பெயர் இல்லாத தெரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 4,176 
 
 

(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 5 | 6 – 10 | 11 – 15

6

குத்துச்சண்டை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

நிலவள நம்பி குத்துச்சண்டை நடக்கும் மைதானத்துக்கு முன்பே போய்விட்டார். குத்துச்சண்டை நடக்கும் இடத்தில் டிக்கட் வாங்க மக்கள் குத்துச்சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்! இலட்சக்கணக்கில் பணம் வசூலாயிற்று!

குறிப்பிட்ட நேரத்துக்குப் புறப்பட்டான் பெரியதம்பி செல்லையாவும் முத்தையாவும் அவனைப் பாதுகாப்புடன் காரில் ஏற்றிச் சென்று, குத்துச்சண்டை மேடைக்குப் பின் பக்கமாக இருந்த ஒரு சிறிய கட்டடத்திற்குள் கடத்திச் சென்றார்கள். அங்கே பெரியதம்பிக்காக ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் சென்றதும், சன்னல் வழியாகப் பார்த்தான் பெரியதம்பி. மக்கள் திரள் கடலைப் போல் தெரிந்தது. கண்ணுக்கு எட்டியவரையில் மனிதத் தலைகள்தாம் தெரிந்தன!

செல்லையா அவன் பக்கத்தில் வந்து, அந்த அறையின் மற்றொரு பக்கம் இருந்த சன்னலைக் காட்டினான். பெரிய தம்பி அந்தச் சன்னல் பக்கம் பார்த்தான். பின்புறம், சாலை ஓரமாக ஒரு பழைய கார் நின்றிருந்தது. அதில் காரோட்டி ஒருவன் உட்கார்ந்திருந்தான். “அந்தக் கார் உன்னை ஏற்றிச் செல்லக் காத்திருக்கிறது! சண்டை முடிந்ததும் நீ அந்தக் காரில் புறப்பட்டுவிட வேண்டும்!” என்றான் செல்லையா!

“ஆகட்டும்’ என்றான் பெரியதம்பி.

“குத்துச்சண்டை செய்யும்போது பணத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகிறாய்?”

“பணத்தைப் பற்றி நீ துன்பம் கொள்ளவேண்டாம். நான் அந்தப் பணத்தைக் கையுறையிலேயே வைத்துக் கொள்கிறேன்!” என்று சொல்லித் தன்னிடமிருந்த பத்துஆயிரம் ரூபா நோட்டுக்களையும் கையுறையில் மடித்து வைத்துக்கொண்டான். பிறகு-

குத்துச்சண்டை போடும்போது, ஓங்கி மிகக் குத்தினால் அந்த நோட்டுக்கள் கிழிந்துவிடுமே என்று முடிவு செய்து அவைகளை ஒருவரும் பார்க்காதபோது தனது சட்டைப் பையில் அவன் மறைத்துவிட்டான். இது வேறு எவருக்கும் தெரியாது. இதனால் –

செல்லையாவும் முத்தையாவும் பணத்தைப் பெரிய தம்பி தனது குத்துச்சண்டை கையுறையிலேயே வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள்!

பெரியதம்பி குத்துச்சண்டை மேடைக்குச் சென்ற போது மக்களிடையே ஆரவாரம் மிகுந்தது. காட்டெருமையைப் போல் பாய்வதற்கு முன்னேற்பாடுடன் நின்ற வல்லவன் துடித்துக் கொண்டு நின்றான்! முதலில் வல்லவனைக் கண்டதும் அவனை அடித்துத் தள்ளமுடியுமா என்று பெரியதம்பிக்கு ஐயமாகத்தான் இருந்தது! ஆனால், மக்களிடையே எழுந்த ஓசைகள் அவனுக்குப் புது உணர்ச்சியை அளித்தன!

மேடையின் ஓரத்தில் முதல் ‘வரிசையில் சிகரெட்டைப் பிடித்தபடி எடுப்பாக நிலவள நம்பி உட்கார்ந்திருந்தார். அவரைப்போல இன்னும் பல பணக்காரர்களும் முன்வரி சையில் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டாவது வரிசையில் பெரியதம்பியைப் பார்த்துச் சிரித்தபடி ஓர் அழகியபெண் உட்கார்ந்திருந்தாள். அந்தப்பெண் காதுகளில் விலை உயர்ந்த வைரக் கற்களைப் பதித்த புதுமாதிரித் தோடுகளை அணிந்திருந்தாள். அந்தத் தோடுகளைப் பார்த்தால் சூரியகாந்தி மலர்களைப் போல் இருந்தது!அவள் கழுத்தில் ஒட்டினாற்போல் வைரக்கற்கள் பதித்த விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்று தவழ்ந்தது. அவள் பெரும் பணக்காரியாக இருக்க வேண்டும். அவள் இதில் எவ்வளவு பணம் கட்டி யிருக்கிறாளோ என்று எண்ணினான் பெரியதம்பி, அந்தப் பெண் அவனைப் பார்த்து, வலக்கையைத் தூக்கி. வல்லவனை ஒரு நாக்கவுட் கொடுக்கும்படி வளையல்கள் அணிந்த தன் கரத்தினால் சாடை காட்டினாள். அதைக் கண்டதும் எங்கிருந்தோ பெரியதம்பிக்கு ஆற்றலும் ஆர்வமும் ஊக்கமும் வந்தன!

சிங்கத்தைப் போல் பாய்ந்தான் பெரியதம்பி. குத்துச் சண்டை தொடங்கியது.

புலிக்குட்டிக்கு ஒருபக்கம் ஊக்கம்தரும் குரல்களும் வல்லவனுக்கு ஒருபக்கம் ஊக்கம் தரும் குரல்களும் எழும்பின!

முதல் ரவுண்டில் எதிரியின் ஆற்றலைச் சோதித்துப் பார்த்துக் கொண்டான் பெரியதம்பி. வல்லவன் பலசாலிதான் என்றாலும் எப்படியாவது அவனை இரண்டாவது ரவுண்டில் வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவு கட்டினான் பெரியதம்பி. முதல் ரவுண்டில் பெரியதம்பி வாங்கிய சில குத்துக்கள், எதிரிக்கும் அவனை ஆதரித்தவர்களுக்கும் ஊக்கத்தை அளித்தன. முதல் ரவுண்டு முடிந்ததும் பார்வையைத் திருப்பினான் பெரியதம்பி. நிலளை நம்பியின் முகம் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. ஆனால், முதலிலிருந்தே அவனுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்த பெண் சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டாள். அவன் அவளைப் பார்த்ததும், அவள் மீண்டும் மலர்ந்த முகத்துடன் பகைவனை வீழ்த்தும்படி சாடை காட்டினாள்!

மணியடித்தது!

வேங்கையைப்போல் பாய்ந்தான் பெரியதம்பி!

வல்லவனுக்கும் புலிக்குட்டி என்ற பெயரோடு மேடை மீது ஏறிவிட்ட பெரியதம்பிக்கும் பெரிய சண்டை நடந்தது. இரண்டாவது ரவுண்டில் இவ்வளவு கடுமையான சண்டை நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெரியதம்பி முழு வேகத்துடன் பகைவனின் வலக்கண்ணுக்குப் பக்கத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டபோது, சற்றும் எதிர் பாராத ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது!

வல்லவன் மரம் சாய்வதைப் போல் சாய்ந்தான்! ஓசைகளும் கை ஒலிகளும் மிகுந்தன! நடுவர், ஒன்று, இரண்டு மூன்று என்று எண்ணினார். வல்லவன் எழுந்திருக்கவே இல்லை. அவன் விழுந்தவன் விழுந்தவன்தான்!

புலிக்குட்டியின் மீது பணத்தைக் கட்டியவர்கள் விசில் அடித்தார்கள். பணத்தைப் பறித்தார்கள்! ‘புலிக்குட்டி வாழ்க’ என்று கத்தினார்கள்!

பெரியதம்பி அந்த அழகியைப் பார்த்தான். அவள் எழுந்து விரைந்து வெளியே போய்க்கொண்டிருந்தாள். அதே நேரத்தில் நிலவள நம்பியின் முகம் –

பேய் அறைந்ததைப் போலிருந்தது!

இதற்குள் குத்துச்சண்டை மேடைக்கு வந்த டாக்டர் வல்லவன் இறந்து விட்டதாகக் கூறினார்!

வல்லவன் இறந்துவிட்டான்; நிலவள நம்பி பல இலட்சங்களை இழந்துவிட்டார் என்பதை எண்ணிப்பார்த்த பெரியதம்பி, உடனே அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சி செய்தான்! மின்னல் விரைவில் தன் அறைக்குச் சென்று அவன் உடைகளை அள்ளிக்கொண்டு செல்லையாவும் முத்தையாவும் வருவதற்குள் பின்பக்கம் வேறு திக்கில் ஓடினான்!அவன் தனக்காகக் காத்திருந்த காரை நோக்கிப் போகவில்லை! அவன் சிறிது தொலைவு ஓடியதும் அவனுக் குப் பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரை அவன் சற்றுமுன், கூட்டத்தில் கண்ட அழகி ஓட்டி வந்தாள். அவள், காரின் கதவைத் திறந்து விரைந்து அவனை ஏறிக்கொள்ளும்படி சாடை காட்டினாள்.

செல்லையாவும் முத்தையர்வும் பெரியதம்பியைத் துரத்திவந்த அதே நேரத்தில், பெரியதம்பி அந்தப் பெண்ணின் காரில் ஏறி உட்கார்ந்தான். அந்தக் காரை அவள், விமானத்தைச் செலுத்துவதைப் போல் விரைவாகச் செலுத்தினாள்!

பின்னால் மற்றொரு கார் அவர்களைத் துரத்தியது. பின்னால் வந்த காரில், செல்லையாவும் முத்தையாவும் உடகார்ந்திருந்தார்கள்!

பெரியதம்பி, பின்னால் வந்த காரைத் திரும்பித் பார்த்துக்கொண்டே சென்றான்.

“துன்பம் கொள்ளாதீர்கள். அவர்களால் நம்மைப் பிடிக்க முடியாது!” என்றாள் அந்தப் பெண் சற்று அமைதியுடன்.

கார் ஓட்டுவதில் அவள் மிகத் திறமை பெற்றிருந்தாள் அவளுடைய இரு அழகிய கைகளும் காரின் ஸ்டீயரிங்கை இப்படியும் அப்படியும் திருப்பிக் காரை வளைத்து வளைத்துச் செலுத்தியபோது மிக வேடிக்கையாக இருந்தது. அவள் கைகளில் ஒன்றில் வைரக்கல் பதித்த விலை ஒமேகா கடிகாரம் கட்டியிருந்தாள். அந்தத் தங்கச் சங்கிலியிலும் ஒரு சில உயர்ந்த கற்கள் பதிக்கப் பட்டிருந்தன.


7

பெரியதம்பி அடிக்கடி திரும்பிப் பின்னால் வரும் காரைப் பார்ப்பதும் அந்த அழகி கார் ஓட்டும் அழகைப் பார்ப்பதுமாக இருந்தான். இரண்டு கொடியவர்கள் நாயைச் சுடுவதைப் போல் அவனைச் சுட்டுக்கொல்லத் துரத்தி வர, ஓர் அழகியுடன் விரைவு மிகுந்த காரில் எங்கேயோ தப்பிச் செல்வது அவனுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது!

போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் காரைச் செலுத்தினாள் அந்த அழகி. கூட்டமும் கார்களின் போக்குவரத்தும் மிகுந்த அந்தச் சாலையில் மிக உறுதியுடன் எங்கேயாவது விபத்து நடக்கத்தான் போகிறது என்று எண்ணினான் பெரியதம்பி. அந்தப் பெண் காரை மிகவும் விரைவாக வளைந்து வளைந்து செலுத்தியபோது, பெரிய தம்பிக்கு வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்தப் பெண் மற்றக் கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு வழியாகப் பின்னால் துரத்தி வந்த காரை உதறித் தள்ளிவிட்டு எங்கேயோ வந்துவிட்டாள்!

பின்னால் திரும்பிப் பார்த்த பெரியதம்பி பெருமூச்சு விட்டான். “அந்தக் கார் மறைந்து விட்டது!” என்றான்.

“விரைவு கொள்ளாதீர்கள். மீண்டும் அவர்கள் நம் காரைக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்கு நாம் இடம் தரக்கூடாது!” என்று சொல்லிவிட்டு முன்னைவிட விரைவாகக் காரைச் செலுத்தினாள் அவள்.

பெரியதம்பி இப்போதுதான் சற்றுச் சாய்ந்து உட்கார்ந்தான். “நல்ல நேரத்தில் என்னைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி” என்றான்.

” உங்களுக்கு நான் அல்லவா நன்றி கூறவேண்டும். இந்தக் குத்துச் சண்டையில் நீங்கள் வெற்றி பெறாவிட்டால் என்னுடைய பணம் ஐம்பதினாயிரம் போயிருக்கும். இப்போது நான் என் பணத்தை மீட்டுக்கொண்டதோடு ஐம்பதினாயிரம் ரூபா வெற்றி பெற்றிருக்கிறேன்!”

“மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஓர் உண்மையை நான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்!” என்றான் பெரியதம்பி.

“தயங்காமல் சொல்லுங்கள்.”

“உன்னுடைய அழகிய முகத்தையும், நீ எனக்கு அளித்த ஊக்கத்தையும் அந்தக் கூட்டத்தில் நான் பார்க்காவிட்டால், இந்தக் குத்துச் சண்டையில் வெற்றி பெற்றிருப்பேனா என்பது ஐயம்தான்! எதிரி நான் எண்ணியதை விடப் பலசாலி! எப்படியோ நான் முடிவு செய்தபடி மாபெரும் வெற்றி கண்டுவிட்டேன்! ஆனால் இப்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நான் இந்தக் குத்துச்சண்டையில் திட்டப்படி தோற்றிருக்க வேண்டும். நிலவள நம்பி என்னைத் தோற்றுவிடும்படி சொல்லி அனுப்பினார். நான் வெற்றி பெற்றுவிட்டதால், நிலவள நம்பி பல இலட்சங்களை இழந்துவிட்டார். இதனால்தான் அவருடைய ஆட்கள் என்னைக் கொல்லத் துரத்தி வருகிறார்கள்.”

“புரிகிறது. நிலவள நம்பியைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்! எப்படியிருந்தாலும் அவர் உங்களைக் கொல்லாமல் விடமாட்டார். ஆகையால், சென்னையில் இருப்பதைவிட வெளியூரில் சிலநாட்கள் நீங்கள் மறைந்திருப்பது நல்லது! என்னுடன் பெங்களூருக்கு வாருங்கள். பெங்களூர் வரை நான் போகிறேன்.”

அந்தப் பெண் தமிழை நன்றாகப் பேசினாலும் தமிழை அவள் உச்சரித்த விதம் நடிகை சரோஜாதேவியை நினை வூட்டியது. ஆகையால் அவள் ஒரு கன்னடப்பெண்ணாகத் தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டினான் பெரிய தம்பி.

“நீங்கள் கூப்பிடுவதால்தான் உங்களுடன் பெங்களூருக்கு வருகிறேன்.வழியில் என் ஓட்டலுக்குச் சென்று, என்னுடைய பெட்டியைக் கொண்டு வந்து விடுகிறேன்” என்றான் பெரியதம்பி.

இதைக் கேட்டு அவள் சிரித்தாள்.

“நீங்கள் சொல்லுவது எப்படி இருக்கிறது தெரியுமா? எலிப்பொறியில் இருக்கும் தேங்காயை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவதாக எலி சொல்லுவதைப் போலிருக்கிறது! நீங்கள் எப்படியும் உங்கள் ஓட்டலுக்குச் சென்று, பெட்டியையும் எடுத்துக் கொண்டு செல்லுவீர்கள் என்று எண்ணி நிலவள நம்பி அந்த ஓட்டலுக்கு இரண்டு பேர்களை அனுப்பி இருப்பார்! அந்த எலிப்பொறிக்கு நீங்கள் போகாதீர்கள்.”

அவள் சொல்வது உண்மைதான் என்று பட்டது அவனுக்கு. அந்தப் பெண்ணிடம் அழகு மட்டும் அல்ல, அறிவும் ஆற்றலும்கூட நிரம்பியிருந்ததை அவன் உணர்ந்து கொண்டான்.

“உங்கள் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்றாள் அவள்.

“வெறும் உடைகள்தாம். பணம் ஒரு காசுகூட இல்லை.”

“உங்களுக்குத் தேவையான உடைகளைப் பெங்களூரில் வாங்கிக் கொள்ளுங்கள். சென்னையைவிடப் பெங்களூரில் மலிவு” என்றாள் அவள்.

பெரியதம்பி இதை எதிர்த்துப் பேசவில்லை. எப்போதும் ஒருவர் தம் சொந்த ஊரைத் தூக்கிப் பேசுவது வழக்கம். மேலும் பெங்களூரைப் பெரியதம்பி இதுவரை கண்டதில்லை. நேரில் பார்த்த பிறகு பேசிக் கொள்வோம் என்று பேசாமல் இருந்துவிட்டான்.

கார் சென்னையின் எல்லையைவிட்டு விலகி ஓடிக் கொண்டிருந்தது.

பின்னால் எந்தக் காரும் துரத்தி வரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பெரியதம்பி, அமைதியுடன் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் கழித்து “உன் பெயரென்ன?” என்று சாய்ந்து கேட்டான்.

“சாந்தி” என்றாள் அந்த அழகி.

“பெங்களூரிலிருந்து நீ தனியாகவா சென்னைக்கு வந்தாய்?” என்று கேட்டான் பெரியதம்பி.

“ஆமாம். உங்கள் குத்துச்சண்டையைப் பார்ப்பதற்கே வந்தேன். குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டுவதைப் போல், குத்துச் சண்டையிலும் இந்தக் காலத்தில் பந்தயம் கட்டிக்கொள்வது மிகுதியாகிவிட்டது!” என்றாள் சாந்தி.

“பெங்களூரில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன்னைப் பார்த்தால் பெரும் பணக்காரியைப்போல் இருக்கிறதே” என்றான் பெரியதம்பி. அவள் சிரித்தாள். காரை விரைவாகச் செலுத்தியபடியே திரும்பிப் பார்த்து, “நான் ஒரு சினிமா நடிகை! கன்னடப் படங்களில் நடித்து வருகிறேன்! விரைவில் தமிழ்ப்படங்களில் நடிக்கப் போகிறேன்!” என்றாள்.

“அப்படியா?” என்றான் பெரியதம்பி.

அவள் சினிமா நடிகை என்றதும் அவள் கைகளில் மின்னியவை வைரங்கள்தாமா அல்லது போலியா என்ற ஐயம் வந்துவிட்டது அவனுக்கு! அவள் செலுத்திச் சென்ற கார் விலை உயர்ந்த கார் என்பது அவனுக்குத் தெரியும். அவள் ஐம்பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டி வெற்றி பெற்றிருக்கிறாள் என்பதையும் வைத்து, அவள் கன்னடப் படங்களில் பெரும் பணம் சேர்த்து விட்டிருக்க வேண்டும். என்று முடிவு கட்டினான்.


8

கார் நேராகப் பெங்களூருக்குப் போகவில்லை. வேலூரை அடைந்ததும் சாந்தி காரை நிறுத்தினாள். “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. வெயிலும் மிகுதியாக இருக்கிறது. வேலூரில் ஓய்வு எடுத்துக்கொண்டு, மாலையில் புறப்படுவோம். சரிதானே” என்றாள் அவள்.

“இங்கே எங்கே ஓய்வு எடுத்துக் கொள்வது?” என்றான் பெரியதம்பி.

“உங்களை ஓர் ஓட்டலின் முன் இறக்கி விடுகிறேன். அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஓர் அறை எடுத்துக் கொண்டு அமைதியுடன் தூங்குங்கள். நீங்கள் இங்கே தங்கியிருப்பது நிலவளநம்பியின் ஆட்களுக்குத் தெரியாது. அவர்கள் இங்கே வரமாட்டார்கள். மாலை ஐந்து மணிக்கு நான் வந்து உங்களை அழைத்துச் செல்லுகிறேன். போதுமா?” என்றாள் சாந்தி.

“நீ எங்கே ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறாய்?” என்று கேட்டான் பெரியதம்பி.

“இந்த ஊரில் எங்கள் உறவினர்கள் வீடு இருக்கிறது. அங்கே தங்கிவிட்டு மாலை ஐந்து மணிக்கு மிகச் சரியாக வருகிறேன்” என்றாள் சாந்தி.

அரை மனத்துடன் பெரியதம்பி ‘ஆகட்டும்’ என்றான்.

ஓர் ஓட்டலின் முன் கார் நின்றது. பெரியதம்பி அந்த ஓட்டலுக்குள் சென்றான். உணவு உண்டுவிட்டு, தங்கி இளைப்பாற ஓர் அறையை வாடகைக்குஎடுத்துக்கொண்டு படுக்கச் சென்றான். அவன் மனம் சாந்தியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அவள் அவனை வேலூரில் இறக்கிவிட்டு விட்டுச் செல்ல முடிவு செய்திருக்கவேண்டும், மீண்டும் அவள் வருவது ஐயம்தான் என்று முடிவு கட்டி விட்டான் அவன்.

அவள் மீண்டும் வருவதாக இருந்தால் அவனை விட்டுவிட்டு, ஒரு சிலமணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள உறவினர்கள் வீட்டுக்குப் போவாளா?

இப்படி அவன் எண்ணியபடி தூங்கி விட்டான்.

சரியாக ஐந்து மணிக்கு ஓட்டலின் வெளியே கார் ஆரன் ஓசை கேட்டு எழுந்து சன்னல் பக்கமாகப் பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை! சாந்தி காரில் உட்கார்ந்தபடி ஆரனை அடித்துக்கொண்டிருந்தாள்.

“இதோ வந்து விட்டேன்” என்று கத்திக்கொண்டே அவன் புறப்பட்டான். ஒரு சில நிமிடங்களில் அவன் கீழே இறங்கிச் சென்றான். மீண்டும் காரில் புறப்பட்டான்.

கார், பெங்களூரை நோக்கிக் காற்றைப்போல் பறந்தது.

பெங்களூருக்கு ஐம்பதாவது கல் தொலைவில் போய்க் கொண்டிருந்தபோது இருட்டிவிட்டது. அப்போதும் சாந்தி விரைவுடன் காரைச் செலுத்தினாள்.

பளிச் பளிச்சென்று விளக்குகளை அடித்தபடி எதிரே சர்சர்ரென்று கார்களும், லாரிகளும் பறந்து வந்தன.எந்த நிமிடத்திலும், சற்று ஏமாந்தாலும் விபத்து நடந்துவிடும் போல் இருந்தது. பெங்களூருக்குப் போய் சேருவோமோ என்று பெரியதம்பிக்கு அச்சமாகத்தான் இருந்தது. வழியில் அவன் அஞ்சியபடியே நடந்தது!

கண்களைக் குருடாக்கும்படி விளக்குகளை அடித்துக் கொண்டு லாரி ஒன்று வந்தது. சாந்திக்கு வழி வாய்க்கால் தெரியவில்லை. எதிரே மோதி விடுவதைப் போல் வந்த லாரியின் மீது மோதாமல் இருக்கக் காரை இடப் பக்கம் திருப்பினாள். அடுத்த கணம் –

கார் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.

காரிலிருந்து தூக்கி எறியப்பட்ட பெரியதம்பி மண்டையில் அடிபட்டுச் சற்றுத் தொலைவில் போய் விழுந்தான். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எதுவும் அவனுக்குத் தெரியாது.


9

பெரியதம்பி மீண்டும் கண்களை மெல்லத்திறந்தபோது எதிரே தெரிந்தனவெல்லாம் நிழல்போல் இருந்தன. அவன் காணுவது கனவா, இல்லை. உண்மையில் அவனுக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை அவனால் முடிவு செய்ய முடியவில்லை. அவன் தன் கண்களைப் பல தடவைகள் திறந்து மூடினான். அவன் கண் இமைகளை எவரோ அழுத்துவதைபோல் இருந்தது. எளிதில் அவனால் அவன் கண்களைத்திறந்து பார்க்க முடியவில்லை.

அவன் இப்போதுதான் ஒரு கட்டிலில் படுத்துக் கிடப் பதை உணர்ந்தான். அவன் தன் விரல்களால் படுக்கையை அழுத்திப் பார்த்தபோது, படுக்கை கல்லைப்போல் இருந்தது

அவன் கட்டில், சுவர் ஓரமாகப் போடப்பட்டிருந்தது. வெள்ளைத் கட்டிலைச்சுற்றி மற்ற மூன்று பக்கங்களிலும் துணியினால் ஆன திரை போடப்பட்டிருந்தது. டெட்டால்; லைசால் போன்ற மருந்துகளின் வாசனை அவன் மூக்கில் வந்து பட்டது. கிருமிகளைக் கொல்லும் இந்தமருந்துகளின் வாசனையும், கடினமான மெத்தையும், வெண் திரைகளும், வெள்ளை உடை அணிந்த டாக்டர்களும் நர்சுகளும், அடிக்கடி வந்து அவனைப் பார்த்து விட்டுப் போனதையும் கொண்டு அவன், ‘நாம் மருத்துவ விடுதியில் இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து கொண்டான்.

பெரியதம்பி மிகத் தெளிவாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தபோது, நர்ஸ் ஒருத்தி அவனைப் பார்த்து விட்டுச் சிரித்தபடி, “இப்போது எப்படி இருக்கிறது?’ என்று கேட்டாள். அவன் பேச வாயைத் திறந்தபோது, “பேசாதீர்கள்! நீங்கள் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்று கூறிவிட்டு டாக்டரை அழைத்துவர அவள் ஓடினாள்!

சற்று வயதான டாக்டர் ஒருவர் வந்தார். அவர் அவன் பக்கத்தில் வந்து அவனைத் தொட்டுக் குனிந்து
பார்த்துவிட்டு “நல்ல வேளையாக நீ பிழைத்தாய்! நான் இறுதிவரையில் நம்பிக்கை இழக்காமல் தான் இருந்தேன்” என்றார்.

பெரியதம்பிக்குத் தன் தலையில் எவரோ ஒரு பாறையைத் தூக்கி வைத்ததைப் போல் இருந்தது. அவன் தலையில் கட்டுப் போட்டிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவனுக்குக் கார் விபத்தைப்பற்றிய விவரங்கள் மெல்ல மெல்ல நினைவுக்கு வந்தன. அந்தக் கார் விபத்தில் அவன் மீண்டும் பிழைத்தது அவனுக்கே வியப்பாக இருந்தது!விபத்தை நினைத்தபோது மறுபடியும் அவனுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது

டாக்டர் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந் தார். அப்போது டாக்டரின் பக்கத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து நின்றார். அவர் போலீஸ் உடையில் இல்லை ஆனாலும் அவருடைய முரட்டுத் தோற்றத்திலிருந்து அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது பார்த்ததும் புரிந்து விட்டது! விபத்தைப் பற்றித்தான் அவர் கேட்கப்போகிறார் என்பதைப் புரிந்து கொண்டான் பெரியதம்பி. அவனுக்கு நடந்தது முழுவதும் அப்படியே கவனத்திற்கு வரவில்லை. மெல்ல மெல்லச் சிறிது சிறிதாகத்தான் நினைவில்வந்தது “டாக்டர், இவனிடம் நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். கேட்கலாமா?” என்று கேட்டார் போலீஸ் அதிகாரி.

“மிகுதியாகப் பேசக்கூடாது. ஒன்றிரண்டு நிமிஷங்களுக்குமேல் பேச வைக்காதீர்கள்” என்றார் டாக்டர்.

“உன்னிடம் சில உண்மைகளைக்கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்தைப் பற்றிய முழு விவரங்களையும் எங்களால் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

பெரியதம்பியைப் போலீஸ் அதிகாரி பார்த்தான். அவர் சொன்னதை உணர்ந்து கொண்டவனைப்போல் தலையை ஆட்டினான். அப்போது அவன் தலை ஏகப்பட்ட வலியைக் கொடுத்தது!

அவன் முக மாற்றத்திலிருத்து அவனுக்குத்தலைவலிக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட டாக்டர், “உன் தலை பாறையைப் போலக் கடினமானது! இல்லாவிட்டால் இந்த விபத்தில் நீ பிழைத்திருக்கமாட்டாய்! உன் வலுவான உடல் எப்படியேர் தாக்குதலையும் அடியையும் தாங்கிக் கொண்டது! தலையை ஆட்டாதே! உனக்கு உடல் குணமாக இன்னும் பல நாட்கள் ஆகும்!” என்றார்.

“ஆபத்து ஒன்றும் இல்லையே!” என்றான் பெரியதம்பி.

“இனிமேல் ஆபத்து ஒன்றுமில்லை. ஓய்வும். சிகிச்சையும்தான் உனக்குத் தேவை” என்றார் டாக்டர்.

போலீஸ் அதிகாரி அவனிடம் கேட்டார்: “உன் பெயர் என்ன?”

“பெரியதம்பி” என்றான் அவன்.

இதைக் கேட்டதும் போலீஸ் அதிகாரியின் முகம் மாறியது. டாக்டர் முகமும் சிறிது மாறியது.

போலீஸ் அதிகாரி சொன்னார்: ‘“பெயரையே மறந்து விட்டாய்! எல்லாம் விபத்தில் ஏற்பட்ட தாக்குதல் தான்! குற்றமில்லை விபத்தைப்பற்றி உனக்கு நினைவுக்கு வருகிறதா?”

பெரியதம்பிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. அவன் தன் பெயரைச் சொன்னவுடன், அதை நம்பாமல் அவன் தன் பெயரையே மறந்து விட்டதாகக் கூறுகிறாரே! அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”என் பெயர் பெரியதம்பி! என் பெயரை நான் மறக்கவில்லை.” என்று கத்திப் பேசினான்.

போலீஸ் அதிகாரி டாக்டரைப் பார்த்தார். டாக்டர் அவரிடம், “இப்போது தொல்லை கொடுக்காதீர்கள். மீண்டும் நாளைக்கு வேண்டுமானால் வந்து பேசிப் பாருங்கள். மூளையில் அடிபட்டிருக்குமோ என்று எனக்கு ஐயம் வருகிறது. மூளையில் அடிபட்டால் இப்படிக் குழப்பங்களும் மறதிகளும் வருவது எளிது” என்றார்.

“என்ன சொல்லுகிறீர்கள் டாக்டர்? எனக்கு ஒன்றும் குழப்பம் இல்லை. என் பெயர் பெரியதம்பிதான். நான் ஒரு குத்துச் சண்டை வீரன்” என்றான் பெரியதம்பி.

போலீஸ் அதிகாரி அவன் சொன்னதைக் குறித்துக் கொண்டார்.

”சரி, நீ சொல்லுவது உண்மையாகவே இருக்கட்டும். உன் பெயர் பெரியதம்பி. நீ ஒரு குத்துச்சண்டை வீரன். நீ காரில் வந்து கொண்டிருந்தபோது விபத்து நடந்தது சரி, எப்படி விபத்து நடந்தது?” என்றார்.

“சாந்தி என்னும் பெண் காரை ஓட்டி வந்தாள். நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வந்தேன். கார் இருளில் விரைவாக வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருந்த லாரி ஒன்று காரின் மீது மோத வந்தது. சாந்தி, காரை ஒடித்துத் திருப்பியபோது, கார் உருண்டு உடனே பள்ளத்தில் விழுந்துவிட்டது!”

போலீஸ் அதிகாரியின் முகம் இப்போது அடியோடு மாறியது.

“காரை நீ ஓட்டி வந்தாய். காரின் முன்சீட்டில் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. காரின் பின் சீட்டில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இல்லையா? நினைவு கொண்டு பார்” என்றார் போலீஸ் அதிகாரி.

“இல்லவே இல்லை! காரைச் சாந்திதான் ஓட்டி வந்தாள். பின் சீட்டில் எவரும் இருக்கவில்லை. நான் சாந்திக்குப் பக்கத்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தேன். வேண்டுமானால் அவளையே கேளுங்கள். எங்கே இருக்கிறாள் சாந்தி? எப்படி இருக்கிறாள் சாந்தி?” என்று சற்றுக் கத்தினான் பெரியதம்பி.

உடனே டாக்டர் குறுக்கிட்டார்.

“இப்போது நீ எல்லாவற்றையும் மறந்துவிடு. உனக்கு ஓய்வு வேண்டும். எதைப் பற்றியும் சிந்திக்காதே!” என்று அவர் சொல்லிவிட்டு, போலீஸ் அதிகாரியை ஒரு கையால் தள்ளிக்கொண்டு டாக்டர் வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து ஊசியைப் போட்டுவிட்டு சென்றாள். அதைப் போட்டதும் அவனுக்கு மீண்டும் தூக்கம் வந்தது. மயக்கம் வந்தது.


10

அடுத்த நாள் காலையில் பெரியதம்பி இன்னும் சற்றுத் தெளிவுடன் இருந்தான். நர்ஸ் அவன் பக்கத்தில் வந்து பார்த்தபோது, “இந்தத் திரைகளை எடுத்து விட்டால் என்ன? பொதுவாக வார்டில் உள்ள நோயாளிகளைச் சுற்றித்தானே இப்படித் திரைகளைப் போடுவது வழக்கம்?” என்றான் பெரியதம்பி.

நர்ஸ் மெல்லச் சிரித்துக் கொண்டே சொன்னாள். “உண்மைதான் உங்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருந்தபோது இந்தத் திரைகளைப் போட்டிருந்தோம். அடிக்கடி போலீஸ் அதிகாரி உங்களைப் பார்க்க வருவதால் அவர் உங்களிடம் பேசுவது மற்ற நோயாளிகளின் காதுகளில் விழக்கூடாதே” என்றாள்.

அப்போது உள்ளே நுழைந்த டாக்டர்; அவனைச் சோதித்துப் பார்த்துவிட்டு “இப்போது சற்றுத் தெளிவுடன் நீ இருக்கிறாய். போலீஸ் அதிகாரி இன்னும் சில நிமிஷங்களில் வருவார். அவர் கேள்விகளுக்கு நீ ஒழுங்காகப் பதில் சொல்லி, விபத்து நடந்த வழக்கை ஆராய்ந்து ஒரு முடிவு செய்ய அவருக்கு நீ உதவி செய்” என்றார்.

“ஆகட்டும் டாக்டர்” என்றான் பெரியதம்பி.

டாக்டரும் நர்சும் போன பிறகு, போலீஸ் அதிகாரி மீண்டும் வந்தார். அவர் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். சிறு பிள்ளையிடம் கேள்வி கேட்பதைப்போல் அவர் கேள்வி ளைக் கேட்டார். “இப்போதாவது உனக்கு உன் பெயர் நினைவு வந்ததா? எந்த ஊர் நீ? சொல்லு பார்க்கலாம்?”

பெரியதம்பி சொன்னான். “என் பெயர் பெரியதம்பி. எனக்கு ஓர் ஊரோ உறவினர்களோ இல்லை.”

அவன் தஞ்சாவூரைப் பற்றியோ, அவனை வளர்த்து விட்ட உறவினரைப் பற்றியோ அவன் மூச்சு விடவில்லை. அவன் குத்துச்சண்டை போட்டதையும் பிறகு சாந்தி என்னும் பெண்ணுடன் பெங்களூருக்குக் காரில் சென்றதைப் பற்றியும் மட்டுமே சொன்னான். தன் ஊரையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை

“மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அப்படியானால் நீ நாடோடியா?” என்று கேட்டார் போலீஸ் அதிகாரி.

”ஆமாம்.”

“சாந்தியுடன் காரில் போகும் நிலைமை உனக்கு எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டார் போலீஸ் அதிகாரி.

”சென்னையில் ஒரு குத்துச்சண்டை செய்தேன். அந்தக் குத்துச் சண்டையில் நான் தோற்றுவிட்டிருக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. எப்படியாவது பிழைத்தால் போதும் என்று சாந்தி என்ற கன்னட நடிகையின் காரில் ஓடிப்போய் ஏறிக் கொண்டேன். அவள்தான் என் காரை ஓட்டி வந்தாள்!” என்றான் பெரியதம்பி பிறகு –

மிகத் தெளிவாக, நிலவள நம்பியைப் பற்றியும், குத்துச் சண்டைவீரன் புலிக்குட்டி இறந்துவிட்டதைப் பற்றியும் புலிக்குட்டிக்குப் பதில் அவன் சண்டை போட்டதைப் பற்றியும் சொன்னான்.

“எல்லாம் வெறும் கற்பனையாக இருக்கிறது. புலிக்குட்டி குத்துச்சண்டை போட்டு, வல்லவன் என்பவனைத் தோற்கடித்த பிறகுதான் ஒரு விபத்தில் இறந்தான். அவனுக்குப் பதில் நீ குத்துச்சண்டை போட்டதாகச் சொல்லுகிறாயே! உன் மூளையில் அடிபட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். டாக்டரிடம் சொல்லி மீண்டும் உன்னைச் சோதிக்கும்படி சொல்ல வேண்டும்” என்றார் போலீஸ் அதிகாரி.

“நான் சொல்லுவதை நீங்கள் சிறிதும் நம்பமாட்டேன் என்கிறீர்களே! என் மூளை மிகச் சரியாக இருக்கிறது. நான்தான் குத்துச்சண்டையில் வல்லவனைத் தோற்கடித்தேன். சாந்தி கூட ஐம்பதினாயிரம் ரூபா கட்டி வென்றாள். வேண்டுமென்றால் அவளிடமே கேளுங்கள் சாந்தி இப்போது எப்படியிருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?” என்று கத்தினான் பெரியதம்பி.

போலீஸ் அதிகாரி அவனை மிக இரக்கத்தோடு பார்த்தார். பிறகு சொன்னார்: “நேற்று உன் நிலைமை தாக்கு தலைத் தாங்கும் அளவுக்கு இல்லை என்பதால் டாக்டர் உண்மையைச் சொல்ல வேண்டாம் என்றார். சாந்தி மூன்று நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாள். விபத்திலே உன்னால் பிழைக்க முடிந்தது. அவளால் பிழைக்க முடியவில்லை.”

இதைக் கேட்டதும் பெரியதம்பி தன் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டான்.

– தொடரும்

– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *