சூப்பில் கிடக்கும் ரொட்டிபோல(2) நனைந்திருந்தேன். சடிதியான மழையென்றால் நனைந்துதானே ஆகணும் ?இல்லையா. திடுதிப்பென்று அடித்து ஓயும் வெப்பமண்டல பிரதேசத்து மழை. சுழன்று அடிக்கும் காற்றும் மழையும் பாதசாரிகளைப் பிடுங்கி எறிகிறது, சாலையோற குறடுகளை நீரில் மூழ்கச் செய்கிறது. என்னைக்குறிவைத்து பெய்கிற மழை. என்னை ஓயாமல் துரத்தும் பொல்லாத நேரம் இன்றைக்குத் தன் புத்தியை மழையாகக் காட்டியிருக்கிறது. சுற்றியிருந்தவர்களில் சிலர் குடைகளை விரிக்கிறார்கள், சிலர் காப்பி பாரின் முன் வாசல் வளைவுகளையும், கூடங்களையும் கண்டு அவசரமாய் ஒதுங்குகிறார்கள். சாலையின் எதிர்ப்புறம் பெயர்ப்பலகையின் மின்விளக்கு அணைக்கப்பட்ட நிலையில் திறந்திருந்த ‘பார் ‘ எனக்கு அதிசயமாகப் பட்டது. இவ்வீதி எனக்குப் புதியதல்ல நன்கு பழக்கப்பட்டதென்கிற எண்ணம். தமது தடத்தை மாற்றிக்கொள்வதென்பது மழைக்கு வேண்டுமானால் சாத்தியம். என்னைச் சுற்றியுள்ள உலகம் மறுபடியும் தமது இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முன்பாக, எனக்கே எனக்கென்று ஒரு கால்மணி நேரத்தை செலவிடப்போகிறேன்.
உத்திரங்களும் தூண்களும் ஆகப் பழையவை. பழுப்பேறிய போத்தல்கள், எங்கும் அமைதி. நுழைவு வாயிலில் எனது மேலங்கியினால் நேர்ந்த நீர்த்தாரைகள். மதுவிற்கபடுகிற நீண்ட மேசையை ஒட்டிப் போடப்பட்டிருந்த தவிசு ஒன்றில் தனி ஆளாக சென்றமர்கிறேன். சற்றுத் தள்ளி, ஆணும் பெண்ணுமாய் ஜோடியொன்று மெல்ல பேசிக்கொண்டே பீர் குடித்துக்கொண்டிருக்கிறது. பார் அட்டெண்டர் எதற்கும் அலட்டிக்கொள்ளாதவன்போல மிக நிதானத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான்.
— ச்சே.. காலநிலை ஆகமோசம், இல்லையா ?
— ஐஸ்போடாம எனக்கு ஒரு பூர்போன்(3) கொடு
மூலையில் ஒரு ஜூக்-பாக்ஸ். இத்தனை காலத்திற்கும் பிறகும் உபயோகத்தில் இருக்கிறதா என்ன ? நாணயத்தைப் போட்டால்தான் பாடுமோ ? ஒருவேளை நாணயத்தினைப் போட பாட்டோடு பாடகர் உருவமும் தெரியவருகிற Scopitones(4) ரகமா ? பார்த்தால் அப்படி தெரியவில்லை. தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ ஒருபாடலை தேர்வுசெய்துமுடித்த பார் அட்டெண்டர் என்னை எதற்காகத் அப்படிப் பார்க்கிறான் ? கையிலிருந்த ‘பூர்போன் ‘(3)விஸ்கியில் ஒரு மிடறு உள்ளே இறங்க ஜிவ்வென்று ஏறிய உஷ்ணம் சோர்ந்திருந்த உடலுக்கு இதமாக இருக்கிறது.
Preghero…! Per te…che hai la notte nel curore…
செலாந்த்தானோவுடைய (Celentano) ‘Stand by me ‘ பாட்டு. அப்பாட்டு என்னோட இளமையைத் திரும்பக் கொண்டுவரப்போவதில்லை, எனினும் இப்போதைக்கு எனக்குத் தேவை. செலாந்த்தனோ பாட்டெனில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இத்தனைக்கும் அவன் அமெரிக்கர்களின் சாயலில் பாட ஆரம்பித்துவிடுவானோ என்கிற சந்தேகம் அப்போது பலருக்கும் இருந்தது. இனிமையான அப்பாடல், எனது இளமையின் அந்திமக் காலங்களை நினைவூட்டுகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எதை, யாரைச் சந்திக்கவேண்டுமோ அதற்காகப் பலரும் ஓடிக்கொண்டிருந்தார்கள், நினைத்ததை சாதிப்பதென்றால் சும்மாவா ? அவர்களில் நானொருவன் மாத்திரம் வித்தியாசமானவன். எனது எதிர்பார்ப்பு என்னவென்று எனக்குத் தெரிந்திருந்தது. அதனை ஒரு சிலருக்கு விளங்கப்படுத்தியும் வந்தேன். என் கடன் அதற்காகக் காத்திருப்பது, காத்திருந்தேன். Stand by me… Ohoo Stand by me…காத்திருப்பது அலுக்கும் விஷயம், மற்றவர்களின் நகைப்புக்குப் பொருளாகக் கூடியது, எனினும் சிலவேளைகளில் காத்திருப்பதிலும் ஒருவகையான சந்தோஷமிருக்கிறது அப்படியான தருணங்களில் அதனை விரும்பிச் செய்கிறோம். வாழ்க்கையின் மிகப்பெரியத் தருணத்திற்காகக் காத்திருக்கையில், பாடவும் செய்கிறோம். எந்த நேரமும் அத்தருணங்கள் வாய்க்கலாம் என்கிறநிலையில், பொறுமையாகக் காத்திருக்கிறோம். நேற்றுவரை அதற்காகக் கடும் முயற்சிகள் மேற்கொண்டு ஈடேறும்தறுவாயில் சந்தேகிக்கிற மனிதன் பரிதாபத்திற்குரியவன்! வெட்கப்படவேண்டியவன்! நேற்றுவரை எஜமான விசுவாசத்தோடு அதன் வரவிற்காக காத்திருந்துவிட்டு, தருணம் அமையும்போது அதனைச் சந்தேகிக்கிறவன். அத்தகைய மனிதர்களுக்குச் ‘சனிதிசை துவங்கிவிட்டதென ‘ மற்றவர்கள் பேசுவதிலும் நியாயமுண்டு. வாலிபப்பிராயத்தில் ஓரளவு இலட்சணமாக இருப்பேன், நான் பேசுவதைக் கேட்பதற்கென்றே சுற்றிவரும் பெண்கள் கூட்டம், பிறகென்ன கடற்கரை, புதுமைகளில் நாட்டம், பெண்களின் மார்புகச்சு…Stand by me… வாழ்க்கையின் முக்கியமான தருணம், எனக்கு எப்போதுவேண்டுமானாலும் வாய்க்கலாம் என்கிற நேரத்தில், சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதைக் கவனத்திற் கொள்ளாமலேயே, அசட்டையாக எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருந்திருக்கிறேன்.
சற்றுதூரத்தில் அமர்ந்திருந்த ஜோடி தங்கள் உரையாடலை நிறுத்தியிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காதலர்களாக இருக்கவேண்டும். ‘செலாந்த்தனோ ‘ இத் துர்பாக்கியசாலிகளையும் ஈர்த்திருக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் தலையாட்டினேனென்று சொன்னேனில்லையா ? அதில் என்னை கடந்து செல்லும் காலமும் அடக்கம். முடிவில் ‘தாம் எவ்வளவு சுலபமாகக் கடக்க முடிந்ததென்பதை ‘ அக்காலமும் ஒரு நாள் புரியவைக்கிறது. அது என்ன சொல்லவருகிறது என்பதைக் காதில்வாங்காமலேயே தலையாட்டுவேன். சின்னச் சின்ன தலையாட்டுதல்கள், வரிசையாய் நீண்டு இன்றைக்கு இந்த அபத்தமான மதுச்சாலையிடம் என்னைச் சேர்த்திருக்கிறது. எனது பிரியத்துக்கு உகந்தவைகளை பலிபீடத்தில் நிறுத்தியதை எப்படி மறப்பது ? Stand by me…Ohooo Stand by me…எனக்குரியதை மற்றவர்கள் சொந்தங் கொண்டாட எதற்காகத் தலையாட்டினேன் ? என்னைபோலவே என்பிள்ளைகளும் இருக்கவேண்டுமென நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் ? இன்றையதினம் அவர்கள் யாரை ஒத்திருக்கிறார்கள் என்பதைக்கூட என்னாற் சொல்லமுடியாது. அவர்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. அவர்களுக்குள்ள தைரியம் எனக்கு அந்த வயதில் இருந்ததில்லை. உடன் பணியாற்றுகிறவர்கள் அன்பாக இருக்கவேண்டுமென்று நானெதற்காக வருத்திக்கொள்ளவேண்டும் ? எதற்காக இப்பாழும் நோயை எனது வயிற்றிற்குள்ளாக அனுமதிக்கவேண்டும் ? Stand by me… ‘கிட்டத்தட்ட ஜெரெமியாட்(5) ‘ புலம்பல் பாடலைப்போல. இத்தாலிய மொழி, ஆங்கிலத்தைக்காட்டிலும் ஆக மோசம். ‘Preghero per te… ‘ ஒருவனும் எனக்காக பிரார்த்தனை செய்யப்போவதில்லை. ஒருவனும் அடுத்தவனுக்காக பிரார்த்தனை செய்யமாட்டான், எதற்காக பாடல்கள் தேவையில்லாமல் பொய்சொல்கின்றன ?
வெளியே மழை தற்காலிகமாக நின்றிருந்தது. இதுதான் காலநிலை. இம் மதுச்சாலையைக்காட்டிலும் என்னுடைய நிலை ஆகப் பரிதாபம். இன்னொரு கண்ணாடி தம்ளர் மதுவினை, கேட்டு வாங்குகிறேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் எனக்கதில் விருப்பமிருக்கிறதோ இல்லையோ வெளியே போய்விடவேண்டும். எனக்கான உரிமை கால்மணி நேரம், கூடுதலாக ஒரு விநாடிகூட எனக்கு அனுமதியில்லை. பார் அட்டெண்டர் ராஸ்கல் அதில் பாதி நேரத்தை இந்தப் பாழாய்போன ‘ஜூக்-பாக்ஸால் ‘ பறித்துவிட்டான். மறுபடியும் போடுகிறான். என்னை துரத்துவதென்று தீர்மானித்திருக்கிறான், அவனுக்கும் என்னிடம் பழிதீர்த்துகொள்ள ஏதோ காரணமிருப்பதைப்போல. துரத்தும் அளவிற்கு என்னிடம் அவன் கண்ட குறையென்ன ? தெரிந்துகொள்ளவேண்டும். இதயமற்று ஏனோதானோவென்று ஒரு பாடல் ? ப்ராம்ஸ்(6)ஸோட இசை நிகழ்ச்சியா ? யதார்த்தவாதப் பாடல் வகையா ? இங்கே எதுவும் நடக்கலாம்.
I woke up this morning…
ப்ளூஸா ? அப்படித்தான் தோணுது. கிட்டார் நரம்புகளின் சிடுசிடுப்பு, காதை செவிடாக்கும் இறைச்சல். கண்விழித்தபிறகு ஒரு மனிதனுக்கு நேர்ந்த அத்தனைப் பிரச்சினைகளையும் புலம்புகிற இன்னுமொரு பாட்டு. எதற்காகக் கட்டிலைவிட்டு எழுந்திருக்கணும், நீங்க நான் உட்பட அத்தனைபேரும் ? இப்போதைக்கு இந்தக் கேள்வி எனக்குத் தேவையா ? ஹும்… கேட்டு என்ன ஆகப்போகுது ? பிரச்சினைகள் தீர்ந்திடுமா ? ஒவ்வொரு நாளும் முந்தையதினத்தைக் காட்டிலும் நரகமென்பது எனக்குத் தெரியும், அதனை உணரவும் முடியுது. பாடலின் முன்பாதி அலுப்புத் தட்டுகிறது, பின்பாதியைக் கேட்க ஆகப்பொறுமை வேண்டுமென நினைக்கிறேன், எனினும் குரலில் உள்ள செறிவு கேட்பவர்களை உசுப்பக்கூடும். பாடலைக் கேட்க சென்ற தலைமுறையைச் சேந்த இந்தியச் சாது ஒருவர் என்னை நன்னெறிபடுத்துகிற நினைப்பு.. பூர்போன் விஸ்கி நாடோடிகளுக்கான வோட்கா, ஜோராக இருக்கிறது, தரத்திற்குக் காரணம் விளைந்த நிலம் மற்றும் தயாரிப்பிற்கு பிறகு கையாண்ட பாதுகாப்பு முறைகளாக இருக்கலாம். I woke up this morning…காலையில் கண் விழித்தபோது, இன்றைக்கு இப்படி மழைகொட்டுமென நினைக்கவில்லை.
நான் ‘நில் ‘ என்றால் மழை நின்ற காலங்களும் உண்டு, சியூ(7)சூன்யக்காரனைபோல ஆனால் என்னிடத்தில் எல்லாம் தலைகீழ். ஆரம்பத்தில் ஒருவனும் என்னை நம்பியதில்லை, கடைசியில் என்னோட தந்திரத்தை மெச்ச வேண்டிய நிலைமை. சொல்லப்போனால் இந்த விடயத்தில் பந்தயம் கட்டி செயித்திருக்கிறேன். பெரும்பாலும் அநேகர் நம்பமாட்டார்கள். கொஞ்ச நேரம் என்மனதை ஒரு முகப்படுத்தினாப்போதும், மழை சட்டென்று நின்றுபோகும். இச்சாமர்த்தியத்தினால் மாத்திரம் எத்தனைப் பெண்களை வீழ்த்தியிருப்பேனென்று நினைக்கிறீர்கள். மழையை நிறுத்துவதற்கு அப்படியெல்லாங்கூட உத்திகள் இருந்திருக்குமா ? தெரியவில்லை. ஆனால் என்னால் முடியுமென்று திடமாக நம்பினேன், முடிந்தது அதுதான் உண்மை. அப்படித்தால் ஓரு கிராமத்திற்கு சூரியனை அழைத்துவந்தேன், அவர்கள் நம்பவில்லை என்பது தனிகதை. இப்போது அப்படியான சாமர்த்தியம் என்னிடத்தில் இல்லை.
என்னைக்கேட்காமலேயே பார் அட்டெண்டர் இன்னொரு கோப்பை மதுவை நீட்டுகிறான்.
— எடுத்துக்குங்க, இது எங்கோளோட அன்பளிப்பு.
ஒரு புன்னகைமூலம் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். பாடலின் அடுத்துவரும் வரிகள் மனதை வேதனைப் படுத்தலாம். ஏன் அதனையுந்தான் முயற்சித்தாலென்ன ? எதற்காக தவிர்க்கவேண்டும் ? நாளைக்கு என்ன நேருமென்று சொல்லமுடியும் ? இப்போதெல்லாம் இசையில எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கிறது. நான் ஒருபோதும் பெரிய நட்சத்திர பாடகனாக மாறப்போவதில்லை ஆனால் எனது சந்தோஷத்திற்கென்று சில பாடல்களை ஒற்றை ஆளாக பாடமுடியும். இங்கேயும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். என்றைக்கவாதொரு நாள் என்பாடல் மேடையேற வேண்டுமெனில் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே இந்தஷணமே ஆரம்பித்தாகணும். சரளிவரிசையை முறைப்படி கற்பது மாத்திரமல்ல, பொறுமையோடு, நீண்டநாட்களுக்கு இடைவிடாமற் பயிற்சிசெய்யவேண்டும். ‘பூர்போன்(3) ‘ என்னை வேறொரு உலகத்திற்கு அதாவது பாடகனால் அன்றைய தினத்து சங்கடங்கள் என வருணிக்கபடும் உலகத்திற்கு, அழைத்து செல்கிறது. I woke up this morning…காலையில் அவன் விழிக்காமலிருந்தால் இப்படியொரு இனிமையானபாடலை எழுதியும் பாடியும் இருக்கமுடியுமா ? அர்ப்பணிப்பு மனிதர்களுக்கு மாத்திரந்தான் இவ்வுலகம் சொந்தமா என்ன ? என்னைப்போல உழைப்புக்குப் பலனின்றி ஜீவிக்கிற கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது. எங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பது உண்மை ஆனால் மறக்கக்கூடாதவையென நிறையவே எங்களிடம் இருக்கின்றன. சிலநொடிகள் கண்களை இறுகமூடி மனதை ஒருமுகபடுத்தினால் ஒருவேளை…
–என்ன சொல்ற ஒரு கோப்பை பூர்போன் விஸ்கி பந்தயம், இரண்டொரு நிமிடத்தில மழையை நிறுத்திக் காட்டுகிறேன்.
பார் அட்டெண்டர் என்னை நேராக பார்க்கிறான், அவனது அதரங்களில் ஓர் அலட்சிய புன்னகை.
–என்ன விளையாடறியா ? மழைத்துளிகள் உடைந்த விஸ்கி கிளாஸ் துண்டுகள்போல மொத்துமொத்தென்று அதிகமா விழுது.
— எதற்கு வீண்பேச்சு, இப்போ பந்தயம் வச்சுக்கலாமா ? வேண்டாமா ?
‘உடனே கிளம்பு ‘ என்பதன் அடையாளமாக அவனிடமிருந்து சைகை. ஜூக்-பாக்ஸ் பாடுவதை நிறுத்திக்கொண்டது. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மறுபடியும் கண்திறந்தபோது பிரமை பிடித்தவன்போல பார் அட்டெண்டர் திரைத்துணியோடு நின்றுகொண்டிருக்கிறான்.
நாளைகாலை மறுபடியும் கண் விழித்தாகணும்.
– மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (ஜனவரி 2006)
* Un temps de blues
1. அமெரிக்க கறுப்பின மக்களின் வெகுசனப் பாடல்கள், பெரும்பாலும் விரக்தியை வெளிபடுத்துபவை.
2. Trempe comme une soupe – அல்லது தமிழ் வழக்கில் மழையில் நனைந்த கோழிபோல
3. Bourbon – அமெரிக்கன் விஸ்கி
4. அறுபதுகளில் காப்பி பார்களில் 16மி.மி.ல் எடுக்கபட்ட பாடல்காட்சிகளை திரையிடும் எந்திரம்.
5. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜெரெமியாஸ் என்கிற தீர்க்கதரிசியின் பாடல்
6. BRAHMS Johannes -(1833-1897) ஜெர்மானிய இசைக்கலைஞர்.
7. வட அமெரிக்க செவ்விந்திய இனம்.