கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,665 
 
 

முருகனுக்கும் சோமுவுக்கும் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு உண்டியலை வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா.

தனக்குக் கிடைக்கும் காசை தம்பி சோமு உண்டியலில் சேமித்தான். முருகனோ கோலிகுண்டுகள் வாங்கி, தினமும் பள்ளி விட்டதும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி வந்தான். வண்ண வண்ண கோலி குண்டுகளை வீட்டுப் பரணில் ஒரு கொட்டானில் போட்டு வைத்திருந்தான் முருகன். தேடித்தேடி சின்னதும் பெரிதுமாய் நிறைய சேர்த்திருந்தான்.

அப்பா கந்தன், கூலி வேலை செய்பவர். இரண்டு பையன்களையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார்.

முருகனுக்கும் சோமுவுக்கும் முழு ஆண்டுத் தேர்வு வந்தது. பணம் கட்டவேண்டும். கந்தனுக்கு அந்த சமயம் பார்த்து சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை.

‘‘அப்பா, நாளைக்குள்ள பணம் கட்டணும். இல்லைன்னா, பரீட்சை எழுத முடியாது’’ என்றான். ‘‘எனக்கு வேற சரியா வேலை கிடைக்கலை. யார்கிட்ட கடன் வாங்குறதுன்னு தெரியலை. சரி, ஏதாவது வழி பண்ணுவோம்’’ என்று சொல்லிவிட்டு யோசனை செய்யத் தொடங்கினார். வெளியே போய்த் திரும்பிய அம்மா கருப்பாயி, ‘‘வழக்கமா வீட்டு வேலை செய்யிற இடத்துக்குப் போனேன். எல்லாரும் ஊருக்குப் போய்ட்டாங்க. நாளைக்குள்ள பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு முருகன் காலையில சொன்னான். பக்கத்து வீட்டு முனியம்மா கிட்ட வாங்கின நூறு ரூபாயை இன்னும் கொடுக்கலை. இல்லைன்னா, அவகிட்ட கேக்கலாம்’’ என்று சங்கடப் பட்டாள்.

‘‘சோமு எங்கடா?’’ என்று முருகனிடம் கேட்டாள் அம்மா. ‘‘அவன் அப்பவே ஸ்கூலுக்கு கிளம்பிட் டான்மா’’ என்றான். ‘‘நீ ஏன் இன்னும் போகாம இருக்கே? சீக்கிரம் கிளம்பு. நாங்க எப்படியாவது பரீட்சைக்குப் பணம் கட்ட ஏற்பாடு செய்றோம்’’ என்றாள்.

‘‘சரிம்மா,நான் கிளம்புறேன்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டிற்குள் போய் பரணிலிருந்து கோலிகுண்டுகளை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்துவிட்ட அப்பா, ‘‘உனக்கு கோலி விளையாடுறதை விட்டா வேற எதுவும் தெரியாது. கிடைக்கிற காசு எல்லாத்தையும் வீணாக்கிட்டே இரு’’ என்று திட்டினார். காதில் வாங்காதவன் போல் கிளம்பினான் முருகன்.

எங்கேயாவது கடன் கிடைக்குமா என்று பார்க்க கந்தன் வெளியே கிளம்பினார்.

மாலை பள்ளி விட்டு முருகனும் சோமுவும் பேசிக்கொண்டே வந்தார்கள். ‘‘சோமு, நான் போய் கொஞ்ச நேரம் கோலி விளையாடிட்டு வர்றேன். நீ வீட்டுக்குப் போ’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

வீட்டில் அப்பாவும் அம்மாவும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். ‘‘அம்மா’’ என்று கத்திக்கொண்டே சோமு உள்ளே நுழைந்தான். ‘‘அம்மா, எனக்கும் அண்ணனுக்கும் பணத்தைக் கட்டிட்டேன்’’ என்றான். ‘‘எப்படிக் கட்டினே?’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் அப்பா. ‘‘அப்பா, நீங்க வாங்கிக் கொடுத்த உண்டியல்ல எனக்குக் கிடைச்ச பணம் எல்லாத்தையும் போட்டு வெச்சிருந்தேன். இருநூத்தம்பது ரூபாய் வரைக்கும் இருந்துச்சு. எனக்கு நூறு, அண்ணனுக்கு நூறு ரூபாய் கட்டிட்டேன்’’ என்று ரசீதைக் காட்டினான்.

அப்போது விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் முருகன். ‘‘முருகா, உன் தம்பி பாத்தியா, உனக்கும் சேர்த்து பணம் கட்டிட்டான்’’ என்றார் அப்பா.

‘அப்படியா’ என்பது போல சந்தோஷத்துடன் தன் தம்பியைப் பார்த்தான் முருகன். விறுவிறுவென்று பரணுக்குப் போனான். அங்கே தான் சேமித்து வைத்திருந்த கோலிகுண்டுகளையெல்லாம் அள்ளிக் கொண்டு சோமுவின் அருகே வந்தான். நன்றி சொல்லும்விதமாக அத்தனை குண்டுகளையும் தம்பியின் கையில் கொடுத்தான், ஒரு வள்ளலைப் போல.

வெளியான தேதி: 16 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

1 thought on “வள்ளல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *