(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருநாள் ஒளவையார் ஓர் ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அஃது ஒரு சிற்றூர். அப்பொழுது ஒளவையாருக்குப் பசி மிகுதியாக இருந்தது. வழியிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று சிறிது உணவு கேட்டார். அவ் வீட்டுக்காரனுடைய பெயர் வெண்ணுாகன். அவன் ஒரு பெரிய சோம்பேறி; சாப்பிடுவ தென்றால், ஒரு படி அரிசிச் சோற்றை ஒரே இழுப்பில் இழுப்பான். வேலை செய்வதென்றால் அசையவே மாட்டான். அவனுக்கு நன்செய் நிலங்கள் பல இருந்தும் அவன் அவைகளில் நெல்லை விதைக்கவில்லை. எள்ளு கொள்ளு அவரை துவரை முதலிய புன்செய்த் தானியங்களையே பயிரிட்டிருந்தான். ஏனெனில், நெற் பயிரிட்டால் அவைகட்கு மிகுதியாக உழைக்க வேண்டும். புன்செய்த்தானியங்களாக இருந்தால், அதிகமாகப் பாடுபடவேண்டியதில்லையல்லவா?
வெண்ணாகன் ஒளவையாரைப் பார்த்து, “நான் அதிகமாக நெல் பயிரிடுவதில்லை. கம்பு கேழ்வரகு சோளம் முதலியவைகளைத்தான் பயிரிடுகிறேன்,” என்று கூறித் தன்னுடைய சோம்பேறித்தனத்தைப் புலப்படுத்தினான். “கூழ் இருக்கிறது சாப்பிடுங்கள்,” என்று கூறினான்.
ஒளவையார் வெண்ணாகனுடைய சோம்பேறித் தனத்தையும், அதனால் நன்செயில் புன்செய்த்தானியங்களைப் பயிரிட்டுக் கூழ் முதலியவைகளைச் சாப்பிடுவதையும் அறிந்துகொண்டார். அவனைப் பார்த்து, “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். ஆயினும், இவ்வாறு சோம்பேறியாக இருந்துகொண்டு, நன்செயைப்புன்செயாக்கித் தாழ்ந்த உணவுகளைச் சாப்பிடுவது தக்கதன்று. நெல்லையே பயிர் செய்து விளைவிப்பாயாக,” என்று அறிவுறுத்தினார். அது முதல் தான், நெற்பயிர் விளை என்னும் இந்த மொழி தோன்றிற்று.
“நெற்பயிர் விளை” (இ – ள்.) நெற்பயிர் – நெல்லுப்பயிரை; விளை – வேண்டிய முயற்சி செய்து விளைவிப்பாயக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,