கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,365 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

கோபம் கொள்ளாதிருத்தல்

ஒட்டக்கூத்தரின் மாணாக்கர் குலோத்துங்க சோழர்; சோழர் ஒரு நாள் தாம் உணவருந்தும் போது வாயில் கல் அகப்பட்டது. இவ்விதம் கவன மில்லாமல் சமைத்ததற்காகச் சமையல்காரன் மீது கடும் கோபம் வந்து அவனை வெளியே அனுப்பினார். அச்சமயம் ஒட்டக்கூத்தர் அர்சரைக் காண வந்தார். ஆசிரியரிடம் நடந்ததைச் சொன்னார் அரசர் இதைக்கேட்ட புலவர் அரசரைத் திருமால் அம்சமாக எண்ணுவது வழக்கம். அத்திருமால் கல்லையும், மண்ணையும், கடலையும் உண்டவரன்றோ. அந்த அம்சத்துடன் விளங்கும் தாங்களும் கல்லை உண்ணுதல் இயற்கை தானே. என்று முதலில் அரசரைச் சமாதானப்படுத்திப் பின், இச்சிறுகல் உணவில் இருந்தது என்று கோபம் கொள்ளலாமா? அதிலும் தங்களையே நம்பி வாழும் அடிமைக ளிடமா இவ்வித கோபம்? “தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கக் கூடாது”, என்று பல, வல்லமையுடையவர்கள் கப்பமாகப் பணத்தைச் செலுத்திப் பாதத்தை வணங்க வெளியே காத்துக்கொண்டிருக் கிறார்கள். அவ்விதமான வல்லமையுள்ளவர்மீது செலுத்தியும், செலுத்தாமல் தடுத்தும் வைப்பதற் குரிய கோபத்தை அடிமையாகிய அந்த எளியன் மேல் செலுத்தலாமா? என்றார். இதைக் கேட்ட தும் சோழர் “நமது கோபம் பலிக்காத இடத்தில் அடக்கிக் கொள்கிறோம்” அவ்விதம் கோபத்தை நாம் அடக்கிக் கொள்ளாவிட்டால் அவரால் துன் பம் அடைகிறோம்”. நமது கோபம் பலிக்கும் இடமாகிய இந்த ஏழை மீது, செலுத்தியதால் என்ன பயன்?” என்று மீண்டும் அவனை அழைத்து “இனிக் கவனத்துடன் தொழில் செய்வாயாக” என்று சொல்லி வேலையில் அமர்த்திக்கொண்டார். இதையே வள்ளுவரும், “தன் கோபம் செல்லக் கூடிய இடத்தில் கோபியாமல் இருப்பவனே சினத்தை அடக்கியவன் ஆவான்” என்று கூறியுள்ளார்.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்: அல்லிடத்துக்
காக்கினென்? காவாக்கால் என்?

சினம் = தன் கோபத்தை
செல் இடத்து = (அது) பலிக்கும் இடத்தில்
காப்பான் = (அதனை எழாமல்) அடக்குபவனே
காப்பான் = அடக்கியவன் ஆவான்
அல்லிடத்து = மற்றைப் பலியாத இடத்து
காக்கின் என் = அதனை அடக்கினாலென்ன?
காவாக்கால் என் = அடக்காவிட்டால் என்ன?

கருத்து: தன்னுடைய கோபத்தைத் தன்னின் மெலியா ரிடத்துச் செல்லாமல் காப்பவனே சினத்தைக் காப்பவனாவான்.

கேள்வி: கோபத்தை அடக்கியவன் என்று மதிக்கப் படுபவன் எவன்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *