(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அணிந்துரை – சி.சுப்பிரமணியம்
மொழி, நாகரிகம் , கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன் பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம் செய்த இவ்விடையூற்றை நீக்கி, தென் பகுதி மக்களிடையே ஒரு பகுதியினரின் கருத்துக்கள், மற்றப் பகுதியினருக் கும் பரவும் வகையில் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் பாடுபட்டு வரு வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
1955-இல் சென்னையில் நமது நாட்டின் தலைமை அமைச்சர் திரு. ஜவகர்லால் நேரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட், நாள் தோறும் நல்ல முறையில் முன்னேறி வருவது மிகவும் பாராட்டுதற் குரியது. இந்நிறுவனம் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் வகையிலே பல புத்தகங்களை வெளி யிட்டிருக்கின்றது. குறிப்பாகத் திருக்குறள் போன்ற நூலை, கன்னடத் தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பது மிகவும் போற்றுதற் குரியது.
கருத்துப் பரிமாற்றத்தில் தான் மனித இனத்தின் அறிவு வளர்ச்சி யும் உலக அமைதியும் அடங்கியிருக்கின்றன. இவ்வுண்மையை அடிப் படையாகக் கொண்டு தென் பகுதியிலே உள்ள சிறந்த நூல்களைக் குறைந்த விலையிலே மற்ற மொழியாளரும் அறிந்துகொள்ளும் வகை யிலே ஆக்கப்பணி புரியும் டிரஸ்டின் சேவை மேலும் மேலும் வளர்ந்து பயன்படும் என நினைக்கிறேன். புத்தகங்கள் வெளியிடுவதோடு மட்டு மல்லாது கருத்து அரங்கிற்கு ஏற்பாடு செய்வதிலும், ஆராய்ச்சி வேலை களிலும் இப்புத்தக டிரஸ்ட் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரி யது. குறிப்பாக, குழந்தைகளின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி நடத்தியிருப்பது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். புதிதாக அவர்கள் தமிழில் வெளியிட இருக்கும் நூல்கள் தமிழ்ப் பெருமக்களிடையே பெரும் ஆதரவோடு திகழும் என்று எண்ணுகிறேன்.
இத்துறையில் அவர்கள் மேலும் பல சிறந்த நூல்களை எளிய விலையில் வெளியிட்டுத் தென் குதி மக்களுக்கும், நாடு முழுமைக்கும் பயன்படும் வகையில் முன்னேற இறைவன் அருள்வானாக.
வித்தைப் பாம்பு
அந்தக் காட்டிலே பல பாம்புகள் இருந்தன. ஆனாலும், ராகி என்னும் நாகப் பாம்பைப் பார்த்தால் எல்லாப் பிராணிகளுமே பயப்படும்.
சின்னஞ் சிறு எலியைக்கூடக் கொல்லமுடியாத சிறுசிறு பாம்புகள் அங்கே ஏராளம். பெரிய பெரிய மிருகங்களை எல்லாம் மிரள வைக் கும் ராகியைப் பார்த்து அவை பொறாமைப்படும். மலைப்பாம்புக்கு அடுத்தபடி மிகவும் பருமனாக இருந்தது ராகிதான். அதனுடைய நீளம் ஓர் ஆள் அளவு இருக்கும். அதன் தோல் அழகாக, மங்கலான சிவப்பு நிறத்தில் இருந்தது. தோலின் மேல் கறுப்பு வெள்ளைக் கோடுகள் கலந்து இருந்தன.
ராகிக்கு கர்வம் அதிகம். எல்லாப் பாம்புகளை யும் விட தான்தான் பெரியவன் என்ற எண்ணம். அதனால், அது மற்ற பாம்புகளுடன் சேருவதில்லை. தனியாகவே வசித்து வந்தது. பாழடைந்த ஒரு கோயில் சுவரிலே ஒரு பொந்து இருந்தது. அதுதான் அதனுடைய வீடு.
ஒரு நாள் தவளை அல்லது எலியைப் பிடித்துத் தின்ன ராகி புறப்பட்டது. அப் போது பல கால்கள் வேகமாக நடந்து வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் பூமியே அதிர்ந்தது. செடி, கொடிகள் எல்லாம் அந்தக் கால்களின் அடியிலே சிக்கி நசுங்கின; சருகுகள் ‘சரசர’ என்று நொறுங்கின.
‘யானைகள் தான்’ என்று கூறிக்கொண்டே மெதுவாக ஒரு கல்லின் அடியிலே ராகி புகுந்தது. அங்கு ஒளிந்துகொண்டே சத்தம் வந்த திசையைப் பார்த்தது. காட்டிலிருந்து பெரிய யானைக் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ராகியைக் கடந்து யானைகள் போகும் போது அவற்றின் கால்களை அது நன்றாகப் பார்த்தது. அந்தக் கால்கள் தூண்களைப் போல் இருந்தன ; கன்னங் கரேல் என்றிருந்தன.
ராகி யானைகளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், அவைகளை ஒரு ஜீப்கார் துரத்திக்கொண்டு வருவதை அது கவனிக்கவில்லை. துப்பாக்கியுடன் நான்கு மனிதர்களும், ஒரு நாயும் ஜீப்பிலிருந்து இறங்கினார்கள்.
சிறிது நேரத்தில், அவர்கள் ராகியைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர் களைப் பார்த்ததும் ராகி திடுக்கிட்டது.
‘நாம் ஒளிந்திருக்கும் இந்தக் கல் நாயிடமிருந்து நம்மைக் காப்பாற்றாது’ என்று ராகி உணர்ந்தது. உடனே ஆச்சரியத்தாலும், பயத்தாலும் ‘உஸ்ஸ்……’ என்று பலமாக ஓசை எழுப்பியது.
“அதோ, நல்ல பாம்பு! நல்ல பாம்பு!!” என்று ஒருவன் கத்தினான்.
ஆனால், அதற்குள் ராகி புதர்களுக்கு இடையிலே புகுந்து மறைந்துவிட்டது.
எவ்வளவு வேகமாக ஊர்ந்து செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக ராகி சென்றது. மூச்சுத் திணறியதால் ஓரிடத்தில், புற்களுக்கு அடியிலே நின்றது. அப் போது அந்தக் காடு முழுவதுமே திடீ ரென்று பயத்தால் நடுங்குவது போல அதற்குத் தோன்றியது.
மரங்களிலே இருந்த குரங்குகள் கூச்சல் போட்டு வம்பு பேசிக்கொண்டிருந்தன. தாங்கள் பார்த்த மனிதர்களைப் பற்றியும், துப்பாக்கிகளைப் பற்றியுமே அவைகள் பேசின.
மான்களுக்கு ஒரே திகில்! தலையைத் தூக்கிக் காற்றிலே மோப்பம் பிடிக்கத் தொடங்கின. ஏதேனும் ஆபத்து என்றால், புதர்களுக்குள் ஓடி ஒளிவதற்குக் கால்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?
முயல்கள் எல்லாம் பொந்துகளுக்குள் ஓடி ஒளிய ஆரம்பித்தன.
குவித்து வைத்திருந்த கற்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருந்த ராகிக்கு சிறிது சிறிதாகத் தன்னம்பிக்கை ஏற்பட்டது. ‘ஒரு பாம்பைப் பிடிப் பதற்கா அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருப் பார்கள்?’ என்று நினைத்துப் பார்த்தது. அப்போது கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.
ராகி இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு கீரி வந்துசேர்ந்தது. இப்போது உண் மையிலே ஆபத்துத்தான் ! தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ராகி ஒரு நொடியில் தயாராகிவிட்டது. அதற்கு இப்போது மிகுந்த பயம். தன்னை அறியா மலே அது படம் எடுத்து, ‘உஸ், உஸ்’ என்று சீறி நஞ்சைக் கக்கியது. தந்திரமாகவும் ஆவேசத் துடனும் பாய்ந்து பாய்ந்து சண்டை போட் டது. ஆனாலும், மிகுந்த சுறு சுறுப்பும், வேகமும் கீரியிடம் இருந்ததால் ராகியால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
பாவம், எவ்வளவுதான் மூர்க்க மாகச் சண்டை போட்டாலும், கீரியை வெல்ல முடியுமா? நேரம் ஆக ஆக, களைத்துப் போய்விட்டது. எந்த நேரத்திலும் கீரியின் கூர்மையான பற்கள் தன் பிடரியைப் பிடித்துவிடும் என்று எதிர் பார்த்தது.
அப்போது, செடிகொடிகளுக்கு இடையில் ஒரு சத் தம் கேட்டது. புதர்களை ஒதுக்கிக்கொண்டு யாரோ வரு வது போல் தெரிந்தது. மறு விநாடி ராகிக்கும், கீரிக்கும் முன்னால் பெருமூச்சு விட்டபடி ஒரு பெரிய நாய் வந்து நின்றது. முன்பு ராகி வேட்டைக்காரர்களுடன் ஜீப்பிலே பார்த்ததே , அதே நாய்தான் ! கீரி அந்த விநோதப் பிராணியை ஒரு பார்வை பார்த்தது. மறு விநாடி புதர்களுக்குள் புகுந்து தப்பி ஓடிவிட் டது! நாய் ராகியை ஒரு முறை பார்த்தது. உடனே, பின்னால் ஒரு தாவுத் தாவியது. இதற்குள் ராகி, ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று அங்கிருந்து வெகு வேகமாக நழுவிவிட்டது!
ராகி நன்றாகத் தூங்கியது. எத்தகைய ஆபத்துக் களையெல்லாம் கடந்து வந்தது? கொஞ்சம் ஓய்வு வேண்டாமா? விழித்து எழுந்தவுடன், ருசியான ஒரு தவளை அல்லது ஓர் அணிலைப் பிடித்துத் தின்ன வேண்டுமென்று நினைத்தது. உடம்பை நன்றாக நீட்டி யது. இரைதேடப் புறப்பட்டது.
வழியிலே அது ஓர் உருவத்தைப் பார்த்தது. உடனே பசியை மறந்துவிட்டது. அதன் கண்களிலே பிரகாசம் தோன்றியது. அதற்குக் காரணம், அது பார்த் தது ஒரு பெண் நாகப் பாம்பு! அது மாதிரி ஓர் அழகான பாம்பை அதற்கு முன் அது பார்த்ததே இல்லை.
உடனே நேராக அதனிடம் சென்றது. அதனுடன் சேர்ந்து நடனம் ஆடத் தொடங்கியது. ஆடியது ஆடியது,
ஆடிக்கொண்டே இருந்தது. வேட்டைக் காரர்கள் துப்பாக்கியுடன் அங்கே வந்து, இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களைக் கூட ராகி கவனிக்கவில்லை.
கிராமத்து மக்களெல்லாம் பாம்பு நாட் டியத்தைப் பார்க்க வந்துவிட்டார்கள். ஆனா லும், ராகி கவலைப்படவில்லை. நாட்டியம் ஆடிக்கொண்டே யிருந்தது. அப்போது ஒரு குறும்புக்காரச் சிறுவன் ஒரு கல்லை எடுத்து அவைகளைக் குறி பார்த்து எறிந் தான். ராகிக்கு அது தெரியவே தெரியாது.
இன்னொரு பையன் தன்னுடைய தடியை ஓங்கி, ஓங்கிக் கல்லிலே பலமாகத் தட்டினான். ராகியின் காதில் அது விழவே இல்லை.
ஓர் அணில் ராகியின் அருகில் சென்றது. ராகி அதைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து ஆடிக்கொண்டே யிருந்தது.
‘படார்! – திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. கிராமச் சிறுவர்களிலே ஒரு போக்கிரி ராகியோடு நடனமாடிய பெண் பாம்பைச் சுட்டுவிட்டான்! அது வலி தாங்காமல் துடிதுடித்து ராகியின் முன்னால் சுருண்டு விழுந்தது. இந்தக் காட்சியைக் கண்டு கிராம மக்கள் பயந்து அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டார்கள். அந்தச் சிறுவனை வாயில் வந்தபடி திட்டினார்கள். ஆண் பாம்பு பழிக்குப் பழி வாங்கா மல் விடாது ‘ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண் டார்கள். ராகிக்கு அளவு கடந்த கோபம். வெகுநேரம் படம் எடுத்தபடியே இருந்தது.
மறு நாள் இரவு அது கிராமத்திற்குச் சென்றது. அங்கே எல்லாருடைய வீட்டுக் கதவுகளும் அடைத்துத் தாழிடப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே, ஏதாவது இரை கிடைக்குமா என்று ராகி தேடிப் பார்த்தது. கொல்லைப் புறத்திலே ஒரு கோழி அதன் முட்டைகளின் மேல் உட்கார்ந்திருந்தது. ராகி அந்தக் கோழியைக் கொன்றது. முட்டைகளைக் குடித்தது. ஆனாலும், ஏனோ அதற்கு ஒரு மாதிரியாக இருந்தது. உடம்பை வளைத்து, நெளித்து அங்கே படுத்தது; அப்படியே தூங்கிப் போய்விட்டது.
காலையில் எழுந்தது. தனக்கு மேலே ஒரு கூடை இருப்பதை அறிந்தது. வெளியே போவதற்கு முண்டியடித்துப் பார்த்தது; முடியவில்லை. அப்போது யாரோ, “நாம் ஒரு நாகப் பாம்பைப் பிடித்துவிட்டோம்! பிடித்துவிட்டோம்!” என்று கத்துவது கேட்டது.
“நான் ஒரு முட்டாள். கோழிக் குஞ்சு போல அகப் பட்டுக்கொண்டு விட்டேனே!” என்று நினைத்தது ராகி. ஆனாலும், அதற்கு யார் உதவுவார்கள் ? கூடையை விட்டு அதனால் வெளியில் வர முடிய வில்லை. வெற்றி முழக்கத்துடன், அதை அந்த ஊரில் உள்ள பாம்பாட்டி வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள்.
பாம்பாட்டி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் ராகியின் விஷப் பற்கள் இரண்டையும் பிடுங்கி விட்டான்.
பாவம், ராகியின் தைரியமெல்லாம் பறந்துவிட்டது. வலி தாங்காமல் துடிதுடித்துக் கொண்டே கூடையின் அடி யிலே கிடந்தது. இந்தப் பாம்பாட்டி வீட்டுப் பளபளப் பான சட்டிகளையும், தட்டுகளையும் தான் நான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? என் சொந்த வீட்டிற்குப் போய் அங்கேயுள்ள இலைகளையும், புற்களையும் இனிமேல் காணவே முடியாதா?’ என்று ஏங்கியது.
மறுநாள் பாம்பாட்டி ஒரு சிறு தட்டிலே பாலை ஊற்றி ராகியின் முன்னால் வைத்தான். ராகி அதை ஜாக்கிரதையாக ருசி பார்த்தது. அது மிகவும் ருசியாக இருக்கவே ஒரு சொட்டு விடாமல் குடித்துத் தட்டைக் காலி செய்தது.
பாம்பாட்டி ஒரு கீரியைக் கொண்டுவந் தான். அதுவும் அதே தட்டில் பால் குடித்தது. கீரியைப் பார்த்ததும் முதலில் ராகிக்கு, பயம் ஏற்பட்டது. ஆனா லும், பாம்பாட்டி அதைப் பத்திரமாகக் கையில் பிடித் துக் கொண்டிருந்ததால், ஆபத்து இல்லை என்று உணர்ந்தது.
இன்னொரு நாள் பாம்பாட்டி தன் வாயிலே ஒரு குழாயை வைத்துக்கொண்டு ராகியின் முன்னால் உட்கார்ந் திருந்தான். அவன் வாய்ப் பக்கம் இருந்த பாகம் உப்பி யிருந்தது. அதுதான் மகுடி. அதை ஊதிக்கொண்டே இடுப்பை வளைத்து அவன் இப்படியும் அப்படியும் அசைந்து கொண்டிருந்தான்.
கூடைக்குள் இருந்த ராகி எழுந்தது. இசைக்கு ஏற்றபடி அதுவும் ஆடியது. பாம்பாட்டி அதை நன்றாகப் பழக்கினான். அதற்குப் பலவிதமான வித்தைகளைக் கற்றுக் கொடுத்தான். அது எல்லா வித்தைகளையும் அழகாகச் செய்துகாட்டியது.
“இது மிகவும் அபூர்வமான பாம்பு. இந்தக் கிராமத் தில் இதை வைத்திருப்பது தண்டம். பெரிய பட்டணத் திற்கு இதைக் கொண்டு போகப் போகிறேன். இதுவும், கீரியும் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டுப் பட்டணத்துக்காரர்கள் நிறையப் பணம் தருவார்கள்” என்றான்.
ஆகையால், தன் சாமான்களை யெல்லாம் அவன் ஒரு மூட்டையாகக் கட்டினான். ராகி இருந்த கூடையை யும் ஒரு கயிற்றால் கட்டினான். ரயிலைப் பிடிக்க ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றான்.
கூடையிலிருந்த இடைவெளி வழியாக ராகி பார்த்தது. அதற்கு ஒரே ஆச்சரியம். ஸ்டேஷன் பிளாட்பாரத்திலே ஆண்களும், பெண்களும் மூட்டை முடிச்சுக்களையும், குழந்தை குட்டிகளையும் வைத்துக் கொண்டு நின்றார்கள்.
“இத்தனை மனிதர்களுக்கு இடையே எவ்வளவு தைரியமாக, எந்த விதப் பாதுகாப்பும் இல்லாமல் என் எஜமானர் நடந்து போகிறார்!” என்று பாம்பாட்டியின் தலையில் இருந்த கூடைக்குள் இருந்தபடியே ராகி நினைத்தது.
ரயில் வந்தது. ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தன. ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு ரயிலில் ஏறினார்கள். ”ஐயோ, நம்மை நசுக்கிக் கொன்று விடுவார்களோ!’ என்று கூடைக்குள் இருந்த ராகி நினைத்தது.
ஒரு வழியாகச் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
சென்னை மூர் மார்க்கெட்டில் அன்றுதான் ராகி முதல் முதலாக வித்தை காட்டியது. வித்தையைப் பார்க்க ஏராளமான கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கூடிவிட்டார்கள். கீரியுடன் சண்டை போடுவதுபோல ராகி பாசாங்கு செய்யும். அந்தச் சண்டையைப் பார்த்துக் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைவார்கள்.
பொய்ச் சண்டை போடுவது ராகிக்கு முத லில் பிடிக்கவில்லை. ஆனாலும், குழந்தைகள் குதூகலம் அடைவதைப் பார்த்து அது ஜோராகச் சண்டை போட்டது.
கீரியுடன் பொய்ச்சண்டை போடுவது, மகுடி வாசிப் பதற்குத் தகுந்தபடி படம் எடுத்து ஆடுவது-இப்படியே ராகி தன் வாழ்நாளைக் கழித்து வருகிறது. அடுத்த தடவை மூர் மார்க்கெட் பக்கம் போகும் போது பாருங்கள். அங்கே வட்டமாக ஒரு பெரிய கூட்டம் கூடியிருக்கும். அந்தக் கூட்டத்திலே புகுந்து பார்த்தால், நடுவில் அழகான ஒரு பாம்பு, அருமையான வித்தைகளை யெல்லாம் செய்து காட்டிக்கொண்டிருக்கும்.
அந்தப் பாம்புதான் ராகி!
அது இப்படி வித்தை செய்வதெல்லாம் எதற்காக? குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதற்காகத்தான்!
***
VITHTHAIP PAAMPU – Tamil Translation of RAAGI THE NAAG BY LAEEQ FUTEHALLY
‘பாம்புக்குப் பகை கீரி’ என்று பாடப் புத்தகத்திலே படித்திருக் கிறோம். ஆனால், பாம்பும் கீரியும் விளையாட்டுச் சண்டை போடும் வித்தையை நேரில் பார்த்திருக் கிறீர்களா?
ராகி என்று ஒரு நல்ல பாம்பு. அது நல்ல நல்ல வித்தைகளெல்லாம் செய்யும். அதைப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தம் அடைவார்கள். அவர்கள் ஆனந்தம் அடை வதைப் பார்த்து அந்தப் பாம்பும் ஆனந்தமடையும்.
– 1963, வித்தைப் பாம்பு, மூலம்: லயிக் ஃபுடோ ஹள்ளி, தமிழில்: அழ.வள்ளியப்பா, தென்மொழிப் புத்தக டிரஸ்ட் ஆதரவில் பதிக்கப்பெற்றது, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.