வாய்மை வாழும் இடமே…

1
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 16,864 
 
 

தெய்வபக்தியுள்ள ஒரு மன்னர் ஒரு தேசத்தை ஆண்டு வந்தார். அவர் வாய்மை தவறாதவர். நற்குணம் நிரம்பியவர். ஆதரவற்றோருக்குத் தாராளமாக உதவும் தர்மசிந்தை உள்ளவர். அவர் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.

அவருடைய அரண்மனை தலைநகரில் இருந்தது. அந்தத் தலைநகரில் வியாழன் தோறும் சந்தை கூடும்.

வாய்மை வாழும் இடமேவெளியூர் வியாபாரிகளும் விவசாயிகளும் விற்பனைக்காகப் பொருட்களை அந்தச் சந்தைக்குக் கொண்டு வருவார்கள். மாலையில் சூரியன் மேற்கில் மறைவதற்குள் கொண்டு வந்தவற்றை நகரவாசிகளிடம் விற்றுப் பணம் பெற்றுக் கொண்டு சந்தோஷமாகத் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வார்கள்.

வியாபாரம் சரிவர நடைபெறாவிட்டால், விற்பனையாகாத பொருள்களை, மன்னர் வாக்களித்தபடி, அரண்மனை அதிகாரிகள் சந்தைக்கு வந்து, வணிகர்களிடம் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். இப்படி வாங்கப்படும் பொருள்களை மன்னர் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்குவார்.

ஒரு வியாழனன்று அந்தச் சந்தைக்கு வெளியூரிலிருந்து ஒரு ஏழை அந்தணர் கனமான ஒரு கூடையைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார். மற்ற வியாபாரிகளுடன் அமர்ந்தார்.

பகலில் சந்தையில் மக்கள் வெள்ளம். சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்தது. அந்தணரிடம் மட்டும் யாருமே செல்லவில்லை.

சூரியன் மேற்கில் சரியும் வேளையில், சந்தை கலைய ஆரம்பித்தது. கொண்டுவந்த பொருள்களை நல்ல லாபத்துக்கு விற்றுவிட்ட வணிகர்கள் பணத்தை எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். கடைசியில் –

அந்தணரைத் தவிர மூன்று வணிகர்கள் மட்டும் விற்பனையாகாத தங்கள் பொருள்களுடன் அமர்ந்திருந்தனர். ஒருவரிடம் தானியங்கள் இருந்தன. மற்ற இருவரிடம் மளிகைப் பொருள்கள், துணிமணிகள் இருந்தன.

மூவரில் ஒருவர் அந்தணரைப் பார்த்து, “”விற்பதற்கு நீங்கள் என்ன கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.

அந்தணர் அமைதியாகக் கூடையைத் திறந்து காண்பித்தார்.

அதைப் பார்த்த வணிகர்கள் மூவரும் சந்தையே அதிரும்படி வாய்விட்டுச் சிரித்தனர். விடாமல் நீண்ட நேரம் சிரித்து ஓய்ந்துவிட்டு, ஒரு வணிகர், “”சாமீ… வீணாக நீங்க இங்கே காத்திருக்க வேண்டாம். பொழுது போவதற்குள் கூடையைத் தூக்கிக் கொண்டு ஊர் போய்ச் சேரும். இதை யாருமே வாங்க மாட்டார்கள்!” என்றார்.

உடனே அந்தணர், “”மன்னர் வாங்குவார்…” என்றார், நம்பிக்கையுடன்.

சூரியன் மறையும் வேளையில் அரண்மனை அதிகாரிகள் குதிரைகளில் வந்தனர். கூடவே ஒரு மாட்டு வண்டியும் வந்தது. மூன்று வணிகர்களும் கேட்ட தொகைகளை அதிகாரிகள் கொடுத்துவிட்டு, அவர்களுடைய பொருள்களை வண்டியில் ஏற்றினர். கடைசியில் அந்தணரிடம் வந்த அதிகாரிகள், அவருடைய கூடையில் இருந்ததைப் பார்த்துவிட்டு, திடுக்கிட்டுப் பின்வாங்கினார்கள்.

அந்தக் கூடையில் ஓட்டை உடைசல் சாமான்கள், சட்டி,பானை ஓடுகள், குப்பை கூளங்கள்!

அந்தணர் அதிகாரிகளைப் பார்த்து, “”ஆயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்துவிட்டு கூடையோடு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“”ஐந்து காசுகள்கூடப் பெறாத இந்தப் பொருள்களை நீர் நம்பிக்கையோடு வெளியூரிலிருந்து சுமந்துகொண்டு வந்துவிட்டதால், பத்து காசுகள் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம்…” என்றார் ஓர் அதிகாரி.

“”ஆயிரத்துக்கு ஒரு காசு குறைந்தால்கூட கூடையைத் தரமாட்டேன். உங்களுக்கு வாங்க விருப்பம் இல்லாவிட்டால் நான் பழையபடி இதை ஊருக்கே எடுத்துச் சென்று விடுகிறேன்” என்றார் அந்தணர். அவர் முகத்தில் வருத்தம்.

சந்தைக்கு வந்த எவரும் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்லக்கூடாது என்பது மன்னரின் கண்டிப்பான உத்தரவு. எனவே, ஒரு குதிரைவீரன் மூலமாக மன்னருக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்தக் குதிரைவீரன், “”அந்தணர் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு, கூடையை வாங்கிக் கொள்ளும்படி மன்னர் சொல்கிறார்..” என்றான்.

அந்தணர் மகிழ்ச்சியோடு ஆயிரம் வெள்ளிக் காசுகளை வாங்கிக் கொண்டு சந்தையை விட்டு வெளியேறினார். குப்பைக் கூடை அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.

அன்றிரவு, அந்தப்புரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மன்னர், “ஜல் ஜல்’ என்ற கொலுசு சப்தம் கேட்டு ஓசைப்படாமல் எழுந்து கொலு மண்டபத்துக்கு வந்தார்.

தங்கச்சிலை போல தகதகவென மின்னிய ஒரு அழகி, மெல்ல நடந்து கொலு மண்டபத்தின் தலைவாயிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் வரிசையாக நான்கு பெண்கள்!

மன்னர் திடுக்கிட்டு, நால்வரையும் வழிநடத்திச் சென்ற பெண்ணின் அருகில் சென்றார். அவளுடைய தலை முதல் பாதம் வரை தங்க, வைர நகைகள் ஜொலித்தன.

“”பெண்ணே! உன்னை இதுவரை நான் இந்த அரண்மனையில் பார்த்ததில்லை. நீ அழைத்துச் செல்லும் இந்தப் பெண்களையும் நான் பார்த்ததில்லை. நீ யார்?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “”என்னைத் தெரியவில்லையா உமக்கு? நான்தான் திருமாலின் துணைவி. செல்வத்துக்கு தெய்வம். திருமகள் என்கிற இலக்குமி!” என்றாள்.

மன்னர் ஆச்சரியத்துடன் லட்சுமியைப் பார்க்க…

“”நான் வாசம் செய்யும் இந்த அரண்மனைக்குள் குப்பைக் கூளங்கள் வந்துவிட்டதால் நான் இங்கிருந்து வெளியேறுகிறேன். குப்பைக் கூடை வறுமையின் சின்னம். வறுமை இருக்கும் இடத்தில் என்னால் குடியிருக்க முடியாது… வருகிறேன்…” என்றாள்.

“”தாயே, மகாலட்சுமி, உங்களுக்காக அந்தக் கூடையை நான் அப்புறப்படுத்த முடியாது. நான் என் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி விலை கொடுத்து வாங்கப்பட்ட கூடை அது. இருக்க விருப்பம் இல்லையென்றால் நீங்கள் தாராளமாகப் போகலாம்…” என்றார். லட்சமி அரண்மனையைவிட்டு வெளியேறி மறைந்தாள்.

அவளைப் பின்தொடர்ந்த அழகான தேவதையைப் பார்த்து, “”மகளே, நில்! நீ யார்?” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு அவள், “”என் பெயர் தர்மாம்பாள், லட்சுமியை நீங்கள் வெளியேற்றிய பிறகு தானதர்மம் பண்ண உங்களிடம் எதுவுமே இருக்காது. தர்மம் பண்ண இயலாத உங்களிடம் நான் இருக்க விரும்பவில்லை. லட்சுமி செல்லும் இடத்துக்கே நானும் செல்வேன்” என்றாள்.

“”அதுதான் உன் முடிவு என்றால் நீயும் போய்விடலாம்…” என்றார் மன்னர். உடனே தர்மாம்பாளும் வெளியேறிவிட்டாள்.

மூன்றாவதாக வந்த பெண், “”என் பெயர் குணசீலி. லட்சுமியையும் தர்மாம்பாளையும் நீங்கள் விரட்டி விட்ட பிறகு, நற்குணமாகிய நான் மட்டும் உங்களுடன் எப்படி இருக்க முடியும்? நானும் வெளியேறுகிறேன்…” என்றவாறே நடையைக் கட்டினாள்.

அப்புறம் வந்தவள், தன் பெயர் புகழரசி என்றாள். “”மன்னா, உம்மிடம் இருந்து செல்வம் போய்விட்டது. அதனால் தர்மம் செய்யும் ஆற்றலும் போய்விட்டது. வெளியேறிய நற்குணத்தையும் நீங்கள் தடுக்கவில்லை. புகழுக்கு அரசியான நான் மட்டும் உங்களோடு எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டாள்.

“”உன்னை நான் தடுக்கவில்லையே! யார் போனாலும் எனக்குக் கவலையில்லை. புகழே எனக்குத் தேவையில்லை. நீ தாராளமாகப் போகலாம்…” என்றார். உடனே புகழரசியும் போய்விட்டாள்.

கடைசியாக வந்தவள், “”என் பெயர் சத்யா. வாய்மைக்கு அரசி நான்” என்றாள்.

உடனே மன்னர் வழிமறித்தார். அப்போது சத்யா, “”செல்வம், தர்மம், புகழ், நற்குணம் எல்லாவற்றையும் நீங்கள் விரட்டிவிட்ட பிறகு வாய்மையாகிய நான் இங்கே வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. நானும் வருகிறேன்… என்னைத் தடுக்காதீர்கள்…” என்றாள்.

அப்போது மன்னர், “”நீ மட்டும் என்னைவிட்டுப் போய்விடாதேம்மா… உனக்காகத்தான் நான் ஒரு குப்பைக் கூடையையே ஆயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினேன். உனக்காகத்தான் செல்வம், தர்மம், புகழ், நற்குணம் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்தேன். வாய்மையாகிய நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது…” என்று கண்ணீருடன் கெஞ்சினார். கதறி அழுதார்.

வாய்மைக்கு அரசியான சத்யாவின் மனம் இளகியது. “”கவலைப்படாதே மன்னா, எனக்கு நீ இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பாய் என்று நான் எண்ணவே இல்லை. நீ எனக்குத் தரும் மரியாதை என் மனதை நெகிழச் செய்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலக மாட்டேன். என்றென்றும் உன்னுடனேயே இருப்பேன்!” என்றாள்.

மறுகணம், சத்யா வெளியே வராததை அறிந்த மற்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்துவிட்டனர் – லட்சுமியைத் தவிர!

இலக்குமி வராவிட்டால் பரவாயில்லை என்று மன்னர் எண்ணிக் கொண்டிருந்தபோது குப்பைக் கூடையை விற்ற ஏழை அந்தணர் வந்தார்.

“”மன்னா, என்னால் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

“”இல்லை, தர்மசிந்தனையும் நற்குணமும் புகழும் எல்லாவற்றுக்கும் மேலாக வாய்மையும் என்னோடுதான் இருக்கின்றன. செல்வத்துக்கு தெய்வமான இலக்குமி மட்டும் போய்விட்டாள்” என்றார்.

“”இலக்குமி போய்விட்டதாக யார் சொன்னது? வாய்மை வாழும் இடமே திருமகளின் திருக்கோயில். உள்ளே போய், என்னிடம் வாங்கிய கூடையைத் திறந்து பாருங்கள்…” என்றார் அந்தணர்.

உள்ளே போய், கூடையைத் திறந்து பார்த்த மன்னர், மலைத்துப் போய் நின்றார். அந்தக் கூடை, குப்பை கூளத்துக்குப் பதிலாக சுடர்விடும் நவரத்தினக் கற்களாலும் சொர்ண மாலைகளாலும் பொற்காசுகளாலும் நிரம்பி வழிந்தது!

பரபரப்படைந்த மன்னர், அந்தணரைக் காண வெளியே ஓடோடி வந்தார்.

அவர் அங்கே இல்லை!

– சுமந்திரன் (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

1 thought on “வாய்மை வாழும் இடமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *