பெயர் இல்லாத தெரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 10,182 
 
 

(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1620 | 21 – 25 | 26 – 30

21

பெங்களூரில் பெரியதம்பி தங்கியிருந்த வானவில் ஓட்டலுக்கே மீண்டும் திரும்பிச் சென்றான். தன் அறைக்கு சென்றதும், தொலைபேசிப் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். அதில் சினிமா நடிகை சாந்தியின் பெயரைத் தேடிக் கண்டுபிடித்தான். அவளுடைய தொலைபேசி எண்களையும் முகவரியையும் மனத்தில் பதித்துக்கொண்டு மீண்டும் ஓட்டலின் வெளியே புறப்பட்டான். போகும்போது சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று காப்பி பருகினான். அவன் காப்பி பருகிக்கொண்டே சிந்தனை செய்தான்.

விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த ஏரிக்கரைக் குடிசையில் வாழ்ந்த கிழவன் சொன்னவைகளை எண்ணிப் பார்த்தான். அவன் எல்லா உண்மைகளையும் நடந்தது நடந்தபடியே சொன்னானா, இல்லையா என்று தன் மனத்திற்குள் சிந்தித்துப் பார்த்துக்கொண்டான். கிழவன் சொன்னபடி பார்த்தால் அவன் சாந்தியையும் பெரியதம்பியையும் பார்த்திருக்கிறான். சாந்தி அவனிடம் கார் விபத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று சொல்லியிருக்கிறாள். பிறகு சாந்தியும் பெரியதம்பியும் மற்றொரு காரில் ஏறிச் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றபின், கிழவன் சாலைக்கு வந்து பார்த்தபோது, கார் விபத்தில் ஒரு மனிதன் இறந்திருந்ததைப் பார்த்திருக்கிறான். இறந்து கிடந்த மனிதன் பெரியதம்பி அல்ல என்பது அவனுக்குத் தெரியும். காரில் விழுந்து கிடந்தவன் புலிக்குட்டி என்பவன்தான் என்பது பிறகு பத்திரிகைகளில் வந்திருக்கிறது. அதையும் அவன் படித்ததாகவோ கேட்டதாகவோ தெரியவில்லை. அதற்கு மாறாக இன்று அவன் பெரியதம்பியைக் கண்டதும், காரில் விழுந்து இறந்து கிடந்தவன் யார் என்று தெரியாததைப்போல் பேசியது நினைவுக்கு வந்தது. கிழவன் முழுக்க முழுக்க உண்மையை பேசவில்லை. அல்லது, அவன் அந்த இடத்தில் வாழும் கிணற்றுத் தவளையாக இருக்கவேண்டும் என்று பெரிய தம்பி முடிவு கட்டினான். என்றாலும் பெரியதம்பியால் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

காப்பியைப் பருகிவிட்டு, வெளியே வந்ததும்வாடகைக் கார் ஒன்றில் புறப்பட்டான். சாந்தியின் பங்களா இருந்த தெருவுக்குப் போகும்படி காரோட்டியிடம் சொன்னான்.

காரோட்டி காரைச் செலுத்தினான். சற்று நேரம் கழித்து, பெரியதம்பி ஒரு தெருவின் திருப்பத்தில் இருந்த தொலைபேசிப் பெட்டியைப் பார்த்தான். அவன் காரோட்டியிடம் “அந்தத் தெரு இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது?” என்று கேட்டான்.

காரோட்டிஅமைதியுடன் சொன்னான்: “மிகவும் பக்கத்தில்தான். இன்னும் இரண்டு தெருக்களைக் கடந்தால் போதும்!”

“அப்படியானால் இங்கேயே நிறுத்து” என்றான் பெரியதம்பி.

காரோட்டி நிறுத்தினான். அவன் சிரித்துக்கொண்டே “ஏன் இங்கேயே வழியிலேயே இறங்கி விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

பெரியதம்பி சொன்னான்: “நான் காரில் ஏறி உட்கார்ந்ததும் மீட்டரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். மீட்டரில் விழும் தொகைக்கும் என் பையில் இருக்கும் பணத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு வந்து விட்டது! இதற்குமேல் போனால் என்னிடம் இருக்கும் பணம் போதாது.”

இப்படி அவன் கூறிவிட்டுக் காசைக் கொடுத்துக் காரோட்டியை அனுப்பிவிட்டான்.

கார் மறைந்ததும், மூலையில் இருந்த தொலைபேசிப் பெட்டிக்குச் சென்றான். உள்ளே சென்று கண்ணாடிக் கதவைச் சாத்திக்கொண்டு காசைப் போட்டுவிட்டு சாந்தியின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினான். மணியடிக்கும் ஓசை தொடர்ந்து கேட்டது. எவரும் தொலை பேசியை எடுக்கவில்லை. பெரியதம்பி சற்று நேரம் அப்படியே தொலைபேசிக் கருவியைக் காதில் வைத்துக்கொண்டிருந்தான். அப்போது தொலைபேசியை எவரோ எடுக்கும் ஓசை கேட்டது. பிறகு “ஹலோ” என்றொரு பெண்ணின் குரல் கேட்டது. பழக்கப்பட்ட குரல் அது!

“பேசுவது யார்? சாந்தியா?” என்று கேட்டுவிட்டான் அவன்.

மறுமுனையில் பேசிய குரல் ஒரு சில விநாடிகள் வரை பேசவில்லை. பிறகு அந்தக் குரல் பேசியது: “சாந்தியா? சாந்தி இல்லையே! சாந்தி இறந்துவிட்டாளே! உங்களுக்குத் தெரியாதா?”

“நீ யார்?” என்று கேட்டான் பெரியதம்பி. இன்னும் அவனுக்கு அந்தக் குரல் பழக்கப்பட்ட குரல் போலவே இருந்தது.

அந்தப் பெண் குரல் சிரித்தது. ”பேசுவது பெரிய தம்பி தானே! இல்லையா?” என்றாள் குரலுக்குரிய பெண்.

அவள் அப்படிக் கேட்டதும்தான்; பளிச்சென்று அந்தக் குரலுக்கு உரியவள் யார் என்பதை உணர்ந்துகொண்டான் பெரியதம்பி, அந்தக் குரலுக்கு உரியவள் சாந்தி அல்லள்! அவனை மருத்துவ விடுதியில் வந்து உறவு கொண்டாடி பணம் இருக்கும் இடத்தைச் சொல்லும்படி அச்சுறுத்திய, வஞ்சிக்கொடி அவள்!

சாந்தியின் பேய் வந்து தொலைபேசியில் பேசியிருந்தால் கூடப் பெரியதம்பி இவ்வளவு பெரிய தாக்குதல் அடைந்திருக்கமாட்டான். வஞ்சிக்கொடியின் குரலை உணர்ந்து கொண்டதும், மிகப் பெரிய ஆபத்தை நோக்கி அவன் விரைந்து சென்று கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டான்.

”பெரியதம்பி! நீங்கள் இப்போது எங்கேயிருந்து பேசுகிறீர்கள்? உடனே சொல்லுங்கள்” என்றாள் வஞ்சிக்கொடி.

“நான் இருக்குமிடத்தை உன்னால் அடைய முடியாது, வானத்திலிருந்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!” என்றான் பெரியதம்பி.

“தொலைபேசியை வைத்துவிடாதீர்கள். மிகத் தலையாய உண்மைகள் சிலவற்றை உங்களிடம் நான் கேட்க வேண்டும்!” என்று கத்தினாள் அவள். கத்தியதிலிருந்து, அவன் தொலைபேசியை வைத்துவிட்டு ஓடிவிடுவான் என்று அவள் எண்ணியதைப் போலிருந்தது.

பெரியதம்பி ஏதோ எண்ணிக் கொண்டவனைப்போல் தொலைபேசியை வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டான். நீண்ட நேரம் அவன் வஞ்சிக்கொடியுடன் தொலைபேசியில் பேச விரும்பவில்லை. அவள் பேசிக்கொண்டேயிருந்தால் வஞ்சிக்கொடி பக்கத்தில் இருக்கும் எவரையாவது அனுப்பி மற்றொரு தொலைபேசியில் பேசி இவர்களுடன் தொடர்பு கொண்டு பெரியதம்பி எங்கிருந்து பேசுகிறான் என்பதை ஒரு சில விநாடிகளில் அறிந்துகொள்ள முடியும். பிறகு அவன் இருக்குமிடத்துக்கு வஞ்சிக்கொடியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, அவனைப் பிடித்துக்கொள்ளலாம். அல்லது கொன்றுவிடலாம்! அதுவும் காரில் போய்க் கொண்டே தொலைபேசிப் பெட்டிக்குள் நின்று பேசும் மனிதனைத் துப்பாக்கியால் சுடுவது மிக எளிது! இப்படிப் பட்ட காட்சிகளை அவன் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறான். ஆகையால் அவன் வெளியே வந்துங் கூட ஏதாவது ஒரு கார் விரைவாக வந்து திரும்பியபோது விளக்குக் கம்பத்தின் மறைவில் பதுங்கினான். கார் சென்றதும் பெருமூச்சு விட்டபடி சாலை ஓரமாக நடந்தான்.

இப்போது அவன் சாந்தியின் பங்களாவைத் தேடிச் செல்லவில்லை. இருட்டும் வரையில் எங்கேயாவது பொழுதைக் கழிக்க எண்ணியபடி நடந்தான். நடந்து கொண்டே இருந்தான்.


22

மீண்டும் வானவில் ஓட்டலுக்குப் போகாமல் வேறு எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டிருந்தான் பெரியதம்பி. பகல்பொழுது அவன் வானவில் ஓட்டலில் தங்கியிருந்தால் எப்படியாவது அவனைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். வஞ்சிக்கொடியின் பிடியிலோ பேரலீஸார் பிடியிலோ மீண்டும் அவன் பிடிபட விரும்பவில்லை. அவனை வஞ்சிக்கொடி பிடிப்பதற்குள் அவனாக ஒரு தடவை அவளைக் காண விரும்பினான். இந்த ஒரு தடவை –

அவனுக்கோ வஞ்சிக்கொடிக்கோ இறுதித் தடவையாக இருக்கலாம்! இருவரில் எவருக்கு வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்!

இந்த எண்ணம் அவன் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவனுக்குத் தெரியாத பல உண்மைகள் வஞ்சிக்கொடிக்குத் தெரியும். அவைகள் என்ன என்பதை அவன் அறிந்துகொண்டால்தான் எப்படி அவன் இரண்டாவது தடவை கார் விபத்தில் சிக்கினான் என்பது புரியும். ஆகையால் அவன் வஞ்சிக்கொடியை அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காண எண்ணினான்.

ஏதோ ஓர் ஓட்டலுக்குச் சென்று பகல் உணவை உண்டுவிட்டு கண்டபடி சுற்றிவிட்டு பெங்களூரின் புகழ்
பெற்ற பூங்காவை அடைந்தான். பூங்காவில் பொழுது போவதே தெரியாது. பூமியில் உள்ள சொர்க்கம் அது என்று கேள்விப்பட்டிருக்கிறான். பூங்காவை அடைந்ததும், உண்மையிலேயே இது ஒரு சொர்க்கம்தான் என்று தோன்றியது. பூங்காவின் பூச்செடிகள் நிறைந்த பக்கத்தில், புல் தரையில் போய் உட்கார்ந்து வானத்தைப் பார்த்தபடி நடந்தவைகளையும், நடக்கப்போவதையும் எண்ணிப் பார்த்துக் கொண்டான். அவன் ஏதோ பல தவறுகளைத் தொடர்ந்து செய்வதைப் போலவும் அவைகளிலிருந்து அவன் தப்பவே முடியாதது போலவும் தோன்றியது. ‘தலைக்கு மேல் போய்விட்டது! இனிமேல் தயங்குவதில் பயனில்லை. போலீஸுக்குப் போய் உண்மையைச் சொன்னாலும் நம்பமாட்டார்கள்! நாமாகத்தான் எல்லாவற்றிற்கும் சரியான விடையைக் கண்டுபிடித்துக்கொண்டு இறுதியில் போலீஸை அழைக்கவேண்டும்’ என்று தன்னை அமைதிப் படுத்திக்கொண்டான்.

பெரியதம்பிக்கு கொடிய பழக்கங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் அப்போது அவனுக்கு இருந்த மனநிலையில் சிகரெட்டை ஊதித் தள்ளினால் மனத்துக்குச் சற்று அமைதி வரும் என்று எண்ணி எழுந்து போய்ச் சிகரெட் பெட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு தீப்பெட்டியை எடுத்தான். அதற்குள் அவன் பக்கத்தில் வந்த ஒருமனிதன் தீக்குச்சியைக் கிழித்து பெரியதம்பியின் சிகரெட்டைப் பற்ற வைத்தான்,

அந்த மனிதனை வியப்புடன் பார்த்த பெரியதம்பி “நன்றி” என்றான்.

“ஊருக்குப் புதியவரா?” என்றான் அந்த மனிதன்.

“ஆமாம்.”

“பெங்களூரைச் சுற்றிக்காட்ட உங்களுக்குத் துணை வேண்டுமென்றால், நான் முன்னேற்பாட்டுடன் இருக்கிறேன்” என்றான் அந்த மனிதன்.

“தேவையில்லை.”

“குற்றமில்லை. பணமுள்ளவர்கள் பெங்களூருக்கு வந்து விட்டால், பணத்தைப் பறக்கடிக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் போன்றவர்களின் உதவி தேவை. வாடகைக் காரைக் கூப்பிடக்கூட அவர்களுக்குக் குரல் வராது. என்னைப் போன்றவர்கள்தாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான் அந்த மனிதன்.

பெரியதம்பிக்கு அவனைக் கண்டதும் ஒரு புதிய எண்ணம் பிறந்தது. “எனக்கு ஒரு பொருள் வேண்டும். அதை உன்னால் வாங்கிவர முடியுமா?” என்று கேட்டான் அவன்.

“சொல்லுங்கள். பணம் கொடுத்தால் இன்று கிடைக்காத பொருள் உலகத்தில் இல்லை”.

“பணத்தைப் பற்றித் துன்பம் இல்லை. உடனடியாக எனக்கு அந்தப் பொருள் தேவை”

“சொல்லுங்கள்.”

“கைத்துப்பாக்கி ஒன்று எனக்கு வேண்டும். இரகசியமாக எனக்கு அதை வாங்கித்தரவேண்டும் முடியுமா?”

அந்த மனிதன் சிறிதுநேரம் பெரியதம்பியைப் பார்த்தான். பிறகு சொன்னான்: “என்னுடன் புறப்படுங்கள். ஒருமணி நேரத்தில் உங்கள் கையில் துப்பாக்கி இருக்கும். போதுமா?”

இருவரும் அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்கள்!


23

பெரியதம்பிக்கு ஒரு கைத்துப்பாக்கி தருவதாகச் சொல்லி அவனை எங்கேயோ அழைத்துச் சென்ற புது மனிதன் தன் பெயர் நாகப்பன் என்று அறிமுகம் செய்து கொண்டான். இருவரும் ஒரு வாடகைக்காரில் பெங்களூரின் வடக்கு எல்லைக்குச் சென்றார்கள். அங்கே தனிமையில் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது. இருவரும் இறங்கிச் சென்றார்கள்!

கார் காத்திருந்தது.

நாகப்பன், வீட்டின் கதவை மெல்லத் தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. இராணுவத்திலிருந்து விலகி ஓய்வு பெற்ற அதிகாரியைப்போல் சற்று மிடுக்காகக் காணப்பட்ட ஒரு மனிதர் இருவரையும் பார்த்தார். நாகப்பன் அவரிடம் சாடை காட்டியதும், உள்ளே வரும் படி அழைத்தார்.

அந்த வீட்டின் கூடத்தில் எங்குப் பார்த்தாலும் காட்டு மிருகங்களின் தலைகள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. மான், கரடி, சிங்கம் புலி, யானை ஆகிய எல்லா மிருகங்களின் தலைகளையும் கொண்டு வந்து பஞ்சை அடைத்து அவைகளை வீடு முழுவதும் தொங்கவிட்டிருந்தார்.

அவைகளைப் பார்த்தவுடன் அந்த வீட்டுக்காரர் ஒரு பெரிய வேட்டைக்காரர் என்று உணர்ந்துகொண்டான் பெரியதம்பி. வியப்புடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த மனிதர் கேட்டார்: “என்ன அப்படிப் பார்க்கிறாய்? இதற்கு முன் இந்த மிருகங்களை நீ பார்த்ததில்லையா?”

பெரியதம்பி சொன்னான்: “அதற்கில்லை! மனிதன் தலையைத் தவிர, மற்றத்தலைகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. எங்கேயாவது மனிதன் தலையும் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.”

இதைக் கேட்டு அந்த முரட்டு மனிதர் சிரித்தார். “இன்னும் மனிதன் தலையை நான் வைக்கவில்லை. வேறு ஒரு அறையில் பறவைகளின் தலைகளையும், மற்றொரு அறையில் பாம்புகளையும் வைத்திருக்கிறேன். இனிமேல் தான் மனிதர்களின் தலைகளைச் சேகரிக்க வேண்டும்! மனிதர்களின் தலையை வைப்பதென்றால், முதலில் உன் தலையைத்தான் வைப்பேன்”.

இதைக் கேட்டதும் பெரியதம்பி சிரித்தான். ஆனால் உள்ளூர அவனுக்குச் சற்று அச்சமாகத்தான் இருந்தது.

நாகப்பன் அப்போது குறுக்கிட்டுப் பேச்சை மாற்றினான். “இவர் ஒரு பெரும் பணக்காரர். அடிக்கடி பணத்துடன் வெளியூர்களுக்குப் போகும் பழக்கமுள்ளவர். இவருக்குப் பாதுகாப்புக்காக ஒரு கைத்துப்பாக்கி வேண்டுமாம். அதுவும் உடனே வேண்டுமாம். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டான் அவன்.

முரட்டு மனிதர் சிரித்தார். “கைத்துப்பாக்கி மட்டும் போதுமா? அதை உபயோகிக்கத் தெரிந்துகொள்ள வேண்டாமா?” என்றார் அவர்.

“துப்பாக்கியும், அதற்குத் தேவையான குண்டுகளும் மட்டும் இருந்தால் மட்டும் போதும். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் பெரியதம்பி.

“லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது குற்றம் தெரியுமா?” என்று கேட்டார் அந்த மனிதர்.

“தெரியும்” என்றான் பெரியதம்பி.

“நான் துப்பாக்கி தருகிறேன். இரகசியமாக அதை வைத்துக்கொள்ள வேண்டும். நான்தான் அதை விற்றேன் என்று எங்கேயாவது எவரிடமாவது சொல்லி வைத்தால் உன் தலையை இந்தக் கூடத்தில் மாட்டிவிடுவேன்” என்று அச்சுறுத்தினார் அந்த மனிதர்! பிறகு கைத்துப்பாக்கி ஒன்றையும் அதற்கு ஏற்ற குண்டுகளையும் கொண்டுவந்து அவனிடம் கொடுத்துவிட்டு, மூவாயிரம் ரூபாயைப் பிடுங்கிக் கொண்டார்.

வாடகைக் காருக்கு வந்ததும், நாகப்பன் அவனிடம் ஐநூறு ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு வழியில் ஓர் இடத்தில் இறங்கிக்கொண்டான்.

சற்றுத் தொலையில் ஏதோ எண்ணிக் கொண்டவனைப்போல் சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தும்படி சொல்லிவிட்டு பெரியதம்பியும் இறங்கிவிட்டான்.

பெரியதம்பியின் கையில் துப்பாக்கி வந்ததும் அவனுக்கு அளவுக்கு மீறிய துணிவும், இனி யாரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டன!


24

பெருத்த ஓசையுடன் வாடகைக் கார் விரைந்து சென்று மறையும் வரையில் சாலையில் நின்று பார்த்தான் பெரிய தம்பி. பிறகு அவன் சாலையைவிட்டு இறங்கித் தொலைவில் தெரிந்த மலைகளை நோக்கிச் சென்றான்.

அவன் சென்ற திக்கில் வீடுகளோ குடிசைகளோ இல்லை. மலைகளுக்கு மத்தியில் எங்கேயாவது ஓர் இடத்தில் நின்று துப்பாக்கியைச் சுட்டுப் பழகிக் கொள்ளலாம் என்று எண்ணியது அவன் மனம். அடிக்கடி அவன் மனம் வஞ்சிக்கொடியை விரைவில் காணப் போகிறோம். அவளிடமிருந்து உண்மைகளை வரவழைக்கப் போகிறோம் என்று எண்ணியது.

இரு மலைகளுக்கு மத்தியில் இருந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தான் அவன். அங்கே பாறைகளும், செடிகளும் கொடிகளும் நிறைந்திருந்தன. வாய்ப்பான ஒரு பாறையின் மீது நின்றுகொண்டு. துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பினான். துப்பாக்கியை நிரப்பும்போதே அவன் கைகள் லேசாக நடுங்கின.

சிலரிடம் திடீரென்று சில பணக்கட்டுகளைக் கொடுத்து அவைகளை எண்ணும்படி சொன்னால், பணத்தைத் தொட்டும் பழக்கமில்லாத அவர்களுக்குக் கைகள் நடுங்கும்; பணத்தை எண்ண வராது. இவ்வளவு பணம் நம் கையில் திடீரென்று வந்துவிட்டதே என்று வியப்பினாலோ அல்லது பணம் ஆபத்தானது என்பதனாலோ அந்நடுக்கம் என்பது தெரியவில்லை. அதைப்போலப் பாதுகாப்புக்காக வஞ்சிக்கொடியை மிரட்டி உண்மையை வரவழைக்க உதவும் கருவி என்று பெரியதம்பி வாங்கிய துப்பாக்கியை அவன் உபயோகிக்கத் தொடங்கியதும் அவன் கைகள் நடுங்கின!

அவன் துப்பாக்கியை நீட்டிப் பிடித்து தொலைவி இருந்த ஒரு செங்குத்தான பாறையைக் குறி பார்த்துச் சுட்டான். துப்பாக்கி வெடித்ததும், அது பின்னுக்கு வாங்கி அவன் கையிலிருந்து தவறி விழுந்தது. துப்பாக்கியைச் சுடும்போது அதன் அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள முதலில் அவன் பழகிக்கொண்டான். அவன் குறிபார்த்த இடத்துக்கும் குண்டுகள் பாய்ந்த இடத்துக்கும் எவ்வளவோ தொலைவு இருந்தது! பல நாட்கள் இப்படிப் பயிற்சி பெற்றால்தான் குறி தவறாமல் சுடமுடியும் என்பதை உணர்ந்து கொண்ட அவன், ஒரு மணி நேரம் தன்னைப் பழக்கிக் கொண்டான். முதலில் இருந்த அச்சமும் நடுக்கமும் இப்போது இல்லை. அவன் வஞ்சிக்கொடியை மிக விரைவில், கண்டு பேசுவது என்ற முடிவுடன் நடந்தான்.

கால்சட்டைப் பையிலிருந்து துப்பாக்கி சற்றுக் கனமாக இருந்தது. அவன் மனம் எண்ணியது: வஞ்சிக்கொடியை நாம் சுடப்போவதில்லை. அவளை அச்சுறுத்துவதற்குத் தான் துப்பாக்கியுடன் போகிறோம்! எதிர்பாராமல் ஏதாவது நடந்தால், அதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்! ஏமாந்து விடக்கூடாது!

சாலையை அடைந்ததும் அவன் மெல்ல நடந்து கொண்டிருந்தான். வழியில் ஒரு பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறி அவன் வானவில் ஓட்டலுக்குச் சென்றான்.

அவன் இப்போது சற்றுக் களைப்புடன் இருந்ததால் ஓட்டலில் குளித்துவிட்டு, வேறு உடைகளை அணிந்து கொண்டு வஞ்சிக்கொடியைப் பார்க்கப் புறப்பட எண்ணினான்.

ஓட்டலுக்குச் சென்றபோது, விளக்கு வைக்கும் நேரம். இருட்டிக் கொண்டு வந்தது. விளக்கு வைத்ததும் குளிரத் தொடங்கியது. பெங்களூர் அவனுக்குக் குளிராகத்தான் இருந்தது!

பெரியதம்பி தன் அறையை அடைந்ததும், கதவை எவரோ தட்டும் ஓசை கேட்டது. அவன் உடனே துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தபடி, நீண்டநாள் உயிரும் உட லும்போல் துப்பாக்கியும் அவனும் பழகியவனைப்போல் கற்பனை செய்துகொண்டு, “யாரது?” என்றான்.

“ஓட்டல் பையன் ஐயா” என்றான் ஓட்டல் பையன். பெரியதம்பி சிரித்துக்கொண்டே கதவைத் திறந்தான்.

அவன் உள்ளே வந்து, மெல்லிய குரலில், “உங்களை எவரோ இரண்டு பேர்கள் தேடிவந்தார்கள் நீங்கள் எவரையாவது எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்றான்.

பெரியதம்பியின் முகம் இதைக் கேட்டதும் மாறிவிட்டது. வஞ்சிக்கொடியின் கரம் மிகவும் நீண்ட கரம். அவன் எங்கு சென்றாலும் அவள் விடமாட்டாள். தனது கரம் போன்ற கொடியவர்களை ஏவி அவனைப் பிடித்துவிடுவாள் என்று எண்ணியபடி “அந்த இரண்டு பேர்களும் என்ன வேண்டும் என்கிறார்கள்?” என்று கேட்டான்.

ஓட்டல் பையன் சொன்னான்: “அந்த இருவரும் முதலில் ஓட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்களைப் பார்த்தார்கள். பிறகு உங்கள் அறையைத் திறக்க முயன்றார்கள். தற்செயலாக நான் மீண்டும் அவர்களைப் பார்த்ததும் ‘என்ன வேண்டும்?’ என்றேன். மலரவன் அவர்கள் நண்பர் என்றும், மலரவனைப் பார்க்க வந்திருப்பதாகவும் கூறினார்கள். நீங்கள் வெளியே போயிருப்பதாகவும் அறை பூட்டிக் கிடப்பதாகவும் சொல்லி அனுப்பிவிட்டேன்!”

“உடனே போய்விட்டார்களா?” என்று கேட்டான் பெரியதம்பி.

“அதுதான் இல்லை. அவர்கள் தேடி வந்த மலரவன் நீங்கள்தானா என்று உணர்ந்துகொள்ள, நீங்கள் எப்படியிருப்பீர் என்று கேட்டார்கள். உங்கள் உருவத்தைச் சொன்னதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது! உங்களுக்கு மீசை இருப்பதைச் சொன்னதும் முதலில் அவர்களுக்கு ஐயமும் தயக்கமும் ஏற்பட்டது! பிறகு, அவர்கள் சமாளித்துக் கொண்டு, அவர்கள் தேடிவந்தது உங்களைத்தான் என்றார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் ஓட்டலில் கூடத்தில் உட்கார்ந்துவிட்டான். மற்றொருவன் எங்கே சென்றான் என்று தெரியவில்லை? நீங்கள் பார்க்கவில்லையா?” என்றான் ஓட்டல் பையன்.

“நான் ஒருவரையும் பார்க்கவில்லை. இன்னும் அந்த மனிதன் இருக்கிறானா என்று பார்த்துவா. ஆனால், அவனிடம் நான் வந்திருப்பதாக மட்டும் சொல்லிவிடாதே!”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அவர்கள் உங்கள் நண்பர்கள் இல்லையா?”

“எனக்கு நண்பர்களே இல்லை. அவர்கள் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும்!”

“எனக்கு அப்போதே ஐயம் ஏற்பட்டது. அவர்களைப் பார்த்தால் மிக்க கொடியவர்களைப்போல் இருந்தார்கள். இந்தப் பக்கம் நான் வராமல் இருந்திருந்தால், உங்கள் அறைக் கதவைத் திறந்து உள்ளே புகுந்துவிட்டிருப்பார்கள்!” என்றான் ஓட்டல் பையன்.

“விரைந்து சென்று பார்த்துவிட்டு வா. இப்போது இருவரும் இருக்கிறார்களா. ஒருவன் மட்டும் இருக்கிறானா என்று பார்த்து வா! காற்றைப்போல் நீ போய்விட்டு வர வேண்டும்!”

ஓட்டல் பையன் ஓடினான். இரண்டு நிமிடங்கள் கழித்து அவன் மூச்சு வாங்க வியர்க்க விறு விறுக்க ஓடி வந்தான்.


25

ஓட்டல் பையனைக் கண்டதும், பெரியதம்பியால் ஒன்றும் ஊகிக்க முடியவில்லை.

“என்ன நடந்தது? அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டான் பெரியதம்பி.

“இருவரையும் காணவில்லை! அவர்கள் எங்கே எப்படி வெளியே போனார்கள் என்று தெரியவில்லை! இருவரும் வெளியே போய்விட்டார்களா, ஓட்டலிலேயே வேறு எங்கேயாவது ஒளிந்திருக்கிறார்களா என்று புரியவில்லை!” என்றான் ஓட்டல் பையன்.

“துன்பம் கொள்ளவேண்டாம். மீண்டும் அவர்களைக் கண்டால் உடனே ஓடிவந்து என்னிடம் சொல்லு” என்றான் பெரியதம்பி.

“ஆகட்டும் ஐயா'” என்று சொல்லிவிட்டு ஓட்டல் பையன் போய்விட்டான்.

பெரியதம்பி எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஆகையால் அவன் கவனம் முழுவதும் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளில் பதிந்திருந்தது. அந்த இரு கொடியவர்களும் எப்படியும் வந்து அவனைக் கடத்திச் சென்றுவிடுவார்கள். அவனைக் கொண்டுபோய் வஞ்சிக்கொடியின் முன் அவர்கள் நிறுத்துவார்கள். வஞ்சிக்கொடி அவனிடம் பணம் இருக்கும் இடத்தைக் கேட்பாள். இந்தத் தடவை அவள் மருத்துவ விடுதியில் மிக அன்பாக நடந்துகொண்ட மாதிரி அவனிடம் நடந்துகொள்ளமாட்டாள். சரியான பதிலை அவன் சொல்லாவிட்டால், அவனைப் பேசவைக்க அந்த இரு கொடியவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்பாள். அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் –

முடிவைப்பற்றி அவனால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!

அவன் கண்டெடுத்த பெட்டியில் இருந்த பணத்தை மீண்டும் கற்பனை செய்து மனக்கண்முன் பார்த்தான். அதில் இருந்த பணம் எவ்வளவு இருக்கும்? ஐம்பது இலட்சம் ரூபாயாவது இருக்கும் என்று எண்ணியது அவன் மனம்! ஐம்பது இலட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை! பெரியதம்பியைப் போன்றவர்கள் வாழ்க்கையில் சம்பாதிக்க முடியாத தொகை! அவ்வளவு பெரிய தொகையுள்ள பணப்பெட்டியை அவன் திரும்பக் கொடுத்தால் என்ன ஆகும்? வஞ்சிக்கொடி அவன் பணப்பெட்டியைக் கொண்டுவந்து வைத்ததும் கேலியாகச் சிரித்துவிட்டு, அடுத்த நிமிஷமே அவனை ஒழித்துக்கட்ட உத்தரவு போடுவாள்! அல்லது அவள் கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவளே அவனைச் சுட்டுக்கொன்று விடுவாள்.

இப்படிப் பெரியதம்பியினுடைய மனம் எண்ணியது. என்ன ஆனாலும் சரி, பணப்பெட்டியை மட்டும் விடுவதில்லை. அதைப்பற்றிய உண்மையை மட்டும் சொல்லுவதில்லை என்று மனத்தில் உறுதிகொண்டான் பெரியதம்பி. ஆனால், அந்தப் பணம் முழுவதும் எவருடையது அது எப்படி அவன் கையில் வந்தது முதல் விபத்துக்குப் பின் என்ன நடந்தது. மீண்டும் அவனும் சாந்தியும் எப்படி விபத்தில் சிக்கினார்கள் என்று அறிந்துகொள்ளத் துடித்தான். இதற்காக அவன் வஞ்சிக்கொடியைக்காண விரைவு கொண்டான். அவனாகப் போய்ப் பார்ப்பதைவிட, அவள் அனுப்பிய ஆட்கள் துணையுடனே போய் அவளிடம் பேச அவன் துணிவுகொண்டான்.

பெரியதம்பியின் கண்கள் அடிக்கடி கதவையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் கதவை உள்பக்கம் தாழிட்டிருந்தான். அவன் தன் கால்சட்டைப்பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து, அவன் வலக்காலில் அணிந்திருந்த கால் உறையின் இடுக்கில் செருகிக்கொண்டான்.எதிரிகள் கண்டுபிடிக்க முடியாத இடம் அதுதான் என்று தோன்றியது அவனுக்கு.

இந்த நேரத்தில் கதவின் பிடி சுழலுவது தெரிந்தது. கதவு திறக்கவில்லை. வெளியே எவரோ வந்து கதவைத் திறக்கப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டதும் நிமிர்ந்து நின்றான்.

ஒரு சில வினாடிகளில் கதவைத் தட்டும் ஓசை கேட்டது அவன் அமைதியுடன் நடந்து சென்று கதவைத் திறந்தான். மறுகணம் –

உள்ளே இரண்டு உருவங்கள் நுழைந்தன! மின்னலை விட விரைவாக நுழைந்த அந்த இரு முரட்டு மனிதர்களும் கதவைச் சாத்திவிட்டு கைகளில் துப்பாக்கியுடன் பெரியதம்பியைப் பார்த்தார்கள்!

பெரியதம்பி தான் உதவி இல்லாமல் இருப்பதைக் குறிக்க இரு கைகளையும் தூக்கியபடி நின்றான்.

அந்த இருவரில் ஒருவன் பேசினான்: “பெரியதம்பி உன் நாடகம் முடிந்துவிட்டது. புறப்படு. எங்கள் கார் வெளியில் நிற்கிறது. வழியில் ஏதாவது தொல்லை கொடுத்தால் உன்னை உடனே சுட்டுவிடும்படு எங்களுக்குக் கட்டளை!’

பெரியதம்பி அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான். இருவருமே அவனுக்குப் புதிய மனிதர்கள். “யாருடைய கட்டளை?” என்று கேட்டான் அவன்.

“கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வழக்கம் எங்களுக்கு இல்லை. புறப்படு. நீ முன்னால் நட, நான் பின்னால் வருகிறேன். வெளியே பச்சை நிற பியட் கார் நிற்கிறது. அதில் ஏறி உட்கார். தெரிகிறதா?” என்றான் முதலில் பேசியவன்!

பெரியதம்பி விரைப்புடன் வெளியே புறப்பட்டான். அவன் வெளியே வந்ததும், மற்றொருவன் உள்ளேயே தங்கிவிட்டான். ஒருவன் மட்டும் அவன் பின்னால் நடந்து வந்தான்.

“என் அறையைப் பூட்ட வேண்டும்” என்றான் பெரிய தம்பி.

“உன் அறையை என் நண்பன் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்வான். நீ நடந்துகொண்டே இரு!” என்றான் பெரியதம்பியின் பின்னால் வந்தவன்.

மற்றொரு மனிதன் ஏன் அங்கே தங்கிவிட்டான் என்று பெரியதம்பிக்குத் தெரியும். பணப் பெட்டியையோ பணப் பெட்டி இருக்கும் இடத்தையோ கண்டுபிடிக்கவே பெரிய தம்பியின் அறையில் அந்த மனிதன் நின்றுவிட்டிருக்கிறான் என்று உணர்ந்து கொண்டான் அவன். ஆனால், அதைப் பற்றி அவன் துன்பம் கொள்ளவில்லை.

பெரியதம்பி ஓட்டலைவிட்டு வெளியே நடந்தான். அவன் பின்னால் கொடியவர்களில் ஒருவன் கால் சட்டைப் பையில் கையை விட்டபடி நடந்தான். பெரியதம்பி என்ன தவறு செய்தாலும் அந்த மனிதன் கால் சட்டைப்பையிலிருந்தே துப்பாக்கியால் சுடுவான் என்று அவனுக்குத் தெரியும்.

பச்சைநிற பியட்காரில் காரோட்டி ஒருவன் உட்கார்ந்து அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தான். பெரியதம்பி காரில் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்ததும் அவன் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் அந்தக் கொடியவன் உட்கார்ந்தான். கார் புறப்பட்டு போக்குவரத்து மிகுதியாக இல்லாத சாலைகளில் பறந்தது.

இறுதியில் அது மிக அழகிய பங்களர் ஒன்றின் முன் நின்றது. அந்தப் பங்களாதான் சாந்தி வாழ்ந்து வந்த பங்களாவாக இருக்கும் என்று ஊகம் செய்துகொண்டான் அவன்.

“இறங்கு” என்றான் அந்த மனிதன்.

பெரியதம்பி இறங்கி. திரும்பிப் பார்க்காமல் பங்களாவுக்குள் நுழைந்தான். கதவு அவன் வரும்போது தானாகவே திறந்துகொண்டது. கூடத்தை அடைந்ததும் எதிரே நின்ற வஞ்சிக்கொடியைப் பார்த்தான். ஆடம்பரம் மிக்க அந்தப் பங்களாவில் அழகே உருவாக அவள் தனியாக நின்றாள். அவள் அழகாக இருந்த போதிலும் அவள் பார்வை அவனுக்கு அச்சத்தை விளைவித்தது.

“வந்துவிட்டீர்களா? நீங்கள் மீண்டும் இங்கிருந்து தப்ப முடியாது!” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே!

அவளைக் கண்டு அவளிடம் பேசி ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு, மிரட்டி உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணிய அவனுக்கு வாய்விட்டுக் கத்தவேண்டும் போலிருந்தது! அவன் வாய்விட்டு அலறிவிட்டு அப்படியே சுருண்டு விழுந்தான்.

மறுவிநாடி அவன் மண்டையிலிருந்து நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதைப் போல் இருந்தது? அச்சம் தரும் ஓசை ஏதோ கேட்டது. அந்த ஓசை –

கார் உருண்டுவிழும் ஓசை!

அதே நேரத்தில் ஒரு பெண் அலறும் ஓசை கேட்டது. அலறியது வஞ்சிக்கொடியல்ல! அவனுக்குக் கேட்டது சாந்தியின் குரல்தான்!

முதன் முதலில் சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே விபத்து நடந்தபோது, சாந்தி போட்ட அலறல் தான் அது.

பெரியதம்பிக்கு கனவைப்போல், கடந்துபோன நிகழ்ச்சிகள் – அவன் மறந்திருந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன! முதல் விபத்துக்கும் இரண்டாவதாக நடந்த விபத்துக்கும் இடையில் என்ன நடந்தது என்பது அவனுக்குத் தெளிவாக நினைவுக்கு வருவதைப்போல் மனத்திரையில் தோறின்ன!

– தொடரும்

– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *