இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,163 
 
 

இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொன்ன ஏமாற்றப்போய் ஏமாந்தவர்கள் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் கையெழுத்து மறையும் நேரம்; மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடற்கரையில் உட்கார்ந்து, நீலக் கடலைக் குனிந்து முத்தமிடும் நீல வானை நோக்கிக்கொண்டிருக்க, அதுகாலை கையில் ‘டிரான்ஸிஸ்ட’ ருடன் இரு மாணவர்கள் அவரிடம் வந்து, ‘இந்தி டிரான்ஸிஸ்டரை இங்கே வைத்துவிட்டுப் போகிறோம்; கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்கிறீர்களா? கடலில் குளித்துவிட்டு வந்து எடுத்துக்கொள்கிறோம்!’ என்று சொல்ல, ‘அதற்கென்ன, வைத்துவிட்டுப் போங்கள்!’ என்று அவர் சொல்ல, அவர்கள் தங்களுடைய ‘டிரான்ஸிஸ்ட’ரை அவருக்கு அருகே வைத்துவிட்டுப் போவாராயினர்.

அவர்கள் தலை மறைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரருடன் வந்த யாரோ ஒருவர், ‘காணாமற்போன என்னுடைய டிரான்ஸிஸ்டர் இதுதான், ஐயா! எவ்வளவு பெரிய மனிதர் எப்படிப்பட்ட காரியம் செய்திருக்கிறார், பார்த்தீர்களா?’ என்று விக்கிரமாதித்தரைச் சுட்டிக் காட்டிச் சொல்ல, ‘இந்தக் காலத்தில் பெரிய மனிதராவது, சிறிய மனிதராவது? எல்லாம் வெறும் வேஷம்! திருடுவதையும் திருடிவிட்டு இவர் எவ்வளவு தைரியமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறார், பாருங்கள்!’ என்று போலீஸ்காரர் சொல்ல, விக்கிரமாதித்தர் திடுக்கிட்டு, ‘யாரைத் திருடன் என்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘உங்களைத்தான்! எழுந்து வாருங்கள் ஸ்டேஷனுக்கு!’ என்று போலீஸ்காரர் அவருடைய கையைப் பற்ற, விக்கிரமாதித்தர் எழுந்து, ‘ஏண்டா சிட்டி, ஏண்டா பாதாளம்! நாளை நடக்கப்போகும் மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்ளப் போகும் நீங்கள் போயும் போயும் என்னிடம் வந்துதானா உங்கள் ஒத்திகையை நடத்திப் பார்க்க வேண்டும்?’ என்று அவன் பற்றிய கையைத் தட்ட, ‘இந்த இருட்டில்கூட அது எப்படித் தெரிந்தது உங்களுக்கு?’ என்று அவர்கள் வியக்க, ‘அதுகூடத் தெரியாவிட்டால் நீங்கள் என்னிடம் வேலை செய்து என்ன பிரயோசனம்? நான் உங்களை வைத்து வேலை வாங்கித் தான் என்ன பிரயோசனம்?’ என்று விக்கிரமாதித்தர் சிரிக்க, அவரை ஏமாற்ற வந்த இருவரும் ஏமாந்து போய்த் திரும்புவாராயினர்.”

இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சுந்தரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் இந்திரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க…..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *