நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார்.
அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குமாரைப் பார்த்த அவள், “”படிக்காம இவ்வளவு நேரம் என்னடா விளையாட்டு?” என்று கோபமாகக் கேட்டாள்.
குமார் பதில் ஏதும் சொல்லாமல் டி.வி.யின் ரிமோட்டைக் கையில் எடுத்தான்.
“”என்னடா, சேனலை மாத்திட்டு கார்ட்டூன் பாக்கப் போறியா? ஒழுங்கா உள்ளே போய்ப் படிடா. இப்ப நான் பார்த்துக்கிட்டிருக்கிற சேனலை மாத்தினா உன்னை அம்மாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்” என்று அக்கா படபடவென்று தனது கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தாள்.
கையிலிருந்த ரிமோட்டால் டி.வி.யின் சத்தத்தைக் குறைத்துவிட்டு, “”அக்கா, பக்கத்து வீட்டு அண்ணன், தேர்வுக்குப் படிக்கிறாங்க… அதனால கொஞ்சம் டி.வி. சத்தத்தைக் குறைச்சு வச்சுட்டேன்… இப்ப நீ பார்…” என்று மென்மையாகச் சொல்லிவிட்டு, ரிமோட்டை அக்காவிடம் கொடுத்துவிட்டுத் தனது அறைக்குள் போய் தனது புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.
ஏதோ சுருக்கென்று உள்ளத்தைத் தைத்தது போன்ற உணர்வுடன் கையிலிருந்த ரிமோட்டின் சிவப்பு பட்டனை அவசரமாக அழுத்தினாள் அக்கா. டி.வி.அணைந்தது.
– எம்.ராஜ அனிதா, சேசுராஜபுரம். (மார்ச் 2013)