராமர்பிள்ளை என்ன, நீ ராமர் பேரனாகவே ஆகிவிடலாம்’ என்று கூறிவிட்டு கும்பகோணம் சென்றார்.

‘தீபாவளிக்குள் எப்படி சயின்டிஸ்ட்டாக மாறுவது?’ என்று திண்ணையில் படுத்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, கிச்சாவோடு பள்ளியில் கூடப் படித்ததோடு விடாமல், சதா கூடவே இருந்து குழியும் பறித்துக் கொண்டிருக்கும் ‘குட்டை ராமானுஜம்’ வந்து, ‘தோ பார் கிச்சா, நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தான் ஆகணும். அதுமாதிரி சயின்டிஸ்ட்டா ஆகணும்னா, சயின்டிஸ்ட் வேஷம் போட்டுத்தான் ஆகணும். மொதல்ல தொளதொளன்னு ஒரு பைஜாமா ஜிப்பா வாங்கிப் போட்டுக்கோ. சோடா பாட்டில் கண்ணாடியை மாட்டிக்கோ. அப்புறம் மூஞ்சி இந்த மாதிரி கேரம்போர்டு கணக்கா மழமழன்னு இருந்தா, சத்தியமா நீ சயின்டிஸ்ட் ஆக முடியாது… பெரிய பெரிய சயின்டிஸ்ட்டெல்லாம் பாரு, ஒரு மீசை, குறுந்தாடி வெச்சுண்டிருப்பாங்க. மளமளன்னு குறுந்தாடி வளத்துக்கோ. அப்புறம் பாரு, தன்னால ஐடியா வரும். சயின்டிஸ்ட்டா ஆகிவிடலாம்’ என்று தைரியம் கொடுத்தான்.

கிச்சாவுக்குக் குறுந்தாடி. பிரச்னையானது. மூளையிலும் சரி, முகத்திலும் சரி, கிச்சாவுக்கு வளர்த்தி சற்றுக் கம்மிதான். முகத்துக்கு நல்லது என்று எச்சுமிப் பாட்டியின் ஆலோசனையின் பேரில் சின்ன வயதிலிருந்தே பயத்தம் மாவு, பசும்மஞ்சள் கலவையை சோப்புக்குப் பதிலாக உபயோகப்படுத்தியதில், கிச்சாவின் முகம் ‘வதனமே சந்திர பிம்ப மாகிவிட்டது! இரண்டு மாதத்துக்கு ஒருமுறை டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்தால் போதும், லேசாக வளர்ந்த பூனை முடிகளும் உதிர்ந்துவிடும்!

“குறுந்தாடி வளராவிட்டால் என்ன, ஒட்ட வைத்துக் கொண்டால் போயிற்று’ என்ற வைராக்கியத்துடன் மேக்-அப் மேன் எத்திராஜைப் பார்த்தான் கிச்சா. ஒரு சரித்திர நாடகத்தில் வரும் ராஜகுருவுக்காக ரிசர்வ் செய்து வைத்திருந்த மீசை, குறுந்தாடியை கிச்சாவின் மழமழ முகத்தில் ஸ்பிரிட் கம், கோந்து, சாதப் பருக்கை இப்படி என்னவெல்லாமோ போட்டு ஒட்டியும் ஒட்டாமல் வழுக்கி வழுக்கி விழுந்தது. கடைசி ஆயுதமாக கிச்சாவை சற்று நேரம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, குறுந்தாடியைத் தாடையில் வைத்து ஸ்டேப்ளர் அடித்துப் பொருத்தி அனுப்பினான் எத்திராஜ்.

யாரும் கேட்டுக் கொள்ளாமலே தொளதொளவென்று வெள்ளை பேண்ட்டை, வேட்டி மாதிரி தைக்கும் கிச்சாவின் ஆஸ்தான டெய்லர் பாபாராவ், குட்டை ராமானுஜத்தின் அட்வைஸ் பேரில் சயின்டிஸ்ட் கோலத்துக்காகத் தொளதொளவென்று பைஜாமா ஜிப்பாவை கிச்சா தைக்கச் சொன்னதும் ஏகக் குஷியாகி, திருவல்லிக்கேணியில் உள்ள அத்தனைப் பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளும் அளவுக்குத் தைத்துக் கொடுத்தான். சாதாரணமாக பைஜாமா போட்டுக் கொண்டு நடப்பார்கள். இந்த பைது ஜாமாவைப் பொறுத்தவரை கிச்சாவுக்கு, பைஜாமாவுக்குள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டியதாயிற்று.

குட்டை ராமானுஜம் வாங்கித் தந்த சோடா பாட்டில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தபோது, கிச்சாவுக்கு எதிரே வந்த பாலிஸி எடுக்கும் பத்மநாப அய்யங்கார், எல்.ஐ.சி. உயரத்துக்குப் பிரமாண்டமா மான எலெக்ஷன் நேரத்து கட்-அவுட் போலத் தெரிந்தார்.

விஞ்ஞான வெறி உச்சந்தலையில் ஏறிவிட, ‘என்ன கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியிலேயே ஆறு நாள் கடத்தினான் கிச்சா.

ஏழாவது நாள் ஒரு முடிவுக்கு வந்த கிச்சா, குட்டை ராமானுஜத்தின் உதவியோடு தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கீத்துக் கொட்டகை போட்டுத் தாற்காலிக லேப் ஒன்றை உருவாக்கினான். ‘லேபுக்கு என்ன பெயர் வைப்பது?’ என்று யோசித்தபோது, ‘ஏற்கெனவே ஜெமினி கலர் லேப் இருக்கு. அதனால நாம இதுக்கு ‘சிவாஜி லேப்’னு வெச்சுடலாம்…’ என்று குட்டை ராமானுஜம் கூற, கிச்சா ஒப்புக் கொண்டான்.

‘ராமர்பிள்ளை போல தானும் பேர் வாங்க வேண்டும்!’ என்ற நப்பாசையில் கிச்சா, தன் பெயரை ‘கிருஷ்ணர் பிள்ளை’ என்று மாற்றிக் கொண்டு கெஸட்டில் பதிவும் செய்தான். ‘அய்யங்காரா பொறந்துட்டு என்னடாது பிள்ளைனு பேரை மாத்திண்டுட்டே?’ என்று எச்சுமிப் பாட்டி அங்கலாய்த்தபோது, ‘பாட்டி, இது அந்தப் பிள்ளை இல்லை. அப்பா பேர் கிருஷ்ணன். நான் கிருஷ்ணர் பிள்ளை…’ என்று சமாதானம் செய்தான் கிச்சா.

ஓரிரு சினிமா டிஸ்கஷனில் கலந்து கொண்டு, கதையை உல்டா செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த குட்டை ராமானுஜம், ‘ஏண்டா கிச்சா, ராமர் பிள்ளை மூலிகைலேந்து பெட்ரோல் தயாரிச்சார். நாம உல்டாவா பெட்ரோல்லேந்து மூலிகை தயாரிப்போம். அந்த மூலிகையைத் தோட்டத்துல நட்டா, மரமா வளரும். அந்த மரத்துல விளைஞ்ச மூலிகைலேந்து மறுபடி பெட்ரோல் தயாரிப்போம். எப்படி…?’ என்று ராயல்டி வெறியில் உளற ஆரம்பிக்க, ‘சினிமா வேற, சயின்ஸ் வேற. அந்த உல்டாவெல்லாம் இங்க வொர்க் அவுட் ஆகாது…’ என்று கிச்சா அவனை அடக்கினான்.

ஐடியா ஆராமுது மாமா தந்த மூலிகைப் புத்தகத்தில், தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு மறுபடி முடி வளர ‘சுறுசுறு முடி ஹேராதி கிராப்பு சூரணம் செய்முறை கொடுக்கப்பட்டிருப்பதைப் படித்த கிச்சா, அதைத் தயாரித்தான். ‘சூரணத்தை யாருக்குக் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கலாம்….?’ என்று கிச்சா யோசித்துக் கொண்டிருந்தபோது, ராயல்டி உத்வேகத்தில் இருந்த குட்டை ராமானுஜம், கிச்சாவின் ஆராய்ச்சிக்குத் தான் பரிசோதனை எலியாக (பெருச்சாளி என்றுதான் சொல்ல வேண்டும்!) இருக்க உடன்படுவதாகக் கூறினான். ராயல்டி தவிர, ராமானுஜத்துக்கு இதில் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. குட்டை ராமானுஜம் கண்ணைக் கூசவைக்கும் முழுச் சொட்டை ராமானுஜமும்கூட! சூரணத்தைச் சாப்பிட்ட மூன்றே நாளில் ராமானுஜத்துக்குத் தலை தவிர, மற்ற எல்லா இடங்களிலும் முடி வளர்ந்து ராமானுஜம் ரோமானுஜமானான்.

‘ஆராமுது வைத்த கெடுவுக்கு இன்னும் ஆறு நாள்தான் இருக்கிறது’ என்ற அவஸ்தையில் கிச்சா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பவர் கட் ஆனது. ‘ஒரு நாளைப் போல இதே எழவா போச்சு. எப்பப்பாரு கரெண்ட் கட். இதுக்கு யாரானும் ஒரு வழி பண்ணித் தொலைக்க மாட்டாளோ?’ என்று இருட்டில் அங்கலாய்த்தபடி எச்சுமிப்பாட்டி போக, இதைக் கேட்ட கிச்சா, அந்த இருட்டிலும் பிரகாசமாகி, ‘யுரேகா… யுரேகா…’ என்று ஆர்க்கிமிடீஸ் போலக் கத்தினான். “ராமர்பிள்ளை புதிய முறையில் பெட்ரோல் கண்டுபிடித்தது போல, நான் ஒரு புதிய முறையில் கரண்ட் கண்டுபிடிக்கப் போகிறேன்…’ என்று கும்மிருட்டில் குட்டை ராமானுஜம் என்று நினைத்து, அங்கு இருந்த ஸ்டூலிடம் கிச்சா ரகசியமாகச் சொல்லி முடிக்க, பவர் வந்தது.

‘பேட்டரி, ஜெனரேட்டர் போன்ற பழைய வழிகளில் இல்லாமல் வேறு எப்படிப் புதிய வழியில் கரண்ட்டை உருவாக்கலாம்?’ என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டபோது, கிச்சாவுக்குப் பள்ளியில் படிக்கும்போது ‘பாணா பரசுராமன்’ தன் முழங்கையில் விரலால் தட்ட, அதனால் தனக்கு ஷாக் அடித்த அதிர்ச்சி ஏற்பட்டது நினைவுக்கு வந்தது. கரண்ட்டைத் தொட்டால் ஷாக் அடிக்கும். அதேபோல எங்கு ஷாக் அடிக்கிறதோ, அங்கு கரெண்ட் இருக்கும். குட்டை ராமானுஜத்தின் உல்டா டெக்னிக்கை கிச்சாவும் ஆமோதித்தான்.

கிச்சா அவனை ஒரு மேஜையில் படுக்க வைத்து, அவன் முழங்கையில் ஒரு வொயரைக் கட்டி, அதன் மறுமுனையை பல்பில் இணைத்து விட்டு, ராமானுஜத்தின் முழங்கையில் ஷாக் உண்டாக்க ஒரு சின்னச் சுத்தியலுடன் நெருங்க… பயத்தில் பரிசோதனை எலி ராமானுஜம், பரிசோதனை மூஞ்சூறாகச் சுருங்க ஆரம்பித்தான். ஆவேசமாகச் சுத்தியலால் கிச்சா, ராமானுஜத்தின் வலது கை அதிர்ச்சியில் சிறிது நேரம் அடித்துவிட்டு, இறுதியில் உல்டாவாகத் திரும்பிக் கொள்ள, ராமானுஜத்தின் இரண்டு கைகளுமே இடது கைகளாயின.

கிச்சாவுக்கு வலது கையாக இருந்த ராமானுஜம், தனது வலது கை இடது கையாக மாறியதில் பயந்துபோய், ராயல்டி என்ற பெயரில் கிச்சா செய்யும் க்ரூயல்டி தாங்காமல் பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகினான்.

‘சொந்தக் காலில் நின்று எப்படியும் கரெண்ட்டைக் கண்டுபிடித்துவிடுவது’ என்பதில் வெறியாக இருந்த கிச்சா, ராப்பகலாக உழைத்துப் பாட்டியின் கையால் காபிப் பொடி அரைக்கும் மெஷின், தாத்தா காலத்துப் பெரிய சைஸ் சுவர் கடிகார பெண்டுலம், அந்தக்கால கிராமபோன் பாகங்கள், சில பல உருளைகள், பல் சக்கரங்கள் இவற்றையெல்லாம் வைத்து ஒரு விநோதமான இயந்திரம் தயாரித்தான். அந்த இயந்திரத்தின் ஒரு முனையில் 100 வாட்ஸ் பல்பை பொருத்தி, இயந்திரத்தை இயக்கினான். 100 வாட்ஸ் பல்பு பிரகாசமாக எரிந்தது. டெல்லியிலிருந்து விஞ்ஞானிகளையும் ஐ.ஐ.டி.-யிலிருந்து பேராசிரியர்களையும் வரவழைத்துத் தான் கண்டுபிடித்த இயந்திரத்தால் பல்ப் எரிவதைக் காட்டி, ‘கரெண்ட் இல்லாமல் பல்ப் எரிகிறது பாருங்கள்…’ என்று கிச்சா கத்த, அவர்கள் பதிலுக்கு ஆத்திரத்தில் கோரஸாக, ‘மூதேவி, உனது இயந்திரம் கரெண்டால் ஓடுகிறதே…’ என்று கத்த, அப்போதுதான் கிச்சாவுக்குத் தனது கண்டுபிடிப்பின் தவறு புரிந்து, இயந்திரத்தை ஓட்ட பவர் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறிந்து அசடு வழிந்தான். ‘பாங்க்குல கரண்ட் அக்கௌண்ட்டுன்னு ஒண்ணு இருக்கு. அங்க போய் பல்பைத் தொங்கவுடு, எரியும். மூதேவி…’ என்று திட்டிவிட்டு அவர்கள் போனார்கள்.

விடிந்தால் தீபாவளி. ஆராமுது மாமா கும்பகோணத்திலிருந்து வந்து ‘என்ன கண்டுபிடித்தாய்?’ என்று சொக்காயைப் பிடித்துக் கேட்பார் என்ற பயத்திலும் அவமானத்திலும் லேபில் சூம்பிப் போய் அமர்ந்திருந்த கிச்சாவின் கையில் எச்சுமிப் பாட்டி தீபாவளி லேகியத்தைத் திணித்து, ‘தீபாவளி பட்சணம் நெறைய இப்பவே கொட்டிண்டுட்டே, இந்த லேகியத்தைத் தின்னு. ஜீரணமாகும்…’ என்று சொல்லிவிட்டுச் செல்ல, கிச்சா கடுப்பில் லேகியத்தை விசிறி எறிய, அது ஆராமுது மாமா கொடுத்த புத்தகத்தில் போட்டிருந்த செய்முறைப்படி, கூடுவிட்டுக் கூடு பாய சாப்பிட வேண்டிய குளிகை தயார்நிலையில் கொதித்துக் கொண்டிருந்த ஈயச்சொம்பு பாத்திரத்தில் விழ, சிகப்பு, மஞ்சள், ஊதா, நீலம் என்று கலர் கலராகப் புகை கிளம்பிச் சிறிது நேரத்தில் அடங்கியது. கிச்சா ஓடிச் சென்று ஈயச்சொம்பு பாத்திரத்துக்குள் எட்டிப் பார்த்தான். அதில் வெள்ளையாகப் பால் ஏடு போல ஏதோ ஒன்று இருந்தது. விரலால் தொட்டுச் சுவைத்துப் பார்க்க, சற்றே பாஸந்தி மாதிரி தித்திப்பாக இருந்தது. கிச்சா அதை வழித்து முழுவதுமாகத் தின்றான்.

அப்போது எச்சுமிப் பாட்டி அங்கு வந்தாள். “பாட்டி, நீ தந்த லேகியம் இதுல விழுந்தது. கலர் கலரா புகை வந்தது…’ என்று கிச்சா சொல்லச் சொல்ல, பாட்டி கண்டுக்காமல் கொல்லைப்புறத்தில் துணி உலர்த்த ஆரம்பித்தாள். பாட்டி எதிரில் போய் நின்று, ‘ஆராமுது மாமா கேப்பாரே பாட்டி நாளைக்கு, என்ன கண்டுபிடிச்சேன்னு…?’ என்று கிச்சா சொல்ல, பாட்டி பதில் ஏதும் சொல்லாமல் கிச்சாவைப் பார்த்தும் பார்க்காதது போல நகர ஆரம்பித்தாள். கிச்சா, ‘நான் அசடுதான். ராமர்பிள்ளை மாதிரி எதையும் கண்டுபிடிக்க எனக்குத் துப்பில்லை. இப்ப திருப்திதானே…’ என்று ஆத்திரமாகக் கத்தியபடி, தன்னை ஓரங்கட்டும் பாட்டியைத் தடுத்து நிறுத்த, அவள் கையைப் பிடிக்க முயன்ற கிச்சா, பிடிக்க முடியாமல் தன் கை காற்றில் துழாவுவது போல இருப்பதை உணர்ந்தான். ஏதோ பொறி தட்ட, கிச்சா அவசர அவசரமாகத் தன் ரூமுக்குள் ஓடி பீரோ கண்ணாடியில் பார்க்க, கண்ணாடியில் கிச்சா தெரியவில்லை. கிச்சா கண் எதிரில் இருக்க, அப்போது குட்டை ராமானுஜம் வந்து பாட்டியிடம் ‘பாட்டி என் கை சரியாயிட்டுது. கிச்சா எங்கே?’ என்று கேட்க, ‘எதனையானா கண்டுபிடிக்கறேன் பேர்வழின்னு மூலிகை வாங்க டப்பா செட்டி கடைக்குப் போயிருக்கும் பிரும்மஹத்தி…’ என்ற பாட்டியின் பதில் கிச்சாவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

ஆராமுது மாமாவின் புத்தகத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போகும் மூலிகையைப் பற்றிக் கூறிவிட்டுத் திரும்பக் கண்ணுக்குத் தெரிய மாற்று மருந்துக்கான மூலிகைக்கு, பார்க்க முப்பத்துநாலாம் பக்கம் என்று போட்டிருந்தது. அவசர அவசரமாகப் புரட்டிய கிச்சா, முப்பத்து மூணாம் பக்கத்துக்குப் பிறகு முப்பத்தைந்தாம் பக்கம் இருப்பது கண்டு அதிர்ந்து போனான். முப்பத்துநாலாம் பக்கம் கிழிந்துபோய், கிச்சாவைப் போலக் காணாமல் போயிருந்தது.

மறுநாள் தீபாவளி. ‘எதையாவது கண்டுபிடித்துக் காட்டுகிறேன்’ என்று ஆராய்ச்சி செய்து, தற்சமயம் யார் கண்ணுக்கும் தெரியாமல் போய்விட்ட கிச்சாவைக் ‘கண்டுபிடிக்க’ எச்சுமிப் பாட்டி, ஆராமுது, ராமானுஜம் உள்படத் திருவல்லிக்கேணியே நாலாபுறமும் தேடிக் கொண்டிருக்கிறது! உங்களில் யாருக்காவது மாற்று மருந்து தெரிந்தால் அனுப்ப வேண்டிய முகவரி: ‘சிவாஜி லேப்.. மே/பா. கிச்சா, சிங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை, ஆறு பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் ஐந்து!’

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *